காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: சர்ச்சைகளின் கூடாரம்! 27 ஏப்ரல் 2009

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 11:45 பிப

மப்றூக்
தெ
ன்கிழக்குப் பல்கலைக் கழகம் முஸ்லிம் சமூகத்துக்குக் கிடைத்ததொரு பொக்கிஷம் என்பது அனேகமானோரின் அபிப்பிராயம். தமிழர்களின் அரசியல் மற்றும் சமூக மயப்பட்ட நடவடிக்கைகளில் யாழ்பாணப் பல்கலைக்கழகம் எவ்வாறானதொரு பங்களிப்பினை வழங்குகின்றதோ – அது போல், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முஸ்லிம்களுக்கு அமையும் என்று பலர் நம்பினார்கள், இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், இந்தப் பல்கலைக்கழகம் பற்றி அவ்வப்போது கிடைக்கும் செய்திகள் மேற்படி நம்பிக்கைகளில் மண்ணை வாரிக் கொட்டி விடுமோ என அச்சமாகவுள்ளது. அங்கு . இடம்பெறுவதாகக் கூறப்படும் மோசடிகளை கேள்வியுறுகையில் அதிர்ச்சியாகவுள்ளது. ஊழல்கள் இடம்பெற்றதாகச் சொல்லப்படும் ரூபாய்களை கணக்கிடுகையில் சுற்றுகிறது தலை!

சில வருடங்களுக்கு முன்னர் இந்தப் பல்கலைக்கழகத்தின் இரண்டு பிரிவுகள் தீப்பிடித்தெரிந்தன. அவை விபத்துக்கள் என்று நிருவாகம் சொன்னது. ஆனால், நடந்தவை விபத்தல்ல, திட்டமிட்ட தீ வைப்புக்கள் என்று சில குரல்கள் அப்போது குற்றம் கூறின!

பிறகு சில காலங்களுக்குப் பின்னர் பல்கலைக்கழக உபவேந்தரின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வந்தன. அதன் பிறகு – உபவேந்தருக்குக் கடுமையான பாதுகாப்பு. இப்போதெல்லாம், பொலிஸார் புடைசூழத்தான் அவர் போக்குவரத்துச் செய்கின்றார்.

இது இவ்வாறிருக்க, உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா சில வாரங்களுக்கு முன்னர் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய பேட்டியொன்றில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரை – ‘‘நீ ஒரு வியாபாரி” (You are a business man)  என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சமயம் திட்டியதாக கூறியிருந்தமையும் இங்கு ஞாபகிக்கத்தக்கது.

இவ்வாறானதொரு பின்னணியில், இந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான ஏ.ஜி. ஹுசைன் இஸ்மாயில் என்பவர் பல்வேறு ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகத்தின் நிதியினை பிழையாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் கூறி, எம்.ஐ.எம். சதாத் என்பவர் – ஜனாதிபதி, லஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக மூதவை சபை (University council) உள்ளிட்ட பல உயர்மட்டங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

சதாத் என்கிற இந்த நபர் ஓர் ஊடகவியலாளர் என்பதோடு ஊடக நிறுவனமொன்றின் பணிப்பாளராகவும் பணியாற்றுகின்றார். ஆனாலும், இந்த நாட்டில் வரி செலுத்தும் ஒரு பிரஜை என்கின்ற வகையிலேயே மேற்படி ஊழல்களை – தான் தட்டிக் கேட்பதாக ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு எழுதியுள்ள கடிதங்களில் குறிப்பிட்டிருக்கின்றார்.

நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடிகளில் முக்கியமானது ‘அறுப்’ என்கிற நிறுவனம் ஒன்றுடன் – உபவேந்தர் செய்து கொண்ட உடன்படிக்கை என்று கூறப்படுகிறது. ‘அறுப்’ என்பது இங்கிலாந்தைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் திட்ட, வடிவமைப்பு, பொறியியல் மற்றும் ஆலோசனை நிறுவனமொன்றாகும். இவ் உடன்படிக்கையில் நிதிகள் தொடர்பான விடயங்களும் உள்ளடங்கியுள்ளன.

‘அறுப்’ நிறுவனத்துடனான உடன்படிக்கை தொடர்பில் பின்வரும் குற்றங்கள் புரியப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை:

• மேற்படி உடன்படிக்கையைச் செய்து கொள்வதற்கு முன்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றிருத்தல் வேண்டும். ஆனால், அவ்வாறு பெறாமலேயே உபவேந்தர் உடன்படிக்கையினைச் செய்துள்ளார்.

• ‘அறுப்’ நிறுவனத்துடனான உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்கு உபவேந்தரொருவருக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை. ஆனால், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் ஹுசைன் இஸ்மாயில் கையொப்பமிட்டிருக்கின்றார். இதனூடாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சட்ட திட்டங்களை அவர் மீறியுள்ளார்.

• பல்கலைக்கழக நிதிக்குழு, பல்கலைக்கழக மூதவைச்சபை (University council)  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, திறைசேரி மற்றும் அமைச்சரவை ஆகியவற்றின் அங்கீகாரங்கள் எதுவுமின்றி மேற்படி ‘அறுப்’ என்கிற நிறுவனத்துக்கு உபவேந்தர் கிட்டத்தட்ட 20 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளார்.

மேலுள்ள மோசடிகள் என்று கூறப்படுபவை குறித்தும், ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்தும் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் ஹுசைன் இஸ்மாயிலைச் சந்தித்து நாம் விபரம் கேட்டோம். மிக நீண்டதொரு விளக்கத்தினை அவர் தந்தார்.

அதாவது, இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரத்தினை தாம் பெற்றுள்ளதாகவும் (அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய ஆவணத்தின் போட்டோ பிரதியை காண்பிக்கின்றார்) அந்த உடன்படிக்கையில் கையொப்பமிட தனக்கு முழுமையான அதிகாரம் உள்ளதாகவும் அவர் கூறினார். அதேவேளை, ‘அறுப்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பணத்தொகையானது சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

ஆனால், உபவேந்தர் கூறியதை முற்றாக மறுக்கின்றார் உயர்கல்விப் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா. அதாவது, மேற்படி உடன்படிக்கை தொடர்பில் ஆரம்பத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது உண்மைதான். ஆனால், அவ் உடன்படிக்கையில் பல்வேறு பிழைகள் உள்ளதாக உயர்கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஹேரத் என்பவர் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்ததையடுத்து – தம்மால் வழங்கப்பட்ட அங்கீகாரத்தினை அமைச்சரவை நிறுத்தி விட்டது. அதேவேளை, இவ்வாறானதொரு உடன்படிக்கையில் உயர்கல்வி அமைச்சின் செயலாளர்தான் கையொப்பமிட வேண்டும். உபவேந்தரொருவர் கையொப்பமிட முடியாது என்றும் பிரதியமைச்சர் மயோன் கூறுகின்றார்.

இதேவேளை, பல்கலைக்கழக விடுதியினைத் துப்புரவு செய்வதற்காக தனியார் நிறுவனமொன்றுக்கு கடந்த வருடம் 37 லட்சத்து 60 ஆயிரத்து 178 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விடுதியினைத் துப்புரவு செய்வதற்கென்றே பல்கலைக்கழகத்தில் மாதாந்தச் சம்பளம் பெறுகின்ற துப்புரவுத் தொழிலாளிகள் பலர் இருக்கின்றார்கள். அதேவேளை, பகிரங்க கேள்வி அறிவித்தல்கள் எதுவும் கோரப்படாமலேயே மேற்படி தனியார் துப்புரவு நிறுவனத்துக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து – உபவேந்தர் கூறுகையில்; இவ்விடயத்தை நான் கையாளவில்லை. பல்கலைக்கழகத்தின் வேறு பிரிவினர்தான் கையாண்டார்கள் என்கிறார். ‘‘இருந்தாலும், பல்கலைக்கழகம் என்று வரும்போது நீங்கள்தானே அதற்குப் பொறுப்பானவர்” என்று கேட்டோம். ‘‘உண்மைதான் அதற்காக – எல்லா விடயங்களிலும் நான் தலையிட்டுக் கொண்டிருக்க முடியாது. சில விடயங்களுக்கு அனுமதி வழங்குவதோடு எனது கடமை முடிந்து விடும்” என்கிறார் அவர். இருந்தாலும் – அந்தப் பதில் பொருத்தமானதாகவோ, பொறுப்புமிக்கதாகவோ தெரியவில்லை!

இது இவ்வாறிருக்க – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் 1998 ஆம் ஆண்டின் மே மாதம் 13ஆம் திகதிய 07/98 ஆம் இலக்கச் சுற்று நிருபத்தின்படி, பல்கலைக்கழக உபவேந்தரொருவரின் உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசிக்கான மாதாந்தக் கொடுப்பனவு 02 ஆயிரம் ரூபாய் என வரையறுக்கப்பட்டுள்ளது. (அதாவது வருடமொன்றுக்கு 24 ஆயிரம் ரூபாய்) ஆனால், கடந்த ஆண்டு – தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் தனது உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசிக்காக 66 ஆயிரத்து 612 ரூபாவினைக் கட்டணமாகச் செலுத்தியிருக்கின்றார். அதாவது, 42 ஆயிரத்து 612 ரூபாய் மேலதிகமாகச் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, உபவேந்தரின் பாவனைக்காக 04 நிலையான தொலைபேசி இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவைகளுக்காக – கடந்த வருடம் 01 லட்சத்து 86 ஆயிரத்து 200 ரூபாய் கட்டணமாகச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து உபவேந்தரிடம் நாம் கேட்டோம். ‘‘எனது உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசியை தேவையான அளவு பாவிக்குமாறு பல்கலைக்கழக மூதவைச்சபை (University council) கூறியுள்ளது. இவ்வாறு அதிகமான தொகையைக் கட்டணமாகச் செலுத்துவதற்கு மூதவைச்சபை அனுமதியளித்துமிருக்கின்றது. அதேவேளை, எனக்கு வழங்கப்பட்டுள்ள நான்கு நிலையான தொலைபேசி இணைப்புக்களில் ஒன்றை மட்டுமே நான் பயன்படுத்துகின்றேன். ஏனையற்றை எனது அலுவலகத்திலுள்ளவர்கள் மற்றும் எனது பாதுகாப்புக்காக உள்ள பொலிஸார் என்று ஏனையோர் பயன்படுத்துகின்றார்கள். அதற்கு நான் எவ்வகையில் பொறுப்புக் கூற முடியும்” என்று அவர் கேட்கின்றார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 25 போட்டோ பிரதியெடுக்கும் இயந்திரங்கள் உள்ளன. ஆனால், கடந்த வருடமொன்றில் மட்டும் 73 ஆயிரத்து 484 ரூபாவுக்கு வெளியிடங்களில் போட்டோ பிரதிகள் எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தில் கணக்கெழுதப்பட்டுள்ளது. இது மோசடியில்லையா?

இதற்கான விளக்கத்தினை பல்கலைக்கழகத்தின் ஆவணமொன்று இவ்வாறு விபரிக்கின்றது. அதாவது, கொழும்பில் வைத்து அவசரமாக சில ஆவணங்களை போட்டோ பிரதி செய்ய வேண்டியிருந்ததாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே இந்தச் செலவீனங்கள் ஏற்பட்டதாகவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தவகையில் பார்த்தால், ஒரு போட்டோ பிரதி எடுப்பதற்கு 3 ரூபாய் என்கின்ற அடிப்படையில், கிட்டத்தட்ட 25 ஆயிரம் போட்டோ பிரதிகள் மேற்படி அவசரத் தேவையின் நிமித்தம் எடுக்கப்பட்டிருத்தல் வேண்டும்!

இன்னுமொரு குற்றம் இப்படி நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் தனது அன்றாடப் போக்குவரத்துத் தேவைகளுக்காக தினமும் 10 வாகனங்களை கடந்த வருடம் பாவித்திருந்தது. இந்தப் பத்து வாகனங்களும் பயணித்த மொத்தத் தூரம் 02 லட்சத்து 31 ஆயிரத்து 275 கி.மீற்றர் ஆகும். இதற்காக பாவிக்கப்பட்ட எரிபொருளின் அளவு 22 ஆயிரத்து 511 லீற்றர் என்று கூறப்படுகிறது. ஆனால், மேற்கூறப்பட்ட தூரத்துக்கு 16 ஆயிரத்து 918 லீற்றர் எரிபொருள் போதுமானதாகும். குறித்த 10 வாகனங்களுக்கும் இலங்கைப் போக்குவரத்துச் சபையினால் வழங்கப்பட்ட எரிபொருள் செலவீனத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழை வைத்துப் பார்க்கும் போது அதுதான் கணக்காக வருகிறது. அப்படியென்றால், 05 ஆயித்து 593 லீற்றர் எரிபொருள் வீண் விரயம் செய்யப்பட்டிருக்கின்றது, அல்லது மோசடி செய்யப்பட்டிருக்கின்றது. அதன் பெறுமதி 04 லட்சத்து 34 ஆயித்து 273 ரூபாயாகும்.


இதேவேளை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், அப்பல்கலைக்கழகத்தின் உள்ளகக் கணக்காய்வாளரை சில காலங்களுக்கு முன்னர் எவ்விதப் பதிலீடுகளுமின்றி களனிப் பல்கலைக்கழகத்துக்கு விடுவித்து விட்டதாகவும், இதனால், உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு செயற்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நடவடிக்கையானது, அங்கு இடம்பெறும் மோசடிகளை மறைப்பதற்கான முயற்சிகளில் ஒன்றென – தான் சந்தேசகம் கொள்வதாகவும் முறைப்பாட்டாளரான சதாத் தெரிவிக்கின்றார்.

இது இவ்வாறிருக்க, பல்கலைக்கழகங்களின் கணக்காய்வு விபரங்கள் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணக்காய்வுகள் கடந்த ஐந்து வருடங்களாகப் பிரசுரிக்கப்படவில்லை என்றும் அம்முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்டவை உள்ளடங்கலாக மொத்தமாய் 20 குற்றச்சாட்டுக்களை தனது கடிதத்தில் முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, நடைபெற்றுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் மேற்படி மோசடிகள் குறித்து விசாரிப்பதற்கு ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டுமென்ற வேண்டுகோளொன்றினையும் அவர் முன்வைத்துள்ளார்.

இவ்விடயங்கள் குறித்து உபவேந்தரிடம் பேசிக் கொண்டிருக்கையில் அவர் தனது சார்பான பல விடயங்களை நம்மிடம் கூறினார். அதாவது, ‘இந்தப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகளை நான் தடுத்து நிறுத்தினேன். அதனால் பாதிக்கப்பட்டவர்கள்தான் இவ்வாறு என்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றார்கள். இப்பல்கலைக்கழகத்துக்கு நான் ஏராளமான பணிகளைப் புரிந்துள்ளேன். எனது காலத்தில்தான் அரபுமொழிப் பீடமே உருவாக்கப்பட்டது. குவைத் அரசாங்கத்திடமிருந்து இப்பல்கலைக்கழகத்துக்கு 1000 மில்லியன் ரூபாய் உதவியினைப் பெற்றுக் கொடுத்துள்ளேன். அரசியல்வாதிகள் இப்பல்கலைக்கழகத்தை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆடுவதற்கு நான் அவர்களின் அடிவருடியல்ல. அதனால்தான், என்மீது இப்போது திருட்டுப் பட்டம் சுமத்துகின்றார்கள்” என்கிறார்.

இது இவ்வாறிருக்க, சர்ச்சைக்குள்ளாகியுள்ள உபவேந்தர் ஹூசைன் இஸ்மாயில் எதிர்வரும் 28 ஆம் திகதி தனது சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

இருந்த போதும், மேற்படி குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணைகள் நடத்தப்படுதல் வேண்டும் என்பதே இவ்விடயம் அறிந்த பலரினதும் கருத்தாகும்.

அப்போதுதான், இது தொடர்பில் ஏராளமான திரைகள் – விலகவும், வீழவும் வாய்ப்புகள் உள்ளன!

(இந்தக் கட்டுரையை 25 ஏப்ரல் 2009 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s