காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஆனபலன் ஒன்றுமில்லை, அரைச்சதமும் லாபமில்லை! 16 மார்ச் 2009

Filed under: அரசியல் — Mabrook @ 10:43 பிப

முஸ்லிம் சமூகத்தின் முரண்பாட்டு அரசியலை முன்வைத்து எழுதப்படும் சற்றே மேலோட்டமானதொரு கட்டுரை!

மப்றூக்

ண்டையில எழுதி மயித்தால மூடினத
ஆரறிவார் இவ்வுலகில் ஆதிவல்லோன் தானறிவான்!

அல்லாட செல்லுக்கு அடிபணிஞ்சி போனமெண்டா
நன்மை கிடைக்கும் – அதில்
நலவிருக்கும் பார் ராசா
முஸ்லிம் நாட்டார் பாடல் –

‘அல்லாவுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள். நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். அவ்வாறு கொண்டால், கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றிவிடும். நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்’. (அல்குர்ஆன்: சூரத்துல் அன்ஃபால். வசனம் – 46) என்று – மிகத் தீர்க்கமான முறையில் கட்டளையிடுகின்றது இஸ்லாம்!

ஆனால், துரதிஷ்ரவசமாக, இன்று நமது நாட்டில் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகளோ – தமக்குள் கருத்து வேறுபாடு கொண்டு, பிணங்கி, ஆளுக்கொடு திசையில் பிரிந்துபோய் – தடியெடுத்தலைகின்றார்கள்!

முஸ்லிம் சமூகத்துக்குள் புதிது புதிதாய் கட்சிகளும், தலைமைகளும் முளைத்துக் கொண்டேயிருக்கின்றன.

இந்திய சனத்தொகையை விடவும், அந்த நாட்டுக் கவிஞர்களின் தொகை அதிகமாகி விடுமோ என்று கவிஞர் மு. மேத்தா அச்சப்பட்டதைப்போல, இலங்கை முஸ்லிம்களின் எண்ணிக்கையை விடவும் அவர்களுக்கான அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விடுமோ என அச்சப்படத் தோன்றுகிறது!

ஓர் இலகு பார்வைக்காக, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தரப்புக்கள் அத்தனையையும் கூட்டிக் கழித்து – பிரித்துப் பார்ப்போமாயின், சமகால முஸ்லிம் அரசியலானது இன்று – இரண்டு பிரதான கூறுகளாகப் பிரிந்து போய்க் கிடப்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது. அவைகள்:
1. முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்
2. முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான அரசியல்

குறிப்பாக கிழக்கு மாகாண அரசியலில் இந்நிலையானது மிகவும் வெளிப்படையாகவும், கூர்மைத் தன்மையுடையதாகவும் காணப்படுகின்றது.

இதில் கவனிப்புக்குரிய விடயமென்னவென்றால், முஸ்லிம் காங்கிரசிலிருந்து தமக்கான அரசியல் அடையாளத்தைப் பெற்று, பின்னர் அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள்தான், முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான அரசியலை நடத்தும் அணிகளுக்கு இப்போது தலைமை தாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் – அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் தலைமையில் இருந்தபோது, அந்தக் கட்சிக்கு எதிராகச் செயற்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்களப் பெருந் தேசியக் கட்சிகளில்தான் அங்கம் வகித்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக மு.காங்கிரசையும் அதன் அப்போதைய தலைவர் அஷ்ரப்பையும் மிகக் கடுமையாகவும், குரூரமாகவும் எதிர்த்துக் கொண்டிருந்த பௌஸி மற்றும் அஸ்வர் போன்றோர் சிங்களங்கட்சிகளின் பிரதிநிதிகளாகவே இருந்தனர்.

இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம்! 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி – பாராளுமன்றத்தில் பொலிஸ் ஆணைக்குழுச் சட்ட விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. அதில் மு.கா. தலைவர் அஷ்ரப் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவ்வேளை அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சராய் இருந்த அஸ்வர் எழுந்து நின்று அஷ்ரப்பின் பேச்சிடையே குறுக்கீடு செய்தார். சத்தமிட்டார்! கடைசியில் – ”இந்த சபைக்குள் நுழைந்த மிக மோசமான மிருகம் நீதான்” என்று அஷ்ரப்பை பார்த்து திட்டினார் அஸ்வர்!

மு.கா. மற்றும் அதன் மீதான இந்த எதிர்ப்புணர்வின் நீட்சியானது இன்னும் மாறவில்லை. அப்படியேதான் இருக்கிறது. ஆனால், பௌஸி மற்றும் அஸ்வர் போன்றோருக்குப் பதிலாக – அதாஉல்லா, அமீரலி, பாயிஸ், ரிஷாத் பதியுத்தீன் என்று பாத்திரங்கள் மட்டும் மாறியிருக்கின்றன. அவ்வளவே!

முஸ்லிம் அரசியல் அரங்கில் – இப்போதெல்லாம் மேற்சொன்ன இரண்டு தரப்பாரும், மக்கள் நலன்கருதி என்ன செய்யப் போகின்றோம் என்பது பற்றியெல்லாம் எதுவும் பேசுவதில்லை. தமது எதிர்த்தரப்பார் தவற விட்ட தருணங்கள் பற்றியே மேடைகளில் இவர்கள் கர்ஜித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம் காங்கிரசை உடைத்து விடுவதையே தமது குறியாகவும், குறிக்கோளாகவும் கொண்டு திரிகின்றார்கள் மு.கா. எதிர்ப்பாளர்கள்.

மு.கா.விலிருந்து பிரிந்து சென்றவர்களைத் தேர்தல்களில் தோற்கடிப்பதையே தமது இலட்சியமாகக் கொண்டு அலைகின்றார்கள் மு.காங்கிரசார்கள்!

ஆனால், இந்த இரண்டு நடவடிக்கைகளாலும் – முஸ்லிம் சமூகத்துக்கு ஆனபலன் ஒன்றுமில்லை. அரைச்சதமும் லாபமில்லை!

முஸ்லிம் காங்கிரசின் உள்ளுர் பிரமுகர்களையும், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களையும் அண்மைக்காலமாக – முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் தமது அணிகளில் மிக வேகமாக இணைத்து வருவதை அரச ஊடகங்கள் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு ஒவ்வொரு பிரமுகராகப் பிரித்தெடுத்துக் கொண்டு போனால், கடைசியில் மு.கா.வின் அடி மடியில் – அடிவிழும் என்பதே மு.கா. எதிர்ப்பாளர்களின் கணக்காக இருக்கிறது!

ஆனால், இது குறித்து மு.கா.காரர்கள் கூறும் கருத்துக்களோ வேறானவை. ”மு.காங்கிரஸின் வாக்காளர்கள் – ‘கட்சி’ என்கிற அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு அணிதிரட்டப்பட்டவர்கள். கட்சியில் ஏற்படும் தனிமனித இழப்புக்களால் மு.கா.வின் வாக்குகள் ஒருபோதும் சிதறிவிட மாட்டாது” என்று கூறி, கடந்தகால தேர்தல்களைக் கணக்குகளாய்க் காட்டுகிறார் – மு.கா.வின் உயர்மட்ட பிரமுகரொருவர்!

மு.கா.வுக்கு இப்படியெல்லாம் அதன் எதிராளிகள் குழிதோண்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், அதற்குப் பதிலாக – முஸ்லிம் காங்கிரஸார் இதுவரை – சொல்லிக் கொள்ளும் வகையில் எவ்விதமான எதிர்வினைகளிலும் ஈடுபடவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மு.கா.விலிருந்து யார்தான் பிரிந்தாலும், அல்லது யாரைத்தான் பிரித்துக் கொண்டு போனாலும், பரவாயில்லை! தேர்தலொன்று வரும்போது – கட்சிக்குரிய வாக்குகள் அனைத்தும் கிடைத்தே தீருமென்று சிலவேளை – மு.கா. தலைகள் எண்ணிக் கொண்டிருக்கலாம். இந்த எண்ணம் பிழையல்ல. கடந்த காலங்களிலெல்லாம் அப்படித்தான் நடந்தது. ஆனால், வரும் தேர்தலில் இந்த எண் கணிதம் பிழைத்தால், முஸ்லிம் காங்கிசுக்கு சனிதான்!
மு.கா.விலிருந்து அதன் பிரமுகர்களை எதிராளிகள் பிரித்துக் கொண்டு போவதால், கட்சியிலுள்ள சில தொண்டர்களும், ஆதரவாளர்களும் சோர்வடைந்து போயுள்ளார்கள். இது தவிர்க்க முடியாததே! ஆனால், இவ்வாறானதொரு நிலையைக் களைவதற்குரிய எவ்வித எத்தனங்களையும் – மு.கா தலைமை இதுவரை எடுக்கவேயில்லை என்பதே கட்சியின் அனைத்து மட்டங்களிலுமுள்ள அதிருப்தியாகும்.

மு.கா. எதிர்ப்பாளர்கள் அரச தரப்பில் இருந்து கொண்டு – அபிவிருத்தி, தொழில்வாய்ப்புகளையெல்லாம் காட்டி, சாதாரண மக்களைத் தமது பக்கமாகத் திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, மு.காங்கிரஸார் ஆகக் குறைந்தது மக்கள் மத்தியில் இறங்கி – பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் என்று அடிக்கடி எதையாவது நடத்தி, ஆதரவாளர்களை உஷார்படுத்த வேண்டுமல்லவா? அதைவிடுத்து ஆடிக்கொரு முறை, ஆவணிக்கொரு முறை என்று தலைவர்களே தலை காட்டிக் கொண்டிருந்தால் – என்ன ஆகும் என்று, மு.கா.வின் முக்கியஸ்தர் ஒருவரே நம்மிடம் கேட்கின்றார்.

மு.கா.வை எதிர்த்து அரசியல் செய்யும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு, குறிப்பாக கிழக்கு முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு – எதிரேவரும் பொதுத் தேர்தலானது கடுமையானதாகவே இருக்கும். காரணம், சுதந்திரக் கட்சியுடனான கருணா அம்மானின் இணைவாகும்.

மு.கா.வை எதிர்க்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வெற்றிலைக் கூட்டணியில் இதுவரை இருந்துவந்த உச்ச நிலையானது – கருணா அம்மானின் இணைவுக்குப் பின்னர் சரிந்து விட்டதாகத்தான் கதைகள் வருகின்றன. தேர்தலின்போது வெற்றிலைக் கூட்டணியிடம் தான் முன் வைக்கும் கோரிக்கைகள் எடுபடாது போனால், தனித்துக் கேட்பதற்கான தயாரிப்புகளையும் செய்து வருகிறாராம் கிழக்கின் ஓர் அமைச்சர்!

கால காலமாக ஆளும் பேரினவாதம் இதைத்தான் செய்து வருகிறது. தனது தாளிப்பு மணக்கும் வரை வறுத்தெடுத்து விட்டு – கடைசியில் கறிவேப்பிலைகளையெல்லாம் வீசி எறிந்து விடும். இலங்கையின் அரசியல் வரலாற்றினை உன்னிப்பாகப் படிக்கும் எவரும், இவ்வாறு வீசியெறிப்பட்ட ஆயிரக்கணக்கான கறிவேப்பிலைகளின் துயர் நிறைந்த கதைகளை அறிந்து கொள்ளலாம்!

ஆனாலும், நமது அரசியல் தலைவர்களுக்கு புத்தி பிடிபட்ட மாதியாகத் தெரியவேயில்லை. ஒற்றுமைப்பட வேண்டும் என்று இவர்கள் கோசமிடுவது கூட, தமது தனி லாப அரசியலுக்காகத்தான்!

எனவே, மக்கள்தான் இனி – மிகக் கவனமாக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கின்றது. வெறும் கட்டிடங்களும், வீதிகளும் மட்டுமே ஒரு சமூகத்தின் அபிலாசைகளையெல்லாம் நிறைவு செய்து விடும் என்று நம்மில் சிலர் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த மனநிலையிலிருந்து விடுபடும் போதுதான் – நமக்கான அரசியல் விடிவை நோக்கி நம்மால் பயணிக்க முடியும் என்கிறார் இஸ்லாமிய மார்க்க அறிஞரும், சமூக ஆர்வலருமான நமது நண்பர்!

பொதுத் தேர்தலொன்று வரும் பட்சத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்வதில் பாதகமான நிலைகள் காணப்படுகின்றன என்று அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
நௌஷாட் அண்மையில் அச்சம் தெரிவித்திருந்தார். இதைத் தவிர்ப்பதற்கு – உரிய வகையில் முஸ்லிம் சமூகம் செயற்பட வேண்டியதொரு தேவையிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மைதான்! இந்த இழப்பை எப்படித் தவிர்ப்பது? எதன் மூலம் தவிர்ப்பது? எவ்வகையில் தவிர்ப்பது?

மகாஜனங்களே! நமது தலைவர்களின் பிணக்குகள் தீரும் என்கின்ற நம்பிக்கைகள் இப்போதைக்கில்லை. அவர்கள் – அவர்களின் குடுமிச் சண்டைகளைத் தொடர்ந்து கொண்டேயிருக்கட்டும். முதலில் – நமது சமூகத்தின் வாயில் மண் விழாமல் பார்த்துக் கொள்வோம்!!

(இந்தக் கட்டுரையை 15 மார்ச் 2009 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

One Response to “ஆனபலன் ஒன்றுமில்லை, அரைச்சதமும் லாபமில்லை!”

  1. nanpar mabrook! assalaamu alaikum wahmathullaah.
    kaalam kadanthu ikkaddurayai paarthaalum kooda muslim arasyalin awalatthai padampiditthukkaaddiyulleerkal.kaalatthin thaewai arinthu eluthiyamaikku nanri.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s