காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஹஜ் முகவரகம்: கொள்ளை வியாபாரிகளின் நவீன சந்தை! 10 திசெம்பர் 2008

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 12:33 பிப

color-dotமப்றூக்

Haj - 03♦ பௌர்ணமி தினத்தில் சாராயம் விற்பவன் மாதிரி, ஹஜ் எனும் புனித விடயமொன்றில் கொள்ளை லாபம் சம்பாதிக்கக் கூடாது.
ஹஜ் முகவர்கள் இவ்வருடம் கட்டண விடயத்தில் நடந்து கொண்ட விதம் மிகவும் கீழ் தரமானதாகும்.
ஹஜ் விவகாரத்தில் அமைச்சர் பௌசி மிகவும் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதாகவே பலரும் கூறுகின்றனர்.
யாத்திரிகர்களிடமிருந்து பெற்ற மேலதிக தொகையை முகவர்கள் மீளளிக்க வேண்டும்.

வியாபாரம் என்பது லாபம் தரும் தொழில்தான். புத்திசாதுரியமாகச் செய்தால் சுளையாகச் சம்பாதிக்கலாம். அதற்காக, வர்தகரொருவர் தனது பொருட்களை, கண்ட நின்ற படியெல்லாம் ஆளுக்கொரு விலையில் விற்க முடியாது. குண்டூசியொன்றை விற்பதென்றால் கூட, அதற்கென்று ஒரு நிர்ணய விலை இருக்கின்றது. அதற்கப்பாலெல்லாம் சென்று விற்று விட முடியாது. அப்படி எவராவது செய்வதாக தெரியவந்தால், கடைக்காரரின் நிலை அம்போதான். விலைக் கட்டுப்பாட்டுப் பரிசோதகர் வந்து, வைத்து விடுவார் ஆப்பு!

அநேகமாக அரசியல் விடயங்கள் பற்றியே எழுதும் இப்பக்கத்தில், என்ன – திடீரென்று வியாபாரத்தைப் பற்றி எழுதுகிறேன் என நீங்கள் யோசிக்கலாம். கூர்ந்து கவனியுங்கள். இந்தக் கட்டுரையின் பல இடங்களில் அரசியல் இருப்பது போல் தெரியும். ஆனால், இருக்காது! அரசியல் இல்லை போல் தெரியும். ஆனால், இருக்கும்!! ஏதாவது புரிகிறதா? வாருங்கள் உள்ளே நுழைவோம்.

ஹஜ் என்கின்ற விடயம் பற்றி – இதை வாசிக்கும் உங்களில் பலர் அறிந்திருக்கலாம். ஆனால், இஸ்லாமியரல்லாத நண்பர்களுக்காக அது குறித்து நாலு வரி விளக்கம்! அதாவது, இஸ்லாத்தில் ஒவ்வொருவருக்கும் ஐந்து விடயங்கள் கடமையாக்கப்பட்டுள்ளன. அதில் கடைசியானது ஹஜ்! போதியளவு செல்வமும், தகுதியான ஆரோக்கியமும் இருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இந்த கடமையை தனது வாழ்நாளில் ஒரு முறையாவது செய்தல் வேண்டும். சவூதி அரேபியாவின் மக்கா நகரிலுள்ள கஃபதுல்லா எனும் பள்ளிவாசலை ஹஜ் கடமையின் போது தரிசித்தல் பிரதானமானதாகும்!

ஹஜ்ஜுக்காகச் செல்பவர்கள் அநேகமாய் தனித்துச் செல்வதில்லை. கூட்டாகவும், ஒரு வழிகாட்டியுடனும்தான் செல்ல விரும்புவதுண்டு! அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1.    இவர்களுக்கு ஹஜ் பற்றிய முன் அனுபவம் இல்லாதிருத்தல்.
2.    நீண்ட பயணம் என்பதால், தமக்கு தெரிந்தவர்களும், ஊரவர்களும் தம்முடன் பயணிப்பதை, ஒரு வழித்துணையாகவும், ஆறுதலாகவும்; இவர்கள் நினைப்பது.

ஹஜ்ஜுக்காக செல்லும் யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதற்கென்றே இலங்கையில் பல்வேறு பயண முகவரகங்கள் தொழிற்பட்டு வருகின்றன. ஹஜ் கடமை என்பது முற்று முழுதாக ஆத்மீக நோக்கம் கொண்டதொரு செயற்பாடு என்றாலும், முகவரகங்களை நடத்துவோர் என்னவோ, இதை முழுமையானதொரு வியாபாரமாகவே நடத்தி வருகின்றனர். பச்சையாகச் சொன்னால், கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வழிகளில் ஒன்றாக இந்த ஹஜ் முகவரகம் நடத்தும் தொழில் இன்று மாறிப் போயிருக்கிறது!

தொழிலென்று – ஒன்று செய்தால், அதில் லாபம் உழைக்கத்தான் வேண்டும். ஹஜ் முகவரகம் என்பதற்காக, அது – நூறு வீதம் சேவை செய்யும் துறையொன்றாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சுத்த அபத்தமாகச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஆனால், ஒரு கஞ்சா வியாபாரி மாதிரி அல்லது பௌர்ணமி தினத்தில் கள்ளச் சாராயம் விற்கும் ஒருவன் மாதிரி, மனச்சாட்சிக்கு விரோதமாக ஹஜ் எனும் புனித விடயமொன்றில் கொள்ளை லாபம் சம்பாதிக்கக் கூடாது என்பதே நமது வாதமாகும்.

இந்த ஹஜ் முகவர்கள் இம்முறை தங்கள் மனசு விரும்பியவாறெல்லாம் கட்டணங்களை அறவிட்டிருக்கின்றார்கள். உதாரணமாக, தலைக்கு மூன்று லட்சத்து எழுபதாயிரம், மூன்று லட்சம், இரண்டரை லட்சம், ஏன் – இரண்டு லட்சம் ரூபாய் என்று Haj - 05மனச்சாட்சியே இல்லாமல் அகப்பட்ட மாதிரியெல்லாம் சுருட்டித் தள்ளியிருக்கின்றார்கள். இது குறித்து நண்பர் ஒருவர் நம்மிடம் பேசியபோது; வியாபாரம் என்றால் அதில் ஒரு நீதியும், நிர்ணயிக்கப்பட்ட விலையும் இருக்க வேண்டும். ஆனால், இந்த ஹஜ் முகவர்கள் இவ்வருடம் கட்டண விடயத்தில் நடந்து கொண்ட விதம் மிகவும் கீழ் தரமானதாகும் என்று கூறுகிறார்.

முன்பெல்லாம் – இத்தனை பேர்தான் ஹஜ்ஜுக்குச் செல்லலாம் என்று நமக்கு கட்டுப்பாடுகள் எவையும் இருந்ததில்லை. ஆனால், இப்போது அப்படியில்லை. காரணம், உலகம் முழுவதுமிருந்து ஹஜ்ஜுக்கு செல்வோர் தொகை அதிகரித்துள்ளதால், நெரிசல் அதிகம். எனவே, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இத்தனை பேர்தான் வரலாமென சவூதி அரசு இப்போது கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அந்தவகையில் நமது நாட்டிலிருந்து இவ்வருடம் சுமார் 5500 பேருக்கே ஹஜ் செல்ல அனுமதி கிடைத்திருந்ததாகத் தெரியவருகிறது.

ஹஜ் விடயத்துக்குப் பொறுப்பாக – ஒவ்வொரு முறையும் முஸ்லிம் அமைச்சர் ஒருவரை அரசாங்கம் நியமிப்பதுண்டு. இந்தப் பொறுப்பினைப் பெற்றுக் கொள்வதற்காக, நமது அமைச்சர்களுக்குள் அடிபிடி நடக்காத குறைதான். அத்தனை போட்டி! இந்த இடத்தில் ஒரு விடயத்தை நாம் நன்றாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். அதாவது, கொட்டாவி ஒன்றை விடுவதற்கு முன்பே, அதில் லாப – நஷ்டக் கணக்குப் பார்ப்பவர்கள் நமது அரசியல்வாதிகள். அப்படியான இவர்கள், ஒரு விஷயத்துக்காக இத்தனை போட்டி போடுகிறார்கள் என்றால் – அதில் நிறையவே, வரவுகளும் வருமானங்களும் இருக்கும் என்பதை நாம் பெரிதாக நிறுவியெல்லாம் காட்டத் தேவையில்லை. விரல் சூப்பும் குழந்தையே சொல்லி விடும்!

இவ்வாறு நியமிக்கப்படும் அமைச்சரானவர், ஹஜ் தொடர்பான பல்வேறு விடயங்களில் தலையிட்டு தனது செல்வாக்கினைச் செலுத்துவதுண்டு. உதாரணமாக, ஒவ்வொரு முகவரகமும் இத்தனை யாத்திரிகர்களைத்தான் அழைத்துச் செல்லலாம் என்று, கிடைத்த அனுமதியைப் பிரித்துக் கொடுப்பதெல்லாம் இவர்தான்! இதை இன்னும் விளக்கமாகச் சொன்னால், 5000 பேருக்குத்தான் ஹஜ் செல்ல சவூதி அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என வைத்துக்கொள்வோம்.

அதேவேளை, நாட்டில் 10 முகவரகங்கள் இருக்கின்றன எனவும் கொள்வோம். இதை நியாயமாகப் பிரித்தால் – ஒரு முகவருக்கு 500 பேருக்கான அனுமதி வழங்கப்படுதல் வேண்டும். ஆனால், அப்படியெல்லாம், நடப்பதில்லை. சிலருக்கு 1000 கிடைக்கும், சிலருக்கு 100 கிடைக்கும். சிலருக்கு இதைவிட குறைவாகவும் கிடைக்கும். ஏன் இப்படி குளறுபடி நடக்கிறது என்று கேட்டால்ளூ பாதாளம் வரைப் பாயும், பணம் படுத்தும் பாடுதான் எல்லாம் என்கிறார்கள் இவ்விடயம் பற்றித் தெரிந்த சிலர்      .

இந்தவகையில் – கடந்த சில வருடங்களாக, ஹஜ் விடயத்துக்குப் பொறுப்பாக இருந்து வருபவர் மூத்த அரசியல்வாதியான அமைச்சர் பௌசி! இவருக்கு இதில் நல்ல பெயரில்லை. கடந்த வருடம் ஹஜ் செல்வதற்காக, புறப்பட்டு வந்த பலர், கடைசி நிமிடம் வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு  திரும்பிப் போன கதை நாம் எல்லோரும் அறிவோம். அந்தப் பிழைக்கு அமைச்சர் பௌசியே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டுமென்று, அப்போது பல தரப்புகளிலிருந்தும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை இங்கு ஞாபகிக்கத்தக்கது.

அதுபோலவே, இம்முறையும் ஹஜ் விவகாரத்தில் அமைச்சர் பௌசி மிகவும் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதாகவே பலரும் கூறுகின்றனர். ஹஜ் முகவர்கள் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் மாதிரி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தொகையென்று, அகப்பட்ட விதத்திலெல்லாம் கட்டணம் அறவிட்டுக் கொண்டிருந்த போது – பௌசி என்ன பூப்பறித்துக் கொண்டிருந்தாரா? என்று கோபத்துடன் கேட்கிறார் சமூக நலன் விரும்பியொருவர்!

கொள்ளை லாபம் என – ஏன் இதைக் கூறுகின்றீர்கள் என்று, ஹஜ் முகவர்கள் விடயம் தொடர்பாக குறை கூறிப்பேசிய நண்பரொருவரிடம் கேட்டேன். அவர் விபரம் தந்தார். அதாவது, Fouzஇலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்காக செல்பவர்கள், சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரிக்கு விமானம் மூலமாகச் செல்கின்றார்கள். சாதாரண காலங்களில் கொழும்பிலிருந்து ஜித்தா சென்று வருவதற்கான இருவழி விமானக் கட்டணம் 50 ஆயிரம் ரூபாய்க்குள்தான் வரும்! ஆனால், ஹஜ் பயணிகளுக்கோ கிட்டத்தட்ட 01 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயளவில் விமானக் கட்டணம் அறவிடப்படுகிறது. இது கொள்ளை லாபமில்லையா? என்று கேட்கும் நண்பர், ஏன் இப்படி அறிவிடப்படுகிறது? மேலதிகமாக பெறப்படும் தொகை, யார் யார் கைக்கெல்லாம் போய்ச் சேருகின்றது? என கேள்விகளை அடுக்கத்  தொடங்குகின்றார்.

சரி, அப்படியென்றால் சாதராணமாக – யாத்திரிகர் ஒருவரிடம் நியாயமான ஹஜ் கட்டணமாய், முகவர் ஒருவர் எவ்வளவு பெற்றுக்கொண்டால் போதுமாக இருக்கும் என்று, ஹஜ் விவகாரம் தொடர்பில் நல்ல அறிவுள்ள – தலைநகரத்துப் பிரமுகர் ஒருவரிடம் கேட்டோம்! இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் என்பது பொருத்தமானதொரு கட்டணத் தொகை. இதில் செலவெல்லாம் போக – முகவருக்கு எப்படியோ 40 அல்லது 50 ஆயிரம் ரூபாய் சுளையாக மிஞ்சும் என்கிறார் அவர்! அப்படியென்றால், யாத்திரிகர் ஒருவரிடமிருந்து 03 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயைக் கட்டணமாகப் பெற்ற முகவரொருவருக்கு லாபமாக 01 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பது வெளிப்படையான கணக்காகும்! (யப்பா..! பௌர்ணமி நாளில் கள்ளச் சாராயம் விற்பதை விடவும் மோசமான கொள்ளை லாபமப்பா இது!)

இது இப்படியிருக்க, மக்கள் மத்தியில் பிரபலமுள்ள மௌலவிமார்கள் சிலரும், மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற இஸ்லாமிய அமைப்புக்களில் குறிப்பிடத்தக்க பதவிகளை வகிக்கும் சிலரும் கூட – ஹஜ் முகவர்கள் இப்படி கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்கு அறிந்தோ, அறியாமலோ துணை போய் விடுகிறார்கள் என்று கவலைப் படுகின்றார் பல்கலைக்கழக விரிவுரையாளரும் மார்க்க அறிஞருமான நமது நண்பர்.

எப்படியெனில், இந்த முகவர்கள் மேற்சொல்லப்பட்ட நபர்களுக்கு சில சௌகரியங்களைச் செய்து கொடுத்து, அவர்களை ஹஜ்ஜுக்கு இலவசமாக அழைத்தும் செல்கின்றார்கள். இதன்போது, இந்த மௌலவிமார்களும், இஸ்லாமிய அமைப்புகளில் அங்கம் வகிப்போரும் தங்களுக்கு இலவசங்களை வழங்குகின்ற முகவர்களை புகழ்ந்து கருத்துக்களைக் கூறத் தொடங்குகின்றார்கள்.

அதேவேளை, தமது முகவரகங்களுக்கு ஹஜ் வழி காட்டிகளாக மேற்படி மௌலவிமார்களே வருவதாகக் கூறி, ஹஜ் முகவர்களும் விளம்பரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், இதிலுள்ள கொடுக்கல் வாங்கல்களையோ, வியாபாரப் புத்தி குறித்தோ அறியாத அப்பாவி மக்கள், குறித்த முகவரகங்களைப் பெரிதாக நம்பி – அவர்கள் கேட்கின்ற தொகையைக் கொடுத்து விட்டு, ஹஜ்ஜுக்குப் பயணப்பட்டு விடுகின்றார்கள்!

ஆக – மேற்படி கட்டண முரண்பாடு மற்றும் கொள்ளை லாபம் தொடர்பில், ஹஜ் விவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பௌசி அவசரமாகத் தலையிட்டு நியாயம் காண வேண்டும் என்கிறார் நமது Haj - 01ஊடக நண்பர்! அதாவது – இம்முறை நியாயமற்ற முறையில் மிக அதிகமான தொகையை பயணக் கட்டணமாக பெற்றுக் கொண்ட ஒவ்வொரு முகவரும், அவர்கள் வாங்கிய மேலதிக தொகையை உரிய நபர்களிடம் உடனடியாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் பௌசி கண்டிப்பான உத்தரவை இட வேண்டும். இதை ஏற்காத முகவர்களுக்கு, வரும் வருடங்களில் ஹஜ் யாத்திரிகர்களை அனுப்புவதற்கான கோட்டாவை வழங்கக் கூடாது என்று அந்த ஊடக நண்பர் மேலும் கூறினார்.

ஹஜ் முடிந்து யாத்திரிகர்கள் அடுத்த வாரமளவில் நாடு திரும்புவார்கள். அப்போது – இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். அப்படியில்லாது போனால், பிரச்சினை பழங்கஞ்சியாகப் போய்விடும்.

ο

(இந்தக் கட்டுரையை 07 டிசம்பர் 2008 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s