காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

மு.கா தோல்வியடையவில்லை, அரசியல் அரங்கில் ஆட்டம் கண்டிருக்கிறது! 21 நவம்பர் 2008

Filed under: சந்திப்பு — Mabrook @ 1:39 முப

மப்றூக்
                                     பசீர் சேகுதாவூத்துடன் ஓர் இரவு நேரச் சந்திப்பு
வீன சொல்லாடல், நகைச்சுவைக்குணம், சிக்கலற்றவார்த்தை வெளிப்பாடு போன்றவைகளை தனது இயல்பான மொழி நடையில் கொண்டவர் மு.கா.வின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்! ஈரோஸ் எனும் ஆயுத இயக்கத்தின் முன்னாள் மூத்த போராளியான இவர், தமிழ் இயக்கங்களில் இணைந்து கொண்ட ஆரம்ப முஸ்லிம்களில் ஒருவர்!

உலக ஆட்சி முறைகள் மற்றும் அவைகளின் சித்தாந்தங்கள் பற்றியெல்லாம் உள்ளங்கைக்குள் வைத்துப் பேசக் கூடிய இவரின் பரந்த அறிவு ஆச்சரியமூட்டுகின்றது.

70 களின் பிற்பகுதியில் தனது 16 ஆவது வயதில் ஓர் ஆயுதப் போராளியாக மாறிய இவரிடம் கேட்டு பிரமிக்க, எண்ணற்ற கதைகள் இன்னுமிருக்கின்றன!

ஈரோசின் – பிரதிநிதியாய் முதன்முதலாக இவர் நாடாளுமன்றம் சென்றபோது 28 வயதே நிரம்பிய இளைஞர்!!

கிழக்குத் தேர்தலில் குதிப்பதற்காய் தனது பா.உ. பதவியை துறந்த இவர், இப்போது அந்த மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருககின்றார்.

பசீர் ஒரு கவிஞர், கவிதைத் தொகுதியொன்றின் சொந்தக்காரர்.

நிறைய வாசிக்கின்றார். ஒரு நூலகத்தினளவு புத்தகங்கள் இவரிடம் சேகரமாய் இருக்கின்றன!

ஒரு இரவு 8.30 மணியளவில் ஆரம்பித்த எங்கள் சந்திப்பு பின்னிரவு வரை நீண்டது. அதில் நாம் கேட்டவைகள் சிலவும், அவர் சொன்னவைகளும்….

கேள்வி: சர்வ கட்சிக் குழுக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கருத்தொன்றை முன்வைத்திருப்பதாகப் பேசப்படுகிறதே, அது குறித்துச் சொல்லுங்களேன்?

பதில்: முஸ்லிம் அலகு ஒன்று குறித்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தக் குழுக் கூட்டத்தில் பேசியிருக்கின்றது. ஆனால் இது புதியதொரு விடயமல்ல! ஏற்கனவே பல தடவைகள் இந்த முஸ்லிம் அலகு பற்றி நாம் பேசியிருக்கின்றோம்.

மலையகத் தமிழர்களை அதிகமாகக் கொண்ட அலகு ஒன்று பற்றிப் இப்போது பேசப்பட்டிருக்கின்றது. இந்த வேளையில், முஸ்லிம் அலகு பற்றி நாம் மீளவும் வலியுறுத்தியிருக்கின்றோம்! முஸ்லிம்களுக்கான கட்சியொன்று உருவானதே முஸ்லிம் அலகொன்றின் தேவையை முன்னிறுத்தித்தான் என்பதை மறந்து விடக்கூடாது! வடக்கு – கிழக்கு பிரிந்த பின்னர் அதுபற்றி இன்னுமொரு முறை பேசியிருக்கின்றோம்!

வடக்கு – கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே ஆழுகின்ற நிலத் தொடர்பற்ற சுயாட்சி அலகு என்பதே முஸ்லிம் காங்கிரசிஸின் கோரிக்கையாக எப்போதும் இருந்து வந்தது. ஆனால், இப்போது வடக்கு – கிழக்கு மாகாணங்கள் சட்ட ரீதியாகப் பிரிக்கப்பட்டு விட்டன. ஆகவே இன்றிருக்கின்ற நிலமைக்கேற்ப, எமது ஆரம்பக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான முதற்படியாக, நாம் இன்னுமொரு கோரிக்கையை முன்வைக்க முடியும். சரி கிழக்குப் பிரிந்து விட்டது. கிழக்கு என்பது முஸ்லிம்களின் தனி மாகாணம் அல்ல. இன்று கிழக்குப் பிரிந்து விட்டதால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டன எனும் ஒரு பார்வை இருக்கின்றது. ஆனால், அது தீரவேயில்லை!

கிழக்குப் பிரிந்த பிறகு அந்த மாகாணத்திலே நிலத் தொடர்பற்ற தனியான அலகொன்று முஸ்லிம்களுக்குத் தேவை எனும் நிலையொன்று ஏற்பட்டிருக்கின்றது. எனவே, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கென்று ஆகக்குறைந்தது இன்றிருக்கின்ற அருகதையோடு ஒரு தனியலகு தேவை! தமிழர்களுக்குத் தீர்வு வருகின்றபோது, அல்லது ஒட்டுமொத்தமாக வடக்கு – கிழக்குப் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்ற போது, தமிழர்களுக்குக் கொடுக்கப்படுகின்றது போன்ற நிலத்தொடர்பற்ற தனியலகொன்றை முஸ்லிம்கள் வென்றெடுக்கலாம்.

கேள்வி: கிழக்கு மாகாணசபையென்பது, சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாசைகளை எந்தளவு பூர்தி செய்யுமென நீங்கள் நம்புகின்றீர்கள்?

பதில்: மத்திய அரசினுடைய தேச நிர்மாண அமைச்சின் உப காரியாலயமாக செயற்படும் நிலையில்தான் இன்று கிழக்கு மாகாணசபை இருக்கின்றது. அங்கே பணமில்லை!

13 ஆவது திருத்தச் சட்டம் பற்றியெல்லாம் பேசுகின்றார்கள். அதன் அதிகாரங்கள் இன்னும் கிடைக்கவேயில்லை. சிலவேளை 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டாலும் கூட, அது சிறுபான்மை மக்களுக்கான உரிமைகள் அனைத்தையும் கொடுத்து விடப்போவதில்லை! மட்டுமன்றி, ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறித்தெடுக்கும் விடயங்களே இந்தப் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருக்கின்றன.

கேள்வி: இத்தனை பலவீனங்களையும், குறைபாடுகளையும் கொண்டதொரு சபையில், எதைச் சாதிக்க முடியுமென்ற நம்பிக்கையில் மு.கா.வினராகிய நீங்கள் அங்கம் வகித்து வருகின்றீர்கள்?

பதில்: தேசிய ரீதியில் நாடாளுமன்றம் இருப்பதைப் போல, கிழக்கில் இந்த சபையானது ஏதோ ஒரு வகையில் உருவாகி விட்டது. அதை ஒரு அரங்காகப் பயன்படுத்தி மாகாணசபை உறுப்பினர்கள் மிக துரிதமாகச் செயற்படுகின்றார், நிறையப் பேசுகின்றார்கள். தனி நபர் வினாக்களைத் தொடுக்கின்றார்கள். அவர்களின் பகுதிகளிலுள்ள பிரச்சினைகள் பற்றி இங்கு பேசுகின்றார்கள்.

மட்டுமன்றி, முஸ்லிம்கள் அதிகப்படியான அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டால், அவர்களுக்கு மாகாண முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதி மீறப்பட்டு விட்டது. எனவே, இப்போது இருக்கின்ற கிழக்கு மாகாணத்துக்குள்ளேயே, ஆரம்ப கட்டமாக – நிலத் தொடர்பற்ற முஸ்லிம் அலகொன்றைக் கோர வேண்டிய அவசரத் தேவையென்று தற்போது இருக்கின்றது. அதற்கான வேலைப்பாடுகளை தொடங்குவதற்கும் இந்த சபையை ஒரு தளமாகப் பயன்படுத்தப் போகின்றோம்!

கேள்வி: அஷ்ரப்பின் மறைவின் பின்னர், பேரம் பேசும் அரசியலை முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம் காங்கிரஸ் இழந்து விட்டதாக நீங்கள் கூறிவரும் கருத்துடன் உடன்படாதவர்கள் உங்கள் கட்சிக்குள்ளேயே இருக்கின்றார்களாமே?

பதில்: தமது அபிலாசைகளை ஒரு இனம் அடைந்து கொள்வதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று அரசியல் ரீதியான அஹிம்சை முறை, மற்றொன்று ஆயுத ரீதியிலான வன்முறை வழி! முஸ்லிம்கள் தங்கள் அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்கு ஆயுதம் தாங்கிப் போராடவில்லை. முஸ்லிம்களின் தனிக்கட்சியானது அந்த மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே இருக்க வேண்டும். அபிவிருத்தியை மட்டும் பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு தனிக்கட்சி தேவைதானா என்கின்ற கேள்வியொன்றும் இருக்கின்றது. உரிமைக்கான அரசியலைச் செய்கின்ற வழியிலே அபிவிருத்தி அரசியலைச் செய்வதென்பது ஒரு வகையானது. அபிவிருத்திக்காகவே நாங்கள் இந்தக் கட்சியை வைத்திருக்கின்றோம் என்றால், எமக்கு அந்தக் கட்சி தேவையில்லை என்பது எனது அபிப்பிராயமாகும்!

ஒரு இனத்துக்கான தனிக்கட்சியென்பது அந்த இனத்தின் அரசியல் அபிலாசைகளை வென்று கொடுப்பதற்கானதாகவே இருக்க வேண்டும். அவ்வாறு வெற்றி பெறுவதென்றால் அந்தக் கட்சிக்குப் பேரம் பேசும் பலமொன்று இருக்க வேண்டும். ஆனால், இன்று மு.கா.வைப் பொறுத்தவரை அந்தப் பேரம்பேசும் சக்தியிலே ஒரு பலவீனம் ஏற்பட்டிருக்கின்றது. இதை ஒத்துக் கொண்டு, எங்களை சுய விமர்சன ரீதியாகப் புடம்போட்டுக் கொள்ள வேண்டும். இதுவே, அடுத்த கட்டத்துக்கு எம்மை நகர்த்துவதற்கான வழியாகும்.

மேலும், மர்ஹும் அஷ்ரப் அவர்களுடைய சிந்தனை, அரசியல், கோட்பாடு மற்றும் வழிமுறைகள் போன்றன மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டுமென நான் நினைக்கின்றேன். அதில் முதன்மையாக இந்தப் பேரம் பேசும் அரசியலை மீட்டிக் கொள்ள வேண்டியிருக்கின்றது என்பது என்னுடைய அபிப்பிராயமாகும். அஷ்ரப்பை மறந்து விட்டு முஸ்லிம்களின் தனித்துவமான அரசியலை நாம் செய்ய முடியாது. இவ்வாறு அஷ்ரப்பை பற்றிப் பேசுவது யாருக்காவது கோபத்தைத் தருமாக இருந்தால் என்னால் ஒன்றுமே செய்ய முடியாது!

அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் முன்னாள் ஒளி விளக்கா அல்லது அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு எந்நாளுமே ஒளி விளக்கா என்ற கேள்வியைக் கேட்டுப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

மு.காங்கிரஸ் மக்கள் மத்தியில் தோல்வியடையவில்லை. ஆனால், தேசிய அரசியல் அரங்கிலே ஆட்டம் கண்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

சிலவேளை, கட்சிக்குள் எனது கருத்துத் தொடர்பில் விமர்சனங்கள் இருக்கக் கூடும். ஆனால், எனக்கு முன்நிலையில் இதுவரை எவரும் பேசியதில்லை!

கேள்வி: கிழக்கு அமைச்சர் ஹிஸ்புல்லா மிக அண்மையில் வழங்கியிருந்த பேட்டியொன்றில், மு.காங்கிரசையும், அதன் தலையையும் பிரித்துப் பேசியிருக்கின்றார். அதாவது, மு.காங்கிரஸ் கட்சி அவசியமானதென்றும் அதேவேளை, அதன் தலைவர் பிழையான போக்குடையவர் என்றும் கூறியிருக்கின்றார். மேலும், அடுத்த தேர்தலில் மு.கா. சார்பில் அவர் போட்டியிடலாமெனவும் தெரிவித்திருக்கின்றார். இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: மு.காங்கிரஸ் என்பது ஒரு உறுப்பினர்களால்; கட்டமைக்கப்பட்ட ஒரு கட்சியல்ல! இது – தலைவரை மையப்படுத்திய கட்சியாகும். இவ்வாறானதொரு கட்சியிலிருக்கும் நாம், எவர் தலைவராக இருந்தாலும் – இந்தக் கட்சியையும், இதன் தலைவரையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது!

தலைமைத்துவத்தையும் கட்சியையும் ஹிஸ்புல்லா வேறுபடுத்திப் பார்ப்பது இது முதன்முறையல்ல! தலைவர் அஷ்ரப் அவர்கள் இருந்தபோதே அவர் இப்படி வேறுபடுத்திப் பார்த்திருக்கின்றார். அவர் மரணித்தபோதும் வேறுபடுத்திப் பார்த்தார். இப்படி வேறுபடுத்திப்; பார்த்து இந்தக் கட்சிக்குள் வர முடியாது. அடுத்த விடயம் இந்த மனநிலையின் அடிப்படையில் அவர் இருந்தால், கட்சிக்குள் அவர் ஒருபோதும் உள்வாங்கப்பட மாட்டார்.

சகோதரர் ஹிஸ்புல்லா மு.கா.வுக்குள் வரலாம். என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம்! மு.கா.வுக்குள் வரப்போகிறோம் என்று சொல்பவர்கள் எவரையும், வேண்டாம் என்று நான் சொல்வதில்லை. ஆனால், எப்போது வரப்போகின்றார்கள்  என்பதும், வந்து என்ன செய்யப்போகின்றார்கள் என்பதும் முக்கியமான விடயங்களாகும்.

ஹிஸ்புல்லா கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மு.கா.வில் இணைய வேண்டுமெனக் கூறி வந்தார். அப்போது – அன்று வகித்த விமானத்துறைத் தலைவர் பதவியை ராஜிநாமாச் செய்து விட்டே வந்தார்! இப்போதும் அவர் ஒரு பதவியை வகிக்கின்றார். அதை விட்டுவிட்டு மு.கா.வுக்குள் இப்;போது வேண்டுமானாலும் அவர் வரலாம். வருமாறு கோரிக்கை விடுக்கின்றேன்!

மற்றைய விடயம், மு.கா.வில்; அடுத்த முறை தேர்தலில் போட்டியிடலாம் என ஹிஸபுல்லா கூறியிருக்கின்றார். முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் யார் யார், எந்த மாவட்டத்தில் போட்டியிருவதென்பதை அந்தக் கட்சியின் உயர் பீடம், தலைமை போன்றன தீர்மானிக்கும். இதை ஹிஸ்புல்லா தீர்மானிக்க முடியாது!

கேள்வி: முஸ்லிம்களைப் புறக்கணித்து விட்டு, இலங்கை அரசும் – இந்தியாவும் பேச்சுவாத்தையொன்றில் ஈடுபடுவதாக பத்திரிகைச் செய்தியொன்றில் நீங்கள் விசனம் தெரிவித்திருந்தீர்கள். இப்போதைய நிலையில் நடக்கும் இவ்வாறான பேச்சுக்களை அர்த்த புஷ்டியானவைகளாக இருக்குமென்றும், அவைகளினூடாக சிறுபான்மையினருக்கு ஏதாவது கொடுப்பார்கள் என்றும் நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: கொடுப்பது என்பது வேறு, கொடுப்பதற்கான பேச்சுக்கள் என்பது வேறு! கொடுப்பதற்கான பேச்சுவார்த்தையிலேயே நம்மைச் சேர்க்காமலிருப்பதைச் சும்மா பார்த்துக்கொண்டிருந்தோமானால், எங்களுக்கு எதனைக் கொடுத்தாலும்; பரவாயில்லை என்று அதற்கு அர்த்தமாகிப் போய்விடும். ஆகவேதான், அதுவிடயத்தில் குரல்கொடுத்திருக்கின்றோம்.

மகிந்த கொடுப்பாரா? அல்லது இந்தியா பறித்தெடுக்குமா? அல்லது புலிகள் வென்றெடுப்பார்களா என்பது பற்றியெல்லாம் கவலையில்லை. ஆனால், ஒரு பேச்சு நடக்கும் போது – முஸ்லிம்களும் அங்கு அங்கம் வகிக்க வேண்டும்.

ஜனாதிபதி இந்தியா சென்றிருந்தார், அந்த நாட்டு பிரமருடன் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசியிருக்கின்றார். மேலும், அங்கு – தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.உ.கள் இருவர் இருந்து கொண்டு உத்தியோகப் பற்றற்ற ரீதியில் பல தரப்புக்களுடன் பேசி வருகின்றார்கள். மட்டுமன்றி இந்தியாவுக்கு ரணிலும் செல்கின்றார். இந்த நிலையில், அங்கு முஸ்லிம் தரப்பு பிரதிநிதிகள் இல்லாதமையானது ஒரு அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

அவர்கள் கொடுப்பார்களா, கொடுக்க மாட்டார்களா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பரீட்சையொன்று வரப்போகிறதென்றால், அதற்குத் தயாராக வேண்டும்! பரீட்சை நடக்காது விட்டால் நட்டமில்லை. சிலவேளை, தயாராகாத நிலையில் பரீட்சை நடந்துவிட்டால் நட்டம் நமக்குத்தான்!

முஸ்லிம்கள் ஒரு தரப்பாகக் கணக்கெடுக்கப்படல் வேண்டும். அதற்காகத்தான் நான் போராடி வருகின்றேன்!

0

(இந்த நேர்காணலை 20 நொவம்பர் 2008 ஆம் திகதிய வீரகேசரி வெளியீடான ‘விடிவெள்ளி’ பத்திரிகையிலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s