காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஒலுவில் துறைமுகம்: கனவுகளுக்கெதிரான கலவரம்! 20 நவம்பர் 2008

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 12:49 பிப

color-dotமப்றூக்

Hodingலுவில் துறைமுகம் – ஒரு காலத்தில் முஸ்லிம் காங்கிரசின் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் கனவுகளில் ஒன்றாகக் கருதப்பட்டது! அபிவிருத்தி தொடர்பில் எங்கள் தலைவன் தூரதரிசனத்தோடு பெற்றுத்தந்த வெற்றிகள் பலவாகும்! அவைகளில் உச்சபட்சமா இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகம். மற்றையது ஒலுவில் துறைமுகம் என்று, அந்தப் பகுதி மக்களால் போற்றிப் புகழப்பட்டது – இந்த உத்தேசத்  துறைமுகம்!

ஆனால், மிகத்துரதிஷ்டவசமாக – எந்த மக்கள் ஒலுவில் துறைமுகத்தை தங்களது வரமாக கொண்டாடினார்களோ, அதே மக்கள், அது – தமக்கான சாபமாகிப் போய்விடுமோ என, இப்போது பயப்படத் தொடங்கியுள்ளார்கள். அதனால் இந்தத் துறைமுகமே எங்களுக்குத் தேவையில்லையென்று இங்குள்ள மக்களில் ஒரு பகுதியினரே குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர்!

ஏன் இந்தப் பயம்? மர்ஹும் அஷ்ரப்பின் அந்தக் கனவை கலைக்க முயல்வோர் யார்? இந்தத் துறைமுகம் வேண்டும் என்பதற்கும், வேண்டாமென்பதற்கும் இடைப்பட்ட காலத்தில் என்னதான் நடந்தது? என்பது பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக – ஒலுவில் துறைமுகத்தின் தோற்றுவாய் மற்றும் அமைவு பற்றியெல்லாம் கொஞ்சம் தோண்ட வேண்டியிருக்கிறது. பார்ப்போமா?

விதையும், கதையும்!

1998 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆந் திகதிய வர்த்தமானி மூலம், அப்போதைய துறைமுக அபிவிருத்தி அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப்பினால் – குறிப்பிட்ட வர்த்தமானித் திகதியிலிருந்து, இலங்கைத் துறைமுக அதிகாரசபைச் சட்டப் பிரிவு வழங்கும் அதிகாரத்தின் கீழ், ஒலுவில் துறைமுகம் கொண்டுவரப்படுவதாக அரசாங்க அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது. நமது பாசையில் சொன்னால், இதை – ஒலுவில் துறைமுகத்துக்கான விதை விழுந்த நாள் எனலாம்!

கிட்டத்தட்ட 125 ஏக்கர் நிலப்பரப்பு இந்த துறைமுக திட்டத்துக்காக இதுவரை பொதுமக்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

வர்த்தக மற்றும் மீன்பிடி துறைமுகமாக அமையவுள்ள இதன் கடல் எல்லை 14 ஹெக்ரெயர்களாகும். இதற்கான உத்தேச நிர்மாணச் செலவு 46.1 மில்லியன் யூரோக்கள். இந்தத் தொகையை டென்மார்க் அரசாங்கம் வட்டியில்லாக் கடனாக வழங்கியுள்ளது (துறைமுகம் செயற்படத் தொடங்கி 06 மாதத்திலிருந்து 10 வருடங்களுக்குள் கடனை அடைத்து முடிக்க வேணுமுங்கோ).

இவ்வருடம் மே மாதம் ஆரம்பமான இந்த துறைமுகக் கட்டுமான வேலைகள், 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவில் நிறைவடையும் என்கிறது திட்டத்தைப் பொறுப்பேற்றுள்ள எம்.ரி.ஹொஜ்காட் எனும் டென்மார்க் நிறுவனம்!

கொள்வனவு செய்யப்பட்ட 125 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணிகளின் சொந்தக்காரர்களில் பலருக்கு, அவர்களின் நிலத்தினது விஸ்தீரணத்துக்கேற்ப இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக, ஒலுவில் துறைமுக அதிகாரசபையின் திட்டமிடல் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் கூறுகின்றார்.

ஆனால், காணிச் சொந்தக்காரர்களில் சிலர், தமக்கான இழப்பீட்டுத்தொகை இன்னும் கிடைக்கவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர். விடயம் உண்மைதானா என்று அதே அதிகாரியை கேட்டோம்! காணிச் சொந்தக்காரர்களில் சிலர் தமக்கான இழப்பீட்டுத் தொகை போதாது என்று அடம்பிடிக்கின்றனர். சிலரது உறுதிகள் தெளிவாக இல்லை. வேறு சில காணிகள் பிரதேச செயலாளரால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இப்படிப் பார்த்தால் சுமார் 50 பேருக்கு இந்த இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை என்கிறார் அவர்!

உத்தேச ஒலுவில் துறைமுக வரைபடம்

உத்தேச ஒலுவில் துறைமுக வரைபடம்

இந்தக் காணிகளை கொள்வனவு செய்தபோது  78 குடும்பங்கள் தமது குடியிருப்பை இழந்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. பின்னர் கொழும்புத் துறைமுகம் அனுப்பி வைத்த குழுவொன்று நடத்திய கறாரான கணக்கெடுப்பின் பின்னர், 58 குடும்பங்கள் மட்டுமே அங்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இதற்கொப்ப, இழப்பீட்டுத் தொகையோடு, அந்தக் குடும்பத்தினர்களுக்கு வேறோர் இடத்தில் 58 வீடுகளைக் கொண்ட மாற்று வீட்டுத் தொகுதியொன்றும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

நீளும் மோசடிகள்!

ஆனால், இந்த இடத்தில் ஒரு பிரச்சினை! அதாகப்பட்டது, குடியிருப்பிருப்புகளை இழந்த குடும்பங்களுக்கு 20 பேர்ச் பரப்பளவைக் கொண்ட காணியிலேயே ஒவ்வொரு வீடும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கின்றது.

ஆனால், அளந்து பார்த்தால் எந்தத் துண்டும் 20 பேர்ச்சாக இல்லை. இந்த வீட்டுத் தொகுதிக்கான கொந்தராத்துக்காரர்கள் ஒவ்வொரு காணித்துண்டிலும் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகக் களவாடி, அவர்களுக்கென்று ஒரு பெருந்துண்டைச் சுருட்டிக் கொண்டு விட்டார்கள் என்கின்றனர் அங்குள்ள பொதுமக்கள் சிலர்!

ஆனால், ஒலுவில் துறைமுக அதிகாரசபையின் திட்ட அதிகாரியொருவர் இதுகுறித்துக் கூறுகையில்; அங்கீகரிக்கப்பட்ட அரச நில அளவையாளர்களைக் கொண்டே இந்தக் காணித்துண்டுகள் பிரிக்கப்பட்டன. இதில் எந்தவித மோசடியும் இடம்பெறவில்லை. அவ்வாறு இடம்பெற்றுள்ளதை எவரும் இதுவரை நிரூபிக்கவுமில்லை. 20 பேர்ச் என்று அளக்கும் போது – அதில் கொஞ்சம் குறையவும் சந்தர்ப்பமிருக்கின்றது. இது சட்டரீதியாகவே அனுமதிக்கப்பட்ட தவறுதான் என்கிறார் அவர்!

இது இப்படியிருக்க, இந்தத் துறைமுக நிர்மாணத்தினால் மீன் பிடித்தொழிலில் ஈடுபட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள 806 மீனவர்களுக்கு 02 வருடத்துக்கான இழப்பீட்டுப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இதைப் பெற்றுக் கொண்ட அனைவரும் அப்பகுதியிலுள்ள – பதியப்பட்ட 09 கரைவலை மீனவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். இழப்பீடாக இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகை 143 மில்லியன் ரூபாவாகும்!

இந்த விடயத்திலும் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது – இழப்பீடுகளைப் பெற்றுக் கொண்ட மீனவர்களிடமிருந்து துறைமுக அதிகாரசயையினரால் ஆவணமொன்றில் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், அதில் என்ன விடயம் எழுதப்பட்டிருந்தது என்பது பற்றி பூரணமாக தமக்குத் தெரியாது என்கிறார் ‘எயார் லங்கா’ எனும் மீனவ சங்கமொன்றின் தலைவரான அஷ்ரப்!

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்; அந்த ஆவணம் தமிழில்தான் எழுதப்பட்டிருந்தது. ஆனால், அதை முழுமையாக வாசிப்பதற்கான அவகாசம் எமக்கு வழங்கப்படவில்லை. அத்தனை பேரையும் வரிசையாக நிறுத்தி விட்டு, ஒருவர் பின் ஒருவராக அழைப்பதும் ஒப்பம் பெறுவதுமாகவே அவர்கள் இருந்தார்கள் என்கிறார்.

மீனவ சங்கத்தின் தலைவரான அஷ்ரப் இந்த விடயம் தொடர்பாக மேலும் பேசினார்! துறைமுக நிர்மாணம் இடம்பெறும் 02 வருடங்களுக்கு மட்டுமே எமக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதன்பின்னர் நாங்கள் என்ன செய்வது, எங்களுக்கான மாற்றுத் திட்டங்கள் எவை என்பது பற்றியெல்லாம் எதுவுமே சொல்லப்படவில்லை.

Fisherman 1

மீனவர் சங்கத் தலைவர் அஷ்ரப்

ஆனால், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதமளவில் – பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் – நாங்கள், அமைச்சர் சமல் ராஜபக்ஷவை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வைத்துச் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் எமக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். அந்தவேளையில் – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், இலங்கைத் துறைமுக அதிகாரசபை தலைவர், ஒலுவில் துறைமுக திட்டமிடல் முகாமையாளர் நாகூர்தம்பி மற்றும் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் அங்கு இருந்தனர் எனத் தெரிவித்த மீனவ சங்க தலைவர், தமக்கு அமைச்சர் சமல் வழங்கிய வாக்குறுதிகளை வரிசைப்படுத்தினார்.

இந்தத் திட்டத்தினால் காணிகளை இழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் போன்றோருக்கு – கட்டுமான வேலைத்திட்டத்திலிருந்து, துறைமுகத்துக்கான ஆளணிணினரைப் பெற்றுக்கொள்வது வரை, வேலைவாய்ப்பில் கல்வித் தகைமைக்கேற்ப முன்னுரிமை வழங்கப்படும். இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படும். இப்படி பல்வேறு உறுதிமொழிகள். அவைகளை நாம் எழுத்தில் கேட்டபோது – அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஏதோவெல்லாம் கூறி, மழுப்பி விட்டார் என்கிறார் மீனவர் தலைவர் அஷ்ரப்!

இருந்தபோதும், மேற்படி வாக்குறுதிகளில் பல மீறப்பட்டு விட்டதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்!

உண்மையாகவா? அப்படி மீறப்பட்ட உறுதிமொழிகள்தான் என்ன? – புகார் கூறியவர்களிடமே விசாரிக்கத் தொடங்கினோம். அவர்கள் விபரம் தந்தார்கள்.

உதாரணமாக, சமல் ராஜபக்ஷ கூறியது போலவே, தற்போதைய கட்டுமான வேலையைப் பொறுப்பெடுத்துள்ள எம்.ரி.ஹோஜ்காட் தரப்பினரும், அவர்களின் நிறுவனத் தொழில்வாய்ப்பில் பாதிக்கப்பட்டோக்கு முன்னுரிமை வழங்குவதாக எம்மிடம் உறுதியளித்திருந்தனர்.

அதாவது, இத்திட்டத்தால் இழப்புகள் ஏற்பட்ட மக்களுக்கு, தங்கள் நிறுவன வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதாவும், பாதிக்கப்பட்டோர் தரப்பில் தகுதியுடையவர்கள் இல்லாத பட்சத்திலேயே, வெளியிலிருந்து வேலையாட்களைப் பெற்றுக் கொள்வதெனவும் எம்.ரி.ஹோஜ்காட் நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டது என்றார்கள்.

யார் கூறினார்கள் எனக்கேட்டோம். அந்நிறுவனத்தின் வேலைத்தள இணைப்பாளர் ஹிபதுல் கரீம் மற்றும் மேலதிகாரிகளான வெள்ளைக்காரர்கள் என்று பலர் உறுதியளித்தார்கள்! அவர்கள் அந்த வாக்குறுதிகளை வழங்கியபோது – ஒலுவில் துறைமுக திட்ட முகாமையாளர் நாகூர்தம்பி உட்பட அதிகாரிகள் சிலரும் அங்கிருந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

எம்.ரி.ஹோஜ்காட்: எரியும் வீட்டில் பிடுங்கும் இனமா?    

சரி, எம்.ரி.ஹோஜ்காட் நிறுவனம் வழங்கிய அந்த வாக்குறுதிக்கு இப்போது என்ன ஆயிற்று? விபரம் தந்தார் மீனவர் ஒருவர்! பாதிக்கப்பட்டோரில் ஒருசிலருக்கு மட்டுமே அந்த நிறுவனம் வேலைவாய்ப்பினை வழங்கியிருக்கின்றது. அதுவும் கூலியாள் வேலை மட்டும்தான். ஏனைய எந்தப் பதவிக்கும் எங்கள் தரப்பிலிருந்து எவரும் தெரிவுசெய்யப்படவில்லை.ஆனால், தகைமையுடையோர் பலர் எங்களில் இருக்கின்றார்கள் என்றார் அந்த மீனவர்!

இது இப்படியிருக்க, திடீரென ஒரு நாள் அந்த நிறுவனத்தில் வேலைசெய்த அனைவரும் காரணங்கள் எதுவுமேயின்றி வேலை நீக்கம் செய்யப்பட்டு விட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்! கூடவே, இந்த அநியாயங்களுக்கெல்லாம் மூலகாரணம், அந்நிறுவனத்தின் அதிகாரியான ஹிபதுல் கரீம் என்பவர்தான் என்று வாக்குமூலம் வேறு தருகின்றார்கள்!

சரி, இதுகுறித்து மறுதரப்பார் சொல்லும் விளக்கம்தான் என்ன என்றறிய, ஒலுவில் பிரதான வீதியோடு – கிழக்குப் பக்கமாகச் செல்லும் 50 மீற்றர் நீளமான தனிப்பாதையொன்றால் இணைக்கப்பட்டிருக்கும் – எம்.ரி.ஹோஜ்காட் நிறுவனத்திற்குச் சென்றோம்! காவலாளிகள் நின்றார்கள். நம்மை அறிமுகம் செய்துவிட்டு, அதிகாரியான கரீமை சந்திக்க வேண்டும் என்றோம்.

சற்றே நிமிடக் காத்திருப்புக்குப் பிறகு உள்ளே அழைத்தனர். புறப்படத் தயாராகவிருந்த கரீம், எங்களுக்காகக் காத்து நின்றார். பேசினோம். இங்கு வேலைசெய்த அத்தனை பேரையும் வேலையை விட்டும் நிறுத்தி விட்டீர்களாமே, என்னதான் நடந்தது? பதிலளித்தார் கரீம்! அப்படி அநீதியான வகையில் எவரையும் நாம் விலக்கவில்லை. எம்.ரி.ஹோஜ்காட் என்பது ஒலுவில் துறைமுகக் கட்டுமானப் பணியைப் பொறுப்பெடுத்துள்ள ஒரு வெளிநாட்டுக் கம்பனியே தவிர, இலங்கைத் துறைமுக அதிகார சபையின் ஒரு பிரிவு அல்ல! ஆனால், இங்குள்ள சிலர் அப்படி நினைத்துக் கொண்டு, துறைமுக அதிகாரசபையிடம் வைக்க வேண்டிய கோரிக்கைகளையெல்லாம் எம்மிடம் கேட்கின்றார்கள்.

இதுதவிர, சிலர் அவர்களுடைய கடமையைச் சரியாகச் செய்வதேயில்லை. அவ்வாறு வேலையில் அசிரத்தையாக இருந்துவந்த நபர் ஒருவரை இரண்டு மூன்று தடவைகள் எச்சரித்திருந்தோம். அவர் திருந்தியபாடில்லை. இறுதியாக வேலையை விட்டும் நீக்க வேண்டியதாயிற்று! இதற்குப் போய், எல்லோரும் இணைந்து வேலைசெய்யாமல் மறியல் போராட்டம் நடத்த ஆரம்பித்தார்கள். நீக்கப்பட்டவரை மீண்டும் வேலையில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் பேரம்பேசினார்கள்.

மட்டுமன்றி, எங்கள் மேலதிகாரியான வெள்ளைக்காரரை Oluvil - 3தாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள். அதனால்தான் அத்தனைபேரையும் ஒழுக்காற்று விதிமுறைக்கேற்ப நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. இந்த இடத்தில் ஒரு விடயத்தைக் கூற வேண்டும். அதாவது, இங்கு வேலைபெறும் எல்லோருமே 06 மாத கால ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சேர்க்கப்படுகின்றனர். அதிலும், முதல் 03 மாதம் – தகைமை காண் காலமாகும். இந்த மூன்று மாதத்தினுள் குறிப்பிட்ட நபரின் வேலையில் நிறுவனம் திருப்திகாணாதவிடத்து, அவரை எவ்வித விசாரணைகளுமின்றியே பணிநீக்கம் செய்யலாம். இதில் கேள்விகளுக்கிடமில்லை என்கிறார் கரீம்!

ஆனால், இவ்விவகாரத்தில் வேலையிழந்தவர்கள் கூறும் தகவல்களோ, கரீம் சொல்வதற்கு முற்றிலும் முரணாக இருக்கின்றன!

நான் வேலையில் இணையும்போது நாளொன்றுக்கு 1050 ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்கப்படும் என்றுதான் கூறப்பட்டது. ஆனால், கிடைக்கும் மாதத் சம்பளத்தை கணக்கிட்டுப் பிரித்தால், எனது நாளொன்றுக்கான சம்பளம் கிட்டத்தட்ட வெறும் 650 ரூபாயாக மட்டுமே வருகிறது என்கிறார் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி ஒருவர்!

அப்படியென்றால் மிகுதிப் பணத்துக்கு என்ன ஆயிற்று என்று கேட்டோம். அதுதான் தெரியவில்லை. இதில் எங்களுக்குப் பாரிய சந்தேகம் இருக்கின்றது. இது குறித்துக் கேட்பதற்காகவும், பணியாளர்களின் நலன்களைப் பேணுவதற்காகவும் – அங்கு வேலை செய்யும் அனைவரும் இணைந்து தொழிலாளர் சங்கமொன்றை அமைக்கும் முயற்றியொன்றில் ஈடுபட்டோம். அது ஹொஜ்காட் நிறுவனத்தாருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான், இந்த தொழில்சங்கம் அமைக்கும் செயற்பாடுகளில் முன்னின்று உழைத்த நபரை அவர்கள் பணிநீக்கம் செய்தனர்.

காரணம் கேட்டால், அவர் சரியாக வேலை செய்யவில்லை என்று பொய் சொல்கிறார்கள். எனவேதான் பணிநீக்கம் செய்யப்பட்டவரை மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ளுமாறு நாம் போராட்டம் செய்தோம் என்கிறார் வேலையிழந்த ஊழியரொருவர்.

ஆனால், கரீம் இதனை முற்றாக மறுக்கின்றார். சம்பளம் மற்றும் ஏனைய நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு – இவர்கள் அனைவரும் கையொப்பமிட்ட ஒப்பந்த ஆவணங்கள் அனைத்தும் எம்மிடமிருக்கின்றன. மட்டுமன்றி, இவர்களில் சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வழங்கியதாக குற்றச்சாட்டொன்றையும் எம்மீது சொல்கின்றனர். அப்படி யாராவது கொடுத்திருந்தால் முன்வந்து கூறுங்கள் என்றோம். ஒருவர் கூட வரவில்லை. இதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்கிறார் அவர்!

அச்சங்களும் ஆதாரங்களும்!

இவைகளெல்லாம் ஒருபுறமிருக்க, இந்தத் துறைமுகமே எங்களுக்குத் தேவையில்லையென்று இப்பிரதேசத்தின் சாதாரண மக்கள் முதல் புத்திஜீவிகள் வரை, இப்போது உரத்துக் குரலெழுப்பத் தொடங்கியுள்ளார்கள். ஏற்கனவே, துறைமுகத்துக்கான வெளிச்சவீடு மற்றும் அலுவலகக் கட்டிடங்களெல்லாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. துறைமுகத்தின் கட்டுமானப் பணிகளில் கூட, 5 வீதத்துக்கும் அதிகமான வேலைகள் நிறைவடைந்திருக்கின்றன.

இந்த நிலையில் – துறைமுகம் தொடர்பில் இப்படியானதொரு புதிய பிரச்சினை முளைத்துள்ளமை குறித்தும், அதற்கான காரணங்கள் எவை என்பது பற்றியும் நாம் ஆராயத் தொடங்கினோம்! அந்தவகையில், ஒலுவில் துறைமுகத்தை வேண்டாமென மக்கள் மறுப்பதற்கு காரணமாகச் சொல்லும் விடயங்களை இவ்வாறு வரிசைப்படுத்தலாம்.

இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒரே மாவட்டம் அம்பாரை மட்டும்தான். ஆனால், இந்த துறைமுகம் உருவானால், தீகவாபியை வைத்துக் கொண்டு முஸ்லிம் மக்களின் காணிகளை சிங்களவர்கள் அபகரித்து வருவதுபோல், இந்தப் பிரதேசத்தையும் அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கத் தொடங்கி விடுவார்கள். இதனால், அம்பாரையில் முஸ்லிம் சமூகம் தமது பெரும்பான்மையை இழந்துபோகக் கூடிய அபாயகரமானதொரு நிலை ஏற்படும்.

துறைமுகம் உருவானால், இப்பிரதேசம் முழுமையானதொரு வர்த்தகத் தளமாக மாறிவிடும். இதனால், இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் மிகமோசமான கலாசாரச் சீரழிவு ஏற்பட்டுவிடும்.

உயர் பாதுகாப்புப் பிரதேசமாக இப்பகுதி பிரகடனப்படுத்தப்படுவதோடு, துறைமுகமும், அது சார்ந்த கடல் பிராந்தியமும் – கடற்படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இதனால், மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாது போதும்.

இப்பிராந்தியமே ராணுவ மயப்பட்டுவிடும். தற்போது, ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்களின் பாதுகாப்புக்கு எனக் கூறி, அப்பகுதியை பொலிஸ் மற்றும் ராணுவ மயப்படுத்தியிருப்பது போல, நாளை துறைமுகத்தின் பெயராலும், அதில் வேலைசெய்யும் சிங்களவர்களின் பாதுகாப்பின் பெயராலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

Oluvil - 2இது இவ்வாறிருக்க, கிழக்கிலங்கை அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் அஷ்சேய்க் ஹனீபா மதனி – அண்மையில் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் ஆற்றிய உரையின்போது தெரிவித்த கருத்துக்களில் சில – இக்கட்டுரைக்கு மிகத் தேவையானவை. அதாவது, மு.கா. தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களின் சிந்தனையில் உதித்த காத்திரமான சமூகப் பங்களிப்புகள் – தென்கிழக்குப் பல்கலைக்கழகமும், ஒலுவில் துறைமுகமுமாகும்.

அஷ்ரப்பின் யுகத்தில் அம்பாரை மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணம் போன்றவை முஸ்லிம்களின் பெரும்பான்மையோடும், பலத்தோடும் ஆலவிருட்சமாய் ஓங்கி இருந்தன. ஆனால், இந்த விருட்சங்களின் சிலபகுதிகள் இப்போது வெட்டப்பட்டு, அவை கோடாரிக்காம்புகளினதும், கைக்கூலிகளினதும் கைகளுக்கு போய்ச் சேர்ந்து விட்டன. இந்த நிலைவரத்தால், மேற்படி பல்கலைக்கழகத்தினதும், துறைமுகத்தினதும் பலாபலன்களை சமூகம் – உரிய முறையில் அனுபவிக்க முடியாமல் போயிற்று!

அஷ்ரப் அவர்களின் பிடிக்குள்ளிருந்த இந்தப் பிராந்தியத்தின் அரசியல் அதிகாரத்தை, தற்போதைய முஸ்லிம் அரசியல் தலைவர்களால் தக்கவைக்க முடியாமல் போனமையே மேற்சொன்ன நிலைமைக்குக் காரணமாகும்!

இது தவிர, அப்போது தலைவர்களாக இருந்த சந்திரிக்கா குமாரணத்துங்க மற்றும் அஷ்ரப் போன்றோரின் குணாம்சங்கள் ஒரு மாதிரியானவைகளாக இருந்தன. ஆனால், தற்போதைய தலைவர்களின் நிலையோ வேறானவை!

சுனாமியால் வீடுகளை இழந்த மக்களுக்கான வீட்டுத் திட்டமொன்றை அமுல்படுத்த முயற்சிக்கின்றார் அரசாங்கத்திலுள்ள அமைச்சர் ஒருவர்! ஆனால், இதே அரசாங்கத்தின் மற்றுமொரு அமைச்சரோ – அந்தத் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் வரை செல்கின்றார்.

இப்படியானதொரு நிலையில், ஒலுவில் துறைமுகம் தொடர்பாக – நமது சமூகத்துக்கு ஏற்படும் எதிர் விளைவுகளை, நமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தட்டிக்கேட்பார்கள் என்றோ அவைகளுக்கெதிராகப் போராடுவார்களென்றோ சிறுபிள்ளைத்தனமாக நாம் நம்பிக் கொண்டிருக்க முடியாது.

இதில் – சமூகமே நேரடியாக தலையிட வேண்டும். அதுதான் பலிக்கும்!
0

(இந்தக் கட்டுரையை 09 மற்றும் 16 நொவம்பர் 2008 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s