காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

முஸ்லிம் அரசியலும், கருத்துக் கந்தசாமிகளும்! 8 ஒக்ரோபர் 2008

Filed under: அரசியல் — Mabrook @ 10:21 பிப

மப்றூக்
சொரணை கெட்டவர்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இந்தச் சொல்லாடல் கிழக்கு மாகாணத்தில் பரவலாகப் பயன்படுத்தப் படுவதுண்டு (வேறு பிரதேசங்களிலும் பயன்படுத்தப்படலாம்). வெட்டகம், மானம், ரோசம் மற்றும் சூடு போன்றவைகளை சுத்தமாகத் தொலைத்ததாகக் கருதப்படுபவர்களையே சொரணை கெட்டவர்கள் என்று மக்கள் சொல்லுவர்! இந்த வகையறாவைச் சேர்ந்த நபர்கள் எந்த வகையான அவமானங்கள் பற்றியும் அலட்டிக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் தமது தாயாரின் நடத்தை குறித்து வசை சொல்பவர்களிடமிருந்து ஏதாவது லாபம் கிடைக்குமின்றால், எவ்வித கூச்சமுமின்றி அதைக் கூடப் பெற்றும் கொள்வார்கள்!

சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் பற்றாலி சம்பிக்க ரணவக்க சிறுபான்மை இனங்கள் பற்றித் தெரிவித்த கருத்துக்களால் கொதிப்படைந்திருக்கும் ரோசமுள்ள இந்து, முஸ்லிம் சமூகத்தவர்களிடையே இது குறித்த எவ்விதமான
அதிர்வுகளுமில்லாமல் ஒரு பிரிவினர் தாமும் தம் பாடுமாக இருக்கின்றனர். இவர்கள் பரவாயில்லை. ஆனால், இன்னுமொரு பிரிவினரோ – பற்றாலி சம்பிக்க எடுத்த இனவாத வாந்தியை கைகளால் ஏந்திப் பருகிக் கொண்டிருக்கின்றார்கள். அதாகப்பட்டது, அமைச்சர் சம்பிக்கவிக்கவின் கருத்தால், அவருக்கும், அரசாங்கத்துக்கும் எதிராக சிறுபான்மை மக்களிடையே தோன்றியிருக்கும் கொதிநிலையைக் குறைப்பதற்காக, சிலர் – கச்சை கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கின்றனர். இதில் துயரம் தரும் விடயமென்னவென்றால், எந்த சமூகத்தவர்களைப் பார்த்து  இந்த நாட்டுக்கு வியாபாரத்துக்குக்காக வந்த, வந்தான் வரத்தான்கள் என்று சம்பிக்க ரணவக்க கூறினாரோ, அதே – சமூகத்தைச் சேர்ந்த சிலரே, அவருக்காக, காவடி தூக்கியாடுகின்றார்கள்!

முஸ்லிம் மற்றும் இந்துக்கள் இந்த நாட்டின் பிரஜைகளல்லர்! இவர்கள் வெறும் வந்தேறு குடிகள் மட்டுமே. இலங்கை எனும் இத் தேசத்தில் உரிமை கோர இவர்களுக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை என்று சம்பிக்க ரணவக்க கூறிமையானது, அவரின் சொந்தக் கருத்துத்தான். அது – அரசாங்கத்தின் கருத்தல்ல என்று கூறியிருக்கின்றார் – ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகரும், ஊடகத்துறை குறைகேள் அதிகாரியுமான திருவாளர் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள்! இப்படி அவர் கூறியதற்கான காரணம், சிறுபான்மை மக்களின் கோபத்திலிருந்து அரசாங்கத்தைக் காப்பாற்றுவதுதான். இதற்காகத்தான் அரசாங்கம் இவரையும், இவரைப் போன்றவர்களையும் வளர்த்து வருகின்றது. இவர்களும் நன்றி மறவாமல் அவ்வப்போது தமது விசுவாசத்தைக் காட்டியே வருகின்றார்கள்!

சிறுபான்மையினரைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அமைச்சர் சம்பிக்க பேசியவை, அவரின் தனிப்பட்ட கருத்தா இவல்லையா என்பதெல்லாம் இங்கு வாதத்துக்குரிய பிரச்சினையல்ல! சம்பிக்க அப்படி சொல்லியிருக்கவே கூடாது என்பதே நமது பிரச்சினை என்கிறார் முஸ்லிம் சிவில் அமைப்பு ஒன்றின் முக்கியஸ்தரான நண்பர் ஒருவர்! சம்பிக்கவின் கருத்தால் ரோசமுள்ள முஸ்லிம்கள் கடுமையாகக் கோபம் கொண்டுள்ளார்கள். இந்தக் கோபமானது, அரசாங்கத்தின் பக்கம் திரும்பாமல் பார்த்துக் கொள்வதோடு, ஆட்சியாளர்களையும் காப்பாற்ற வேண்டுமென்பதற்காகவே, அடித்துப் பிடித்து அறிக்கை விட்டிருக்கின்றார் அஸ்வர் ஹாஜியார்! ஆனால் பாருங்கள், முஸ்லிம் சமூகத்தை கீழ்தரமாகப் பேசிய சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக, நேரடியாய் ஒரு அறிக்கை விடுமளவுக்கு நமது ஹாஜியாருக்கு முதுகெலும்பில்லாமல் போய்விட்டதே என்று அந்த நண்பர் தனது கோபத்தையும் வெளிப்படுத்துகின்றார்.

அரசாங்கத்தை இந்த இக்கட்டிலிருந்து அஸ்வர் காப்பாற்ற முயற்சித்தது மட்டுமன்றி, அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்துக்கு எதிராக, முஸ்லிம்களால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றினை குழப்புவதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் வானொலியொன்றில் அஸ்வர் நேரடியாக இணைந்து – குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தில் எவரும் கலந்து கொள்ள வேண்டாமென கேட்டிருந்தார். அஸ்வரின் இந்த வானொலிக் கூத்தில்  மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவும் இணைந்து கொண்டார். ஆனாலும், அந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கின்றது. இது குறித்து பத்திரிகை நண்பரொருவருவர் கூறுகையில்,  இந்த ஆர்ப்பாட்டத்தை முன்நின்று நடத்த வேண்டிய அஸ்வர் போன்ற மூத்த முஸ்லிம் அரசியல்வாதிகளே, இப்படி –  பேரினவாதத்தின் முன்னால் கை கட்டி சேவகம் புரிவதானது – வெட்கக் கேடு தரும் விடயமென்கிறார்.

அரசாங்கத்தைக் காப்பாற்றும் பொருட்டு, ஜனாதிபதியின் ஆலோசகர் அஸ்வர் இப்படியெல்லாம் கூறித் திரிகின்றாரே, இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று – முஸ்லிம் காங்கிரசின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசனலியைத் தொடர்பு கொண்டு கேட்டோம். ஹசனலி பேசினார். அஸ்வர் போன்றவர்கள் – முஸ்லிம்கள் தரப்பாக அரசாங்கம் வைத்திருக்கும் வெறும் காட்சிப் பொருட்கள் மட்டும்தான். அரசுக்கும், அதிலுள்ள பேரினவாதிகளுக்கும் இப்படி வக்காலத்து வாங்குவதற்காகவே ஆட்சியாளர்கள், இவர் போன்றவர்களை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், இவர்களைக் காட்டிக் காட்டியே, முஸ்லிம் நாடுகளிடம் இந்த அரசாங்கம் பெருமளவிலான உதவிகளைப் பெற்றும் வருகின்றது எனக் கூறும் ஹசனலி, மேலும் தொடர்ந்தார்.

முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக அஸ்வருக்கு என்ன தெரியும்? இனப்பிரச்சினையினாலும், போரினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் மக்கள் குறித்து அவர் என்ன அறிவார்? பாதிக்கப்பட்ட அந்த மக்களின் உணர்வுகள் பற்றி அஸ்வருக்கு ஏதாவது தெரியுமா? ஆகக்குறைந்தது, இரண்டு இரவுகளாவது அந்த மக்களுடன் தங்கியிருப்பாரா? முஸ்லிம்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்க, அஸ்வருக்கு எந்த அருகதையும் கிடையாது என்று ஆவேசத்துடன் முடித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசனலி!

அஸ்வர் போன்றோர் தமது சுய நலனுக்காக எதையும் பேசுவார்கள், எதையும் செய்வார்கள்! ஐ.தே.கட்சி மூலமாக அஸ்வர் மிக நீண்ட காலமாக தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தவர். அப்போதெல்லாம், அந்தக் கட்சி மீது அவர் தெரிவித்த காதலையும், எதிர்க்கட்சிகள் தொடர்பில் பாடி வந்த வசைகளையும், இப்போது நினைத்துப் பார்த்தால் நமக்கே உடல் கூசும் – வெட்கத்தில் வியர்வை வடியும்! ஏந்தக் கட்சியை அஸ்வர் – தலையில் வைத்துப் கொண்டாடினாரோ, அதே ஐ.தே.க.வுக்கு அல்வா கொடுத்து விட்டுத்தான், இப்போதைய, பொ.ஐ.மு. அரசில் அவர் இணைந்திருக்கின்றார்! அஸ்வரின் இப்படி அந்தர் பல்டியடிக்கக் காரணம் வேறொன்றுமில்லை. ஒரேயொரு முறை, தேசியப்பட்டியல் பா.உ. பதவியை – ஐ.தே.க. அஸ்வருக்கு வழங்கவில்லை. அவ்வளவுதான்!

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்துக்கு எதிராக, கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் எவரும் கலந்து கொள்ள வேண்டாமெனக் கூறி, ஏன் அதைத் தடுக்க முயற்சித்தீர்கள் என்று, பத்திரிகையொன்று ஏ.எச்.எம். அஸ்வரிடம் கேட்டது. அதற்கு அஸ்வர் கூறிய பதில் இதுதான். அதாவது, பயங்கரவாதிகளுக்கெதிராக அரசு யுத்தமொன்றை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த வேளையில், அதைத் திசை திருப்பும் வகையில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. மேலும், இதன் பின்னணியில் பயங்கரவாதிகளும் செயற்பட்டிருக்கின்றார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தின் போது – பொது சொத்துக்களும், அரச உடமைகளும் சேதமாக்கப்பட்டமையானது, இதில் பயங்கரவாத சக்திகளுக்குத் தொடர்புள்ளதையே வெளிக்காட்டுகின்றது என்கிறார் அஸ்வர். அதாவது, அஸ்வர் ஹாஜியார் சொல்ல வருவது யாதெனில், சம்பிக் ரணவக்கவின் கருத்துக்கு எதிராக நடத்தப்பட்டதாக கூறப்படும் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில், புலிகளும் தொடர்பு பட்டிருக்கின்றார்கள் என்பதேயாகும். இது எத்துணை பெரிய கோமாளித்தனமான பதில்! அஸ்வரின் இந்தப் பதிலைப் படித்த நமது பல்கலைக்கழக விரிவுரையாளர் இப்படிக் கூறினார்; ஜோக்கடிப்பதில் வடிவேல் வந்து, நமது அஸ்வர் ஹாஜியாரிடம பிச்சை வாங்க வேண்டும் போலிருக்கிதே!

இப்படி தமது சுய நலனை மட்டுமே முன்னிலைப்படுத்தி அரசியல் செய்து வருவோர், தமது கஜானாவை கவனித்துக் கொள்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளட்டும். அதைவிடுத்து, எனதுசமூகம், எனது இனம் என்கின்ற கோதாவில் கருத்துக் கூறுகிறேன் பார் என்று, சும்மா – சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் கயமைகளிலெல்லாம் ஈடுபடக் கூடாது என்று கோபப்படுகின்றார் சமூக ஆர்வலர் ஒருவர்!

எனது பத்திரிகை நண்பர் ஒருவர் கூறிய பன்ஞ் டயலொக் இந்தக் கட்டுரையை முடித்துக் வைக்க மிகவும் பொருத்தமானது!

அஸ்வர் ஹாஜியார் போன்ற அரசியல்வாதிகள், முஸ்லிம் சமூகத்துக்குச் செய்யும் மாபெரும் தொண்டு யாதெனில், அந்தச் சமூகம் குறித்து எதுவும் பேசாமலிருப்பதேயாகும்!

(பிற்குறிப்பு: கருத்துக் கந்தசாமி என்பது – நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு படத்தில் தாங்கி வரும் கதாபாத்திரத்தின் பெயராகும்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s