காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

புறக்கணிப்பின் வலி! 30 ஜூலை 2008

Filed under: அரசியல் — Mabrook @ 1:53 பிப

மு.கா. தலைவருக்கு மனம் திறந்து ஒரு மடல்

மப்றூக் 

ன்பின் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு… மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை மையப்படுத்தி எழுதுகின்றேன். வெற்று அரசியலைப் பேசுகின்ற அல்லது பத்தோடு பதினொன்றானது எனத் தூக்கிப் போடும் பெறுமானமற்ற எழுத்துக்களைக் கொண்டதல்ல இந்தக் கடிதம்! குறிப்பிட்டதொரு பிரதேசத்தில் வாழ்ந்து வரும் பெருந்தொகை மக்களின் ஊமை வலி இது! ஆகக்குறைந்தது இந்த மடலை இடைவெளி விட்டு, இரண்டு முறையாவது நீங்கள் படித்துப்பார்த்தேயாக வேண்டுமென்பது நமது வேண்டுகோள்!

மு.காங்கிரசின் இருதயம் என்பது அம்பாரை மாவட்டம் என்பதில் நீங்கள் உள்ளிட்ட எவருக்கும் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது என்பது எமது நம்பிக்கை. அப்படி முரண்பட்ட கருத்துக் கொண்டோரை முஸ்லிம் அரசியல் குறித்த அறிவில் மிகவும் நலிவுற்ற நபர் என்றே நாம் கொள்தல் வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அது 06 முஸ்லிம் பிரதேச சபைகளைக் கொண்டது. சம்மாந்துறை, கல்முனை (இது இப்போது மாநகரசபை), நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் என்பனவே அந்த ஆறு சபைகளுமாகும். ஒரு காலத்தில் இந்த சபைகள் அனைத்துமே மு.கா.வின் ஆளுகைக்குள் இருந்தவை, இருக்கின்றவை. அக்கரைப்பற்று பிரதேச சபை மட்டும் தற்போது அமைச்சர் அதாஉல்லா தரப்பினரின் அதிகாரத்தில் உள்ளது!

இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்த சேதிகள் என்றாலும், வாசகர்களும் விளங்கிக் கொள்வதற்காக சில விடயங்களை ‘பிட்டு’க் காட்ட வேண்டியே இருக்கின்றது.

மேலே குறிப்பிட்ட ஆறு சபைகளைக் கொண்ட பிரதேசங்களில், அட்டாளைச்சேனை பிரதேசம் தவிர்ந்த ஏனையவை கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரசினால் மிகவும் போசித்து வரப்பட்டிருக்கிறது. அதாகப்பட்து இப்பிரதேசங்கள் அனைத்துக்கும் மு.கா. சார்பாக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டே வந்திருக்கின்றன. அதில் தப்பென்று ஒன்றுமில்லை. அவர்கள் நமது மக்கள்தான்! ஆனால், இங்கு வலி தரும் விடயமென்னவென்றால், அட்டாளைச்சேனைப் பிரதேசம் மட்டும் இந்த விடயத்தில் மிக நீண்டகாலமாகப் புறக்கணிப்பட்டு வருவதுதான்!மர்ஹும் டொக்டர் ஜலால்தீனை 1978 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலின் போது, ஐ.தே.க. சார்பான பாராளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனைப் பிரதேசம் பெற்றெடுத்தது. ஆனால், அவருக்குப் பின்னர் சுமார் 30 ஆண்டுகளாக இப்பிரதேசம் எந்தவொரு பா.உறுப்பினரையும் வென்றெடுக்க முடியாமல் புறக்கணிக்கப்பட்டே வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், மேலே உள்ள பிரதேசங்கள் அனைத்தினை விடவும், மு.காங்கிரசுக்கு வீதாசார ரீதியில் பெரும்பான்மை ஆதரவினைக் கொடுத்து வருகின்ற பிரதேசம்  அட்டாளைச்சேனைதான்! கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரதேச சபை தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் இதை நாம் நிரூபிக்கக் கூடியதாகவுமுள்ளது. (சட்ட ரீதியான பிரச்சினையொன்றின் காரணமாக மு.கா. அப்போது சில இடங்களில் தனது சின்னத்திலும், சில இடங்களில் யானைச் சின்னத்திலும் போட்டியிட்டிருந்தது)

ஆக – வீதாசார ரீதியாக ஆகக் கூடிய வாக்குகளை அள்ளி வழங்கிய அட்டாளைச்சேனைப் பிரதேசம், தேசியப்பட்டியல் நியமன விடயத்தில் புறக்கணிக்கப்பட்டமைக்கு நியாயமான காரணங்கள் என்று எவற்றை நீங்கள் முன்வைக்கப் போகிறீர்கள்?

ஏற்கனவே, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரொருவர் நிந்தவூருக்கு இருக்கும் நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஹசனலிக்கு திரும்பத் திரும்ப தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்படும் போது 30 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினரேயில்லாமல் புறமொதுக்கப்பட்டு வரும் அட்டாளைச்சேனைப் பிரதேச மக்களின் (கவனிக்க: இங்கு அட்டாளைச்சேனைப் பிரதேசம் என்பதுளூ – அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய மூன்று ஊர்களையும் உள்ளடக்கியதேயாகும்) உணர்வு குறித்து ஏன் நீங்கள் யோசிக்கவேயில்லை? கேட்டால், ‘அவர் கட்சியின் செயலாளர் அதுதான் வழங்கினோம்’ அல்லது ‘அது கட்சியின் உயர் மட்டத் தீர்மானம்’ என்று சாட்டுப் போக்கான காரணங்கள் எதையாவது கூறுவீர்கள். ஆனால், கட்சியொன்றின் தலைவரையே பாராளுமன்றத்துக்கு வெளியில் வைத்துக் கொண்டு அரசியல் செய்ய, ஜே.வி.பி. போன்ற கட்சிகளால் முடியும் போது – பாராளுமன்றக் கதிரையில் செயலாளரை உட்கார வைக்காமல் கட்சியை நடத்தவே முடியாது என்று நீங்கள் கூறினால், அதை நம்ப நமது மக்கள் தயாராகவேயில்லை!

ஏற்கனவே, அட்டாளைச்சேனைக்கு அண்மையில் இருந்து கொண்டு (அக்கரைப்பற்றில்) அமைச்சர் அதாஉல்லா மு.கா.வுக்கு எதிரான அரசியலைச் செய்து வரும் நிலையில், அதாஉல்லாவின் விசுவாசியான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த உதுமாலெப்பை என்பவரும் கிழக்கு மாகாணசபையின் அமைச்சராகிப் போயுள்ளார். ஆக, அந்தப் பிரதேச மு.கா. ஆதரவாளர்கள் தற்போது – இரட்டை அதிகாரங்களின் அழுத்தமானதொரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை உருவாகியிருக்கின்றது. எனவே, இதை முகம்கொள்வதற்காகவேனும் அவர்களுக்கென்று ஒரு பாராளுமன்றப் பிரதிநிதி தேவையாகயிருக்கின்றார்!

மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் காலத்தில், அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த அவரின் அரசியல் சத்துருவான சேகு இஸ்ஸதீனுக்கு தேசியப்பட்டியல் பா.உ. நியமனம் ஐ.தே.க. சார்பாக வழங்கப்பட்ட போது, அஷ்ரப் அவர்கள் மேற்கொண்ட சாணக்கியம் மிகுந்த அரசியல் தீர்மானத்தை இங்கு நாம் நினைவு படுத்துதல் மிகவும் அவசியமாகிறது!

அதாவது, சேகு இஸ்ஸதீனை முறியடிப்பதற்காகவும், அவரின் அரசியல் அதிகாரத்தை நேர் கொள்வதற்காகவும் அவரின் ஊரைச் சேர்ந்த அதாஉல்லாவை அஷ்ரப் அவர்கள் அதிரடியாக மு.கா.வின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக்கினார்! (அந்த வேளையில் அதாஉல்லா –  அஷ்ரப் அவர்களின் கீழிருந்த புனர்வாழ்வு அமைச்சின் அம்பாரை மாவட்ட இணைப்பாளராகத்தான் செயற்பட்டார்)

ஆக – மறைந்த தலைவரின் பெறுமானம்மிக்க அந்த முடிவின் விளைவாக, சேகு இஸ்ஸதீனால் அவரின் சொந்த ஊரான அக்கரைப்பற்றிலேயே வெற்றிகரமான அரசியலொன்றைச் செய்ய முடியாமல் போயிற்று! இது முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் நாம் கண்ட வரலாறு! எனவே, உங்கள் கட்சி சார்ந்த அட்டாளைச்சேனைப் பிரதேச மக்களின் அரசியல் பாதுகாப்புக் கருதியேனும் ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினர் நியமனத்தை நீங்கள் வழங்கியே ஆக வேண்டும் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்!

தற்போது, அவ்வாறானதொரு நியமனத்தை வழங்குவதில் சாத்தியப்பாடுகள் குறைவாக உள்ளதையும் மக்கள் அறிவார்கள். சரி, அடுத்த முறையாவது அட்டாளைச்சேனைக்கு அந்த நியமனத்தை வழங்குவதாக உத்தரவாதமொன்றை வழங்குங்களேன். அந்த உத்தரவாதமானது வழமையான அரசியல் உறுதி மொழிகளைப் போலல்லாமல் நேர்மையானதாய் இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுங்கள்!

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பற்றிப் பேசினாலே, கட்சியிலுள்ள உள்ளுர் பொறுப்பாளர்கள் பலர், நிவாரணங்களைப் பெறுவதற்கு முண்டியடிக்கும் சாமானியர்களைப் போல, தங்கள் கையாட்கள் சிலரையும் அள்ளியெடுத்துக் கொண்டு உங்கள் முன் வந்து தவம் கிடக்கத் தொடங்குவார்கள் என்பதும் நமக்குத் தெரியும்! அப்படித்தான் வழங்குவதென்றாலும் எவருக்கு வழங்குவதென்பதைத் தீர்மானிப்பதற்குள்ளேயே உங்கள் பாதி முடி நரைத்து விடும் என்பதையும் நமது மக்கள் அறிவார்கள். அது அத்துணை கடினமானதொரு விடயம்தான். அதற்காக – அதை அப்படியே விட்டு விடவும் முடியாதல்லவா?

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மு.கா. சார்பாக தற்போது அரசியலிலே இயங்கு நிலையில் இருப்பவர், அப்பகுதி பிரதேச சபைத் தவிசாளர் மசூர் சின்னலெப்பைதான்! (சில காலங்களுக்கு முன்னர் நமது கட்டுரைகளில் இவரை மிகக் காரசாரமாக நாம் விமர்சித்து வந்தமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது) அதற்காக உண்மை நிலைவரத்தை மூடிமறைக்கக் கூடாதல்லவா? நேர்மையான ஊடகச் செயற்பாட்டுக்கு அது அழகுமில்லையே!

கடந்த அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தேர்தலில் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளை விடவும் அதிகப்படியாய், கிட்டத்தட்ட 13 ஆயிரம் விருப்பு வாக்குகளையும், பொதுத்தேர்தலில் 15 ஆயிரம் வாக்குகளையும், கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் 17 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுக் கொண்டவர் மசூர்! மு.கா.வில் அவர் இணைந்த போது, கிழக்கு ‘நிவ் ஈஸ்ரன் பஸ் கம்பனி’யில் வகித்த தலைவர் பதவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச அமைப்பாளர் போன்ற பல பதவிகளை தவிசாளர் மசூர் இழந்தமை பற்றிய தகவல்களும் உங்களுக்குத் தெரியாதவையல்ல!

தேர்தல் காலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கும் மு.கா. ஆதரவாளர்களில் (இவர்களில் அதிகமானோர் மிகவும் ஏழைகள்) பலரின் நலன்குறித்து இன்றுவரை மசூர் கவனம் செலுத்தி வருவதும், இது தொடர்பான செலவுகளில் பெருந்தொகையை இவரே பொறுப்பெடுத்து வருவதும் இந்த இடத்தில் உங்கள் கூர்மையான கவனிப்புகளுக்குள்ளாகட்டும்!

இந்த நிலையில், தற்போது ஹசனலி ராஜினாமாச் செய்துள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியை பொறுப்பெடுக்குமாறு, மசூரை கட்சி வற்புறுத்துவதாக பேசிக்கொள்ளப்படுகிறது. ஆனால், மக்களோ அந்தப்பதவியை பொறுப்பெடுக்க வேண்டாமென மசூர் சின்னலெப்பையிடம் கூறி வருகின்றனர். இது குறித்து அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக் கழக புத்திஜீவியொருவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; “மசூரை மாகாண சபைக்கு அனுப்பி விடுவதன் மூலம், அட்டாளைச்சேனைக்கு பாராளுமன்ற உறுப்பினரொருவரை வழங்க வேண்டுமென்கின்ற பாரியதொரு பொறுப்பிலிருந்து மு.காங்கிரஸ் தலைமைத்துவம் தப்பித்து விட முயற்சிக்கிறது” என்கிறார்!

இது தவிர, தற்போது எதிர்க்கட்சியாளர்களின் அட்டகாசங்களைக் கடுமையாக எதிர்கொள்ளும் மு.கா. ஆதரவாளர்கள், அட்டாளைச்சேனையில் தமக்குள்ள ஆதரவாக மசூரையே நம்பியிருப்பதாகக் கூறுகின்றனர். இந்த நிலையில் இப்பிரதேசத்தின் தவிசாளர் பதவியிலிருந்து மசூரும் சென்று விடுவாராயின், தாம் அரசியல் அநாதைகளாகப் போய்விடுவோம் என அந்த மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்!

இதேவேளை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் மு.கா. அமைப்பாளர் பொறுப்பினை மசூருக்கு வழங்குமாறு கட்சித் தலைமைத்துவத்தை வலியுறுத்தும் வகையில், அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள், இளைஞர் மற்றும் விளையாட்டுக் கழங்கள் பல இணைந்து மக்களிடம் 10 ஆயிரம் கையெழுத்துக்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் கடந்த வாரம் முதல் ஈடுபட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்!

இது இவ்வாறிருக்க, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை
வழங்குவதற்கு முன்னர், பிரதியமைச்சர்களான கே.ஏ. பாயிஸ், எஸ். நிஜாமுத்தீன் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோரின் விலகலின் மூலம், மு.கா.வின் அதி உயர் பீடத்தில் ஏற்பட்டுள்ள மூன்று உறுப்பினர்களுக்கான வெற்றிடங்களில் ஒன்றுக்காயினும், அட்டாளைச்சேனைப் பிரதேசம் சார்பாக மசூரை நியமித்து, இந்த பிரதேசத்து மக்களை தற்போதைக்கு ஓரளவாவது திருப்திப்படுத்துவதற்கு தலைமைத்துவம் முன்வர வேண்டும் என்கிறார் ஊடக நண்பரொருவர்.  இல்லையென்றால், நடிகர் ரஜனிகாந்த் ஒருபொழுது ஜெயலலிதா அரசாங்கம் குறித்துக் கூறியது போல, ‘முஸ்லிம் காங்கிரசை இந்தப் பிரதேசத்தில் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்கிறார்.

மு.கா. தலைவரே… மக்களின் இந்த ஆதங்கங்களுக்கு உங்கள் பதில்தான் என்ன?

பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, நீங்கள் வழமையாகக் கையாளும் நீண்ட மௌனங்களைத்தான் இந்த விடயத்திலும் கடைப்பிடிக்கப் போகிறீர்களா?

ஆனால் ஒன்று – அரசியலையும், கூடவே அரசியலுக்குப் பின்னால் நிகழும் இரண்டாந்தரக் கூத்துக்களையும் கூட, மக்கள் இப்போது புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.

இன்னுமொன்று – புறக்கணிக்கப்படும் மக்கள் மத்தியிலிருந்துதான் போராட்டங்கள் தொடங்குகின்றன! மக்கள் போராட்டங்கள், பல மன்னர்களையே வீழ்த்தியிருக்கின்றன என்பது பற்றியெல்லாம் நீங்கள் தெரியாதவரா என்ன?!

நீங்கள் புத்திசாலி!

புத்திசாலிகள் அநேகமாய் தவறான முடிவுகளை எடுப்பதேயில்லை!

(இந்தக் கட்டுரையை 27 ஜுலை 2008 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s