காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஆசை பற்றி அறைதல்! (சீதை போல் ஒரு மனைவி வேண்டும்) 20 மே 2008

Filed under: கவிதை — Mabrook @ 3:20 பிப

color-dotமப்றூக்

தென்னிந்தியக் கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான நெல்லை ஜெயந்தாவின் தலைமையில் 2008 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற கம்பன் விழாவில், கவியரங்கில் கலந்து,’ஆசை பற்றி அறைதல்’  –  ‘சீதை போல் ஒரு மனைவி வேண்டும்’ எனும் தலைப்பில்  நான் வாசித்த கவிதை!


அறிமுகம்!

ண்ண எண்ண
வியப்புகளையே
இன்னும் தரும்
அண்டத்தைப் படைத்த
ஆண்டவனைப் பணிந்தேன்!

தலைவருக்கு வணக்கம்!
கவிஞர்களுக்கும்,
ஏதோ ஒரு தைரியத்தில்
என் கவி கேட்க வந்திருக்கும்
சபையோருக்கும் வணக்கம்!

பூசணிக்காயானேன் நான்!
கண்கொள்ளா…. இல்லையில்லை
காது கொள்ளா சுவைதரும்
கம்பன் கவியரங்கின்
நாவூறு கழிக்க,
நான் வந்தேன் முதலில்!

இப்போது இக்கவிரங்கம்
சுவரில் நகரும் பல்லி போலாயிற்று!
தலைகள் இருக்க
வால் நான் ஆடுவதால்!
இப்போது இக்கவிரங்கம்
சுவரில் நகரும் பல்லி போலாயிற்று!

நான் தொப்பிகள் விற்பவன்!
வண்ண வண்ண சொற்களால்
வார்த்தைகள் கொண்டு பின்னி
வீசுவேன் உங்கள் முன்!
பொருந்தும் தலையிருந்தால்
போட்டுக் கொள்ளுங்கள்!

கம்பன் அரங்கிற்கு
இங்கே வந்திருக்கும்
கவிகள் அத்தனையும்
பல்லு விழுந்த தாத்தாக்கள்.
அல்லது
தாத்தாக்களின் தாத்தாக்கள்.
ஆகக்குறைந்தது
ஓவ்வொன்றும் –
கம்பன் கவியரங்கு
ஆறேழு கண்டிருக்கும்!
ஆனால் –
நானோ
சொல்லெணும் பல் முளையாச்
சிறு குழந்தை!
அதனால் – என்
மழலையில் பிழை கண்டால்
மன்னித்துக் கொள்ளுங்கள்!

கவிதை,
மொழியின் நாகரீகம்!
அதை கௌரவிக்க வேண்டாமா?
எனவே –
காதுகளை திறந்து வைத்து
மௌனத்தை
மணந்து கொள்ளுங்கள்!

காற்றில் ஒலியால்
நான் எழுதும் கவிதைகளை,
காதுகளால் வாசியுங்கள்!

உங்களால் கவனிக்கப்படாமல்
கரைந்து போகும் – என் சொற்கள்
சில வேளை,
வெப்புசாரத்தில்
இரவு முழுவதும்
எங்கோ ஒரு மூலையில் அமர்ந்திருந்து,
ஒரு குழந்தை மாதிரி
அழது தீர்க்கலாம்!
ஆதலால்,
ஓயாமல் கவனியுங்கள்!

கொஞ்ச நேரம்
உங்கள் காதுகளைத் தாருங்கள்!
திருப்பித் தரும்போது,
ஆகக்குறைந்தது,
இனிக்கும் சொல்லிருக்கும்!

சீதை போல் ஒரு மனைவி வேண்டும்!

ஒரு கடலாமை அல்லது
கார்த்திகைப் பூச்சியொன்றின்
வானத்தைத் தொட்டு விடும்
வர்ணக் கனவு போல,
இருக்கலாம் இந்த ஆசை…
ஆனாலும் அறைந்து வைப்பேன்
இன்றெனக்கு –
சீதைபோல் ஒரு மனைவி வேண்டும்!

சின்ன இடை,
அன்ன நடை,
மின்சாரம் இல்லாத இரவின் நிறத்தில்
நீள் கூந்தல்,
வெட்டியெடுத்த சுரக்காய்
அல்லது
நகத்துண்டு வடிவிலான நெற்றி….
இவைகளெல்லாம்
இருக்கட்டும் அல்லது இல்லாது போகட்டும்
கவலையில்லை.
ஆனால்,
சீதை போல் எனக்கொரு மனைவி வேண்டும்!

சீதையை வென்றெடுக்க…
நாவாலென்றால்
நானூறு வில்லுடைப்பேன்.
விரலால் உடைக்கும்
விஷப்பரீட்சை தேவையில்லை.

அழகாய் வேண்டாம் – என்
களவு பிடிக்கும்
அறிவாய் வேண்டாம்.
பிளவு கொண்டால்,
கணவன் – மனைவி பிளவு கொண்டால்
அம்மா வீடு தேடியோடும்
இழவும் வேண்டாம்….
ஆனால் –
புடவை, தங்கம், போன் பில் என்று – சதா
செலவு செய்யா
ஒரு துணைவி வேண்டும்.
ஆம் – எனக்கு
சீதை போலொரு மனைவி வேண்டும்!

சீராய் வேண்டும்.
சிறப்பாய் வேண்டும்.
கொஞ்சம்
சீதனத்தோடும் – அந்த
சீதை வர வேண்டும்!

அயோத்தியில்…
வேண்டாம்
ஆகக்குறைந்தது –
ஆட்டுப்பட்டித் தெருவிலாவது
ஒரு சின்ன –
வீடு வேண்டும்.

பெற்ற கடன் தீர்ப்பதற்காய் – என்
அம்மாவுக்குச் சில லகரம்
அம்மம்மாவுக்குச் சில லகரம்
சீதையின் அப்பா
சீராய் கொடுக்க வேண்டும்!

ஆரது அங்கே!
அர்த்தமற்றுப் புலம்புவது?
சீதையிடம் ராம பிரான்
சீதனம் கேட்டானா – என்று,
ஆரது அங்கே!
அர்த்தமற்றுப் புலம்புவது?

ராமனின் காலத்தில்,
பசுவின் விலையில் – பெட்டி
பால் மா விற்றதில்லை…

ராமனின் காலத்தில்
அமைச்சரவை கூடி
அரசியலைச் சொன்னதுண்டு!
அரிசி விலை சொன்னதில்லை.
ஆகாயம் தொடுமளவு
அரிசி விலை சொன்னதில்லை!

ராமனின் காலத்தில்
வயிற்றுச் சோத்துக்கே
‘வற்’ வரி விதித்ததில்லை!

ராமனின் காலத்தில்
‘சால்வை’கள் ஆண்டதில்லை!

குதிரை வண்டிக்கு
ராமன் –
பெற்றோல் அடித்தானா?
குடிக்கும் நீருக்கு
காசு கொடுத்தானா?

மாதச் சம்பளத்தில்
ராமன்
வாழ்ந்ததில்லை!

விஜய்யின் விசிறியாய்
சீதை இருந்ததில்லை.
ராமன்,
ரூபாய் முன்னூறு கொடுத்து
ரிக்கட்டும் எடுத்ததில்லை!

ஆதலினால்,
சீதையிடம்
ராம பிரான்
சீதனமும் கேட்டதில்லை!

அசின், திரிஷா, நயன்தாரா
சுப்பர் ஸ்டார் ஜோடி ஸ்ரேயா
இத்தனை இருந்தும் – ஏன்
சீதை போல் எனக்கொரு மனைவி வேண்டும்?

சீதை பத்தினி!
மன்மதத் தெருக்களிலே – நாம்
இரவுகளைத் தொலைத்து விட்டு,
காலை வந்து
‘ஓவர் நைற்’ என்று சொன்னால்…
நம்பித் தொலைப்பாள்…!
சீதை பத்தினி.
கணவனின் சொல்லில் காணாள் பொய்.
ஆதலால் – எனக்கு
சீதை போல் ஒரு மனைவி வேண்டும்!

இரவு நேரத்தில்
நான் இல்லாத ஜாமத்தில்,
தேடுதல் என்று சொல்லி
வீடுகள் உள்ளே வந்து
ஆடுகள் நுழைந்து விட்டால்…
சீதை முகம் கொள்வாள்!
சீருடை ஆடுகளை
சீதை முகம் கொள்வாள்!
பத்துத் தலை அரக்கனையே
பார்த்து வந்தவள் – பயங்கொள்ளாள்,
இந்த –
வெற்றுத் தலை ஆடுகள் பார்த்து!
அதனால் – இன்று
சீதைபோல் எனக்கொரு மனைவி வேண்டும்!

சீதை
பெரு மழை!
நான்
அழுக்குப் படிந்த
வறட்டு ஓவியம்!

சீதை
தீச் சுடர்!
நான்
வல்லூறு வந்து போகும்
இருட்டுக் குகை!

மழையால் நான் தூய்மை கொள்ள…
சுடரால் என் இருளை வெல்ல…
இன்று –
சீதை போல் எனக்கோர் மனைவி வேண்டும்!

அருவி எனும் சொல்லினிலே,
தண்ணீரது சுரப்பதில்லை.
தண்ணீர் என்றெழுதி விட்டாhல் – நம்
தாகங்கள் குறைவதில்லை!

சீதையெனும்
பெயர்ச் சொல்லில்
பெண் வேண்டாம்!
வேண்டும்
எனக்கு
வினைச் சொல்லில் பெண்!

சீதை –
சீரியல் பார்த்துப் பார்த்தே – மெகா
சீரியல் பார்த்துப் பார்த்தே
சீவியம் கழித்ததில்லை!

சீதை –
கணவனை விடவும்
கலர் ரீவி ரசித்ததில்லை!

சீதை –
உதடு, நகம், புருவமென்று
ஒவ்வொன்றாய் சாயம் பூசி
ராமனின் சம்பளத்தில்
பாதியைக் கரைத்ததில்லை!

ஆதலினால் என்
ஆசை பற்றி அறைந்து வைத்தேன்…
சீதை போல் –
ஒரு மனைவி வேண்டும்!

இப்படியிப்படியாய்
குறிப்புகள் எழுதிவிட்டு
உறங்கிப்போனதோர் இரவில்
எங்கிருந்தோ என் கனவுக்குள்
கோபத்தோடு குதித்தான்
அனுமன்!

ஏசினான்,
அனுமன் பேசினான்…
என் ஏழு தலைமுறையின்
பெயர் சொல்லித் தூசித்தான்.

இரண்டாம் முறையாய்
வாலிலே தீ சுமந்தான்.
எழுதி முடியா என் கவியை
எரித்து முடித்தான்!

எச்சமாய்க் கிடந்த
சாம்பல் எடுத்து,
என்தன் முகத்தில்
பூசினான்
கரி!

கனவில் அனுமன்
உமிழ்ந்த சொற்கள்
மனதில் இன்னும் காயவில்லை!

‘சிலுக்கே’ பொருத்தமில்லை – உனக்கு
சீதையா கேட்கிறது?
தலையை வைத்துக் கொண்டு
தலையணைக்காசை கொள்ளு!
கடல்கள் ஒரு பொழுதும்
நதி தேடிச் செல்வதில்லை.
கொஞ்சம் –
ராமனாய் இருந்து பாரு….
சீதைகள் தூரமில்லை!!

கனவில் அனுமன்
உமிழ்ந்த சொற்கள்
மனதில் இன்னும் காயவில்லை!

19 மே 2008
கம்பன் விழா
கம்பன் கவியர ங்கம்
ராமகருஷ்ண மிஷன் மண்டபம்
கொழும்பு

Advertisements
 

2 Responses to “ஆசை பற்றி அறைதல்! (சீதை போல் ஒரு மனைவி வேண்டும்)”

  1. சூப்பரா இருக்கு..

    உங்க குரல்ல இத சொல்லும் போது எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பார்த்தன் சூப்பரா இருந்திருக்கும் என்ன…

  2. kajugaran Says:

    poem super and it has more meaning full
    but it listen through yourvoice better than read
    we expect more poem about human life in future.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s