காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஹக்கீமின் அதிரடியும், அதிர்ச்சி வைத்தியங்களும்! 6 ஏப்ரல் 2008

Filed under: அரசியல் — Mabrook @ 5:35 பிப

அதிரும் கிழக்கு தேர்தல் களம்

color-dot.gifமப்றூக்

ர்கஸ் நிகழ்ச்சியொன்றின் சுவாரசியங்களைப்போல், கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் களத்தில் சம்பவங்கள் நிகழ்ந்தேறி வருகின்றன! அரசியல் கட்சிகளின் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர், ஒருவாறு வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதிலும் விஜயக்காந்தின் படத்தில் வரும் உச்சகட்ட சண்டைக் காட்சிகளுக்கு சற்றும் குறையாதள அதிரடி நடவடிக்கையினை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர்! இன்னும் சொன்னால், தலைவர் ஹக்கீமின் அரசியல் எதிராளிகளே ஒரு கணம் வாயடைத்து வியக்கும் வகையில் வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்னராக அவரின் கடைசிக் கட்ட முடிவு அரங்கேறியிருக்கிறது. இதுவே திரைப்படமாக இருந்திருந்தால் ஹக்கீமின் அதிரடிக்கான ரசிகர்களின் விசில் அரங்கை அதிர வைத்திருப்பதோடு, அடங்கவூம் ஆகியிருக்கும் நெடு நேரம்!

கிழக்குத் தேர்தல் என்பது – ஒரு பக்கம் இனரீதியான போட்டியாக மாற்றமடைந்து விட்டதாக கடந்த வாரம் நாம் கவலைப் பட்டிருந்தோம். போதாக்குறைக்கு அது இப்போது கௌரவப் போரொன்றாகவூம் மாறியிருக்கிறது. கிழக்கின் நிர்வாகத்தை எப்படியாவது தனது கைக்குள் அடக்க நினைக்கும் அரசு ஒரு பக்கமென்றால்,  அந்தக் கனவை தவிடு பொடியாக்கும் கங்கணத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மறுபுறம்! இந்த இரண்டு பிரதான தரப்பினரும் கடந்த சில வாரங்களாக தமது இலக்கை நோக்கி நகர்வதற்காக பல்வேறு திட்டங்களையூம்,  அதற்கான வியூகங்களையூம் அமைத்து வந்தனர். இதில் ஏராளமான பேச்சுவார்த்தைகள், விலைபேசல்கள் மற்றும் கட்சி தாவல்கள் என்றெல்லாம் கூட நடந்து முடிந்திருக்கின்றன! இதற்கிடையில் என்ன நடக்குமோ,  ஏது நடக்குமோ என்று ‘திக்… திக்’ மனதுடன் ‘ரென்ஷனோட’ இருந்த,  கட்சிகளின் தொண்டர் கோடிகளுக்கு (பக்த கோடிகள் மாதிரி இது தொண்டர் கோடிகள்) இப்போதுதான் சற்று ஆறுதல்!

அது கிடக்க ஒருபுறம்,  அப்படியிப்படியென்று கடைசியாக இந்தத் தேர்தலிலும் தாம் போட்டியிடுவதில்லையென்று அறிவித்து விட்டார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். எனினும்,  கிழக்கு மாகாணத்தில் த.தே.கூட்டமைப்பினர் களமிறங்கியிருந்தால், கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வெற்றியை முறியடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கலாம் என்பது ஒரு தரப்பாரின் கருத்தாக இருக்கிறது. ஆனால், அவ்வாறு போட்டியிட்டால்,  அது வடக்கு – கிழக்கின் பிரிப்பை ஏற்றுக் கொண்டு விட்டதாக அமைந்து போயிருக்கும் என்பது மற்றொரு வகையினரின் வாதமாகும்! ஆக – இவைகளில் புலிகள் எதை விரும்புவார்கள் என்கின்ற கேள்விக்கான விடையூம் கிழக்குத் தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இருந்தபோதும், இப்போதைக்கு எதிரியைத் தோற்கடிப்பதை விடவும்,  தமது தாயகக் கோட்பாடே முக்கியமானது என்பதை புலிகள் நிரூபித்து விட்டதாக சிலர் கூறுகின்றனர்! அதேவேளை, இது தொடர்பான மாற்றுக் கருத்துகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அதாவது,  த.தே.கூட்டமைப்பினர் கிழக்குத் தேர்தலில் போட்டியிட்டு சிலவேளை, கருணா தரப்பினரை விடவூம் குறைவான ஆசனங்களைப் பெறுவார்களேயானால், அது – ‘கிழக்குத் தமிழ் மக்கள் புலிகளை நிராகரித்து விட்டார்கள்’  என்பதாக அர்த்தப்பட்டு விடும். அதனால்தான்,  இந்தத் தேர்தலில் தமிழ் கூட்டமைப்பினரை புலிகள் களத்தில் இறக்கவில்லை என்பதே அந்த மாற்றுக் கருத்தாகும்! (இதேவேளை, எல்.ரி.ரி.ஈ.யினரின் அரசியல் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் பெயரில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் அது உண்மையாகவே புலிகள் சார்பில்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக என்பதை இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாததால்,  ‘கிழக்குத் தேர்தல் புலிகள் களத்தில் இல்லை’ என்பதாகவே எடுத்துக் கொள்வோம்!

இருக்கட்டும். மீண்டும் நாம் மு.கா.வினரின் பக்கமாக கொஞ்சம் எட்டிப் பார்ப்போம்! ஞாயிறு தினக்குரலின் நமது கடந்த வாரக் கட்டுரையில், மு.கா.வைச் சேர்ந்த இரு முக்கிய புள்ளிகள் தலைவர் ஹக்கீமுக்குத் தெரியாமல் ஜனாதிபதியின் சகோதரர் பசீல் எம்.பி.யைச் சென்று சந்தித்துப் பேசியதாகத் தெரிவித்திருந்தோமல்லவா? அந்த இருவரில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாதான் என்பது இப்போதைக்கு யாவருக்கும் புரிந்திருக்கும். அந்தச் சந்திப்பு ‘வெற்றிகரமாக’ நிறைவடைந்ததாலேயே இப்போது ஹிஸ்புல்லா மு.கா.விலிருந்து அரச பக்கத்துக்குத் தாவிஇ தேர்தலில் குதித்திருக்கின்றார். இந்த தாவுதல் என்பது மு.கா.வின் உயர் மட்டத்தாருக்கு சற்று முன்பே தெரிந்த விடயம்தான். ஆனால், நமது சாதரண அப்பாவித் தொண்டர்களுக்கோ இது ஒரு ‘ஷொக்’ செய்திதான்! அடுத்த பொதுத் தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகலாமென மிகவூம் எதிர்பாக்கப்பட்ட இந்த ஹிஸ்புல்லாவுக்கு என்ன ஆயிற்று? ஏன் எடுத்தார் இந்த பதற்றமான முடிவை? என்றெல்லாம் பலரும் பல மாதிரி கேட்கின்றார்கள்! ஆனால், நாளை கிடைக்கலாம் என்று சொல்லப்படும் பலாப்பழத்தை விடவும்,  இன்று கிடைக்கப்போகும் மாம்பழத்தைப் பெறுவதே புத்திசாலித்தனமான தெரிவாக ஹிஸ்புல்லாவூக்குப் பட்டிருக்கலாம். கொஞ்சம் விபரமாகச் சொன்னால், அவரின் கணக்கில் – நாளைய பலாப்பழத்தை விடவும், இன்றின் மாம்பழமே மிகப் பெரிதும்,  பெறுமதியானதுமாகும்! மாம்பழம் என்று நாம் கூறுவது – கிழக்கு மகாணசபைக்கான முதலமைச்சர் பதவியாகும்!

சரி,  மாம்பழம் அல்லது முதலமைச்சர் பதவியை ஹிஸ்புல்லாவூக்கு வழங்குவதாக யார்தான் சொன்னார்கள் என்று கேட்கிறார் நமது ஊடக நண்பரொருவர்! ஆனால், முதலமைச்சர் பதவி வழங்கப்படுமென்று ‘மேலிடத்தில்’  உத்தரவாதம் வழங்கப்பட்ட பின்னர்தான் கட்சி மாறும் முடிவையே ஹிஸ்புல்லா எடுத்ததாக அவர் தரப்பிலிருந்து வரும் வாய்வழிச் செய்திகள் சொல்கின்றன. மட்டுமன்றி,  கொழும்பில் ஹிஸ்புல்லா நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூட, அவரின் சகாக்களான முஸ்லிம் அமைச்சர்கள் சிலர், அரசாங்கத்தரப்பின் முதலமைச்சர் பதவிக்கான தலைமை வேட்பாளர் ஹிஸ்புல்லாதான் என்பதை அடித்துக் கூறியிருக்கின்றனர். அதை ஏரிக்கரைப் பத்திரிகைகளும் செய்தியாக வெளியிட்டிருந்தன! இதேவேளைஇ புதன் கிழமையிரவூ பி.பி.சி. தமிழ்ழோசை – ஹிஸ்புல்லாவைத் தொடர்பு கொண்டு இவ்விடயம் குறித்துக் கேட்டபோது, அப்படி ஜனாதிபதி தமக்கு உத்தரவாதம் எதையூம் வழங்கவில்லை என்றும், ஆனால் – அதிக ஆசனங்களைப் பெறும் தரப்புக்கே அந்தப் பதவி வழங்கப்படுமென ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். அதே நிகழ்சியில் கருணாவின் த.ம.வி.புலிகள் அமைப்பினரின் பேச்சாளரான ஆசாத் மௌலானாவிடமும் அந்த கேள்வியினைத் தமிழோசை கேட்டது. ஆனால்,  அவ்வாறான உத்தரவாதங்கள் த.ம.வி.புலிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதையே ஆசாத் மௌலானாவின் பதிலிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது! (ஆனால்,  அந்தப் பதவிக்கு தமது தரப்பிலுள்ள தமிழர் ஒருவரே மிகப் பொருத்தமானவர் என்பதை அவர் பல தடைவகள் அழுத்தமாகக் குறிப்பிட்டிருந்தார்). அப்படியென்றால்,  ஹிஸ்புல்லாவுக்கு மாம்பழம் கூடக் கிடைக்காதா என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான பதிலுக்காக மே மாதம் 11 ஆம் திகதி வரை பொறுத்திருந்தே ஆக வேண்டும்! (கிழக்குத் தேர்லுக்கான திகதி மே – 10 ஆகும்)

இவையெல்லாம் இப்படியிருக்க,  மு.கா.வின் தலைவர், செயலாளர் மற்றும் தவிசாளர் ஆகியோரின் பதவி துறப்பு என்பது வெறும் வான வேடிக்கைக்கொப்பானது. அவை மக்களை சும்மா உசுப்பேற்றுவதற்கான ஒரு நடவடிக்கையே தவிர வேறெதுவும் இல்லை என்கிறார் கல்வி நிறுவனமொன்றின் பொறுப்புள்ள அதிகாரியொருவர்! ஏன் எனக் கேட்டோம்.  ”பதவிகளை ராஜினாமாச் செய்யாமலேயே மேற்படி மூவரும் கிழக்குத் தேர்தலில் போட்டியிட முடியூம். தேர்தலில் வெற்றி பெற்று,  மாகாண சபை உறுப்பினர்களாக பதவியேற்பதாக இருந்தால் மட்டும்தான்,  இவர்கள் தமது பா.உ. பதவிகளை துறக்க வேண்டும்” என்று அவர் விளக்கம் தருகிறார்! மட்டுமன்றி,  இந்த மூவரும் தமது பதவிகளைத் துறந்ததாக அறிக்கை விட்டுள்ளார்களே தவிர,  உத்தியோகபூர்வமாக இன்னும் ராஜினாமாச் செய்யவேயில்லை என்றும் கூறினார்.

விடயத்தை தெளிவுபடுத்திக் கொள்ள,  மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமை தொலைபேசியில் அழைத்தோம்! திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு வரும் ஒரு இரவூப் பயணத்தின் இடையில் ”ஹலோ”  என்றார்! நமது பொறுப்புள்ள அதிகாரியின் ‘கதை’ தொடர்பாக விபரம் கேட்டோம். ஹக்கீம் தெளிவுபடுத்தினார். அதாவது, பாராளுமன்ற உறுப்பினரொருவர் இவ்வாறு தேர்தலொன்றில் போட்டியிடுவதென்றால்,  கட்டாயமாகத் தனது பதவியினை ராஜினாமாச் செய்தே ஆகவேண்டும் என்றார். அதேவேளை,  தமது பதவி துறப்புக்களை உரியமுறையில் அறிவித்து விட்டதாகவும்,  ஆகவே,  இப்போது –  தான் எம்.பி. இல்லை என்றும் சொன்னார். இதேவேளை,  பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை ராஜினாமாச் செய்தவுடன் தனக்கான பாதுகாப்பினை அரசாங்கம் நிறுத்தி விடுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்த ஹக்கீம்,  இதற்கெதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் கூறினார். கட்சியொன்றின் தலைவர் என்கின்ற ரீதியில் தனக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டே ஆக வேண்டும் என்பதே மு.கா. தலைவரின் வாதமாகும். (நாம் ஹக்கீமுடன் பேசியது கடந்த வியாழன் இரவு).

பேச்சின் இடையே ஹிஸ்புல்லாவின் விலகல் குறித்தும் ஹக்கீமிடம் கேட்டோம்.  ”ஹிஸ்புல்லாவின் சில சொந்த லாபங்களுக்காக மு.கா.வை அரசுடன் இணைய வேண்டும் என்று அவர் வலியூறுத்தினார். அது நடக்கவில்லை. அதனால்தான் அவர் தாவி விட்டார். ஆனால்,  மட்டக்களப்பில் ஹிஸ்புல்லா வெற்றி பெறுவதென்பதே பெரும் கஷ்டமான விடயமாகும். இந்த லட்சணத்தில் அவருக்கு முதலமைச்சராவது, கிடைப்பதாவது”  என்று சற்று நக்கலாகவே கூறினார் ஹக்கீம்!

இந்த வேளையில் ஐ.தே.கட்சியூடனான மு.கா.வின் இணைவுபற்றிய சாதக பாதகங்கள் குறித்தும் நாம் இங்கு கவனிக்க வேண்டும். கிழக்கில் முஸ்லிம் மக்களிடையே ஆதிக்கமுள்ள கட்சியென்றால் அது மு.காங்கிரஸ்தான். இது அரசுக்கும் நன்கு தெரியூம். அதனால்தான் இந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்கான வாக்குகளை அரசாங்கம் முஸ்லிம் அமைச்சர்களை வைத்தே பிரித்தெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது. இத்திட்டமானது மு.கா.வுக்கான வாக்கு வங்கியில் ஏதோவொரு வகையில் பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது! ஆக, முறியடிப்பதற்கான தனது வியூகமாகவே ஐ.தே.க.வுடனான இணைவை மு.கா. பார்க்கிறது. அதாகப்பட்டது, பொதுவாக மரச்சின்னத்துக்கு சிங்களவர்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால், யானைச் சின்னத்துக்கு முஸ்லிம்களும் வாக்களிப்பர். எனவே,  இரு சமூகங்களும் வாக்களித்துப் பழகிய யானைச் சின்னத்தில் ஐ.தே.க.வுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடும் போது, தமக்கான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம் என்பது ஹக்கீமின் கணக்காக இருக்கலாம்! சற்றே கொச்சைத்தனமாகச் சொன்னால்,  ‘நீ என் இனத்தின் வாக்குகளைக் குறிவைத்தால்,  நான் உன் இனத்தின் வாக்குகளைப் பெற்று வெல்வேன்’  எனும் அரசியல் தந்திரமாகவே இதைக் கொள்ளலாம்! இது தவிர – யானைச் சின்னம் வெற்றி பெற்றால்,  மு.கா. தரப்பினர் ஒருவருக்கே முதலமைச்சர் பதவியைத் தருவதாக ஐ.தே.க. தலைவர் ரணில் வேறு உறுதியளித்திருப்பதால், கிழக்குத் தேர்தல் நிறையவே சூடு பிடிக்கும்! அப்படியென்றால்,  இதில் ரணில் விக்ரமசிங்கவுக்கு என்னதான் நன்மை என்கிறீர்களா? அரசாங்கத் தரப்புத் தோற்றால், அதுவே அவருக்குப் போதுமானதாகும்!

இதேவேளை, மு.கா. தனது வேட்பாளர் தெரிவில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்கின்றார்கள் கிழக்கின் புத்திஜீவிகள் பலர்! சண்டியர்களை வைத்துத்தான் தேர்தல் நடத்தலாம் எனும் மூன்றாந்தர கோட்டிலிருந்து வரும் காலங்களிலாவது மு.காங்கிரஸ் விலகிச் செயற்பட வேண்டுமென்பதே பலரினதும் ஆதங்கமாகும்!

இது இவ்வாறிருக்க, மு.காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றால், நிச்சயமாக முதலமைச்சராக ஹக்கீம் பதவி வகிக்கப்போவதில்லை. வென்று கொடுத்து விட்டு,  மீண்டும் அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தேசியப் பட்டியல் நியமனம் மூலமாகப் பெற்றுக் கொள்வார் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாகும். அப்படியாயின், முதலமைச்சர் பதவி யாருக்கு? மு.கா.வில் அதிக வாக்குகளைப் பெற்றவருக்கா? அல்லது தலைவர் விரும்பும் நபருக்கா? இந்த விடயத்தில் மு.கா. மற்றுமொரு குழப்பத்தையூம், தலைவர் ஹக்கீம் வேறொரு தலைவலியையூம் நிச்சயம் சந்திக்க சந்தர்ப்பங்கள் உள்ளன. கவனம் தேவை!!

‘வெட்டொன்று துண்டு ரெண்டு’  ரகத்திலான முடிசகளை எடுப்பதிலும், அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் ஹக்கீம் கொஞ்சம் மென்போக்குடையவர் என்கின்ற குற்றச்சாட்டொன்று கட்சிக்குள்ளும், வெளியிலும் இருக்கிறது! ஆனால்,  மு.கா. தலைவரின் தற்போதைய தடாலடி முடிவால்,  அவர் மீது வியப்பான பார்வையொன்று விழுந்திருக்கிறது.

சாது மிரண்டால் இப்படித்தானிருக்குமோ??

மு.கா. தலைவரே,  தொடர்ந்தும் வியப்புகளைத் தாருங்கள்!!

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s