காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கிழக்குத் தேர்தல்: கதைகளும் கட்டுக்கதைகளும்! 4 ஏப்ரல் 2008

Filed under: அரசியல் — Mabrook @ 12:42 முப

color-dot.gifமப்றூக் 

டக்கு கிழக்கு மகாஜனத்தார்களில் மிக அதிகமானோர் பாராளுமன்ற விடயதானங்கள் பற்றி அறிந்திருப்பதை விடவும் மிகக்குறைவாகவே மாகாணசபை முறைமை பற்றி அறிந்து வைத்துள்ளனர். காரணம், வடக்கு, கிழக்குப் பிராந்தியம் ஒரேயொரு தடவை மாத்திரமே மாகாணசபைத் தேர்தல் அனுபவத்தைக் கண்டு வைத்துள்ளது. அதுவும் அந்தத் தேர்தல் நடந்தே கிட்டத்தட்ட 20 வருடங்களாகின்றன. இவைகள் தவிர, இடம்பெறப்போகும் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல்கள் பற்றி நம்மவர்கள் கூறும் ‘உடான்ஸ்’களும், கட்டுக் கதைகளுமே அவர்களுக்கு இதுபற்றி ‘பெரிதாக’ எவையூம் தெரியாது என்பதைப் ‘புட்டு’ வைக்கின்றன!

சாதாரண பொதுமக்களுக்கு மட்டும் என்றில்லை, தேர்தலில் போட்டியிடலாமென கருதப்படும் பலருக்கும் கூட, மாகாணசபை முறைமை பற்றிய புரிதல்களோ, தௌவுகளோ மிகக் குறைவாகவே இருக்கின்றன என்பதே நாக்கூசும் உண்மையாகும்! 

கிழக்கு மாகாணசபை தேர்தல் பற்றி கலந்துரையாடும் பொருட்டு, முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியொன்றின் கூட்டமொன்று அண்மையில் அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றிருக்கிறது. அவ்வமையம், தமது கட்சி வெற்றி பெற்றால், கிழக்கு மாகாணசபைக்கு தம்மையே முதலமைச்சராக்க வேண்டுமென்று, வேட்பாளர் கனவுகளில் மிதந்து கொண்டிருக்கும் சிலர் அக்கட்சியின் தலைமையிடம் அடம்பிடித்துள்ளனர். அதன்பின்னர் தலைமை பீடத்தார்களிடம் ‘முதலமைச்சர்கள்’ ஏச்சு வாங்கியதாகவும், மூக்குடைபட்டுக் கொண்டதாகவும் அறியக் கிடைக்கிறது! 

இதேவேளை, கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பற்றிய சூடான செய்திகளும், சுவாரசியங்களும் கணத்துக்குக் கணம் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. இருப்பினும் இந்த தேர்தல் குறித்து இன்றைய அரசியல் அரங்கில் பலரும் அறியத்துடிக்கும் பிரதான விடயங்கள் இரண்டாகும்.

முஸ்லிம் தரப்புக்கள் அனைத்தும் ஓரணியில் இணைந்து களமிறங்குமா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் போட்டியிடுமா? என்பனவே அவைகளாகும்!

முஸ்லிம் அரசியல் தரப்புகளைச் சேர்ந்தவர்களில் அனேகமானோருக்கு சேர்ந்தே களமிறங்க வேண்டுமென்கிற அவா இருந்தாலும், சூழ்நிலை அவர்களை அவ்வாறு செயற்பட முடியாதவாறு கட்டி வைத்துள்ளது என்பதே தற்போதைய யதார்த்தமாகும்!

நடைபெறவூள்ள தேர்தலில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் வெற்றிலைச் சின்னத்தில் இணைந்தே போட்டியிட வேண்டுமென்று அரசாங்கத்தின் ‘பெரியவர்’ கடுமையான தொனியில் உத்தரவிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. இதேவேளை, இத்தேர்தலில் அரச தரப்பு வெற்றிபெற்றால், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதித் தலைவர் பிள்ளையானை முதலமைச்சராக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக சில கதைகள் உலவுகின்றன! ஆனால், அவ்வாறான தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமான எந்த அறிக்கைகளும் ஊடகங்களில் வெளிவரவில்லை என்பது இங்கு கவனிக்கத் தக்கது!

இந்த நிலையில், அரச அதி உயர் மட்டத்தின் சில தீர்மானங்கள் குறித்து, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பலர்

கடுமையான அதிருப்தியினைக் கொண்டுள்ளதாக அறிய முடிகிறது! ‘முஸ்லிம் தரப்புக்கள் அனைத்தும் இணைந்தே கிழக்குத் தேர்தலில் போட்டியிட வேண்டும்’ என்று சில நாட்களுக்கு முன்னர் அ.இ.மு.காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தமையை மேற்படி அதிருப்தியின் வெளிப்பாடாகவே கருத முடிகிறது என்கிறார் அரசியல் அவதானி ஒருவர்! அ.இ.மு.காங்கிரசில் அமைச்சர்களான அமீர் அலி, றிசாத் பதியூதீன் மற்றும் நஜீப் ஏ மஜீத் ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்! 

தம்முடைய ,அதிருப்திகளையோ வெளிப்படையாகக் காட்டவும், அதன் மூலம் அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்கவும் இப்போதைக்கு நமது அமைச்சர்களால் முடியவே முடியாது! அவ்வாறு முயற்சித்தால், அரசாங்கத்தில் தற்போது வகித்து வரும் அனைத்துப் பதவிகளையூம், சௌபாக்கியங்களையூம் இவர்கள் இழந்து போகும் நிலையொன்றும் ஏற்படலாம்! அதன்பின்னர் அதிகாரத்தை இழந்து, அடுத்த பொதுத் தேர்தலை முகம்கொள்வது எங்ஙனம்? மீண்டும் எப்படி அவர்கள் எம்.பி. ஆவது? ஆக, அடக்கி வாசித்தலே இப்போதைக்குள்ள புத்திசாலித்தனமான தெரிவாக நமது முஸ்லிம் அமைச்சர்களுக்கு தெரியக் கூடும்!

அரசாங்கத்துக்கு எதிரான கட்சிகள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் போன்றவை, மேற்படி ‘பிள்ளையானை முதலமைச்சராக்கும்’ விடயத்தை பூதாகரமாக்கியே தேர்தலில் பிரசாரத்தை மேற்கொள்ளும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்! அதாவது, அரசாங்கத் தரப்புக்கு வழங்கப்படும் முஸ்லிம் மக்களின் வாக்குகள், பிள்ளையானை முதலமைச்சராக்குவதற்கே உதவப் போகின்றன! பிள்ளையான் தலைமையிலான கிழக்கு மாகாண சபையானது முஸ்லிம்களுக்கு நன்மைகள் எதனையூம் தருமென எதிர்பார்க்க முடியாது என்பதே முஸ்லிம் காங்கிரஸின் வாதமாக அமையப்போகின்றது. அந்தக் கட்சியின் அதி உயர் மட்டத்தாருடன் நாம் சம்பாசித்த போது, அவர்களின் மனநிலையூம் இவ்வாறே இருப்பதையூம் நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது!

இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகள் சிலரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில நாட்களுக்கு முன்னர் சந்தித்து கலந்துரையாடிய வேளை, கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் அரசாங்கத்தரப்பு வெற்றிபெற்றால், அதில் அதிக ஆசனங்களைப் பெறும் தரப்பின் பிரதிநிதிக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது. ஆக – த.ம.வி.புலிகள் அமைப்பினருக்கு அல்லது பி;ள்ளையானுக்கே முதலமைச்சர் பதவியை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக முன்னர் வந்த செய்திகள் இவ்விடத்தில் வலுவிழந்து போகின்றன.

இதேவேளை, அரசாங்கத் தரப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முன்வருமாறு மு.காங்கிரசுக்கு அரச தரப்பு அழைப்பு விடுத்திருந்தது. இது தொடர்பில் பேசுவதற்காக மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும் ஜனாதிபதியின் சகோதரர் பசீல் ராஜபக்ஷ எம்.பி.யூம் அண்மையில் சந்தித்திருந்தனர். இருவருக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் இவ்விடயம் தொடர்பில் தன்னால் தனித்து முடிவூகள் எதனையூம் எடுக்க முடியாது என்றும். கட்சியின் அதி உயர் பீடமே முடிவுகளை எடுக்கும் எனவும் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார். அழைத்ததற்காக ஒரு நாகரீகம் கருதி மு.கா. தலைவர் சென்று பேசியிருப்பாரே தவிர. அரச தரப்புடன் கிழக்குத் தேர்தலில் ஒருபோதும் மு.கா. கூட்டு வைத்துக் கொள்ளாது என்பதே அரசியலாளர்களின் கணிப்பாகும்! இதேவேளை. தமது கட்சி தனித்துப் போட்டியிடுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக மு.கா.வின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் நம்மிடம் தெரிவித்தமையூம் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்!

கிழக்கு மாகாணத் தேர்தலில் ஜே.வி.பி. தனித்துப் போட்டியிடவூள்ளதாக அறிவித்திருப்பதானது அரச தரப்புக்கு பெரிதாக அதிர்ச்சிகள் எதனையூம் கொடுத்திருக்க மாட்டாது. காரணம், இது ஏற்கனவே அனுமானிக்கப்பட்ட முடிவுதான். ஆயினும், ஜே.வி.பி.யின் இந்த முடிவு அரசு பெறலாமென எதிர்பார்த்த மொத்த வாக்குகளில் ஒரு பாதக நிலையைத் தோற்றுவிக்கும் என்பது மட்டும் உண்மை! 

இந்நிலையில் ஹெல உறும கட்சி அரசுடன் இணைந்த போட்டியிடுவதற்கான தனது விருப்பினைத் தெரிவித்திருக்கிறது. மிகக் கடுமையான முஸ்லிம் விரோதப் போக்கினைக் கொண்டுள்ள ஹெல உறுமயக் கட்சியின் இந்த இணைவால் கூட, முஸ்லிம் மக்களின் ஒரு பகுதி வாக்கினை அரசு இழக்க நேரிடலாம். அண்மையில், ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரொருவர், முஸ்லிம்கள் வந்தேறு குடிகள், அவர்கள் இந்த நாட்டுப் பிரஜைகள் அல்லர் எனக் கூறியதும், அதற்கெதிராக முஸ்லிம் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தமையூம் இங்கு ஞாபகம் கொள்ளத்தக்கது! மேலும், ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவின் உத்தரவின் பேரில் முஸ்லிம் மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றமையூம் இங்கு குறித்துக் கூறத்தக்கது. ஆக – ஹெல உறுமயவூடன் கொண்ட கோபத்தில், முஸ்லிம் மக்களில் ஒரு தரப்பார் அரசாங்கத்துக்கு வாக்களிக்காமல் விடவும் கூடும்! 

அடுத்த கேள்வி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் பங்குபற்றுமா என்பதாகும். இது பற்றி அறிய, கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை நாடி பிடித்துப் பார்த்தோம். இத்தேர்தலில் கட்டாயம் போட்டியிட்டே ஆகவேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது. இல்லாவிட்டால், மக்களிடமிருந்து தாம் – தூரமாகி விடக் கூடிய ஆபத்துள்ளதாகவூம், அதேவேளை தமக்கு எதிரானவர்களின் ஆதிக்கம் இப்பிராந்தியத்தில் வளர்ச்சியடைந்து விடக்கூடிய நிலை ஏற்பட்டு விடுமென்றும் அவர்கள் கூறுகின்றனர். எது எவ்வாறிருந்த போதிலும், ‘கிளிநொச்சி’யிலிருந்து ‘பச்சை’க் கொடி காட்டப்படாத வரை, த.தே.கூட்டமைப்பினரால் கிழக்குத் தேர்தல் குறித்து தீர்மானங்கள் எதனையூம் தனித்து நின்று எடுக்கவே முடியாது!

சரி, ஒரு உதாரணத்துக்கு த.தே.கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறாயின் மு.காங்கிரஸானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சியொன்றை அமைப்பதற்கு முயற்சிக்கலாமல்லவா? (இவ்வாறானதொரு கூட்டு இடம்பெறலாமென அரசியல் அரங்கில் பலமாக நம்பப்படுகிது) அப்படியானதொரு கூட்டாட்சி கிழக்கு மாகாண சபையில் ஏற்படுமாயின் அது புலிகளின் பின்னணியினைக் கொண்டதோர் ஆட்சியாகவே இருக்குமென்று மு.கா.வின் எதிர்த் தரப்பாளர்கள் கூறுகின்றனர். ஆக, மு.கா.வுக்கு வழங்கும் வாக்குகள் புலிகளுக்கானதாகவே அமைந்து விடும் என்று இந்த மு.கா. எதிராளிகள் பிரசாரம் செய்யக் கூடும்! புலிகள் பற்றிய கசப்பான அனுபவங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் இன்னும் இருப்பதால், மேற்படி பிரசாரம் மக்கள் மத்தியில் இலகுவாகத் தொற்றிக் கொள்ளக் கூடிய சாத்தியமும் இருக்கிறது!

இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தேர்தலுக்கு பின்னர் இவ்வாறானதொரு கூட்டினை மு.கா. வைத்துக் கொள்ளுமா? என்று தவிசாளர் பசீரைக் கேட்டால், ”அதுபற்றியெல்லாம் இப்போதைக்கு நாம் யோசிக்கவேயில்லை. ஆனால், மு.கா.வின் நிபந்தனைகளுக்கு உடன்பட்டால், பொ.ஜ.முன்னணியூடன் கூட நாம் இணைந்து செயற்படத் தயாராகவே இருக்கின்றௌம்” என்கிறார். மேலும், ”இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டப் பேர்ச்சுவார்த்தைகள் கடந்த காலங்களில் இடம்பெற்ற வேளை, முஸ்லிம் தரப்பு ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளப்படவில்லை. அப்பேச்சுவார்த்தைகளின்போது, மற்றத்தரப்பினருக்கு வழங்கப்பட்டவை சௌகரியமான இருக்கைகள் எனக்கொண்டால், முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்பட்டதோ சில வாகனங்களில் இருப்பன போன்ற ‘பேபி சீட்’ (குழந்தைகளுக்கான இருக்கை) களேயாகும்! ஆக – கிழக்கு மாகாணசபை தேர்தலில் மு.கா. பெறும் வெற்றி மூலம், முஸ்லிம் சமூகத்தின் பலத்தை நிரூபித்து, சம அந்தஷ்த்தைக் கோருவதே தமது நோக்கமாகும்” என்றும் பசீர் நம்மிடம் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, தற்போதைய நிலையில் அபேட்சகர்களைத் தெரிவு செய்யூம் விடயமே மு.காங்கிரஸ் தலைமைக்குள்ள கடுமையான தலைவலி என்று கூறப்படுகிறது! கட்சிக் கொடி நடுவதற்காக மடுத் தோண்டியவர்களிலிருந்து, கட்சிக்காகக் பல வழிகளிலும் உழைத்தவர்கள் வரைஇ பலர் இத் தேர்தலில் தாம் போட்டியிட வேண்டுமென்று தலைவரிடம் ‘ஒற்றைக் காலில்’ தவம் கிடப்பதாக உள்ளிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. 

இதேவேளை, அம்பாரை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் தனது வேட்பாளர்களை ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் (இரண்டு அல்லது அதற்கும் அதிகமாக) போட்டியிட வைக்கவூள்ளதாகவூம், ஆனால் – நிந்தவூர் பிரதேசத்தில் ஒரு வேட்பாளரை மட்டுமே களமிறக்கவூள்ளதாகவும் வாய்வழிச் செய்தியொன்றின் மூலமாக அறிய முடிகிறது. இருந்தபோதும் இச்செய்தியின் உண்மைத் தன்மை குறித்து நம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும் இவ்வாறான செயற்பாடு மூலம் நிந்தவூரில் போட்டியிடும் மு.கா. அபேட்சகரின் வெற்றியை மிகவூம் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியூம் என்பதை பல் முளையாக் குழந்தையூம் அறியூம்! ஏற்கனவே, மு.காங்கிரஸ் சார்பாக நிந்தவூருக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், அந்தப் பிரதேசத்துக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவரையூம் பெற்றுக் கொள்வதற்கான குறுக்கு வழி முயற்சியே இதுவென்று கோபப்படுகிறார் இச்செய்தியை நம்மிடம் தெரிவித்த நபர்! இதேவேளை, மு.காங்கிரசின் பொதுச் செயலாளர் ஹசன் அலியூம் நிந்தவூர்காரர் என்பது இங்கு அடிக்கோடிட்டு சொல்ல வேண்டிய தகவலாகும்! 

நமது ஞாயிறு தினக்குரல் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்துவரும் ஊடக நண்பரொருவர், ”இந்தக் கிழமை என்ன விடயம் பற்றி கட்டுரை வருகிறது” என்று கேட்டார். ”கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அலசும் கட்டுரையொன்றை எழுதுவதாக உத்தேசம்” என்றேன்! சற்றே நக்கல்தனமாகச் சிரித்த நண்பர்; ”நீங்கள் பெரிதாக ஒன்றும் அலசி ஆராயவெல்லாம் வேண்டாம். இத்தனை பாடுபட்டு கிழக்கைப் பிரித்தெடுத்துள்ள அரசாங்கம், அங்கு இத்தனை அவசரமாகத் தேர்தலொன்றை நடத்துவது தோற்பதற்கோ அல்லது எதிராளிகளிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்கோ அல்ல ஓய்… கிழக்குத் தேர்தலில் அரசாங்கம் ‘என்ன விலை கொடுத்தாயினும்’ வெல்லும்” என்றார்!

‘என்ன விலை கொடுத்தாயினும்’ என்கின்ற வாக்கியத்தை கூறும் போது, நமது நண்பர் தெரிந்தோ தெரியாமலோ, சற்று அழுத்தியே உச்சரித்தார்!!


(இந்தக் கட்டுரையை 30 மார்ச் 2008 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s