காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கிழக்கு மாகாணத் தேர்தலும் குதிக்கத் தயாராகவுள்ள கோமாளிகளும் முஸ்லிம் சமூகமும்! 14 மார்ச் 2008

Filed under: அரசியல் — Mabrook @ 1:13 முப

color-dot.gifமப்றூக் 

திர்வரும் தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படப் போவதாக மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார். இது முஸ்லிம்களின் வாக்குகளை தமிழ் ஈழத்துக்குப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியாகும்…  எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கிச் சொல்லும் வகையிலான சுவரொட்டிகள் அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரவலாக ஒட்டப்பட்டன. அந்த ஒட்டிகளுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது பற்றிய குறிப்புகள் எவையூம் அதில் இடப்பட்டிருக்கவில்லையாயினும், நான்கு வர்ண நிறக்கலலையில் மிக அழகாக அச்சிடப்பட்டிருந்த அந்தச் சுவரொட்டிகளின் பின்னணியில் செழிப்பான நிதியியல் பின்னணியைக் கொண்டதொரு தரப்பு இயங்குவதை உணர முடிந்தது. அரசாங்கத்தோடு இணைந்திருக்கும் கிழக்கு மாகாண அமைச்சர்மார்கள் சிலரே இதற்கெல்லாம் பொறுப்புதாரிகள் என்று கிட்டத்தட்ட சத்தியம் செய்து கூறுகிறார் மு.கா.வின் முக்கியஸ்தர் ஒருவர்!

மு.கா.வுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இப்படி ஏதாவது தேர்தல் கால இணைவு குறித்த ஒப்பந்தங்கள் ஏதாவது இருப்பது உண்மைதானா என்று நமது சந்தேகம் தீர்க்க அக்கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தை தொடர்பு கொண்டோம். ”அவ்வாறு இணைந்து செயற்படுவது குறித்து தாம் எவ்வித இணக்கப்பாடுகளையோ அல்லது ஒப்பந்தங்களையோ தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மேற்கொள்ளவேயில்லை” என்று  அடித்துக் கூறுகிறார் அவர்! ஆனால் சிறுபான்மை இனங்களின் நலன் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து செயற்படுவதற்கான எண்ணப்பாடுகள் தமது கட்சிக்கு உள்ளதாக அவர் எம்மிடம் விளக்கம் தெரிவித்தார். 

அப்படியென்றால் மேற்படி சுவரொட்டிகள் முளைக்க என்னதான் காரணம் என வாசக நெஞ்சங்கள் கொஞ்சூண்டாவது யோசிக்கலாமல்லவா? நுடந்தது இதுதான். அதாகப்பட்டது, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் வைத்து, மு.கா. தலைவர் உரையொன்றை ஆற்றினார். அதன்போதே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தேர்தல் கூட்டொன்றை செய்யவுள்ளதாய் ஹக்கீம் தெரிவித்ததாக தமிழ் நாளாந்தப் பத்திரிகையொன்றில் செய்தியொன்று பிரசுரமாகியிருந்தது (தினக்குரலில் அல்ல). ஆனால் தலைவர் அவ்வாறு பேசவில்லையென்றும் குறித்த செய்தி பிழையானதென்றும் மு.கா. செயலாளர் செய்தி வெளியான பத்திரிகைக்கு மறுப்புத் தெரிவித்திருந்தார். இந்தப் பின்னணியில்தான் முளைத்திருந்தன அந்தச் சுவரொட்டிகள்! 

சரி, எதிர்வரும் தேர்தல்… எதிர்வரும் தேர்தல் என்று கூப்பாடு போட்டபடி, நமது அரசியல்வாதிகள் கச்சை கட்டிக் கொண்டு களமிறங்கக் காத்திருக்கும் அந்தக்களம் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்தான் என்பதை ஊகித்துக் கொள்வதொன்றும் பெரிய மாயவித்தையல்ல! தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சூடு பிடித்திருக்கும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் முடிந்தவுடன் அல்லது சற்றே முடித்துவிட்டுக் களைப்பாறிய கையோடு கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலை முழு மூச்சுடன் நடத்தி முடிக்கக் காத்திருக்கிறது அரசாங்கம்! விடுவிக்கப்பட்ட கிழக்கின் நிருவாகத்தை தனது பிடிக்குள் வைத்திருக்க அல்லது தனது சார்பானவர்களிடம் ஒப்படைப்பதற்கான அரசின் முனைப்பே கிழக்குத் தேர்தலாகும்! ஜூலையில் இது இடம்பெறலாம் என்று அரசியல் வட்டாரத்தில் அடிபடுகிறது ஒரு கதை!

கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வசித்துவரும் முஸ்லிம்கள் அல்லது தமிழ்பேசும் சமூகத்திடமிருந்து பிடுங்கியெடுக்கப்பட்ட அம்மாகாணசபையின் நிருவாகத்தை, சிங்கள மேலாதிக்கத்தின் கைகளில் ஒப்படைப்பதற்கான சூழ்ச்சியே கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் என்று கூறுகின்றனர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் பலர். இது பற்றி முஸ்லிம் பிரதியமைச்சர் ஒருவரிடம் நட்பு ரீதியாகப் பேசிக்கொண்டிருந்தபோது கேட்டோம். அதற்கு அவர் பதிலளிக்கையில் அந்த புத்திஜீவிகள் தெரிவித்துவரும் கருத்துக்களில்  நிறையவே உண்மைகள் இருக்கின்றன என்றார். 

இது இவ்வாறிருக்க, கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலொன்று இடம்பெறுமாயின் அது தொடர்பில் மு.கா.வின் முடிவு எவ்வாறு அமையூம்  என பசீர் சேகுதாவூத்திடம் சந்தேகம் கேட்டாம். ”அவ்வாறானதொரு தேர்தல் பிரகடனம் செய்யப்பட்டால், நிச்சயமாக அதில் மு.கா. போட்டியிடும்” என்கிறார். இலங்கை – இந்திய ஒப்பந்தமாகது முஸ்லிம் சமூகத்தின் முதுகினில் எழுதப்பட்ட அடிமை சாசனம் என்று மு.காங்கிரஸ் நீண்ட காலமாகக் கூறிவருகிறது. அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே 13 ஆவது திருத்தச் சட்டமும் மாகாணசபை முறைமையூமாகும். கிழக்கின் நிருவாகம் சிங்களப் பேரினவாதத்தின் கைகளுக்குச் சென்றுவிடாமல் தடுப்பதற்காகவாவது மு.கா. அந்த தேர்தலில் போட்டியிட வேண்டியதொரு தேவை இருக்கிறது என்று கூறுகிறார் அவர்!

சரி, அமையவூள்ள கிழக்கு மாகாணசபை குறித்த சில விபரங்களை இந்த இடத்தில் சிறிது பார்ப்போம். இச்சபைக்கான மொத்த உறுப்பினர்களின் தொகை 37 ஆகும். நேரடியாகப் போட்டியிடும் அபேட்சகர்களிலிருந்து 35 பேரும்இ அதிக ஆசனங்களைப் பெறும் கட்சிக்கு வழங்கப்படும் 02 போனஸ் ஆசனங்களுமாக 37 எனும் அந்த மொத்தத் தொகை அமையூம்! இவ்வாசனங்களின் ஒதுக்கீடானது அம்பாரை மாவட்டத்துக்கு 14, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 11, திருகோணமலை மாவட்டத்துக்கு 10 எனும் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்! 

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவூம், மட்டக்களப்பில் இந்துக்கள் பெரும்பான்மையாகவூம், திருகோணமலையில் கிட்டத்தட்ட பெரும்பான்மையாக இந்துக்களும் முஸ்லிம்களும் இருப்பதனால், உண்மையாகவே இச்சபையின் முதலமைச்சராக சிங்களவர் ஒருவர் வருவதற்கான நியாயங்கள் இல்லையென்றே கூறவேண்டும். ஆனால், அவ்வாறு சிங்கள முதலமைச்சர் ஒருவர் கிழக்கு மாகாண சபைக்குத் தெரிவாவதற்கான சாத்தியங்களை ஒருசில அரசியல் காரணிகள் உருவாகி விடக்கூடிய நிலைகளும் உள்ளன! அந்த காரணிகள்தான் என்ன? பார்ப்போம்!

காரணி – 01 
முஸ்லிம் அரசியல்வாதிகள் பல்வேறு தரப்புகளாகப் பிரிந்து நின்று குறித்த தேர்தலில் போட்டியிடுவதாகும்: இதனால் முஸ்லிம் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படுவதோடு, அரசாங்கத்தின் சார்பிலான சிங்களக் கட்சிகளுக்கும் முஸ்லிம்களின் வாக்குகள் போய்ச் சேர்ந்துவிடக் கூடியதொரு நிலையூம் உருவாகி விடக்கூடும். 

காரணி – 02 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அந்த தேர்தலை பகிஷ்கரிக்கும் முடிவொன்றை எடுத்தல்: இவ்வாறானதொரு நிலை ஏற்படுமானால் கூட்டமைப்பு பெறுவதற்குச் சாத்தியமுள்ள ஆசனங்கள் அனைத்தும் அல்லது அவைகளில் ஏராளமானவைகள் அரச தரப்புக்கு அல்லது அது சார்பான தரப்பினரின் கைகளுக்குச் சென்று விடக் கூடும். 

ஆக, மேற்சொன்ன மற்றும் சொல்லப்படாத காரணங்களினால், கிழக்கு மாகாண சபையின் நிருவாகம் சிங்களப் பேரினவாதத்தின் கைகளுக்குள் சுருண்டு விடக்கூடியதொரு அபாயம் இருப்பதோடு, அச்சபையின் முதலமைச்சராக சிங்கள சமூகப் பிரதிநிதியொருவர் தெரிவு செய்யப்படக் கூடியதொரு நிலையூம் உருவாகி விடவூம் கூடும்!

முஸ்லிம் தரப்புகள் இவ்வாறு பிரிந்து நின்று செயற்படும் போது ஏற்படக்கூடிய அபாயம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பசீரிடம் நாம் பேசினோம். அதேவேளை எதிர்கால தேர்தல் நடவடிக்கைகளின் போது முஸ்லிம் தரப்புகள் சேர்ந்தே செயற்பட வேண்டும் என்று அவர் அண்மையில் தெரிவித்த கருத்தை நினைவுபடுத்தி அது தொடர்பான மு.கா.வின் நடவடிக்கை எவ்வாறு அமையூம் என்றும் வினவினோம். அதற்கு அவர் பதிலளிக்கையில்; இனிவரும் தேர்தல்களின் போது, சேர்ந்து இயங்குவது தொடர்பில் முஸ்லிம் அரசியல் தரப்புகளோடு பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. நிச்சயமாக பேசியே ஆகவும் வேண்டும். ஆனால், மத்திய அரசாங்கத்திலுள்ள சலுகைகளை மோகிக்கும் முஸ்ஸிம் அமைச்சர்கள்; அவைகளை விட்டு விட்டு, சமூக நலன்சார்ந்து சிந்தித்து அதற்காகச் செயற்படுவார்களா என்பதில் பெருத்த சந்தேகம் இருக்கின்றது என்றார்.

மேலும், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலொன்று இடம்பெறுமாயின் அதில் மு.கா. கணிசமான ஆசனங்களைக் கைப்பற்றக் கூடிய வாய்ப்புகள் உள்ளதென்கிறார் பசீர். சிலவேளை மு.காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக சில ஆசனங்கள் தேவையாக இருக்கும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவூம் முடியூம். இந்நிலை தமிழ் பேசும் சமூகத்தின் ஆட்சியொன்று அமைவதற்கு உதவியாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

இது இவ்வாறிருக்க, கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எதுவூம் வெளியாகாத நிலையிலேயே, சில கோமாளிகள் தாம் அதில் குதிக்கப் போவதாகவூம், அதற்கு மிகப் பொருத்தமான நபர்கள் தாமே என்றும் தம்பட்டம் அடித்துத் திருவதுதான் சமகால அரசியல் நகைச்சுவை! கொஞ்சம் பணத்தை உழைத்து வைத்துக் கொண்டுள்ளஇ அரசியல்வாதிகளின் சொந்தங்கள் சில, இவ்வாறான தேர்தல் கோதாவொன்றில் குதிப்பதற்கான அத்தனை முன் ஆயத்தங்களையூம் செய்து வைத்துக் காத்திருக்கின்றன. இப்போதே, மூளைக்கும் – வாய்க்கும் தொடர்புகள் எதுவூமின்றி இந்தக் கோமாளிகள் மேடைகளில் அரசியல் ‘சித்தாந்தங்களை’ உளறித்தள்ள ஆரம்பித்துள்ளனர். கட்சித் தலைமைகளின் தீர்மானங்களுக்கு முன்பே இவர்கள் எப்படி இவ்வாறு தம்மைத் தாமே அபேட்சகர்களாகப் பிரகடனப்படுத்திக் கொள்ள முயற்சிக்க முடியூம் என்று கேட்கிறார் நமது வயது முதிர்ந்த வாக்காளர் ஒருவர்!

இவ்விடயம் தொடர்பில் மு.காங்கிரசும் அதன் தலைமையூம் கடுமையான கவனத்துடன் செயற்பட வேண்டும். காரணம், கடந்த காலங்களில், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் போது, மு.காங்கிரஸ் நியமித்த அபேட்சகர்கள் குறித்த அதிருப்திகள் , அப்பகுதி மக்களிடையே இன்னுமிருக்கிறன. பல்வேறு துறைகளையூம் சேர்ந்த புத்திஜீவிகள் மற்றும் சமூக சேவையாளர்கள் வசித்து வரும் இம்மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு, மு.கா. சார்பில் தெரிவாகியூள்ளோரில் பலர் குறித்து சந்தோசமாகப் பேசிக்கொள்ள எதுவூமேயில்லை என்கிறார் பல்கலைக்கழக விரிவுரையாளரொருவர்.

எனவே, கிழக்கு மாகாணசபைக்கானதொரு தேர்தல் அறிவிக்கப்பட்டால், அதற்கான ‘அபேட்சகர்கள் தெரிவு’ எனும் விடயத்தில் மு.கா. தலைமை சிந்தித்தும், அழுத்தங்களுக்கு அப்பாற்பட்டும் செயற்படுதல் என்பது மிகவும் அவசியமாகும். காரணம், நூலை வைத்தே ஆடையின் தரம் நிர்ணயிக்கப்படுவதுபோல், பிரதிநிதிகளை வைத்தே அவர்கள் சார்ந்த கட்சி மற்றும் மக்கள் பற்றிய அபிப்பிராயங்களும் உருவாகின்றன!


(இந்தக் கட்டுரையை 09 மார்ச் 2008 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s