காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

காதல், அரசியல், திருமணம்: ஹக்கீமுடன் ஒரு கலக்கல் பேட்டி! 28 பிப்ரவரி 2008

Filed under: சந்திப்பு — Mabrook @ 2:42 முப

color-dot.gifமப்றூக்

  • மு.கா. தேசிய அமைப்பாளர் என்றவுடன் பாயிஸ் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கொள்கைவகுப்பாளராக தன்னை எண்ணிக்கொண்டார்.
  • இனரீதியான கட்சி தேவையில்லை எனும் அதாஉல்லாவின் கூற்று அபத்தமானது.
  • அமீரலியின் அடாவடித்தனங்கள் மு.கா.வுக்கான ஆதரவையே அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
  • மப்றூக் தினக்குரலில் எழுதும் கட்டுரைகள் மு.கா.வுக்கு ஆபத்தாக அமைந்து விடுமென கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் என்னிடம் கூறினர்.
  • தேர்தலொன்றை குறிவைத்து சேகு இஸ்ஸதீன் மு.கா.வுடன் இணைந்தால், அது அவரை மிகவும் மலினப்படுத்தி விடும்.

காதலர் தினத்தன்று மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை அவரின் ‘கானிவல்’ வீட்டில் சந்திக்கச் சென்றிருந்தோம். ஒரு ஐந்து நிமிடக் காத்திருப்புக்குப் பின்னர் அரைக்கை வெள்ளிநிற சேட், கறுப்பு நிற காற்சட்டையூடன் ‘பிரஷ்ஷாக’ வந்தார். ஒரு கைகுலுக்கலுடன் எங்கள் உரையாடல் ஆரம்பமானது. பேச்சின் இடையே ”இன்று எங்கள் இருபதாவது திருமண தினம் மப்றூக்” என்றார் மு.கா. தலைவர் ஹக்கீம்! மீண்டும் ஒருமுறை கைகுலுக்கி வாழ்த்துச் சொன்னோம். ”நன்றி” என்றார். ”கல்யாணத்தை திட்டமிட்டே காதலர் தினத்தன்று வைத்தீர்களா” எனக்கேட்டால் ”அப்படியெல்லாமில்லை இயல்பாகவே அத்தினத்தில் நிச்சயிக்கப்பட்டு விட்டது” என அவர் தனது திருமணத்தைப் பற்றி நினைவு கூறினார்! அவர்களின் திருமணத்தை இடையில் நின்று பேசி முடித்தவர் அலவி மௌலானாவாம் என்பது பேசிக்கொண்டிருந்தபோது ஹக்கீம் தெரிவித்த இன்னுமொரு சுவையான செய்தியாகும்!

கணிசமான முஸ்லிம் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புமிகு தலைமைப் பதவியினைப் பொறுப்பேற்றதிலிருந்துஇ மிகக் கடுமையான விமர்சனங்களுக்குட்பட்டு வரும் ரவூப் ஹக்கீம், இன்றைய அரசியல் அரங்கில் தவிர்க்க முடியாததொரு நபராக மாறியுள்ளார்! இன்றுள்ள வெகு ஒரு சில நாகரீக அரசியல்வாதிகளில் ஒருவராக இவரைக் குறிப்பிடலாம். மும்மொழிகளையூம் இலக்கியத் தரத்தில் கையாளத்தெரிந்த ஹக்கீம், தன்னை எழுத்துக்களால் ஓர் இலக்கியவாதியாகவும் அடையாளப்படுத்த முயன்று வருபவர். இவரின் பலம் – பலவீனம் என்று இவருடைய மௌனத்தைக் குறிப்பிடலாம். இதனால் இவர் சாதித்ததும், இழந்ததும் அதிகமானவை!

ரோயல் கல்லூரியின் மாணவக்கால வாழ்க்கை, சட்டக்கல்வி மற்றும் நல்ல  குடும்பப்பின்னணியிலான வளப்பு முறை போன்றவை ஹக்கீம் எனும் தனிநபரை மிகச் சிறப்பாகவே நெறிப்படுத்தி வைத்திருக்கிறது.

நான்கு தடவைகள் தேதி குறித்திருந்தும் எமக்குள் தவறிப் போன நேர்காணல் – காலையின் இளவெளில் பொழுதொன்றில் ஆரம்பித்து, மிகச்சரியாக நண்பகல் நேரத்தில் நிறைவடைந்தது.

கேள்வி: மு.கா. வீழ்ந்து கொண்டிருக்கிறது என்கின்ற கூற்றுக்கு உங்கள் பதில் என்ன?

பதில்: இன்றைய அரசாங்கம் தன்னோடு இணைந்துள்ள சில முஸ்லிம் அமைச்சர்களை வைத்துக்கொண்டு மு.காங்கிரசை மிகவூம் நெருக்கடியான நிலைகளுக்குள் தள்ளிவிட முயற்சி செய்து கொண்டேயிருக்கிறது.

ஆனாலும் அவைகளையெல்லாம் எமது கட்சி முறியடித்துக் கொண்டுதான் வருகிறது. அதேவேளைஇ கட்சி வீழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கு கிழக்குக்குள் இயங்கிக் கொண்டிந்த மு.காங்கிரஸ் இன்று நாடு முழுவதும் பரவலாக வேரூன்றியுள்ளதோடு, வடக்கு கிழக்குக்கு வெளியே நாம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றெடுத்துமுள்ளோம். ஆக, முஸ்லிம் காங்கிரஸ் வளர்ந்து கொண்டிருக்கிறதே தவிர வீழந்து கொண்டிருக்கிறது எனும் கூற்றில் எவ்வித உண்மையூமில்லை!

கேள்வி: கொஞ்சக்காலமாக உங்கள் அரசியல் கணக்குகள் பிழைத்து வருகின்றன. ஏன் இந்த தடுமாற்றம்?

பதில்: பதவிகளுக்காக ஆசைப்பட்டு கட்சிக்குத் துரோகமிழைத்தவர்கள் சிலரினால் உருவானதே இந்நிலையாகும்! ஆனால், இதற்காக நாம் சோர்ந்து போகவோஇ கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமாக செயற்பட்டு சமரசம் செய்து கொள்ளவோ நாங்கள் தயாரில்லை. மேலும், நாம் எந்தவிதத்திலும் தடுமாற்றமான முடிவூகளை மேற்கொள்ளவில்லை. அவை கட்சிக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவைகளேயாகும்!

கேள்வி: வெறும் உறுப்பினர்கள் சிலரை பெற்றுக் கொள்ளவதற்காக மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபைத்தேர்தலில் இத்தனை பிரயத்தனங்களை ஏன் எடுக்கின்றீர்கள்?

பதில்: மு.காங்கிரஸ் ஒரு போதும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமலிருந்ததில்லை. மேலும் நாம் போட்டியிடாவிட்டால் கட்சியின் ஆதரவாளர்கள் சோர்ந்து போய்விடுவதோடு, அவர்களின் ஈடுபாடும் குறைந்து விடும். அதனாலேயே நாம் அங்கு போட்டியிட வேண்டியதுள்ளது. உதாரணமாக, மொனராகலயில் நாம் தேர்தலில் போட்டியிட்ட போதும் அங்கு எமக்கு ஆசனங்கள் கிடைக்காது என நாம் அறிந்தேயிருந்தோம். ஆனாலும் நாம் அங்கிருக்கும் எமது ஆதரவாளர்களை கைவிடவோ, அவர்களை மாற்றுக்கட்சினருக்கு வாக்களிக்கும் ஒரு நிலைக்கு தள்ளவோ விரும்பவில்லை. அதனாலேயே நாம் அங்கு போட்டியிட்டோம். அதேவேளை, நாம் போட்டியிடாத இடத்தை மாற்றுக் கட்சியினர் பெற்றெடுக்கும் நிலையைத் தவிர்க்கவும் வேண்டியிருப்பதால் நாம் போட்டியிட்டே ஆக வேண்டியுள்ளது. மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஐ.தே.கட்சியும் போட்டிடாத நிலையில் நாமும் விலகியிருந்தால், அந்தத் தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து வெளியுலகுக்கு தெரியப்படுத்த முடியாமலும் போய்விடும்!

கேள்வி: மு.கா.வை விட்டு பிரிந்து போனவர்களில் பெரும் இழப்பு என்று யாரைக் குறிப்பிட முடியும்?

பதில்: கட்சிக்குள் ஆரம்பத்தில் இருந்தே செயற்படுவோர் பிரிந்து போவதை பெரிதான இழப்புகளாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், கட்சிக்கு வெளியிலிருந்து கட்சியுடன் இணைந்து கொள்வோர், பிரிந்து போகும் போது – அதைப் பெரும் இழப்பாகவே கருதவேண்டியுள்ளது. காரணம், அவர்கள் கட்சிக்கு கிடைத்த புதிய வரவு என்பதாலும் அவர்களின் ஆதரவு கட்சிக்குப் புதிதாகக் கிடைப்பதாலும் குறித்த நபர்கள் பிரிந்து போகும் போது, கட்சிக்கு இழப்பு ஏற்படுகிறது. அவ்வாறு அண்மையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க இழப்பாக மு.கா.விலிருந்து நௌசாத் ஐ.தே.க.வுக்குப் பிரிந்து சென்றதைக் குறிப்பிடலாம். ஆனால், ஐ.தே.கட்சியை மீண்டும் அவர் வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவாராயின் மு.காங்கிரஸ் தலைவரை விடவும் அவரோடு படுமோசமாக மோதுகின்ற ஒருவர் இருக்கவே முடியாது! இதேவேளை, எதிர்வரும் தேர்தல்களிலே ஆட்சியை நாம் கைப்பற்றிக் கொள்ளும் எமது வியூகங்களை அமைக்கும் போது, எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை!

கேள்வி: அப்படியாயின் இந்த வியூகத்தில் வெல்வதற்காக மு.காங்கிரஸ் தனது சின்னத்திலிருந்து விலகி வேறொரு கட்சிச் சின்னத்தில் போட்டியிடுவதற்குக் கூட தயாராக இருக்கின்றதா?

பதில்: ஆம், மு.காங்கிரசின் சின்னத்தில் வேறுகட்யினரும் இணைந்து போட்டியிடலாம். அல்லது மு.காங்கிரஸ் வேறு சின்னமொன்றில் போட்டியிடுவதற்கு நிர்ப்பந்திக்கவும்படலாம். எவ்வாறிருந்த போதிலும், மு.கா. அபேட்சகர்களை வெல்ல வைப்பதற்கான முயற்சியாகவே எமது நடவடிக்கை அமையும். முஸ்லிம்கள் மத்தியில் மாற்றுக்கட்சி அபேட்சகர்கள் வெற்றி பெறுவதற்கு எமது கட்சி ஒருபோதும் இடந்தரப்போவதில்லை!

கேள்வி: இனரீதியான கட்சியொன்று தேவையில்லை என்கிறார் அமைச்சர் அதாஉல்லா. என்ன சொல்கிறீர்கள் இதுகுறித்து?

பதில்: இந்த நாட்டிலுள்ள எல்லாக் கட்சிகளுமே இன ரீதியான அரசியல்

கட்சிகள்தான்அந்தக் கட்சிகளுக்குள் இருக்கின்ற பெரும்பான்மையினரின் ஆதிக்கம்தான் குறித்த கட்சிகளின் போக்கைத் தீர்மானிக்கின்றன. எனவேதான் முஸ்லிம்கள் தங்களுக்கென்று ஒரு கட்சியின் அவசியத்தை உணர்ந்தார்கள். வடக்கு – கிழக்கு இணைப்புக்கு பின்னர்தான் முஸ்லிம்களுக்கானதொரு கட்சியின் அவசியம் குறித்து உணரப்பட்டதாகக் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

1970 களுக்குப் பின்னர் மிகப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த சிங்களக் கட்சிகளின் மேலாதிக்கமே இனப்பிரச்சினை தீவிரமடையக் காரணமாகும். மேலும் இவ்வாறான சிங்கள மேலாதிக்கக் கட்சிகளில் பெயரளவில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களோ, தமிழ் அமைச்சர்களோ இருந்த போதும், தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்குள் இருந்த விடுதலை வேட்கையின் வேகம், மேலும் வளர்ந்ததற்குக் காரணம். அக் கட்சிகளின் உள்ளேயிருந்த இன ரீதியான மேலாதிக்கமேயாகும். எனவே, இனவாதக் கட்சியென்று மு.காங்கிரசையோ, ஏனைய கட்சிகளையோ சாடும் அமைச்சர் அதாஉல்லாவின் வாதம் மிகவும் அபத்தமானது!

கேள்வி: மறைந்த தலைவர் அஷ்ரப்புக்குப் பின்னர் கட்சியின் பிரதேச மத்திய குழுக்கள் அமைக்கப்படாமை குறித்து உங்கள் மீது நிறையவே அதிருப்திகள் நிலவுகின்றன. ஏன் இந்நிலை?

பதில்: தலைவருடைய காலத்தில் கட்சிக்காகப் பிரமுகர்கள் எனும் நிலையிருந்தது. ஆனால், இப்போதோ பிரமுகர்களுக்காகக் கட்சியெனும் நிலை பல ஊர்களிலும் உருவாகியுள்ளது. மேலும், ஒவ்வொரு பிரதேசத்திலும் மு.காங்கிரஸ் கனவான்கள் உருவாகியிருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அப்பிரதேசங்களின் ஏகபோக அரசியலுக்கு உரித்துடையவர்கள் என்கிற எண்ணப்போக்கோடு செயல்பட ஆரம்பித்து விட்டனர். அதனுடைய விபரீதங்களின் விளைவூதான் மத்திய குழுக்களை அமைக்க முடியாமல் போயுள்ளது. இதனால்தான் இடைக்கால மத்திய குழுக்களை வைத்துச் செயற்படுத்தவும், சில இடங்களில் பெரிதாக அரசியல் ஆசைகளற்ற சிலரை நடுநிலையாளர்களாகவும், மத்திய குழுக்களுக்கு தலைவர்களாக நியமிக்க வேண்டியதொரு நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, வடக்கு – கிழக்கில் குறிப்பாக கிழக்குமாகாணத்தில் மாகாணசபை அரசியல் என்பது பல வருடங்களாக முடக்கமடைந்து விட்டது. எனவே, எல்லோரும் பாராளுமன்ற அரசியலில் மட்டும் நாட்டம் கொண்டவர்களாகி விட்டனர். அதிலும் தலைவர் அஷ்ரப்பின் மறைவூக்குப் பின்னர் தேசியப் பட்டியல் நியமனச் சாகுபடி கூடுதலாகச் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையைப் பயன்படுத்தி ஒவ்வொரு ஊரிலும் எல்லோரும் பேரம்பேச ஆரம்பித்து விட்டார்கள். இனிமேல் வரும் தேர்தல்களில் இந்தத் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எனும் விடயத்தை மு.காங்கிரஸ் போட்டி மனப்பான்மையுடன் செய்யாது! அதற்கு அவசியமும் இருக்காது!!

கேள்வி: இனிவரும்  தேர்தல்களில் முஸ்லிம் அரசியல் தரப்புக்கள் ஒற்றுமைப்பட்டே களமிறங்க வேண்டுமென்கிறார் உங்கள் கட்சித் தவிசாளர் பசீர், இந்த ஒற்றுமையின் சாத்தியம் குறித்து விளக்குங்கள்?

பதில்: தேர்தலொன்று வரும்வரை இந்த ஒன்றுபடுதல் என்பது சாத்தியமற்றது என்பதே என்னுடைய அனுமானம்! தேர்தலொன்று வருகின்றபோது மட்டும், நாம் மாறுபாடானதொரு நடவடிக்கையைக் கைக்கொள்வதன் மூலம் மற்றைய மாமூல் அரசியல்வாதிகளுடன் சேர்த்து மு.காங்கிரஸ் எடைபோடப்படுகின்றதொரு நிலை உருவாகியுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் மரபு ரீதியான அரசியல் அணுகுமுறையை மு.காங்கிரசும் கையாள வேண்டுமெனச் சிலர் நினைக்கின்றனர். இதிலிருந்து மாறுபட்ட சிந்தனையோடு செயற்படவே நான் விரும்புகிறேன்.

தமிழ் தேசிய சக்திகள் எதிர்நோக்குகின்ற அதே சவால்கள் வடக்கு – கிழக்கைத் தளமாகக் கொண்டு இயங்குகின்ற மு.காங்கிரசுக்கும் இருக்கிறது. எனவே, தமிழ் தேசிய இயக்கங்களின் அரசியல் அணுகுமுறையைக் கொண்ட ஒரு இயக்கமாக மு.கா. இருந்தாக வேண்டியதொரு அவசியம் இருக்கிறது. தமிழ் தேசிய சக்திகளுக்குள் உருவெடுத்த அரசியல் வன்முறையையும் அரவணைத்துக் கொண்டதொரு பிரவாகம் முஸ்லிம் அரசியலுக்குள் இல்லாமல் இருப்பது ஒரு குறையாகும் என உணரப்படுகிற நிலைமை எமது சந்தர்ப்பவாத அரசியலைப் பார்க்கும் போது ஏற்படுகிறது.

எனவே, இவ்வாறான சிக்குகளுக்குள் முஸ்லிம் ஜனநாயக அரசியல் தள்ளப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கும் நாம் சில முடிவுகளை எடுத்தாக வேண்டியுள்ளது.

கேள்வி: பிராந்திய ரீதியில் தேர்வு செய்யப்பட்டவர்களைக் கொண்ட கூட்டுத்தலைமைத்துவம் ஒன்றே இனி மு.கா.வூக்குத் தேவை என்கிறார் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட மு.கா.வின் முன்னாள் அமைப்பாளர் பாயிஸ். இது கவனமெடுக்கக் கூடிய கருத்துத்தானா?

பதில்: மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் என்கிற பதவி கிடைத்தவூடன் சிலருக்கு தேவையில்லாத பவுசு வந்து விடுகிறது. இந்தப் பதவி கிடைத்தவுடன் இந்த நாட்டிலுள்ள முழு முஸ்லிம்களினதும் கொள்கை வகுப்பாளர்களாக அவர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். வடக்கு –  கிழக்கு மாகாணங்களுக்குள்ளே மு.கா.வுக்கு இருக்கும் பேரம்பேசும் சக்தியை வைத்துத்தான், இக்கட்சி வடக்கு கிழக்குக்கு வெளியே, ஏனைய கட்சிகளுடன் ஒப்பந்தங்ளைச் செய்து கொள்கின்றன. அவ்வாறான பேரம்பேசும் வல்லமையை பாயிஸ் வேண்டுமென்றே அழிக்க நினைக்கின்றார்.

அதேவேளை, வடக்கு – கிழக்குக்கு வெளியே முஸ்லிம்களுக்கான தனியான அரசியல் இயக்கமொன்று உருவெடுத்து வளர்வதென்பது சாத்தியமற்றது. மேலும், தலைவர் அஷ்ரப்பின் மறைவுக்குப் பின்னர் வடக்கு – கிழக்கை தளமாகக் கொண்ட மு.காங்கிரஸ், அப்பகுதிக்கு வெளியே உள்ள ஒருவரை தலைவராக வரித்துக் கொண்டதன் மூலம், வடக்கு – கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களுக்குப் பாரியதொரு சேதியை சொல்லியிருக்கிறது என்பதையும் பாயிஸ் மறந்துவிடக்கூடாது! எனவே, இவ்வாறு அவர் பேசுவது அவராக எடுத்துக் கொண்ட சில முடிவுகளை
நியாயப்படுத்துவதற்கேயன்றி வேறெதற்குமில்லை!

கேள்வி: முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்படும் நடவடிக்கையானது ஐ.தே.க. அரசாங்கத்தில் மு.கா. இணைந்திருந்த போதும் இடம்பெற்றதுதானே. அப்போது மட்டும் ஹக்கீம் ஏன் இப்படி உரத்துப் பேசவில்லை என்று கேட்கிறார்கள் உங்கள் எதிர் பாசறையாளர்கள்?

பதில்: மு.காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஐ.தே.கட்சியின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தயாரட்ண முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தி வந்த செயல்கள் எதனையூம், மு.காங்கிரஸ் ஐ.தே.கட்சியூடன் இணைந்து ஆட்சியமைத்த காலத்தில் அவரால் செய்ய முடியவில்லை. மு.காங்கிரசுடன் முட்டி மோதி எதனையும் சாதிக்க முடியாது என்கின்ற நிலையில் அவர் இருக்க வேண்டியிருந்தது. ஆனால், இப்போது அவருக்கு உறுதுணையாக ஜனாதிபதியின் சகோதரர், சுற்றாடல்துறை அமைச்சர் சம்பிகரணவக்க, ஜே.வி.பி.யினர் உட்பட பலர் அணிதிரண்டுள்ளனர்.

முஸ்லிம்களுக்கெதிரான இவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக, 18 க்கு மேற்பட்ட அமைச்சர்கள் இருந்தும் எதுவுமே செய்ய முடியவில்லை என்பதானது, மு.கா.வைப் பொறுத்தவரை கௌரவப் பிரச்சினையொன்றாகவே மாறிப்போனது. முஸ்லிம்களுக்கு எதிரான இவ்விடயம் தொடர்பில் ஒரு அமைச்சரவைக் கூட்டமொன்றின் போது, ஜனாதிபதிக்கும் எனக்குமிடையில் முரண்பாடொன்று ஏற்பட்டது. அக்கூட்டம் இடம்பெற்ற பின்னர் வெளியில் வந்த அமைச்சர் அதாஉல்லா, ஜனாதிபதியுடன் நான் பேசியது சரியென்று தட்டுக்கொடுத்தார். மேலும், குறித்த விடயம் தொடர்பில் மு.காங்கிரஸ் ஒரு முடிவெடுத்தால், அதற்குத் தாமும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். அவ்வாறு சொன்னவர்தான் இன்று அதற்கு மாற்றமாக வெவ்வேறு கதைகளைச் சொல்கின்றார் என்பது வேதனைக்குரிய விடயமாகும். ஐ.தே.க.வூடன் நாம் இணைந்திருந்த காலத்தில் இன்று இடம்பெறுவதுபோல், காணி அபகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு யாரும் முனையவில்லை. அதேவேளை, அவ்வாறான பிரச்சினைகள் உருவெடுக்க ஆரம்பிக்கும் போதே, அவைகளை நாம் பேசித் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து விட்டோம்!

கேள்வி: அடிக்கடி அடிபடும் கதை அமைச்சர் சேகு இஸ்ஸதீன் மு.கா.வில் மீண்டும் இணையப் போகிறார் என்பது. ஆனாலும் இதுவரை இணைந்தபாடில்லை. என்னதான் நடக்கின்றது?

பதில்: அமைச்சர் சேகு இஸ்ஸதீன், தான் – அரசியலிருந்து ஓய்வூபெற்று முக்தி, ஞானநிலையொன்றுக்குச் சென்றுவிட விரும்புவதாக நான் அவரை சந்திக்கும் நேரமெல்லாம் கூறுவார். போதாக்குறைக்கு, தான் முஸ்லிம்

காங்கிரஸ்காரன்தான் என்றும், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து, மு.கா.வுக்கு ஆதரவு தருவதாகவும் அவர் சொல்லியும் வருகின்றார். இது இன்று நேற்று அவர் கூறுகின்ற விடயமல்ல. மு.காங்கிரசலிருந்து பிரிந்து சென்ற நாளிலிருந்து என்னைச் சந்திக்கின்ற போதெல்லாம் அவர் இதனைத்தான் கூறிவருகிறார்.

மு.கா. எதிரணியில் இருக்கும் போது, அதனுடன் இணைந்து கொள்வதன் மூலமாகத்தான் அவரின் இணைவு என்பது ஒரு தியாகமாகப் பேசப்படும்! பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், மு.கா.வுடன் இணைந்து கொள்வதற்கு பலபேர் இருக்கின்றார்கள். அவர்களுடன் சேரந்து தானும் சேர்ந்து கொள்வதன் மூலம் சேகு இஸ்ஸதீன் தன்னையூம், அவருடைய இணைவும் மலிசுபடுத்தி விடக்கூடாது என்று நான் அவருக்குப் பல தடைவ சொல்லியிருக்கிறேன்!

கேள்வி: மு.கா.வின் ஆளுகைக்குட்பட்ட உ.ள்ளுராட்சி சபைகள் பற்றிய  குற்றச்சாட்டுகள் குறித்து கட்சித்தலைமை என்ன செய்வதாக உத்தேசம்?

பதில்: மு.காங்கிரஸ் வெற்றி பெற்ற உள்ளுராட்சி சபைகளில் இருந்த நகல் உறுப்பினர்களை நீக்கி விட்டு அசலானவர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் தற்போதுதான் நிறைவடைந்து வருகின்றன. மு.கா. தனது ஆட்சியினைச் செலுத்தக் கூடிய  அரசியல் அதிகாரம் அது வெற்றிபெற்றுள்ள உள்ளுராட்சி சபைகளில் மட்டும்தான் தற்போதைக்கு இருக்கின்றது. இந்த நிலையில், அட்டாளைச்சேனைப் பிரதேச சபைக்கு தேசிய நீர் வழங்கல் அதிகாரசபை வழங்கிய சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் பணம் அப்பிரதேசத்தின் பாலமுனை, ஒலுவில் ஆகிய ஊர்களுக்கு பிரதேச சபை ஆட்சியாளர்களால் நியாயமான ரீதியில் பகிர்ந்தளிக்கப்படவில்லை எனும் குற்றச்சாட்டொன்றும் இருக்கிறது. இதுகுறித்தும், குறித்த பணத்தொகையில் கையாடல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற விடயம் குறித்தும் கட்சி பரிசீலித்து வருகின்றது!

கேள்வி: மு.கா. காரர்கள் தமது தரப்பாரின் வீடுகளுக்கு அவர்களே குண்டுகளை வீசிவிட்டு தன்மீது பழிசுமத்துவதாக அமைச்சர் அமீர் அலி சொல்லுகிறார். இது மு.கா.வின் வங்குரோத்துத்தனம் என்றும் சாடுகிறார். இதற்கு ஏதேனும் பதில்களுள்ளனவா?

பதில்: எமது ஆதரவாளர்களின் கைகளில் அமைச்சர் அமீரலி கூறுவது போல், குண்டுகள் இருக்குமானால் அவைகளை தமது தரப்பினர்களின் வீடுகளின் மீது அவர்கள் வீசமாட்டார்கள். அப்படிக் குண்டுகள் கைகளில் இருந்தால் வேறுபக்கமாகத்தான் வீசத்தலைப்படுவார்கள். (சத்தமாகச் சிரித்துக்கொண்டு நகைச்சுவையோடு கூறுகின்றார்) மேலும், மு.கா.காரர்கள் அவ்வாறு தங்கள் ஆதரவாளர்களின் வீடுகளுக்கே குண்டுகளை வீசும் அரசியலோ, களநிலைவரமோ அங்கு இல்லை.

அப்பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைத் தன் பக்கமாக வைத்துக் கொண்டு, தான் செய்துவரும் வன்முறைகளையெல்லாம் சமாளித்து விடலாம் என்று அமீரலி நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்பிரதேசத்தில் அமீரலி கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடாவடித்தனங்கள், மு.காங்கிரசுக்கு ஆதரவானதொரு நிலையைத்தான்  தோற்றுவித்திருக்கிறது என்பதே உண்மையாகும்! எனவே, அமீரலியின் இந்நடவடிக்கைகள் பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை!

கேள்வி: கட்சியிலிருந்து பிரிந்தவர்களுடன் மீண்டும் இணைந்து கொள்வதானால், நீங்கள் இறங்கிச் செல்லும் கடைசிப்படி எதுவாக இருக்கும்?

பதில்: பிரிந்து சென்றவர்கள் தேர்தலொன்றுக்கு முன், மு.கா.வோடு இணைந்து கொள்வதற்கு முன்வருவார்களேயானால் நாம் நிறைய விட்டுக்கொடுப்புகளைச் செய்வதற்குத் தயாராகவே இருக்கின்றோம். சில அடிப்படை விடயங்கள் தவிர, இணைந்து கொள்பவர்களின் எதிர்கால அரசியல் உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் இந்த விட்டுக்கொடுப்புகள் இடம்பெறும்! ஆனால், தேர்தல் கால இணைவுகளின்போது, இவ்வாறான விட்டுக்கொடுப்புகளை எம்மால் வழங்க முடியாமல் போய்விடவும் கூடும்! உதாரணமாக, அவர்களுக்கு ஒரு பாராளுமன்ற ஆசனத்தை விட்டுக்கொடுப்பதில் எவ்வளவுக்கு ஆகக்கூடுதலாக செய்ய முடியுமோ அவைகளைச் செய்யலாம்! ஆனால், கட்சியின் அடிப்படை விடயங்கள் குறித்தோ, யாப்புக் குறித்தோ முன்வைக்கப்படும் எந்த நிபந்தனைகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகயில்லை!

கேள்வி: உங்களை விமர்சித்து ஞாயிறு தினக்குரலில் நான் எழுதும் கட்டுரைகள் குறித்த உங்கள் மன உணர்வுகள் குறித்து திறந்து பேசுங்களேன்?

பதில்: நீங்கள் எழுதும் கட்டுரைகளை நான் படிக்கவேண்டும் என சகோதர் பஷீர் சேகுதாவூத், ஹசனலி போன்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் என்னிடம் கூறிவருகின்றனர். ஆனால், உண்மையைச் சொல்வதென்றால் உங்களின் அக்கட்டுரைகளில் ஒன்றைக் கூட இதுவரை நான் வாசித்ததேயில்லை! ஆனால், அவைகளைப் படிக்காமலேயே அந்தக் கட்டுரைகள் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை நான் முழுமையாக உணர்ந்து வைத்துள்ளேன். உங்கள் கட்டுரைகளை உண்மையாகவே நான் வாசிக்காமல் விட்டமைக்கான காரணம், மப்றூக் எனும் நண்பரை நான் ஒருபொழுதும் இழந்து விடுவதற்கு தயாராகயில்லை என்பதுதான்!

நீங்கள் எழுதும் பாணி ஒரு வித்தியாசமானது என்றும், அது முஸ்லிம் காங்கிரசுக்கு ஆபத்தாக அமைந்து விடும் என்றும் பலர் என்னிடம் கூறியிருக்கின்றனர்! என்னைப் பற்றி நீங்கள் எழுதும் கட்டுரைகளைப் பார்க்கவில்லை என்பது என்னுடைய பலமோ, பலவீனமோ தெரியவில்லை! ஆனாலும் அதை என்னுடைய பலவீனம் என்னுதான் நான் நினைக்கின்றேன். உங்கள் கட்டுரைகளை கட்சிக்குள் இருக்கும் முக்கியமானவர்கள் வாசித்து, விளங்கி அவைகளிலுள்ள நன்மை, தீமைகள் பற்றி என்னிடம் கூறி, சிலவிடயங்களை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்று கூறும் போது ஏற்படுகின்ற பாதிப்பு, கட்டுரைகளை வாசிக்கும் போது எனக்குக் கிடைப்பதில்லை! என்னுடைய அரசியலில் நான் விமர்சனங்களை வரவேற்கின்றவனாகவே இருந்து வந்திருக்கின்றேன்.   எனவே, தொடர்ந்தும் நீங்கள் எம்மை விமர்சியூங்கள். நான் நிச்சயமாக சந்தோசம் கொள்வேன்!

கேள்வி: ஹக்கீமின் தலைமைத்துவத்தின் பின் மு.காங்கிரசுக்குள் நிகழ்ந்த மிகப்பெரும் துரோகம் எது என்று கேட்டால், உங்கள் விடை என்ன?

பதில்: துரோகத்தனங்கள் கட்சிக்குள் அடிக்கடி இடம்பெற்றுவருவதால், துரோகத்தின் உச்சம் அல்லது பெரும் துரோகம் எது என்று அனுமானிப்பது கஸ்டமானதாகும். ஒரு துரோகம் நடந்து முடிவதற்குள் அடுத்த துரோகம் அரங்கேறி விடுகிறது. மு.காங்கிரசின் தலைவருக்கெதிரானதாக கூறப்படும் துரோகங்கள் கூட, உண்மையாகவே அது ஒரு தாபனத்துக்கெதிரான துரோகம்தான். மேலும், எனக்கெதிராக புரியப்படும் தனிப்பட்ட துரோகங்களை
மு.காங்கிரஸ் எனும் தாபனம் எடைபோட்டுக்கொள்கிறது. மட்டுமன்றி அந்த தாபனத்தை நம்பிருக்கின்ற மக்களும் அவைகளைத் தௌpவாக அடையாளம் கண்டுவிடுகின்றனர். ஆக, துரோகங்களை சிறிது, பெரிது என்று சொல்வதன் மூலமாக ஒருவரை உயர்த்தவோ, தாழ்த்தவோ முயல்வதென்பது அவசியமற்ற விடயமாகும்!

கேள்வி: அரசியலுக்குள் ஏன் வந்தோம் என்று எப்போதாவது அலுத்துக் கொண்டதுண்டா?

பதில்: குழந்தைகளின் ஆசைகளை இந்த அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக சிலவேளைகளில் எம்மால் பூர்த்தி செய்ய முடியாமல் போகின்ற போது, அல்லது அவர்களுடன் நாம் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பும் வேளைகளில் இருக்க முடியாமல் போகின்ற போது, மனதுக்கு ஏற்படும் கஸ்டங்கள் மிகவும் கடுமையானவை! அது தவிர ஏன்வந்தோம் என்றெல்லாம் யோசிப்பதில்லை. மட்டுமன்றி மு.காங்கிரசைப் பொறுத்தவரை அக்கட்சிக்குள் வந்த பின்னர், தியாக சிந்தையுடையோர் அதனை விட்டும் திரும்பிப்போவதில்லை. அதற்குள் இருந்து, அதற்காகவே இறுதிவரை வாழ்வார்கள்!

கேள்வி: வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழ்ந்து கொண்டு, அப்பிராந்தியங்களின் உள்ளே தீவிர அரசியலில் ஈடுபடும்போது நீங்கள் முகம்கொள்ளும் இடர்பாடுகள் என்று ஏதாவது இருக்கின்றனவா?

பதில்: வடக்கு கிழக்கைச் சேர்ந்த அரசியல்வாதிகள் கூட, அப்பிரதேசங்களுக்கு வெளியே இருந்து கொண்டுதான் இன்று அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். யாரும் தமது வாழ்விடங்களில் முழுமையாக இருந்துகொண்டு அரசியலில் ஈடுபடவில்லை. ஆக, ஒப்பீட்டு ரீதியாக வடக்கு கிழக்குக்குள் வாழும் அரசியல்வாதிககளும், அதற்கு வெளியேயுள்ளோருக்கும் அரசியல் ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகளில் பெரிதாக வித்தியாசமில்லை. வடக்கு கிழக்குக்குள் வாழும் ஒருவர் அப்பிரதேசங்களுக்கு வெளியே தேர்தலொன்றில் போட்டியிட்டு ஒரு பாராளுமன்ற ஆசனத்தை வெல்லும் நிலையொன்றை மு.காங்கிரஸ் பெறவேண்டும். அதற்கேற்றவாறு மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் தம்மை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது அவாவாகும்!

கேள்வி: அஷ்ரப்பின் காலத்தில் கட்சிக்குள் அவரை எதிர்த்தோர் மிகக் குறைவு. ஆனால், உங்களுக்கு எதிரான உட்குரல்களோ மிகவும் அதிகமானவை. இரண்டு தலைமைத்துவத்துக்கும் இடையிலான இந்த மாற்றத்துக்கு என்னதான் காரணம்?

பதில்: ஒரு ஸ்தாபகத் தலைவருக்கு இருக்கின்ற அந்தஷ்து என்பது வித்தியாசமானது. தலைவர் அஷ்ரப் அவர்களை இந்தக்கட்சியின் ஆணிவேராக எல்லோரும் அடையாளம் கண்டனர். அவரைச்சுற்றியே மு.கா.வின் கட்டமைப்புக்கள் அனைத்தும் வளர்ந்தன. எனவே அவரை நேருக்கு நேராக விமர்சனம் செய்வதென்பது இலகுவானதொரு காரியமல்ல. மட்டுமன்றி அவரின் ஆளுமையும் வித்தியாசமானது. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரிடமும் மாறுபட்ட ஆளுமைகள் இருக்கின்றன. ஒருவரிடமிருக்கும் ஆளுமையானது மற்றவரிடமும் இருக்க வேண்டுமென யாரும் எதிர்பார்க்க முடியாது! எனவே என்னுடைய ஆளுமையில் சில வித்தியாசமான குணாம்சங்கள் இருக்கின்றன.

மறைந்த தலைவர் ஒரு உறுதியான, இறுக்கமான தலைவராக பலராலும் பார்க்கப்பட்டார். அவர் அன்பினால் கட்டுண்ட ஒருவர்! திடீரெனக் கோபப்பட்டு பின் ஐந்து நிமிடத்துக்குள் எல்லாவற்றையும் மறந்து மன்னிப்பு கேட்கும் ஒரு நிலைக்குச் சென்றுவிடக்கூடிய பெருந்தன்மை அவரிடமிருந்தது. இந்தத் தன்மைகள் வெளிப்படையாக எங்களுக்குள் வரவேண்டுமென்று நாங்கள் ஒவ்வொருவரும் விரும்புகின்றௌம். அது மிக இலகுவில் சாத்தியமாகும் விடயமுமல்ல! அன்பால் எதிரிகளைக் கட்டிப்போடும் அவருடைய அணுகுமுறையை மட்டும், நான் இயன்றவரை கையாண்டு வருகிறேன்.
மேலும்இ ஸ்தாபகத்தலைவருக்கான அந்த அங்கீகாரம் எனக்கு இல்லாமலிருக்கலாம். ஆனால், என்னால் இயன்றவரை எனக்கிருக்கின்ற குணாம்சங்களில் சிலமாற்றங்களைப் படிப்படியாகக் கொண்டுவருவதம் மூலம் இந்த இடைவெளியை முடிந்தவரை நிரப்பிக்கொள்ள எத்தனிக்கின்றேன்.

கேள்வி: அரசியல், குடும்பம், வியாபாரம் போன்ற பரபரப்புகள் ஏற்படுத்தும் மன இறுக்கங்களிலிருந்து ஓய்வுபெற மேற்கொள்ளும் உங்கள் வழிமுறைகள் எவை?

பதில்: தீவிரமான உடற்பயிற்சி மூலமாக மன இறுக்கத்தை மிகவும் குறைக்கலாம். ஆரம்பகாலத்திலிருந்து இந்த உடற்பயிற்சி எனும் விடயத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்து வருகின்றேன். ஒரு நாள் உடற்பயிற்சி செய்ய முடியவில்லையென்றால், அந்த நாள் எனக்கு மிகவும் கஸ்டமானதொரு தினமாக அமைந்துவிடும். இதை நான் ஒரு பயிற்சியாகச் செய்துவருகிறேன். அடுத்து தொழுகையில் கிடைக்கும் மனநிம்மதியாகும். சிலவேளைகளில் சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவது கூட கஸ்டமாகிவிடும். ஆனால், தொழுகையின்போது சில விடயங்களுக்கு தீர்மானங்கள் கிடைத்தும் விடுகின்றன.

கேள்வி: இலக்கிய ஈடுபாடுகளெல்லாம் எப்படியிருக்கின்றன? அண்மையில் வாசித்த புத்தகங்கள் குறித்து சொல்லுங்கனேன்?

பதில்: அரசியலுக்கு வந்த பிறகு இலக்கிய ரசனையில் ஈடுபடுவதற்கான அவகாசம் மிகவும் குறைந்தேவிட்டது. இது பெரும் குறைதான். ஆனாலும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இயன்றவரை வாசிப்பதற்கு எத்தனிக்கின்றேன். அண்மையில் சென்னை சென்றிருந்தபோது, அடையாளம் பதிப்பக நண்பர் ஒருவரை பசீர் சேகுதாவூத் அறிமுகம் செய்து வைத்தார். அந்த நண்பரும் இலங்கை வரும்போதெல்லாம் மிகத்தெரிவு செய்து நல்ல புத்தகங்களைக் கொண்டுவந்து தருகிறார். அவைகளை வாசிக்கின்றேன். அண்மையில் புஸ்பராஜா எழுதிய ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ எனும் புத்தகத்தை வாசித்தேன். முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை ஓர் அழகிய முறைப்பாடாக அவர் எழுதியிருக்கின்றார். அது ஒரு நல்ல புத்தகம்!


(இந்தக் கட்டுரையை 24 பெப்ரவரி 2008 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

One Response to “காதல், அரசியல், திருமணம்: ஹக்கீமுடன் ஒரு கலக்கல் பேட்டி!”


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s