காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

பசீர் சேகுதாவூத்: மு.கா.வின் கலகக் குரல்! 25 ஜனவரி 2008

Filed under: சந்திப்பு — Mabrook @ 2:07 முப

color-dot.gifமப்றூக்

Basheer

யுதப்போராட்டத்தின் அகத்துக்குள் இருந்து இயங்கிய அனுபவங்களோடு, ஜனநாயக அரசியல் தளத்துக்குள் நுழைந்தவர் நமது பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத்!

அரசியல்வாதிகளில் ஒரு தரப்பார தமது துறை குறித்தே அடிப்படை அறிவற்றிருக்கும் இன்றைய நிலையில், அரசியலின் பன்மை முகம் குறித்துத் தெரிந்து கொண்ட பிறகு அதற்குள் காலெடுத்து வைத்தவர் இவர்.

பசீர், அரசியலை விஞ்ஞானமாகவும் தெரிந்து வைத்துள்ளார். அதன் உப ‘இயல்’கள் மற்றும் கோட்பாடுகள் குறித்து நிறையவே பேசுகிறார்.

தமிழ் ஆயுதப் போராட்டத்தின் நல்ல பக்கங்களால் பசீர் சேகுதாவூத் புடம்போடப்பட்டிருக்கிறார் என்பதை, அவருடன் பேசப் பேசப் புரிந்து கொள்ள முடிந்தது.

எல்லாத்துறைகளிலுமான தேடல் மற்றும் ஆழ்ந்த வாசிப்பு போன்றவைகளால், தன்னை தினம் தினம் புதுப்பித்துக் கொள்ளுமிவர் ஒரு படைப்பாளி என்பது மகிழ்சிக்குரியதொரு செய்தியாகும்.

முன்னாள் அமைச்சர், முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் என்பவை பசீரின் இன்னும் சில முகங்கள்.

மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் இலக்கியம் பேசும் ஒரு அரசியல்வாதியூடன் பேசக்கிடைத்ததில், 120 நிமிடங்களுக்கும் அதிகமான நேரம் சுவாரசியங்களோடு நீண்டு கடந்தது!

கேள்வி: அரசில் இணைந்து பிரிந்த பின்பு எதிர்க்கட்சி அரசியல் எப்படியிருக்கிறது?

பதில்: அரசாங்கத்துடன் இணையாமல் இருந்திருந்தால், மு.கா.வுடன் இந்த அரசுக்கு இருந்த கோபம் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்திருக்கும். ஆனால், சேர்ந்து பிரிந்த பின்பு அந்தக் கோபம் கோரமானதொரு வடிவை எடுத்துள்ளதையே நாம் காண்கிறௌம். எமது கட்சியின் நடவடிக்கைகளை அரசாங்கம் அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தி பல்வேறு வழிகளில் முடக்கி வருகின்றது. அரசாங்கத்தின் தீமைகளிலிருந்து கட்சியைப் பாதுகாக்கவே அரசுடன் இணைந்தோம். மக்களின் கோபத்திலிருந்து கட்சியைப் பாதுகாக்கவே ஆட்சியிலிருந்து வெளியேறினோம். இப்போது, மக்களோடு இணைந்து சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம். அரசின் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டுதான் எதிர்க்கட்சி அரசியலை நடத்த வேண்டியுள்ளது.

கேள்வி: பாங்கு சொல்வதற்கான ஒலிபெருக்கிக் கட்டுப்பாடு, முஸ்லிம்களின் காணி   அபகரிப்பு, பசு கொல்வதற்கான தடை ஆகியவைகளுக்கெதிராக கட்சியின் இப்போதைய நடவடிக்கை என்ன?

பதில்: அரசாங்கத்துடன் நாம் இணைந்திருந்த போது, அரசின் முஸ்லிம்களுக்குப் பாதகமான எவ்வித நடவடிக்கைகளுக்கு எதிராகவூம் எம்மால் முழுமையாகக் குரல் கொடுக்க முடியாமல் போயிற்று. ஆனால், பிரிந்து போன பிறகு, ஆகக் குறைந்தது எதிர்க் குரைலையாவது கொடுக்க முடிகிறது. இவ்வாறு நாம் எதிராகக் குரல் கொடுக்கும் போது, அது அரசுடன் இணைந்திருக்கும் முஸ்லிம் அமைச்சர்களைச் சங்கடப்படுத்தும். முஸ்லிம் காங்கிரசின் இந்த எதிர் நடவடிக்கையால், மக்கள் அக்கட்சியூடன் மேலும், மேலும் இணைந்து போகக் கூடும் எனும் காரணத்தைக் காட்டியாவது, முஸ்லிம்களுக்கெதிராக இவ்வாறான நடவடிக்கைகளை புரிய வேண்டாம் என அரசாங்கத்தை அவர்கள் கோரலாம்! அழுத்தங்களைக் கொடுக்கலாம்!

கேள்வி: கட்சி ஒரு சங்கடமான நிலையில் இருந்தபோது, முன்னாள் தேசிய அமைப்பாளர் பாயிஸ் மீதான நடவடிக்கையை சற்று தாமதித்து எடுத்திருக்கலாம் என்கின்றனர் ஒரு தரப்பார். உங்கள் கருத்து என்ன?

Hakeem

பதில்: கட்சியின் அதி உயர் பீடமே பாயிஸ் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைக்கையினை எடுத்திருந்தது. அம்முடிவு எடுக்கப்பட்ட கூட்டத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. அப்போது நான் வெளிநாட்டிலிருந்தேன். அதில் நான் கலந்து கொண்டிருந்தால், பல நியாயங்களைக் கூறி, தற்போதைய நிலையைத் தடுத்திருக்க முடியூம் எனும் நம்பிக்கை எனக்கிருந்தது.  தலைவர் ஹக்கீமிடமும் எனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தேன். இரண்டு அரசியல்வாதிகளுக்கிடையிலான பிரச்சினையாக அது இருந்தபோதும், முஸ்லிம் சமூகத்தின் இரு பிரதேசக் கூறுகளின் மக்களுக்கிடைப்பட்ட பிரச்சினையாகவே குறித்த விடயம் இனங்காணப்பட்டது. எனவே, மு.காங்கிரசும், அதன் தலைமையூம் அதில் மத்தியஸ்தம் வகிக்கும் பாத்திரத்தையே வகித்திருக்க வேண்டும் எனும் அபிப்பிராயத்தை நான் கொண்டிருந்தேன். காரணம், இரண்டு தரப்பு மக்களுக்கும் பொதுவான கட்சியாக மு.காங்கிரஸ் இருக்கிறது. அவ்வாறு கட்சி செயற்பட்டிருந்தால் இரு பகுதியினருக்குமிடையில் இருந்த பிணக்கை தீர்த்து வைத்திருக்கலாம். மேலும், இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவினை விடவும், அது சிறப்பானதாகவும் இருந்திருக்கும்.

கேள்வி: கிட்டத்தட்ட 11 பா.உ.களுடன் இருந்த மு.காங்கிரஸ், நான்கு பேர் கொண்டதாய் நலிந்து போகக் காரணம் என்ன?

பதில்: இதற்கு பல காரணங்களுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்படுவது ஒரு காரணம்: அதாவது, ஆளுங்கட்சியூடன் முஸ்லிம் காங்கிரஸ் சேரும் வேளைகளில், ஒரு சில அமைச்சுப் பதவிகளை மட்டுமே பெற முடிந்தது. குறிப்பாக அமைச்சரவை அந்தஷ்துள்ள பதவியென்றால் ஒன்றை மட்டுமே பெறக்கூடிய நிலைமையொன்று இருக்கிறது. எனவ, கட்சிக்குள் இருந்து இவ்வாறான பதவிகளைப் பெற முடியாதவர்கள் மு.காங்கிரசோடு தம்மை முரண்பட்டவர்களாகக் காட்டிக் கொள்வதன் மூலம், வலிந்து ஒரு பேரம் பேசும் நிலையை அரசுடன் உருவாக்கிக் கொண்டு பிரிந்து செல்கிறார்கள்.

அடுத்த காரணம், அரசாங்கத்துடன் இணையூம் போது, கட்சியின் உயர் பதவிகளிலுள்ளோர் எவ்விதமான அமைச்சுப் பதவிகளையூம் பெறாமல் ஏனையோருக்கு அந்த சந்தர்ப்பங்களை வழங்க கூடிய வழிவகை, கட்சியின் அமைப்பில் இல்லாமை: உதாரணமாக ஜே.வி.பி. போன்ற கட்சிகள் இவ்வாறுதான் நடந்து கொள்கின்றன. அவ்வாறு செயற்படும் போது, கட்சியின் ஏனைய பிரதிநிதிகளுக்கு அமைச்சுப் பதவியை பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும். மட்டுமன்றி, கட்சியின் உயர் பதவிகளிலுள்ளோர் வெளியிலிருந்து கொண்டே தமது அமைச்சர்களை இயக்குகின்றதொரு நிலை ஏற்படுவதோடு, தமது சொல்லுக்கு ஏனையோர் கட்டுப்படும் தன்மையொன்றையூம் உருவாக்கலாம். ஆனால், மு.கா.வில் இந்நிலை இல்லை. கட்சியின் செயற்பாடுகளை வரையறுத்ததிலுள்ள குறைபாடுகளே இந்நிலைக்குக் காரணமாகும்.

மேற்சொன்னவை போன்றவைகளால்தான் கட்சி தனது பிரதிநிதிகளை இழக்கும் நிலை உருவாயிற்று!

கேள்வி: மட்டக்களப்பு மாவட்டத்தில் அமீர் அலியை வெளியிலும், ஹிஸ்புல்லாவை உள்ளேயுமாக எதிர்வரும் தேர்தலில் எப்படி முகம் கொள்ளப் போகிறீர்கள்?

பதில்: ஹிஸ்புல்லா காத்தான்குடியில் அதிக வாக்குகளைக் கொண்டவர். ஆனால், மு.கா.வை எதிர்த்து கடந்த முறை அவரால் வெற்றி பெற முடியவில்லை. எனவேதான், மு.காங்கிரசை விட்டும் பிரிந்த அவர், மீண்டும் அதனோடு இணைந்து கொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தைத் தவற விட்ட சமயங்களின் போது மட்டும், மு.கா.வில் போட்டியிடாமல் ஹிஸ்புல்லாவால் வெற்றிபெற முடிந்தது.

ஆனால், அமீரலியின் கல்குடாத் தொகுதியில் அவர் ஒரு பிரபலமான நபராக இருக்கவில்லை. காங்கிரசில் போட்டியிட்டதாலேயே அவர் வென்றார். இப்போது அவர் தனது பிரதேசத்தை அபிவிருத்தி அரசியலுக்குட்படுத்தி அதனூடாக அம்மக்களின் வாக்குகளைப் பெற்று, எதிர்காலத்தில் வெற்றிபெறலாம் என நம்பலாம். மேலும், தமிழ் மக்கள் எதிர்காலத்தில் தமது பிரதிநிதித்துவத்தை முழுமையாகப் பெறமுடியாமல் போகலாம் என்றும், அச்சந்தர்ப்பத்தில் தனது வெற்றிக்கான சாத்தியம் ஏற்படும் என்றும் அமீர் நினைக்கலாம்.

ஆனால், கடந்த கால வரலாறு யாதெனில், முஸ்லிம் காங்கிரசில் முக்கிய பதவிகளை வகித்த, அம்மாவட்டத்தின் மக்களால் நன்கு அறியப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் முகைதீன் அப்துல் காதர் கூட (இவரும் அமீரலியின் ஊரைச் சேர்ந்தவர்தான்) காங்கிரசிலிந்து பிரிந்து தேர்தலில் போட்டியிட்டபோது, அவரால் அங்கு 06 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது! (ஆக,  மக்களே தோற்கடித்து விடுவார்கள் என்று கூற வருகிறீர்களா பசீர்?)

கேள்வி: கட்சி, மேலும் உடைவதைத் தவிர்க்கவே அரசில் இணைந்ததாக ஹக்கீம் கூறுகிறார். ஆனால், தலைவரின் அந்த கூற்றோடு உங்களால் உடன்பட முடியாது என நீங்கள் கூறியுள்ளீர்கள். சொல்லுங்கள், தலைவருடன் வேறு எவ்வகையிலெல்லாம் முரண்படுகிறீர்கள்?

பதில்: தலைவருடன் எனக்கு எந்தவிதமான முரண்பாடுகளுமில்லை. ஆனால், கட்சியை விமர்சன அடிப்படையில் வழிநடத்துவதுதான் உசிதமானதென நான் நம்புகிறேன். கட்சி போகும் போக்கில் அதனைத் தள்ளிக் கொண்டு போகும் ஒரு நபராக என்னால் இருக்க முடியாது. காரணம், என்னுடைய அரசியல் பிரவேசம் வித்தியாசமானது. விமர்சன அடிப்படையில் அரசியலில் வளந்தவன் நான்! மேலும், மு.காங்கிரசின் இன்றைய செயல்படு தன்மையில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென நான் விரும்புகிறேன். உதாரணமாக, கட்சியின் அமைப்பு வடிவத்தில் மாற்றங்களை செய்ய வேண்டும். தற்போதுள்ளதோ, தோல்வியடைந்த ஓர் அமைப்பு முறையாகும்.

முன்பு பிரமுகர்களையே உருவாக்கிய எமது கட்சி, தற்போது பிரமுகர்களோடு இணைந்து முஸ்லிம்களின் அரசியலைப் பலப்படுத்த வேண்டியதொரு நிலையிலுள்ளது. எனவே, பிரிந்து போனவர்களுடன் பேச வேண்டிய ஓர் அவசியம் உள்ளதாகவூம் நான் உணர்கிறேன். இவைகள் குறித்து தலைவருடனும் பேசியுள்ளேன்!

கேள்வி: மு.கா.வின் யாப்பு திருத்தங்களுக்குள்ளாக வேண்டுமென்பது பலரின் அபிப்பிராயம். அவ்வாறாயின் எப்படியான மாற்றங்கள் நிகழ வேண்டும்?

பதில்: இந்தக் கேள்வியின் தொனி என்னவென்றால், கட்சியின் தலைமைத்துவத்தில் என்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று கேட்பதாகவே நான் கருதுகிறேன். முஸ்லிம்களின் அரசியலைப் பொறுத்தவரையில் அது மிக நீண்ட காலமாக தலைமைத்துவத்தில் தங்கியிருக்கும் கட்சியினையே கொண்டுள்ளது. எனவே, ஒரு கூட்டுத் தலைமைத்துவத்தையோ அல்லது அதற்கு ஒப்பானதொன்றையே மு.கா.வூக்குள் ஏற்படுத்துவது இப்போதைக்கு ஏற்படுத்தினால், அது முந்தி எடுக்கப்பட்டதொரு நடவடிக்கையாக அமைந்து விடும். கூட்டுத்தலைமைத்துவத்துக்கு முஸ்லிம் அரசியல் இன்னும் உறுதிப்படவில்லை. ஆனால், ஒரு கூட்டு முன்னணி அமைக்கப்படும் போது, அதில் இந்தக் கூட்டுத் தலைமைத்துவத்தை சாத்தியப்படுத்திப் பார்க்கலாம்.

மு.காங்கிரஸைப் பொறுத்தவரை அதில் ஒரு தலைமைத்துவமும், ஒரு அதிஉயர் பீடமுமே இருக்க வேண்டும். இப்போதைக்குப் பலதலைமைத்துவம் வந்தால், கட்சி சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து போகும் நிலையேற்பட்டு விடும்! ஆனாலும், ஒரு நபர் (தலைவர்) முடிவெடுக்கும் தன்மையிலிருந்து மு.கா. கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வருகிறது.

கேள்வி: கட்சியிலிருந்து பிரிந்தோரை மீண்டும் இணைப்பது என்றால், அதற்கு உங்களிடமுள்ள தனிப்பட்ட திட்டமென்ன?

பதில்: உண்மையாகவே, எல்லோரையும் சேர்ந்து கொள்ளும் படி, அழைப்பு விடுக்கவே விரும்புகிறேன். ஆனால், தேர்தலொன்று வந்துவிட்டால் தானாகவே இவர்கள் வருவார்கள், வரவும் விரும்புவார்கள். இருந்தாலும் அது சந்தர்ப்வாத அரசியலாகப் போய்விடும். எனவே, தேர்தலை கருத்திற் கொள்ளாமல் முஸ்லிம்களின் பிரச்சினைகளை முன்வைத்து எம்முடன் இணைபவர்களை நாம் சேர்த்துக் கொள்ளத் தயாராகவே உள்ளோம். மு.கா.வின் நடவடிக்கைகளில் விமர்சனங்கள் இருக்கலாம், அது வேறுவிடயம்! ஆனால், ரஊப் ஹக்கீமின் தலைமையின் கீழ் இணைய மாட்டோம் என்று கூறுவதையெல்லாம் ஓர் அரசியல் காரணமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது!

(கவனிக்க: சேர்ந்தால் இணைத்துக் கொள்வோம் என்பதைத் தவிர, சேர்த்துக் கொள்வதற்கான திட்டங்கள் குறித்து இந்தப் பதிலில் பேசப்படவேயில்லை)

கேள்வி: தலைவருக்கு நீங்கள் விசுவாசமுள்ளவர் என்பதால்தான் மூன்று முறை தேசியப் பட்டியல் பா.உ.வாக நீங்கள் நியமிக்கப்பட்டுள்ளதாய் கூறப்படுகிறது. உங்கள் விசுவாசம் குறித்து சொல்லுங்களேன்?

பதில்: தலைமைத்துவத்துக்கான விசுவாசம் என்பது, தலைவர் விடுகின்ற பிழைகள் எல்லாவற்றுக்கும் பின்னால் போய்க் கொண்டிருத்தல் என்று அர்த்தமல்ல! தலைமைத்துவம் மற்றும் அதிஉயர் பீடத்துடன் இணைந்து ஒரு தீர்மானம் எடுக்கும் விடயத்தில் தீர்க்கமான பங்களிப்பினையே நான் வழங்கி வருகிறேன்.

இம்முறை எனக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டமைக்கு காரணம், விசுவாசமென்றில்லை. என்னோடு போட்டியிட்டு வென்றை அமீரலியை விடவும் 800 வாக்குகளையே நான் குறைவாகப் பெற்றேன். எனது தொகுதி மட்டக்களப்பு. அங்கு நான் 19 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவேளை, அமீர் 1000 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். அந்த அடிப்படையில், மட்டக்களப்பு தொகுதி மக்கள் தலைவருடன் பேரம்பேசியே இந்த பதவியை எனக்குப் பெற்றுத்தந்தனர்.

இரண்டாவது முறை கிடைத்த தேசியப்பட்டியலானது, முதலாவது முறை தியாகம் செய்தவர்களுக்காக வழங்கப்பட்டதாகவே அமைந்தது. முதலாவது முறை தேசியப்பட்டியல் நியமனத்தை நான் ஹக்கீமிடம் கேட்டுப் பெற்றிருந்தேன். அப்போது, இரட்டைத் தலைமைத்துவம் இருந்தது. அதனால், பேரியல் அம்மையாரிடமும் அந்த நியமனத்தை எனக்கு வழங்குவதற்கான சம்மதத்தை ஹக்கீம் பெற்றிருந்தார். ஆனால், விசுவாசம் பார்த்து தேசியப்பட்டியல் வழங்கும் நடைமுறையும் ஜனநாயக அரசியலில் உள்ளதுதானே!

கேள்வி: அம்பாரை மாவட்டத்தில் சிங்களவர்களால் காணி அபகரிக்கப்படுவது குறித்து இப்போது உரத்து சத்தமிடுகிறீர்கள். ஆனால், நீங்கள் உருவாக்கிய ரணில் அரசாங்கத்தின் போதும் தீக்கவாப்பிய பிரச்சினை இருந்ததுதானே. ஏன் நீங்கள் அப்போது அதைத் தீர்க்க முயலவில்லை?

Hakeem, Hasan Ali and Basheer

பதில்: ஐக்கிய தேசியக் கட்சியூடன் அப்போது நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பலவிடயங்களை அவர்கள் நிறைவேற்றவில்லை என்பதை விமர்சன ரீதியாக நாம் ஒத்துக் கொள்கிறௌம். அன்றைய ஆட்சியின் போதும் பல்வேறு விடயங்களுக்காக நாம் குரல் கொடுத்தோம். ஆனால், வெற்றியடையவில்லை. அப்போதைய மோதல் நிறுத்த ஒப்பந்தம், சமாதானப் பேச்சுவார்த்தைகள் போன்றவைகளில் கூட, சமதரப்பாக முஸ்லிம்கள் கருத்தில் எடுக்கப்படவேயில்லை. தமிழர்களுடனான தமது சமரசத்துக்கு, முஸ்லிம்களின் அப்போதைய கோரிக்கைகள் ஊறு விளைவித்து விடுமோ என அஞ்சி அன்றைய அரசாங்கம் அவைகளைக் கிடப்பில் போட்டுவிட்டது. அந்தவகையில், சில விடயங்களை செய்ய முடியாமல்தான் போய்விட்டதென்பதை முஸ்லிம் காங்கிரஸ் ஒத்துக்கொள்கிறது!

கேள்வி: அப்போது மட்டும் ஏன் நீங்கள் ஆட்சியை விட்டு வெளியேறவில்லை?

பதில்: இலங்கையில் சமாதான செயற்பாடுகள் இடம்பெற்ற காலமது! சர்வதேசமும் அதை அவதானித்துக் கொண்டிருந்தது. அந்த வேளையில் ஆட்சியைக் கவிழ்ப்பதன் மூலம், சமாதானச் செயற்பாட்டைக் குழப்பியவர்கள் என்கின்ற அவப்பெயரை முஸ்லிம் சமூகத்துக்குப் பெற்றுக் கொடுக்க நாம் விரும்பவில்லை. மட்டுமன்றி, ஜனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவூம், பிரதமர் வேறொரு தரப்பைச் சேர்ந்தவராகவும் இருந்ததினால் அப்போது சில விடயங்களை ஐ.தே.க.வினால் செய்ய முடியவில்லை. ஆனாலும், ரணிலுக்கு எங்கள் தரப்பிலிருந்து சில விட்டுக் கொடுப்புகள் இருந்தன என்கின்ற உண்மையையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது!

கேள்வி: உள்ளுராட்சி மன்றங்களில் உங்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட அசல் வேட்பாளர்கள் பதவிக்கு வரமுடியாமல் இருந்த நிலையை மாற்றுவதற்காகவே, நீங்கள் இந்த அரசுடன் சேர்ந்ததாக காத்தான்குடியில் உங்கள் தலைவர் பேசினார். இப்போது தேவை முடிந்து விட்டதால் அரச உறவை கைகழுவி விட்டீர்கள். இது நயவஞ்சகமில்லையா?

பதில்: உள்ளுராட்சி சபைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட உடனேயே நாங்கள் வெளியேறவில்லையே! உண்மையாகவே அதற்குப் பிறகு புதிய சூழ்நிலைகளும் பிரச்சினைகளும் உருவாகின. வரவூ – செலவூத் திட்ட இரண்டாவது வாக்கெடுப்புக்கு முன்னர், நாம் எமது பிரச்சினைகள் குறித்து அரசுடன் பேசி விட்டே சார்பாக வாக்களித்தோம். அதன் பிறகும் சமூகம் தொடர்பான பிரச்சினைகள் தோன்றின. பின்னர்தான் வெளியேறினோம். உள்ளுராட்சி சபைகளில் எமது கட்சிக்கிருந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்தார்கள் என்பது உண்மைதான். அதற்காக எமது சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து அவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டபோது, அதை நாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது!

கேள்வி: எழுத்து மூலமான உடன்படிக்கைகள் எதுவூமில்லாமல் இந்த அரசுடன் உங்கள் கட்சி இணைந்ததை புத்திசாதுர்யமற்ற நடவடிக்கை என்கிறேன். உங்கள் பதில் என்ன?

பதில்: சில கோரிக்கைகளை எழுத்து மூலமாக நாம் அரசாங்கத்திடம் கொடுத்திருந்தோம். அவைகளை ஓர் ஒப்பந்தமாக இல்லாமல், நிறைவேற்றித் தருவதாக வாய்மூல வாக்குறுதியொன்றை அரசு வழங்கியது. மேலும், ஓப்பந்தமொன்றைச் செய்வதற்கான வாய்ப்பும் அந்த இணைவில் இருக்கவில்லை. 17 ஐக்கிய தேசிய கட்சி பா.உறுப்பினர்கள் இணைந்த நிலையில்இ பேரம் பேசும் சக்தி எம்மிடமிருக்கவில்லை! சிலவேளை, புத்திசாதுர்யமற்ற ஒரு விடயமாக அது இருந்திருக்கலாம். ஆனால், எழுத்து மூலமான ஒப்பந்தத்தை வற்புறுத்தியிருந்தால், அரசாங்கத்துடன் இணையக்கூடிய முடிவொன்றை அன்று எட்டியிருக்க முடியாது!

கேள்வி: மு.கா. தலைவரின் பலம் – பலவீனம் பற்றிப் பேசுங்களேன்?

பதில்: எல்லோருக்கும் பலம் – பலவீனம் இருக்கின்றன! அஷ்ரப் இருந்த இடத்தைஇ ஹக்கீம் நிரப்புவதை வைத்தே பலம், பலவீனம் என்பதை பார்க்கிறார்கள். ஒரு உதாரணத்துக்கு இப்படிச் சொல்லலாம். அஷ்ரப் மு.கா.வூக்கு வாப்பா (தந்தை), ஹக்கீம் சாச்சா (சிறிய தந்தை அல்லது சித்தப்பா)! இதை நல்ல அரசியல் மொழியில் சொன்னால் அஷ்ரப் – ஸ்தாபகத்தலைவர், ஹக்கீம் – அதற்கடுத்து வந்தவர். சமரசத் தலைவர் என்றும் சொல்லலாம். இந்த யதார்த்தத்தை உள்வாங்கிக் கொண்டே நாம் நாம் ஹக்கீமுடன் செயற்பட வேண்டும்.

கேள்வி: வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினையை, பூகோள ரீதியில் அப்பகுதிக்கு முற்றிலும் மாற்றமான பிரதேசத்திலிருந்து வந்த ஹக்கீமால் புரிந்து கொள்ளவே முடியாது என்கிறார் அமைச்சர் அதாஉல்லா. கிழக்கு வாசி என்கின்ற ரீதியில் உங்கள் நிலைப்பாடு குறித்து அறிய ஆசை?

பதில்: அப்படியொரு விமர்சனம் இருக்கிறதுதான். ஆனால், என்னுடைய பார்வையில் இன்று வடக்குஇ கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பாக தெரிந்து வைத்திருப்பதில் அப்பகுதி அரசியல் தலைவர்களை விடஇ ஹக்கீம் எவ்விதத்திலும் குறித்து மதிப்பிடக் கூடியவர் அல்லர்! முட்டுமன்றி தற்போதுள்ளவர்களை விடவூம் ரஊப் ஹக்கீம், முஸ்லிம்களின் பிரச்சினைகளை தேசிய, சர்வதேச அரங்குகளில் சொன்னதிலும், சொல்வதிலும் மேலோங்கியூள்ளார் என்பதே எனது அபிப்பிராயம்.

கேள்வி: அமைச்சர் அமீரலி மட்டக்களப்பில் மேற்கொள்ளும் அபிவிருத்தி நிகழ்வூகளின் போதான விழாக்களுக்கு பலமுறை உங்களை அதிதியாக அழைத்தும் நீங்கள் செல்லவில்லையாமே. மக்கள் நலன் குறித்த நடவடிக்கைகளின் போது, இப்படி அரசியல் குரோதம் பார்க்கலாமா?

பதில்: நானும் அமீரலியூம் வேறுபட்ட இரண்டு அரசியல் முகாம்களிலுள்ளவர்கள். நடைபெற்ற கூட்டங்களில் எனக்கு சரியான அந்தஸ்து வழங்கப்படக் கூடிய நிலை அங்கு இருக்கவில்லை. சிலவேளை, நான் அக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது, உரிய மரியாதை கிடைத்திருக்கா விட்டால், எனது ஆதரவாளர்கள் குழம்பியிருப்பார்கள். எனவே, அவ்வாறான குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டே அக்கூட்டங்களில் நான் கலந்து கொள்ளவில்லை. அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது மாற்றாந்தாய் மனப்பான்மையூடன் நடந்துவிட்டு, அவர்களின் கூட்டங்களுக்கு அழைத்தால் எப்படிச் செல்வது? தனி மனித உணர்வூ அடிப்படையில் இதைப் பார்க்க வேண்டும்!

கேள்வி: மோதல் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தானபோது, மு.காங்கிரஸ் மௌனம் காத்தது. பின்னர் அது முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானது என்றது. சரி, முஸ்லிம்களை கவனத்திலெடுக்காத அந்த ஒப்பந்தம் இப்போது ரத்தாகி விட்டதே, இது குறித்து உங்கள் கட்சியினரின் மன உணர்வு என்ன?

பதில்: முஸ்லிம்களின் அபிலாசைகளை அந்த ஒப்பந்தம் உள்ளடக்கியிருக்வில்லை என்பது உண்மைதான். பிற்பட்ட காலங்களில் அந்த ஒப்பந்தத்தில் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டுமென மு.கா. குரல் கொடுத்திருந்தது! ஆனால், இந்த ஒப்பந்தத்தை அரசாங்கம் ரத்துசெய்து விட்டதால் முஸ்லிம்களுக்கு எந்தவொரு நன்மையூம் வந்து விடப்போவதில்லை. அதுவொரு மகிழ்சிகரமான விடயமுமல்ல! சமாதானம்தான் மக்களுக்குப் பாதுகாப்பானது எனும் அடிப்படையில்தான் எம்மால் சிந்திக்க முடிகிறது!

கேள்வி: கட்சிக்குள் இருப்பவர்களில் தலைவர் ஹக்கீமுக்கு இணையானவர் பசீர் சேகுதாவூத் என்று, நமக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது அமைச்சர் பாயிஸ் முன்பொருமுறை உங்களைப் பற்றி சிலாகித்திருந்தார். ஒரு உறைக்குள் இவ்வாறு இரு வாட்கள் இருப்பதன் அசௌகரியங்கள் குறித்து சொல்லுங்களேன்?

பதில்: எந்தவகையிலும் நான், மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு சமாந்தரமான தலைமைத்துவப் பண்புகளைக் கொண்வனல்லன்! அவர் மும்மொழித் திறனுடையவர். அவருக்கிணையாக அதை என்னால் செய்ய முடியாது! தேவைப்பட்டால் கோபப்படவும், கோபம் இருக்கும் போதும் பொறுமையுடன் பணிந்து போகவும் கூடியதொரு மனநிலை அவரிடம் தாராளமாய் இருக்கிறது. தலைமைத்துவப் பண்பில் ‘பிரச்சினைகளைச் சமாளிக்கும்’ திறன் முக்கியமானது. அதற்கு இந்த மனநிலை மிகவும் அவசியமானதாகும். ஆனால், இது என்னிடமில்லை. நான் ஒரு கலகக்காரனாகவே இந்த அரசியலில் இருந்து வந்திருக்கிறேன். ஒரு ஜனநாயகக் கட்சிக்கு தலைமை தாங்கும் பண்புகள் என்னிடமில்லை. ஆக, ஒரு உறையில் இரண்டு வாட்களல்ல. ஒவ்வொரு உறையிலும் ஒவ்வொரு வாள்!

கேள்வி: ஒரு அரசியல் ஜோக் சொல்லுங்களேன்!

பதில்: சமூக மாற்றங்களை ஞானிகள் மட்டுமல்ல, கோமாளிகளும் செய்கிறார்கள்!

(பேட்டி முடிந்து எழுந்தபோது – எமக்குள் உரையாடல் நிகழ்ந்த இரு மணித்துளிகளுக்குள், அவர் புகைத்து முடித்த ஏழு சிகரட்கள் அருகிலிருந்த ‘ஆஷ்ட்ரே’க்குள் எரிந்து கிடந்தன!)


(இந்தக் கட்டுரையை 20 ஜனவரி 2008 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s