காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

அட்டாளைச்சேனை பிரதேச கலாசார விழா:கோடைகளுக்குப் பின்னரான நாளின் மழை! 3 ஜனவரி 2008

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 3:46 பிப

color-dot.gifமப்றூக்

baner1.jpgமாபெரும் கலாசார விழாவொன்றினை niyas.jpgவெற்றிகரமாகச் நடத்தி முடித்து விட்டு, தனக்கும் அதற்கும் சம்மந்தம் எதுவும் இல்லாதது மாதிரி அதற்கடுத்த நாட்களில் தனது அன்றாடக் காரியாலயக் கடமைகளில் மிகச்சாதராணமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் யூ.எல். நியாஸ்! விழா பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பிரதேச செயலகம் சென்று செயலாளர் நியாஸின் அறைக் கதவைத் தட்ட, சிரித்த முகத்துடன் ‘வாங்க’ என்றார்!

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் கலை, இலக்கியவாதிகளினது மிக நீண்ட நாள் கனவாக இருந்த இந்த விழா ஒரு பெருநாள் மாதிரி நடந்து முடிந்ததில் எல்லோருக்கும் இரட்டிப்பு மகிழ்சி! கடந்த நொவம்பர் மாதம் 25 ஆம் திகதி மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாதான் இப்பகுதியில் இடம்பெற்ற இவ்வாறான முதல் கலாசார விழா என்கிறார்கள் நமது மூத்த கலைஞர்கள்.

பிரதேச கலாசார விழாக்களை நடத்துவதற்காக அரசாங்கம் வருடமொன்றுக்கு வழங்கும் பணம் வெறும் 15 ஆயிரம் ரூபாய் மட்டும்தான்! பெரும் விழாவொன்றின் செலவுக்காக இப்படியொரு சிறிய தொகையை ஒதுக்கும் அரசாங்கத்தை என்ன சொல்லித் திட்டுவது என்று கோபப்படுகிறார் சிரேஷ்ட பத்திரிகையாளர் ஒருவர்! ஆனால், நடத்தி முடிக்கப்பட்ட விழாவுக்கான செலவோ கிட்டத்தட்ட 08 லட்சம் ரூபாவாகும்! கொடையாளர்களிடமிருந்தும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடமிருந்துமே இந்தத் தொகை பெறப்பட்டுள்ளது.

“யார் வந்தாலும் வராவிட்டாலும் விழாவை பிற்பகல் 3.30 மணிக்குmuslim-girls.jpg ஆரம்பித்தே ஆகவேண்டும்” என்று பிரதேச செயலாளர் நியாஸ் கறாராக சொல்லியிருந்தார். ஆனால்,  5.00 மணிக்குத்தான் நிகழ்வுகள் ஆரம்பமாயின. நேரந்தவறித் தவறியே பழகிப்போன நம்மவர்களை ஒரேநாளில் திருத்திவிடலாமென்று நியாஸ் எந்த தைரியத்தில் நினைத்தாரோ தெரியவில்லை! ஆனால், பிந்தி வந்தாலும் சுமார் 02 ஆயித்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் நிகழ்வுகளைக் காணக் கூடினர்.

ஊரில் ஒரு விழா என்றால், அதிதிகளில் ஒருவராக அரசியல்வாதியொருவர் கலந்து கொள்வதே மரபாகிப்போன இப்பகுதியில், எந்தவொரு அரசியல் பிரமுகரும் அவ்வாறு விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை. கலாசார அபிவிருத்தி திணைக்களமும், அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய இந்த விழா, பிரதேச செயலாளர் நியாஸின் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர கலந்து கொண்டார், சிறப்பித்தார்!

ga.jpgஅட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் ஐந்து பிரதான கிராமங்கள் அமைந்துள்ளன. அட்டாளைச்சேனை, பாலமுனை, திராய்க்கேணி, ஒலுவில் மற்றும் தீகவாயிய என்பன அவைகளாகும். இக்கிராமங்களில் திராய்க்கேணி இந்து மக்களையும், தீகவாபிய பௌத்தர்களையும் பெரும்பான்மையாகக் கொண்டவை. ஏனையவை முஸ்லிம் மக்களை அதிகளவாகக் கொண்ட பிரதேசங்களாகும்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக வளவினுள் அமைக்கப்பட்டிருந்த மேடையில் விழா நடைபெற்றது. மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் முஸ்லிம் பயிற்சி மாணவிகள் வரவேற்பு கீதமிசைத்தனர். அதைத் தொடர்ந்து பரதம் மற்றும் சிங்கள நாட்டியங்கள் வரவேற்பு நடனங்களாக மேடையேறின. பிற மதத்தவர்களின் இவ்வாறான கலை நிகழ்வுகளை தமது பகுதிகளில் நேரடியாகப் பார்த்தறியாத மக்களுக்கு, இவை ஆச்சரியங்கள் நிறைந்த மகிழ்சியைக் கொடுத்திருக்க வேண்டும். அவர்களின் நீண்ட கரகோசங்கள் மூலமாகப் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது!

பல்வேறு துறைகளிலும் புகழ்பெற்று விளங்கிய இப்பிரதேசத்தைச் சேர்ந்த பலர் விழாவில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வுதான் விழாவின் மகுடமாகக் கருதப்பட்டது. அதிலும் மூத்தோர்களை ஒரு பிரிவாகவும், இளையோர்களை வேறோர் பிரிவாகவும் வகைப்படுத்திப் பாராட்டியமையானது சிறப்பாக அமைந்திருந்தது! ஆனால், இளையோர்களைக் கௌரவித்த அரங்கில், 50 வயது தாண்டிய ஒருவரைக் கொண்டு வந்து இருத்தி, இளையவர் என்ற கோதாவின் கீழ் அவருக்கும் பாராட்டு வழங்கி கௌரவித்தமையானது கவுண்டமனியின் கோமாளித்தனத்துக்கு சற்றும் குறைவில்லாததொரு விடயமாகவே நமக்குப்பட்டது! இதைத் தவிர்த்தேயிருக்கலாம்!baratham.jpg

கவின்கலை நிகழ்வுகளும், குழு மற்றும் ஓரங்க நாடகங்களும் விழாவை அழகுபடுத்தியிருந்தாலும் சில ஓரங்க நாடகங்கள் அறுவையாக அமைந்தன. அதிபர் முகம்மட் கதை, வசனம் எழுதி நெறிப்படுத்திய ஆலங்குளம் பாடசாலை மாணவர்களின் நாடகம் அனைவரின் பாராட்டினையும் பெற்றுச்சென்றது. மேலும், பாரம்பரிய கலாசாரங்களைச் சித்தரிக்கும் வாள்வீச்சு, தீப்பந்தம் வீசுதல் போன்ற நிகழ்வுகளும் கவனங்களை ஈர்த்தன!

ஓரங்க நாடகங்களை வழங்கியவர்களில் ஒருவரைத் தவிர வேறெவரும்  பாத்திரங்களுக்குப் பொருத்தமான மாற்றங்களைக் குரலில் கொண்டுவர முயற்சிக்கவேயில்லை. இதில் ஆகப்பெரிய கொடுமை என்னவென்றால், பெண் பாத்திரத்தைக்கூட அந்த ஓரங்க நாடகக்காரர்கள் தமது ஆண்குரலிலேயே பேசி நடித்தமைதான்! இறுதியாக இடம்பெற்ற ‘ஐந்து ரூபாய் மட்டும்’ என்கிற தனியாள் நாடகம் சிறப்பாக அமைந்திருந்தது.

அதிகாலை 2.00 மணிவரை நிகழ்வுகள் இடம்பெற்றன. பார்வையாளர்களில் அதிகமானோர் இறுதிவரை இருந்து சென்றமை குறிப்பிடத்தக்கது. விழாவில் கலந்து கொண்ட சுமார் 1500 விருந்தினர்களுக்கு சத்தமேயில்லாமல் இரவு உணவு பரிமாறப்பட்டது. அந்தப் பணியைச் செவ்வனே செய்து முடித்த குழுவினரின் ஏற்பாட்டு நாகரீகம் பாராட்டத்தக்கதாகும்.

பிரதேச செயலக ஊழியர்களின் பணி இவ்விழா தொடர்பில் குறிப்பிடத்தக்கது. ஆனால், சிலர் வெளியாட்களாக இருந்தே அதிகளவு பங்களிப்பை வழங்கினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆசுகவி அன்புடீன். இலக்கியத்துறையில் மட்டுமன்றி அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் வரலாறு குறித்தும் ஆழமான அறிவினைக் கொண்டுள்ள அன்புடீன், இவ்விழா தொடர்பில் ஆற்றிய, சேவை அடிப்படையிலான தனி மனித உழைப்பானது நன்றிக்கும் பாராட்டுகளுக்கும் உரியன!

honered-artists.jpgவிழாவின் இன்னுமொரு இனிய அனுபவம், கவிஞர் சோலைக்கிளியின் கவிதை நேரமாகும்! சோலைக்கிளி மேடையில் கவிதை சொல்லக் கேட்டது பலருக்கு முதற்தடைவை! குறியீடுகளும் படிமங்களும் நிறைந்த அவரின் கவிதைகள், காதுவழி நுகர்வாளர்களுக்கு விளங்கிக் கொள்ள கடினமானதாகவே இருந்திருக்கும்! மட்டுமன்றி, தனது கவிதை சொல்லும் பாணியிலும் கவிஞர் கவனம் செலுத்த வேண்டும். நிறுத்தியேயிருக்க வேண்டியதோர் புள்ளி கடந்தும், சோலைக்கிளி தொடர்ந்தமையானது அவரின் கவிதை நேரத்தில் கடுமையானதோர் தொய்வை ஏற்படுத்தியிருந்தது.

விழாவின் வெற்றிக்கு பிரதேச செயலாளர் நியாஸின் அனுபவங்களும், அவரின் ஊடகத்துறை அறிவும் பக்கபலமாக அமைந்திருந்திருந்ததைக் காணக்கிடைத்தது. இவர் ஒரு பத்திரிகைக்காரர் என்பது இங்கு அடிக்கோடிட்டு அடையாளப்படுத்த வேண்டியதொரு விடயமாகும்.

சிறப்பு மலரொன்றும் விழாவன்று வெளியிடப்பட்டது. மலரின் பெயர் ‘அட்டாளை’! சாதாரணமாக விழாச் சிறப்பு மலர்களென்றால் honered-artists-1.jpgஇப்படித்தான் இருக்க வேண்டுமென இருந்து வந்த பிம்பங்களையெல்லாம் தகர்த்தெறிந்து விட்டு, உயர்தர அச்சில் அமைந்த இலக்கிய நூலொன்றுக்கான தகுதியுடன் ‘அட்டாளை’ வெளிவந்திருக்கிறது. மலரின் அட்டைப்படம் அழகு! அட்டைக்கான படத்தைத் தேர்வு செய்ததிலிருந்து தனியாளாக நின்று கணிணியில் வடிவமைத்தது வரை செய்து முடித்தவர் நியாஸ்தான். அவருக்கு ஒரு கைகுலுக்கல்! மலரின் உள்ளடக்கம் பற்றியும் நிறையப் பேசலாம். ஒற்றை வரியில் சொன்னால், “கடின ஒழைப்புகளால் ஒன்று சேர்க்கப்பட்ட வரலாற்றுப் பதிவு”!

இருந்தாலும், ‘அட்டாளை’ எனும் பெயர் ஏனோ சிறக்கவில்லை! சொல்லும் போது மலரொன்றுக்கான பெயர்போலவே படவில்லை. கொஞ்சம் கவித்துவமாக யோசித்திருக்கலாமே! ஏதோ அவசரத்தில் ‘கடமைக்காக’ வைத்தது  போல தெரிகிறது!

இத்தனை இனிப்புக்கள் நிறைந்த வுpழா தொடர்பில் வெகு ஒரு சில கசப்பு அனுபவங்களும் உண்டென்று கவலை தெரிவித்தார் பிரதேச செயலாளர் நியாஸ்!

கசப்புக்களில் ஒன்று: அரசியல்வாதியொருவரின் வால்பிடித்து பத்திரிகையொன்றில் பிரதேச நிருபராகிப்போன ‘கத்துக்குட்டி’ ஒருவர், கலாசார விழாவில் தன்னையும் கௌரவிக்க வேண்டுமெனக் கூறி, செயலாளர் நியாஸின் அலுவலக அறைக்குள் வந்து, கிட்டத்தட்ட சண்டை பிடித்து விட்டுச் சென்றிருக்கிறார்! ஆனால், தகைமையோ, அனுபவமோ இல்லாத அந்த ‘கத்துக்குட்டி’யைக் கௌரவிக்க முடியாது என்று ஏற்பாட்டுக் குழுவினர் கூறிவிட்டனர். அதனால், விழா பற்றித் தப்புத் தப்பாக பத்திரிகைக்கு கிறுக்கியுள்ளாராம் அந்த நிருபர்!

இவ்வாறான கண்ணூறுகளைக் கழித்துவிட்டுப்பார்த்தால், அட்டாளைச்சேனைக் கலாசார விழா, கலை ஆர்வலர்களுக்கான திருவிழாதான்!

அன்றைய நாள், மிக நீண்ட கோடைகளுக்குப் பின்னர் தூறிவிட்டுப்போன மழையின் சிலிர்ப்பினையும், சந்தோசங்களையும் நமக்குள் விதைத்து விட்டுப் போனது!

(இந்தக் கட்டுரையை 23 டிசம்பர் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

One Response to “அட்டாளைச்சேனை பிரதேச கலாசார விழா:கோடைகளுக்குப் பின்னரான நாளின் மழை!”

  1. nilam Says:

    oppss,,, it was nice accolade in history of addalaichenai.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s