காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கரடி விடுதல்: அதாஉல்லாவுக்கு ஒரு கடிதம்! 31 திசெம்பர் 2007

Filed under: அரசியல் — Mabrook @ 3:36 பிப

color-dot.gifமப்றூக்
hand_holding_pen.jpgathaullah-11.jpg
ன்பின் அமைச்சர் அதாஉல்லாவுக்கு,
(பட்டங்கள் சொல்லி விளிக்காமைக்கு மன்னிக்கவும்!)

மக்கள் பிரதிநிதியாகிய உங்களை அனேகமாக மக்களால் சந்திக்கவே முடிவதில்லை எனும் சிக்கலான நிலையொன்று உருவாகியுள்ளதாக மக்கள் தற்போது குறைபட்டுக் கொள்கிறார்கள்.  உங்களைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாததோர் இரும்பு வேலி போடப்பட்டுள்ளதால் மக்களிலிருந்து நீங்கள் அல்லது உங்களிலிருந்து மக்கள் தூரப்படுகின்றதோர் ஆரோக்கியமற்ற நிலை தோன்றியுள்ளது. எனவே மகா ஜனங்கள் தமது கருத்துக்களையும் குறை, நிறைகளையும் உங்கள் முன் கொண்டுவருதல் என்பது குதிரைக் கொம்பாகிப் போயுள்ளது. (என்ன ஒரு பொருத்தம் பார்த்தீர்களா, உங்கள் கட்சியின் சின்னமும் குதிரையல்லவா!) அதனால்தான் மக்கள் சார்பாக இந்த மடலை உங்களுக்கு எழுத வேண்டியதொரு தேவை எழுந்துள்ளது.

உங்களுடனான நேர்காணலொன்று ஞாயிறு தினக்குரலில் வெளியானதல்லவா? அதைப்பார்த்த உங்கள் நட்புக்குரிய அமைச்சர் ஒருவரே ஆச்சரியத்துடன் கேட்டார்; “அதாஉல்லாவை எப்படித் தொடர்பு கொண்டீர்கள்” என்று! மேலும், “ஓர் அவசரத்துக்குக் கூட, எங்களாலேயே அவரை தொலைபேசியில் கூட பிடிக்க முடிவதில்லை” என்று அவர் அலுத்தும் கொண்டார். உங்கள் சக அமைச்சருக்கே இந்த நிலை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலையை நினைக்கப் பாவமாக உள்ளது.

கடந்த தேர்தலில் உங்களுக்கு வாக்களித்த இளைஞன் ஒருவன் தனது தொழில் விடயமாக உங்களைச் சந்திக்க முயன்று முயன்று கடைசியில் முடியாமல் போன நிலையில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அமைச்சர் ஒருவரை சந்தித்து உதவி கோரிய பரிதாபமொன்றைக் கண்டபோது, மக்களின் சார்பாக உங்கள் மீது கோபப்படாமிலிருக்க முடியவில்லை!

‘கரடி விடுதல்’ என்று கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் ஒரு சொற்பிரயோகம் இருப்பதை நீங்களும் அறிவீர்கள். ஒருவரை ஏமாற்றுவதற்காக சொல்லும் பொய்யையையே ‘கரடி விடுதல்’ என்பார்கள் அல்லவா? அப்படி, சில பிரதேசங்களில் உங்கள் அரசியல் நடத்கைகளைக் காணுகின்றபோது, நீங்களும் ‘கரடி விடும்’ அரசியல்தான் நடத்துகிறீர்களோ என்று மக்களாகிய நமது வாக்காளர்கள் சந்தேகிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஓர் அரசியல்வாதி என்கின்ற வகையில் உங்களுக்கென்று ஒரு பலமான அடித்தளமும், நிலையான வாக்காளர் பிரதேசமும் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லைதான். அந்தவகையில் உங்கள் சொந்த ஊருக்கு மிக அதிகமான சேவைகளைச் செய்வதன் மூலம் அந்த அடித்தளத்தைக் கட்டியெழுப்ப நினைக்கின்றீர்கள். அதில் தவறுகளும் இல்லைதான். அதற்காக, உங்கள் ஊரை மட்டுமே அபிவிருத்தி செய்யும் அரசியல் என்பது பொருத்தமான அரசியல்தானா என்பதை, ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்துப் பாருங்கள்.

உங்கள் அண்டைப் பிரதேசமான அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைக் கூட, நீங்கள் பாகுபாடு கொண்டே பார்ப்பதாக அங்குள்ள மக்களில் அதிகமானோர் கவலைப்படுகின்றனர். இத்தனைக்கும் கடந்த பிரதேச சபைத் தேர்தலில் அட்டாளைச்சேனைப் பிரதேச மக்கள் 04 ஆயிரத்து 807 வாக்குகளை உங்களுக்காக அள்ளிப்போட்டவர்கள் என்பது தங்களுக்கு மறந்து போயிருக்காது. இத்தனைக்கும் உங்கள் சொந்தப் பிரதேச சபையான அக்கரைப்பற்றிலேயே உங்களுக்கெதிராக 04 ஆயிரத்து 72 வாக்குகள் அளிக்கப்பட்டதையும் நீங்கள் ஞாபகம் கொள்தல் வேண்டும்.

அது என்ன ஆச்சரியம் என்றே தெரியவில்லை! உங்களுரில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளெல்லாம் அலாவுதீனின் பூதங்களால் செய்யப்படுவது போல், அத்தனை விரைவாக முடிக்கப்பட்டு விடுகிறது. ஆனால், ஏனைய பிரதேசங்களில் மட்டும் ரப்பர் துண்டாக இழுபட்டுத் தொலைப்பது ஏன் என்றே புரியவில்லை? கடந்த தேர்தலின் போது, அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றைக் கடப்பதற்கான சின்னப்பாலத்தை நவீன முறையில் புனரமைத்துக் கட்டித்தருவதாக இரும்புத் தூண்கள் சிலவற்றை கொண்டு வந்து போட்டீர்கள். நான்கு வருடங்கள் கடந்து போயிற்று. உங்கள் வாக்குறுதியைப் போலவே அந்த இரும்புத் தூண்களும் துருப்பிடித்துப் போய்க் கிடக்கின்றன.

hand-1.jpgமேலே சொன்னது ஒற்றை உதாரணம்தான். கொத்தும் குறையுமாக மிக நீண்ட காலமாகவே முடிக்கப்படாத உங்கள் அபிவிருத்தி எச்சங்கள் பல, இந்தப் பிரதேசங்களை அழகிழக்கச் செய்து நிற்கின்றன.

அண்மையில் ஊருக்குப் போயிருந்தேன். அட்டாளைச்சேனை ஏ.சி. பள்ளிவாயலுக்கு முன்னால் அத்திவாரத்ததுடன் மட்டும் மூன்று வருடங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருக்கும் உங்கள் அபிவிருத்தியொன்றைக் காட்டி, பெரியவர் ஒருவர் சொன்னார்; “ஒன்றில் இதை உடைக்க வேணும் அல்லது கட்டி முடிக்க வேணும்” என்று! அவரின் கோபம் நியாயமானதுதான். எத்தனை நாட்களுக்கு இப்படி இலவு காப்பது? இதற்கு உங்கள் பதில்தான் என்ன? சொல்லுங்கள் உடைக்கப் போகிறீர்களா, கட்டி முடிக்கப்போகிறீர்களா?

உங்கள் அக்கரைப்பற்று பிரதேசத்திலிருந்து கிடைக்கும் வாக்குகளால் மட்டும் பாராளுமன்றம் செல்ல முடியாது. கடந்த பிரதேச சபைத் தேர்தலின் போது அக்கரைப்பற்று பிரதேசத்திலிருந்து உங்கள் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 10 ஆயிரத்து 129 மட்டும்தான். ஆக, நீங்கள் எம்.பி. ஆகுவதற்கு தேவையான ஏனைய வாக்குகள் அதிலும் உங்கள் பிரதேசத்தில் கிடைப்பதிலும் ஆகக்குறைந்தது மூன்று மடங்கு வாக்குகளை ஏனைய பிரதேசங்களிலிருந்து நீங்கள் பெற வேண்டும் என்பதை அடிக்கடி யாரையாயினும் கொண்டாவது ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

இதையெல்லாம் விட இன்னுமொரு சேதி என்னவென்றால், அருகிலிருக்கும் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் 23 ஆயிரத்து 672 வாக்காளார்கள் இருக்கின்றார்கள். உங்கள் பிரதேசமான அக்கரைப்பற்று வாக்குகளை விடவும் 376 வாக்குகள் இங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பூகோள ரீதியில் அக்கரைப்பற்றுக்கும், நிந்தவூருக்கும் இடையில் அமைந்துள்ள பிரதேசம் என்பதால், அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு அரசியல் பெறுமானமொன்று இருப்பதை நீங்கள் அறியாமலிருக்க முடியாது. நிந்தவூரிலா அக்கரைப்பற்றிலா பாராளுமன்ற உறுப்பினர் தெரிவாக வேண்டும் என்பதை அட்டாளைச்சேனை மக்களே தீர்மானிக்கும் அரசியல் சக்தி அவர்களிடமுள்ளது. இதுகிடக்க, அக்கரைப்பற்றுக்காரர்களுக்கும், அட்டாளைச்சேனைப் பிரதேசத்தாருக்கும் இடையில் வரலாறு முழுக்க ஒரு ‘ஒவ்வா’ நிலைத் தன்மையொன்று இருந்து வருவதும் எல்லோருக்கும் தெரியும். ஆக, இந்த ஒவ்வா நிலைத் தன்மையும், உங்கள் ‘ஸ்லோமோஷன்’ அபிவிருத்திகள் மீது இப்பிரதேச மக்கள் கொண்டுள்ள அதிருப்தியும் சேர்ந்து உங்களுக்கெதிராக அவர்களை தேர்தல் காலத்தில் செயற்படுத்தி விடும். கவனம்!

உங்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வருங்காலத்திலும் நீடிக்க வேண்டியதோர் தேவை அரசியலில் உள்ளது. ‘கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’ என்கிற ஆதித்தத்துவத்தின் அடிப்படையில் இந்த தேவை வேண்டப்படுகிறது. முன்னொரு காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பெயரால் நமது பிரதேசங்களில், குறித்த சிலர் மட்டும் ஏகபோக ஆட்சி நடத்தியதும், மக்களை அடிமைப்படுத்தி வந்ததும் மறக்கும் விடயங்களல்ல. இந்த ஏகபோகத்துக்கு எதிராக அரசியல் ரீதியாக கட்டி வளர்க்கப்பட்ட கட்சியே சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸாகும். (இது தொடர்பான விரிந்த கட்டுரையொன்றை ஞாயிறு தினக்குரலில் எழுதியுள்ளோம்) ஆனால், துரதிஷ்டவசமாக அதே ஏகபோக தர்பாரை பின்னர் காங்கிரஸ் நடத்த முயற்சித்ததே இங்கு கொடுமையாகும். ஆக, காங்கிரசின் இந்த ஏகபோகத்துக்குச் சவாலாக நீங்கள் இருப்பீர்கள் என்றும், அதனூடாக அரசியல் சமநிலையொன்று இங்கு நிலவும் என்றும் மக்கள் கனவு கண்டார்கள். அது பகல் கனவாகிவிடக் கூடாது!question.jpg

முதலில் உங்களைச் சுற்றி சிலரால் எழுப்பப்பட்டுள்ள இரும்பு வேலிகளைத் தகர்த்தெறியுங்கள். மக்களைச் சந்தியுங்கள். அடுத்த பிரதேசத்தவர்கள் உங்களை நேரடியாகச் சந்திக்க முடியாதென்றும், சந்திப்பதென்நால் சில ‘பூசாரிகளின்’ வரங்களைப் பெறவேண்டியுள்ளதென்றும் கூறும் குறைகள் குறித்து கவனம் செலத்துங்கள். ‘பண்டிதத்தனமே பேசிக்கொண்டிருப்போரிடத்தில் சாதாரண மக்கள் நெருங்குவதற்கு கூச்சம் கொள்வார்கள்’ என்று உரையாடலொன்றின் போது, நண்பன் ஒருவன் கூறியது ஏனோ இந்த இடத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது!

அம்பாரை மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேச சபைகளில் அதிகமான வாக்காளர்களைக் கொண்டது சம்மாந்துறையாகும். இங்கு உங்கள் கட்சி சார்பாக மறைந்த பிரதியமைச்சர் அன்வர் இஸ்மாயில் கடுமையாக உழைத்திருந்த போதிலும், கடந்த பிரதேச சபைத்தேர்தலில் மு.காங்கிரசே வெற்றி பெற்றது. ஒரு அமைச்சர் இருந்த போதே இந்த நிலையென்றால் இப்போதைய நிலையை யோசித்துப் பாருங்கள். அங்கு நீங்கள் வாக்கெடுக்க வேண்டுமென்றால் ‘கல்லில் நாருரிக்க’ வேண்டி வரும். அதாவது அத்துணை கடினமாக அங்கு நீங்கள் உழைக்க வேண்டும்!

இதே போன்றுதான் நிந்தவூர் நிலைமையும். அங்கு இரண்டு அமைச்சர்களை களத்தில் நீங்கள் காண வேண்டியுள்ளது. ஆக, ஒருசிலர் காட்டும் காகிதக் கணக்குகளைப்போல், எதிர்வரும் தேர்தலில் அத்தனை சுலபமாக வெற்றிக் கனியை உங்களால் சுவைக்க முடியாது என்பதுதான் கசப்பான உண்மை! சுற்றியுள்ள ஒரு கூட்டம் தரும் மாயக் கனவுகளில் கட்டுண்டே காலங்களைக் கடத்தி, கடைசியில் தோற்றுப்போன அரசியல்வாதிகள் நமது வரலாறு முழுக்க நீண்டு கிடக்கின்றார்கள். அந்த மாயக் கனவு தரும் கூட்டம் உங்களையும் சுற்றாமலில்லை!

எனவே, நீங்கள் பிரதேச பாகுபாடு பார்க்கிறீர்கள் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு வெறுமனே ‘தத்துவார்த்த’ பதில்களைக் கூறிக் கொண்டிராமல், அதிலுள்ள உண்மைத்தன்மையை நேர்மையுடன் அணுகி அவைகளை நிவர்த்தி செய்ய முயலுங்கள். மற்றய ஊர்களிலுள்ள உங்கள் அபிவிருத்தி எச்சங்களை நிறைவு செய்து கொடுங்கள்.

இவைகளுக்கெல்லாம் விடையாக, சுத்துமாத்துத் தனமாகவும் ஏதாவது சொல்லி விட்டுப் போய் விடலாம் என்பதும் நமக்குத் தெரியாததல்ல!

ஆனால், நமது மக்களையும் நம்ப முடியாது. சில வேளைகளில், புத்திசாலித்தனமாக அடுத்த தேர்தலின்போது அவர்கள் உங்களுக்கே ‘கரடி’ விட்டு விடவும் கூடும்!

கவனம்!!

(இந்தக் கட்டுரையை 23 டிசம்பர் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும்
 http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s