காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

வரவு செலவுத் திட்டம்: 118 ராஜ விசுவாசிகளும் அதில் ஒருவரும்! 8 திசெம்பர் 2007

Filed under: அரசியல் — Mabrook @ 3:11 பிப

காட்டிக் கொடுத்தல், குழி பறித்தல், சந்தர்ப்பவாதம், துரோகம், நயவஞ்சகம் என நீளும் பெயர் மற்றும் வினைச் சொற்கள் குறித்து, வேறு வேறான அர்த்தங்களை நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள்! ஆனால், அரசியலில் இவைகளுக்கெல்லாம் ஒரேயொரு பொதுப் பெயர்தான் உண்டு. அதன் பெயர் ராஜதந்திரம்!யாரோ ஒரு அனுபவஸ்தன்

””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

color-dot.gifமப்றூக்
voting_booth.gif

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் அண்மையில் மேற்கொண்ட புத்திசாலித்தனமான நடவடிக்கையாக வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தமையைக் குறிப்பிடலாம். சாதக பாதகங்களைக் கணிக்கும் போது, இத்திட்டத்தை எதிர்த்திருந்தால் அவர் மிக மோசமான நெருக்கடிகளை கட்சிக்குள்ளும், வெளியேயும் முகம் கொள்ள வேண்டியேற்பட்டிருக்கும். இதை மனதிற் கொண்டே இந்த சாதுரியமான தீர்மானத்தை மு.கா. தலைவர் எடுத்திருக்க வேண்டுமென்கிறார்கள் அரசியலில் பழங்கள் தின்றவர்கள் பலர்!

அரசாங்கத்தை ஆதரித்து வாக்களித்ததன் மூலம் ஹக்கீம்  தனது பக்கம் வீசப்பட்டிருந்த பந்தை இப்போது அரசின் பக்கம் லாவகமாகத் தட்டி விட்டிருக்கின்றார். உண்மையாகவே, மு.கா. தலைவர் இதை எதிர்த்திருந்தால், தற்போது முஸ்லிம்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியிருக்கும் பசு மாடு அறுப்பதற்கான தடை மற்றும் ஒலிபெருக்கி பாவனைக்கான இடைக்காலத்தடை மூலம் பள்ளிவாயல்களில் பாங்கு சொல்வதற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை போன்ற விடயங்களில் முஸ்லிம் சமூகம் சார்பில் சாதகமான முடிவுகளைப் பெற்றுக் கொள்வதில் கடுமையான இடர்களைச் சந்திக்கும் நிலையொன்று ஏற்பட்டிருக்கும்.

மட்டுமன்றி, எதிர்பாராத திசைகளிலிருந்தெல்லாம் மு.கா. பல்வேறு முட்டுக்கட்டைகளுக்கும் முகம் கொடுக்க நேர்ந்திருக்கும். ஆனால், இப்போதோ அரச தரப்பினர் முஸ்லிம் காங்கிரசாரை தேசப்பற்றாளர்களாகவும், ராஜ விசுவாசிகளாகவும் கூறி மகிழ்கின்றனர். இந்த ராஜ விசுவாசம் மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பிலும் தொடருமானால் அதன் பிறகு அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளில் ஹக்கீமும் ஒருவராகிப் போய்விடுவார்!

என்னதான் மு.கா. அரசோடு சேர்ந்திருந்தாலும் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிகழும் வரை, அக்கட்சியின் மீதும், தலைமை மீதும் ஆட்சியாளர்களுக்கு பெரிதாக நல்லபிப்பிராயமோ, நம்பிக்கையோ இருக்கவில்லை என்பதே உண்மையாகும்! எப்போதாவது ஒருநாள் இந்த அரசுடனான உறவைக் கைகழுவி விட்டு மீண்டும் ஐ.தே.க.வுடன் ஹக்கீம் இணைந்து கொள்வார் எனும் சந்தேகம் அரச மட்டத்தில் இருந்தே வந்தது. ஆனால், அவைகளுக்கெல்லாம் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் இப்போது விடையளித்துள்ளதோடு, தன் மீதான கறுப்புப் புள்ளிகளுக்கும் வெள்ளையடித்திருக்கின்றார்.

இந்த வரவு – செலவுத் திட்டமானது இப்போது அரசுக்கும், எதிரணியினருக்கும் ஒரு கௌரவப் போராகவே மாறியிருக்கிறது. வரவு – செலவுத் திட்டத்தில் அதுவும் இரண்டாவது வாசிப்பில் பெற்ற வெற்றியொன்றைப் பட்டாசு கொழுத்திக் கொண்டாடுகின்ற அளவுக்கு இந்த கௌரவ யுத்தம் சூடு பிடித்திருக்கின்றது. ஆக, இந்தப் போரில் தனது வெற்றிக்காக ஒத்துழைத்து வரும் சிறிய கட்சிகளுக்கும், எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கும் நிச்சயமாக அரசு தனது ‘சந்தோசங்களை’ வழங்க தயாராகவே இருக்கிறது! இதற்கு கட்டிங் கூறுவது போல், கடந்த வாரம் அரசோடு இணைந்து கொண்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ரத்னதிலக்கவுக்கு புதன்கிழமையன்று அமைச்சரவை அந்தஷ்தற்ற ஆடைக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சுப் பதவியானது வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தமது பா.உ.களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கான தீர்வுகளையும், வேறு பல தேவைகளையும் ஆட்சித் தலைவரிடம் ஹக்கீம் கேட்டுப் பெறுவதற்குரிய சாதக நிலைகள் நிறையவே காணப்படுகின்றன!hans-up.jpg

மு.கா.வின் வாக்காளர்கள் குறிப்பாக கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்கள் பலரும் அக்கட்சியூடாக தனிப்பட்ட ரீதியிலும், பொதுவாகவும் தமது பல்வேறு தேவைகளையும் நிவர்த்தி செய்யும் எதிர்பார்ப்புகளுடன் மிக நீண்டகாலமாகவே காத்திருக்கின்றனர். குறிப்பாக தொழில் வாய்ப்பு, உத்தியோக இடமாற்றம் மற்றும் பிரதேச அபிவிருத்தி போன்ற விடயங்களில் மு.கா. இந்த ஆட்சியில் இணைந்தது முதல் தமது ஆதரவாளர்களுக்கு சொல்லிக் கொள்ளுமாற்போல் எதுவும் செய்யவில்லை! இதனால், கட்சியின் கடின செயற்பாட்டாளர்கள் பலர் ஹக்கீம் மீது அதிருப்தி கொண்டுள்ளார்கள்.

உதாரணமாக, அம்பாரை மாவட்டத்தைப் பொறுத்தவரை அங்குள்ள மு.கா.வின் ‘போராளிகள்’ என அழைக்கப்படுகின்ற மிகத் தீவிர தொண்டர்களில் பெருமளவானோர் இலங்கைத் துறைமுக அதிகார சபையில் தொழில் புரிகின்றனர். இவர்களில் கணிசமானனோர் சில காலங்களுக்கு முன்னர் ஒலுவில் துறைமுகத்தில் கடமையாற்றி வந்தனர். தேர்தல் காலங்களின் போது, முஸ்லிம் காங்கிரசின் அனேக நடவடிக்கைகளில் ஒலுவிலில் இருந்த துறைமுக ஊழியர்கள் தீவிரமாகச் செயற்பட்டும் வந்தனர். ஆனால், மஹிந்த தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கிட்டத்தட்ட ஒலுவிலில் இருந்த துறைமுக ஊழியர்கள் அனைவரும் கொழும்புக்கு இடமாற்றப்பட்டனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஹக்கீம் ஐ.தே.க.வுடன் கூட்டு வைத்ததன் பாதக விளைவுகளில் இந்த இடமாற்றமும் ஒன்றெனப் பாதிக்கப்பட்டோர் பலராலும் பேசப்பட்டது.

அரசாங்கத்துடன் மு.காங்கிரஸ் இணைந்த பின்னர, கொழும்புத் துறைமுகத்தில் கடமையாற்றும் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த மு.கா. ‘போராளிகள்’ , தம்மை ஒலுவிலுக்கு மாற்றம் செய்யுமாறு ரஊப் ஹக்கீமுக்கு கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பில் ஹக்கீமின் வீட்டுக்கும், அமைச்சுக்குமாக இந்தப் போராளிகள் சென்று வராத நாட்களில்லை! இவர்களைப் பகைத்துக் கொண்டோ அல்லது இவர்கள் இல்லாமலோ குறிப்பாக தேர்தலொன்றை மு.கா. முகம் கொள்வதென்பது சிரமமானதொரு விடயமாகும். வீதிகளில் கொடிகள் கட்டுவது, மனிதச் சங்கிலியாக தலைவருக்குப் பாதுகாப்புக் கொடுத்து தோளில் சுமப்பது முதல் தமது அரசியல் எதிராளிகளை தேவையேற்படின் வன்முறைகளினூடாக எதிர்கொள்வது வரை, அனேக வேலைகளைச் செய்து முடிப்பது இந்தப் போராளிகளேதான்! ஆக, இவர்களின் இடமாற்றத்தை ஹக்கீம் செய்து கொடுத்தேயாக வேண்டியதொரு கட்டாய தேவையுமுள்ளது. இதுபோல இவர் முன் நீண்டு கிடக்கும் பட்டியலை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்!

மேலும், தனது ஆதரவாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க வேண்டியதொரு தேவையும் மு.கா. தலைவருக்குள்ளது. காரணம் ஆதரவாளர்களின் கடுமையான வேண்டுகோள் என்பதற்கப்பால், வேறோர் அரசியல் பின்னணியுமுள்ளது. அதாகப்பட்டது, அம்பாரை மாவட்டத்தில் அமைச்சர் அதாஉல்லா தமது நீர் வழங்கல் அமைச்சின் மூலமாக தற்போது பல்வேறு தொழில் வாய்ப்புகளை வழங்கி வருகின்றார். இதன் காரணமாக மு.காங்கிரசைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் அதாஉல்லா அணியுடன் இணைந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு இணைபவர்களில் மு.கா.வின் தீவிர செயற்பாட்டாளர்களும் அடங்குவர்! ஆக, இந்த நிலையைத் தடுப்பதற்காகவேனும் ஹக்கீம் அங்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியே தீர வேண்டும். இந்த வகையில், தலைவரிடமுள்ள தபால்துறையை வைத்துக் கொண்டு மேற்சொன்னவைகளை திருப்திகரமாகச் செய்ய முடியாது என்பதே அதிகபட்ட ஆதரவாளர்களின் கருத்தாகும்! எனவே, வரவு – செலவுத் திட்டத்தின் பின்னர் ரஊப் ஹக்கீம் தனது அமைச்சை மாற்றிப் பெறும் கோரிக்கையையும் முன்வைப்பார். அப்போது அது நிறைவேற்று அதிகாரத் தரப்பால் நிறைவு செய்து கொடுக்கப்படும் என்பது அரசியல் அனுபவஸ்தர்களின் கணிப்பீடாகும்!

இது மட்டுமன்றி, தனது ராஜ விசுவாசத்தை நிரூபிப்பதன் மூலம் ஆட்சித் தலைவருடனான தனது நெருக்கத்தை ஹக்கீம் அதிகரித்துக் கொள்ள முயலுவார். அதனூடாக ‘குழப்படி’ செய்கின்ற தனது கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிவாளமிடுவதற்கும் மு.கா. தலைவர் முயற்சியொன்றை எடுக்கக் கூடும். ஆனால், அது பலிப்பதற்கான வாய்ப்ப்பானது பலவீனமாகவே தெரிகிறது!

இதேவேளை, வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்களிப்பு பற்றிய ஜே.வி.பி. யின் நிலைப்பாட்டினை ஏற்கனவே அறிவித்திருந்தால், ஹக்கீம் மற்றும் ஆறுமுகன் ஆகியோரின் தேசப்பற்றுக் குறித்துத் தெரிந்திருக்கலாம் என்று நக்கல் தொனியில் கூறியுள்ளார் அக்கட்சியின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ஸ! அதாவது அரசுக்கு எதிராக ஜே.வி.பி. வாக்களிக்கும் என்றும் அரசாங்கம் இவ்வாறு குறைந்தளவு வாக்குகளாலேயே வெல்லும் நிலையொன்று தோன்றியிருக்கும் என்றும் ஏற்கனவே தெரிந்திருந்தால் நிச்சயமாக ஹக்கீம் மற்றும் ஆறுமுகன் ஆகியோர் ‘பல்டி’யடித்திருப்பார்கள் என்பதே அந்த நக்கலின் உள்ளடக்கமாகும்! ஜே.வி.பி.யினர் மட்டுமன்றி அரசியல் அரங்கிலுள்ள அதிகமானோர் இவ்வாறுதான் இவர்கள் குறித்து கணக்கிட்டு வைத்துள்ளனர்.
hands-up-1.jpg

ஆனால், அரசாங்கம் வாக்கெடுப்பின்போது வெற்றி பெறும் என்கின்ற திட்டவட்டமான கணக்கொன்றின் அடிப்படையில்தான் ஜே.வி.பி. வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தாகவும் ஒரு அரசல் புரசலான கதையுண்டு! வாக்கெடுப்பு நிகழ்ந்த அன்றிரவு அமைச்சர் பௌஸி இது குறித்து பி.பி.சி. தமிழோசைக்குக் கருத்துத் தெரிவிக்கையில்; ”அரசாங்கம் வெற்றி பெறுவது உறுதியான பிறகுதான் ஜே.வி.பி.யினர் எதிர்த்து வாக்களித்தனர். அவர்களும் தங்கள் அரசியலைச் செய்யத்தானே வேண்டும். அதற்காகத்தான் இவ்வாறு நடந்து கொண்டனர். ஆனால், அரசாங்கத்துக்கு இக்கட்டுகள் வரும்போது அவர்கள் நிச்சயமாக ஆதவு வழங்கியே தீருவார்கள். எதிர்வரும் வாக்கெடுப்பில் ஜே.வி.பி. அரசாங்கத்துக்கு ஆதரவாகவே வாக்களிக்கும்” என்றார்! நமக்குத் தெரிந்த அரசியல் குறிசொல்லிகளும் இப்படித்தான் கோரஸாகக் கூறுகின்றனர்.

இவைகள் ஒறுபுறமிருக்க, ஒலி பெருக்கிப் பாவனைக்கான இடைக்காலத் தடையுத்தரவு மற்றும் பசு கொல்வது தொடர்பான தடைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக நமது அமைச்சர்கள் எவரும் இதுவரை எதுவித நடவடிக்கைகளையும் எடுத்ததாகத் தெரியவில்லை! மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் மட்டும்தான் ‘மத சம்பந்தமான நடவடிக்கைகளில் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் ஒலிபெருக்கிப் பாவனை குறித்த சட்டத்தில் சில மாற்றங்களைச் கொண்டுவர வேண்டுமெ’னக் கோரும் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகத் தெரிய வருகிறது. உண்மையில் இது பாராட்டத்தக்க விடயமே!

முஸ்லிம் மக்களின் கணிசமான வாக்குகளைப் பெற்ற கட்சியொன்றின் தலைவர் என்கின்ற வகையில் இவ்வாறான பிரச்சனைகள் குறித்து ஓங்கி குரல் எழுப்ப வேண்டிய கடமை மு.கா. தலைவருக்கு அதிகளவு இருக்கிறது!
அது ஹக்கீம் என்றில்லை, குறித்த தலைமைத்துவத்தை எவர் ஏற்றிருந்தாலும் அவ்வாறான பொறுப்புகளை அவர் நிறைவேற்றியே ஆக வேண்டும்!

இந்தக் கட்டுரையை 25 நொவம்பர் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s