காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஹக்கீம், அதாஉல்லா, இஸ்ஸதீன்: தலையைத் தடவிக் கண்ணைப் பிடுங்கும் அரசியல்!! 8 திசெம்பர் 2007

Filed under: அரசியல் — Mabrook @ 4:25 பிப

color-dot.gifமப்றூக்
hakeem-2.jpg

திட்டு வாங்குவது எனக்கொன்றும் புதிதில்லை. கடந்த சில காலமாக நான் இதைத்தானே அதிகளவில் பெற்று வருகிறேன். எனவே, தேவையான அளவுக்கு என்னைத் திட்டித் தீருங்கள். முஸ்லிம் காங்கிரசைப் பொறுப்பெடுத்ததிலிருந்து எனக்குக் கிடைப்பதெல்லாம் வேறென்ன” என்று கூறி, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் இளைஞர்கள் சிலரிடம் சரணடைந்தார் என்று சொன்னால் நம்புவதற்கு சற்றுச் சிரமாகத்தான் இருக்கும். ஆனால், இது சில வாரங்களுக்கு முன்னர் நிகழ்ந்ததொரு சம்பவமாகும்.

சம்பவம் நடந்த இடம்: ஒலுவில்
சம்பவம் நடைபெற்ற நிகழ்வு: மு.கா. தலைவருடனான அட்டாளைச்சேனைப் பிரதேச முஸ்லிம் இளைஞர் காங்கிரஸ் அங்கத்தவர்களின் சந்திப்பு

ஹக்கீமின் கட்சி சார்ந்த நடத்தைகள், அம்பாரை மாவட்டம் தொடர்பான அவரின் பொடுபோக்கான செயற்பாடுகள் போன்றன குறித்து கொதி நிலையிலிருந்த கட்சியின் இளைஞர்கள் பலர் இச்சந்திப்பின்போது அவர் மீது எரிந்து விழுந்தபோதே முதற்பந்தியிலுள்ளது போல அமைச்சர் ஹக்கீம் பரிதாபகரமாக அல்லது தந்திரமாகப் பேசித் தப்பித்திருக்கின்றார். ஆனால், இந்தத் தப்பித்தலானது குறித்த இளைஞர்களிடத்தில் எடுபடவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மு.கா. தலைவர் அம்பாரை மாவட்டம் சார்பாகக் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டுப் பாராளுமன்றம் சென்றுள்ள போதும், அம்மக்களின் பிரதிநிதியாக அவர் இதுவரை நடந்துகொண்டதாகத் தெரியவில்லை என்பதே அப்பகுதியின் அதிகபட்ட மக்களினது கோபமாகும்.

அமைச்சர் ரஊப் ஹக்கீம் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகையில் இதுவரை எவ்விதமான அபிவிருத்திகளையும் இப்பகுதியில் செய்யவில்லை! மட்டுமன்றி பிரித்தாளும் அரசியலை மிகவும் நளினமாகச் செய்து வருவதன் மூலமாக தனது பிழைகளிலிருந்து இலகுவாக அவர் தப்பித்தும் வருகிறார் என்று மு.காங்கிரஸ்காரர்களே ஹக்கீம் மீது இப்போது குற்றம்சாட்டி வருகின்றனர்.

அது என்ன பிரிதாளும் அரசியல்?

ஒவ்வொரு பிரதேசத்துக்கும் மு.கா. சார்பாக ஒரு மத்திய குழு இருக்கும். இந்த மத்திய குழுவின் தீர்மானங்களுக்கிணங்கவே அப்பிரதேசத்தின் கட்சி சார்பான சகலவித நடவடிக்கைகளும் மு.கா. தலைமையால் முன்னெடுக்கப்படும். மறைந்த தலைவர் அஷ்ரப் காலத்திலிருந்தே இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வற்தது. ஆனால், இவ்வாறான மத்திய குழு எனும் முறைமையானது இருக்கின்ற போதிலும், ரஊப் ஹக்கீமோ அக்குழுவோடு முரண்பாடு கொண்டவர்களையும் கூட போசித்து வருகிறார். மட்டுமன்றி மத்திய குழுவுக்கு ஈடான அந்தஷ்தையும் குறித்த முரண்பாட்டாளர்களுக்கு வழங்கியும் வருகின்றார். சிலவேளைகளில் இதையும் தாண்டி, முரண்பாட்டாளர்களின் முரண்பாட்டாளர்களோடும் மு.கா. தலைவர் உறவு வைத்து அவர்களையும் வளர்த்து வருகின்றார். இதனால் ஊர் இரண்டு படுகிறது. கொண்டாட்டமோ ஹக்கீமுக்கு என்கிறார் அன்றைய நிகழ்வின் போது ஹக்கீமைத் திட்டிவிட்டு வந்த முஸ்லிம் இளைஞர் காங்கிரசின் முன்னணி செயற்பாட்டாளரொருவர்!

இப்படி ஊர் இரண்டு படுவதால் ஹக்கீமுக்கு என்னதான் லாபம் என்று யோசிப்போரும் உண்டு!

உதாரணத்துக்கு அம்பாரை மாவட்டத்திலுள்ள கல்முனையை எடுத்துக் கொள்வோம். அங்கு ஹக்கீம் குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு எவ்விதமான அபிவிருத்திகளையும் செய்யவில்லை, வேலை வாய்ப்புகளையும் வழங்கவில்லை, அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனும் போது, மக்கள் இயல்பாகவே ஹக்கீம் மீது கோபங்கொள்ளும் நிலையொன்று ஏற்படுமல்லவா? இவ்வாறான cat-and-mouse.jpgவேளைகளில் தமது கோபங்களை இறக்கி வைக்க வேறு வழிகள் தெரியாத நிலையில், மு.கா. ஆதரவாளர்கள் தமது கட்சியின் தலைவரைத் திட்டித் தீர்க்கவே முயலுவார்கள்! இந்த இக்கட்டான வேளைகளில் மக்களிடமிருந்து தப்பும் பொருட்டு ஹக்கீம் தனது பிரித்தாளும் தந்திரத்தின் பலாபலனைப் பயன்படுத்தத் தொடங்குவார். அதாவது, உங்கள் ஊரிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் பல தலைமைத்துவத்தின் கீழ் பல குழுக்களாகப் பிரிந்து கொண்டு செயற்படுகின்றார்கள். நான் ஒரு வேலையை உங்கள் பகுதியில் செய்ய முனையும் போது பிரிந்து செயற்படும் ஒவ்வொருவரும் வேறு வேறான திட்டங்களையும், அபிப்பிராயங்களையும் முன்வைக்கின்றனர். இதன்போது, இவர்களில் ஒரு தரப்பாரின் சொல்லுக்கு நான் கட்டுப்பட்டால், ஏனையோரோடு பகை கொள்ள நேர்ந்து விடுகிறது. ஆகவே, உங்கள் பிரதேசங்களில் பிரிந்து நின்று செயற்பட்டுக் கொண்டிருப்போரை முதலில் ஒற்றுமைப்படுத்துங்கள். அதன் பின்னர் அனைத்து விதமான அபிவிருத்திகளையும் உங்கள் பகுதிகளுக்கு நான் செய்து தருகிறேன் என்பார் ஹக்கீம். மக்களும் தலைவரின் பேச்சை வேத வாக்காக நம்பி வந்த வழியே திரும்பியும் போய் விடுவர். இதுதான் ரஊப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரசைப் பொறுப்பெடுத்த பின்னர் செய்து வரும் பிரித்தாளும் நாடகமாகும். இந்த நாடகத்தை மக்கள் ஒரு காலத்தில் நம்பி ஏமாந்தனர். ஆனால், இப்போது எங்களுக்கு எல்லோமே விளங்கி விட்டது. ஹக்கீமின் இந்த நாடகம் இனி இங்கு பலிக்காது என்று கூறுபவர் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் மு.கா. சார்பான முன்னார் உறுப்பினராவார்.

முஸ்லிம் காங்கிரஸ் எங்கெல்லாம் வியாபித்துள்ளதோ அங்கெல்லாம் தலைவர் இந்தப் பிரித்தாளும் கலையைச் செவ்வனே செய்தே வந்தாலும் அம்பாரை மாவட்டத்தில் இதைச் சற்று அதிகமாகவே பிரயோகித்துப் பார்ப்பதாக கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் பலரே கவலைப்பட்டுக் கொள்கின்றனர். தலைவர் அஷ்ரப் காலத்தில் கட்சியின் பிரதேச மத்திய குழுக்களுக்கான அதிகாரம் என்பது பலமானதாகவே அமைந்திருந்தது. குறிப்பாக, ஒவ்வொரு ஊரிலும் பிரதேச மத்திய குழுக்கள் தீர்மானித்த நபர்களுக்கே அப்போது அரசாங்கத்தில் இணைந்திருந்த மு.காங்கிரஸ் தொழில் வாய்ப்புகளைக் கூட வழங்கியிருந்தன. ஆனால், தற்போது மத்திய குழுக்கள் ஒவ்வொரு ஊரிலும் தூர்ந்து போய், செயற்பாடிழந்தே அதிகமாகக் காணப்படுகின்றன. இவ்வாறான மத்திய குழுக்களை இன்று புனரமைப்போம், நாளை புனரமைப்போம் அல்லது புதிய குழுக்களை ஏற்படுத்துவோம் என்றெல்லாம் உறுதி மொழிகளை வழங்கி ஹக்கீம் சும்மா காலத்தைக் கடத்துகிறாரே தவிர, உருப்படியாக ஒன்றையும் அவர் இதுவரை செய்யவேயில்லை என்பதே நமக்குக் கிடைக்கும் அக்கட்சியின் உள்வீட்டுத் தகவலாகும்!

இது இவ்வாறிருக்க, குறித்த சந்திப்பு நிகழ்ந்த அன்று கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்த செய்தியொன்றின்படி, அடுத்த பொதுத் தேர்தலின் போது, ஹக்கீம் புத்தளம் மாவட்டத்தில்தான் போட்டியிடுவார் எனத் தெரிய வருகிறது. இதை ரவூப் ஹக்கீமே அந்தச் சந்திப்பின் போது தெரிவிருக்கிறார் என்பதுதான் இதில் விசேட அம்சமாகும்! அப்படியென்றால், புத்தளத்தில் பிரதியமைச்சர் பாயிசுக்கு மு.கா. தலைவர் ஆப்படிப்பார் என்பது இப்போதே உறுதியாகி விட்டது. இந்நிலையில், அமைச்சர் றிசாட் பதியுதீன் காங்கிரசில் இணையவுள்ளதாகவும், அந்தப் பலத்தை நம்பியே பாயிஸ் போன்றவர்களை ஹக்கீம் எதிர்க்கத் துணிந்துள்ளார் என்றும் அவ்வப்போது கதைகள் அடிபட்டிருந்தாலும் கூட, அக்கதைகளுக்கெல்லாம் தனது உரையொன்றின் மூலமாக அமைச்சர் றிசாத் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முற்றுப் புள்ளி வைத்து விட்டார். ஓட்டமாவடியில் அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்திப் பணிகள் சிலவற்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய றிசாத், அதன்போது மு.கா. தலைவரை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். சாதாரணமாக அமைச்சர் றிசாத் மென்போக்கான ஒருவர், அனேகமாக ஹக்கீமைக் காரசாரமாக ஒருபோதும் அவர் விமர்சித்ததில்லை என்று பலராலும் அவர்பற்றிக் கூறப்பட்டு வந்த நிலையில், இவரின் இந்தக் காட்டமான விமர்சனமானது மீண்டும் அமைச்சர் றிசாத் மு.கா.வில் இணைவார் என்று பரவிய செய்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியாகவே அமைந்து விட்டது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில்தான் ஹக்கீம் எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது களமிறங்கவுள்ளதாக மற்றுமொரு கதையும் உருவாகி உலாவுகிறது! இக்கதையைக் கூறியவரும் மு.கா. தலைவர்தான் என்று பேசப்படுவதுதான் இக்கதைக்கான சுவாரசியமாகும்!

இவ்வாறு அடுத்த தேர்தல் குறித்த இரண்டு மாறுபட்ட கதைகள் உருவாகியுள்ளபோதும், இக்கதைகளினூடாக ஒற்றை முடிவொன்றை நாம் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளதை இங்கு கவனிக்க வேண்டும். அதாவது, அடுத்த தேர்தலின் போது அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற எண்ணமொன்று ஹக்கீமுக்குக் கிடையாது என்பதே நாம் பெறக்கூடிய முடிவாக உள்ளது. காரணம், அம்பாரை மாவட்ட மக்களின் ஹக்கீம் மீதான மனக் கொந்தளிப்பு, அதாஉல்லா போன்ற அரசியல் எதிராளிகள் களத்தில் பெற்றுள்ள மேலதிக பலம் போன்ற விடயங்களைக் கணக்கிட்ட பின்னரேsurrender.jpgஹக்கீம், தளம் மாறும் தனது எண்ணத்தை வெளியிட்டிருக்கலாம்!

சரி, பொதுத் தேர்தலொன்றுக்குத்தான் இன்னும் ஆண்டுகள் சில இருக்கின்றதல்லவா? இப்போது ஹக்கீமுக்கென்ன இத்தனை அவசரம்? என்று நினைப்போரும் நம்மில் இருக்கின்றனர்.

தற்போதைய அரசியல் நிலைவரத்தைக் காணும் போது, பொதுத் தேர்தலொன்றுக்கான திகதி நாளை அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியம் கொள்வதற்கில்லை. மட்டுமன்றி, தளம் மாறப்போகும் தனது எண்ணத்தை இப்போதே வெளியிடுவதன் மூலம் மக்களின் நாடித்துடிப்பினையும், எதிர்வினைகளையும் அறிந்து கொள்வதற்கும் வசதியாக இருக்கும் என்பதால் இவ்வாறு நேர காலத்துடன் ஹக்கீம் தனது தூண்டிலை எதற்கும் பார்ப்போம் என்று நினைத்துப் போட்டும் வைத்திருக்கலாம் எவர்கண்டார்!

இதேவேளை, அதாஉல்லாவுக்கு எதிரான ஒரு ஆரோக்கிய குழுவொன்றை விலைபேசல்கள் மூலம் சேர்த்தெடுக்கும் வேலையொன்றிலும் மு.கா. தலைவர் முயன்று வருவதாகவும் அறிய முடிகிறது. அமைச்சர் அதாவின் தரப்பிலிருக்கும் முக்கிய தலைகள் எதனையும் தற்போதைக்கு பிரித்தெடுக்க முடியாது எனத் தெரிந்து கொண்ட ஹக்கீம் இதற்காக வேறொரு மாற்றுத் திட்டமொன்றை வகுத்துள்ளார் போலவே தெரிகிறது. அதாவது, அம்பாரை மாவட்டத்திலுள்ள, குறிப்பாக அக்கரைப்பற்றிலுள்ள அமைச்சர் சேகு இஸ்ஸதீனின் முக்கிய ஆதரவாளர்ளை பிரித்தெடுத்து அவர்களை அதாஉல்லாவுக்கு எதிரான தனது குழுவில் இணைப்பதே அத்திட்டமாகும். அதாஉல்லாவும், சேகும் ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் அவர்களின் ஆதரவாளர்களை வைத்து தனது திட்டத்தைச் சாதிப்பதென்பது இலகுவான காரியம் என ஹக்கீம் சிலவேளை நம்பலாம்! இந்தவகையில், தற்போது பேனாக்காரர் ஒருவருடன் பேரம்பேசல்கள் இடம்பெற்று முடிந்துள்ளதாக தெரியவருகிறது. அமைச்சர் இஸ்ஸதீனுடன் மிக நீண்டகாலமாக இருந்து அவரின் அரசியல் வெற்றிகளுக்காகக் கடுமையாக உழைத்து வந்த பலர் தற்போது மனம் கசந்த நிலையில் அவரை விட்டும் பிரிந்து செல்லுகின்றனர். தனது ஆதரவாளர்களையும், தீவிர விசுவாசிகளையும் கட்டியாளத் தெரியாத அரசியல்வாதிகளில் இஸ்ஸதீனையும் ஒருவராகக் குறிப்பிடலாம்! இவைகளையெல்லாம் கணக்கில் வைத்தே ஹக்கீம் தனது காயை நகர்த்தி வருவதாக சேகு இஸ்ஸதீனின் தீவிர விசுவாசிகளில் ஒருவாரான ஊடகவியலாளர் ஒருவர் கூறுகிறார்.!

இது இப்படியிருக்க, அமைச்சர் சேகு இஸ்ஸதீன் மு.காங்கிரசில் மீண்டும் இணையப் போவதாகவும் கதையொன்று அடிக்கடி அடிபட்டு வருகிறது. இந்தக் கதைக்கு வயது மிக நீளம் என்றாலும் கூட, இப்போது இதற்கு அரசியல் பெறுமானம் சற்று அதிகம்தான் என்கிறார்கள் விசயமறிந்தவர்கள். காரணம், அதாஉல்லாவை எதிர்க்க மு.கா. தலைவருக்கு அவசரமாய் குறிப்பிடத்தக்க ஆளொருவர் தேவையாயிருக்கிறார். இதேசமயம், அடுத்த முறையும் பாராளுமன்றம் செல்வதற்கான நிலைமைகளைப் புதுப்பித்துக் கொள்ளும் பொருட்டு, பலமான கட்சியொன்றுடன் இணைந்து இயங்கும் தேவையொன்றும் இஸ்ஸதீனுக்கும் இருக்கிறது. எனவே, ஒருவரையொருவர் உபயோகித்துக் கொள்ளும் அரசியல் தந்திரோபாயங்களுடன் இந்த இருவரின் இணைவும் இடம்பெறலாம். அதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளன! ஆனால், சேகு இஸ்ஸதீன் மு.கா.வில் அவ்வாறு இணையும் போது, பெறுமதியான பதவிகள் எதனையும் கோரி நிற்பாரேயானால், ஹக்கீம் விரண்டு விடுவார் என்பதே நமது கணிப்பாகும்!

இந்தக் கட்டுரையை 02 டிசம்பர் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

3 Responses to “ஹக்கீம், அதாஉல்லா, இஸ்ஸதீன்: தலையைத் தடவிக் கண்ணைப் பிடுங்கும் அரசியல்!!”

  1. nilam Says:

    weel said mabrook rauf hakeem do nothink 4 the division

  2. nilam Says:

    well said mabrook rauf hakeem do nothink 4 the division


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s