காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஹக்கீம்: மதில் மேல் பூனை! 12 நவம்பர் 2007

Filed under: அரசியல் — Mabrook @ 6:26 பிப

color-dot.gifமப்றூக்
cat-on-wall.gif

hakeem-33.jpg

மிழ்செல்வனின் மரணத்துக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் அண்மையில் அனுதாபம் தெரிவித்திருந்தார். சமாதானப்பேச்சுக்களின்போது பல தடவைகள் சந்திக்கக் கிடைத்தவர் என்பதாலும், அவருடன் பல்வேறு தடவைகள் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் பேசியுள்ளதாலும் தமிழ்செல்வனின் மறைவு குறித்து, தான் அனுதாபம் தெரிவித்துள்ளதாக ஹக்கீம் தன்னிலை விளக்கம் வேறு வழங்கியுள்ளார்.

மு.கா. தலைவரின் இந்த செயற்பாடானது அனேகமாய் புலிகளின் ஆதரவாளர்களுக்கு சிறியதோர் உற்சாகத்தையும், எதிர்ப்பாளர்களுக்கு எரிச்சலையும் உண்டு பண்ணியிருக்கும்.


ஹக்கீமின் கூற்றுப்படியே பார்த்தால் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவின் போதும் அவர் இவ்வாறு பாராளுமன்றம் வரை சென்று இதுபோன்று பரபரப்பு ஏற்படும் வகையில் அனுதாபம் தெரிவித்திருக்க வேண்டும். புலிகளின் சார்பிலான பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கியவர் அன்ரன் என்பதால் பேச்சுவார்த்தை மேசையில் அவரையும் ரஊப் ஹக்கீம் பல தடவை சந்தித்தும், பேசியும் இருப்பாரல்லவா? ஆனால், பாலசிங்கத்தின் மறைவுக்கு ஹக்கீம் அவ்வாறு எவ்விதமான அனுதாபங்களையும் தெரிவித்ததாக நமக்கு ஞாபகமில்லை!

ஆக, இந்த அனுதாபத்தின் பின்னணி மற்றும் வேறு சில விடயங்கள் குறித்து ஆராயும் போது, தந்திரங்கள் நிறைந்த அவரின் அரசியல் முகங்களை நாம் கண்டு கொள்ள முடிகிறது!

தமிழ்செல்வனுக்கு அனுதாபம் தெரிவிப்பதானது அரசாங்கத்துக்கு நிச்சயம் ஆத்திரத்தை ஏற்படுத்தும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அப்படியென்றால் அரசாங்கத்தை கோபப்படுத்தும் நடவடிக்கையொன்றில் ஹக்கீம் ஏன் இறங்க வேண்டும்? இந்த இடத்தில், அரசியல்வாதிகள் ஆதாயமில்லாமல் கொட்டாவி கூட விடமாட்டார்கள் என்றும் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

சரி, அரசைக் கோபப்படுத்துவதால் ஹக்கீமுக்கு என்ன லாபம்? இது குறித்து அலசும் பொருட்டு, நாம் கடந்த சில நிகழ்வுகளைப் பின்னோக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்த அரசாங்கத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் இணைந்ததே விருப்பமில்லாமல்தான். தலைவரை விட்டு விட்டு, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசுடன் இணைவதற்கு எடுத்த முயற்சியினால் கட்சிக்குள் ஏற்படவிருந்த மற்றுமொரு உடைவை தடுத்து நிறுத்துவதற்காகவே தானும் அரசுடன் இணைந்ததாக ஹக்கீம் அவர்கள் ஒப்புக் கொண்டுமிருக்கிறார். என்னதான் அரசாங்கத்துடன் இணைந்தாலும் ஹக்கீமுக்கு அரசாங்கத்துக்குள் பெரிதாக மரியாதை எதுவும் இல்லை என்கிறார் உள்ளிருக்கும் ஒருவர்! இன்னும் சொன்னால், அதாஉல்லா, றிசாத் பதியுத்தீன் மற்றும் அமீரலி ஆகியோரை மீறி ஹக்கீமுடன் ஒட்டி உறவாடும் நிலையில் அரசாங்கமும் இல்லை! மட்டுமன்றி, வறுமையில் ஓடும் தபால்துறை அமைச்சை வைத்துக் கொண்டு ‘எதையும்’ அவரால் செய்யவும் முடியவில்லை! (நினைவு தினங்கள் ஏதாவது வந்தால் முத்திரை ஒன்றிரண்டை வெளியிடுவதோடு சரி!)

ஆக, இந்த அரசாங்கத்தில் இருப்பதை விடவும், வெளியே இருப்பதே உத்தமம். மட்டுமன்றி இந்த ஆட்சியாளர்களுக்கு பொட்டில் அடித்தாற் போல் அதிர்ச்சியொன்றையும் கொடுத்தே தீர வேண்டும் என்றெல்லாம் ரஊப் ஹக்கீம் எண்ணியுமிருக்கலாம். ஆனால், நினைத்தவுடன் அரசை விட்டு வெளியேறுவதென்பதொன்றும் அத்தனை சுலபமல்ல.

சந்திரிக்காவின் ஆட்சியின் போது அடித்துப் பிடித்துக் கொண்டு அரசாங்கத்திலிருந்து மு.கா. வெளியேறியமை நமக்கெல்லாம் மறந்துபோய் விடவில்லை. அந்தவேளையில், ஹக்கீமின் அவ்வாறான நடவடிக்கையால் முஸ்லிம்கள் நம்பிக்கைக்குப் பார்திரமானவர்கள் அல்லர் எனும் எண்ணப்பாடொன்று, சிங்கள மக்களிடையே முளைக்கப்பெற்றது. அது மட்டுமன்றி பிரதான கட்சியானது ஆட்சியமைப்பதற்காக சிறுபான்மை கட்சிகளின் ஆதரவினை கோரும் ஒரு நிலையிலிருந்து மாறி, ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமய போன்ற சிங்களக் கட்சிகளின் ஆதரவினை நாடிச் செல்லும் நிலையொன்றையும் ஹக்கீமின் அந்த ஆட்சிக் கவிழ்ப்பானது ஏற்படுத்திச் சென்றது. ஆக, இவ்வாறான கடந்தகால நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கும் போது, அரசாங்கத்திலிருந்து திடீரென மாறும் நிலையை ஹக்கீம் எடுக்க மாட்டார் என்றே எண்ண தோன்றுகிறது.

மட்டுமன்றி, அப்படியே ஹக்கீம் அரசிலிருந்து பிரிந்து போக நினைத்தாலும், அவருடன் கட்சியிலுள்ள பா.உ.களில் எத்தனை பேர் இணைந்து கொள்வார்கள் என்பது குறித்தும் யோசிக்க வேண்டியுள்ளது. சில வேளை அவரோடு சேர்ந்து இன்னும் ஓரிருவர் மட்டும் இந்த கோதாவில் குதிக்கக் கூடும். மிகுதி அத்தனை பேரும் தொடர்ந்தும் அரசுடனேயே ஒட்டிக் கொள்ளவர் என்பதுதான் இன்றைய நிலவரம்!

ஆக, அரசாங்கத்திலிருந்து ஹக்கீம் தானாகப் பிரிந்து செல்வதால் இவ்வாறு ஏற்படப்போகும் பிரதிகூலங்களோ எக்கச் சக்கமானவை.

அப்படியென்றால் என்னதான் வழி!

தாம் விலகிப் போவதை விடவும், தம்மை அரசு விடக்கிவிட வேண்டும்! ஆகக்குறைந்தது விலகிப் போகும் அளவுக்கு அரசு கடுமையாக தன்னோடு நடந்து கொள்ள வேண்டும் என்பது மு.கா. தலைவரின் எதிர்பார்ப்பாக இருக்கலாம்! அதற்கு என்ன செய்வது? அரசை கோபப்படுத்த வேண்டும். எப்படிக் கோபப்படுத்துவது? ஆட்சியாளர்களுக்கு பிடிக்காத விடியங்களை செய்ய வேண்டும்! ஆக, அரசாங்கத்துக்கு தற்சமயம் பிடிக்காத விடயங்களில் ஒன்றுதான் தமிழ்செல்வனுக்கு அனுதாபம் தெரிவித்தலானது! அதைத்தான் நமது முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவர் இப்போது செய்து முடித்திருக்கிறார்.

ஆனால், அவர் எதிர்பார்ப்பது போல், அரசு – எடுத்தேன் கவிழ்த்தேன் என ஆத்திரப்பட்டு எதிர்வினை எதையும் காட்டாது. காரணம், வந்திருக்கும் வரவு – செலவுத்திட்டமாகும். மு.கா.வின் ஆதரவை வரவு – செலவுத்திட்ட வாக்கெடுப்புக்கு முன் அரசு இழக்கவும் விரும்பாது! ஆனால், ஆட்சியாளர்களைக் கோபப்படுத்த வேண்டும். அதனூடாக அவர்களை எதையாவது செய்ய வைக்க வேண்டும். அதனைக் சாட்டாகக் கொண்டு அரசோடு முரண்பட்டு, வரவு – செலவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதுதான் மு.கா. தலைவரின் திட்டமாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் அவதானிகள்!

தொப்பிக்கல கைப்பற்றப்பட்ட பின்னர் அரசாங்கம் நடத்திய விடுவிப்பு விழாவினையும், ஜனாதிபதியையும் அப்போது ஹக்கீம் விமர்சித்தமைக்கும் அரசைக் கோபப்படுத்த வேண்டும் என்பதும் ஒரு காரணமாகும். ஆனால், அரசாங்கம் இவைகளுக்கு நேரடியாகப் பதில் கொடுக்காமல், தனது பக்கமிருக்கும் ஹக்கீமின் அரசியல் எதிரிகள் மூலமாகவே மு.கா.வை முகம் கொண்டு வருகிறது.

அரசாங்கத்தின் ஜனாதிபதியோ அல்லது அவருக்கு நெருக்கமானவரோ ஹக்கீம் மீது கோபம் கொண்டு ஏடாகூடமாய் ஏதாவது பேசி விட்டால், அதைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு, “முஸ்ஸிம் காங்கிரஸ் தலைவரை இந்த அரசாங்கம் அவமானப்படுத்தி விட்டது. இந்த அவமானமானத்தை முஸ்லிம் சமூகத்தின் மீதான அவமானமாகவே மு.கா. தலைமை கருதுகிறது. ஆக, முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்திய இந்த அரசாங்கத்தோடு தொடர்ந்தும் ஒட்டி உறவாடுவதில் அர்தமில்லை என்பதால், மு.கா. இந்த ஆட்சியிலிருந்து விலகிக் கொள்கிறது” என்று மு.கா. தலைவர் அறிக்கையொன்றை வெளியிட்டு விட்டு விலகிக் கொள்வார் என்பதால், அரசாங்கத்தின் ‘தலை’ கள் எதுவும் இப்போதைக்கு ஹக்கீம் பிரச்சனையைக் கையாளாது என்றே நம்பப்படுகிறது.

இதேவேளை, வரவு செலவுத் திட்ட வாக்களிப்பை அரசைப் பழிவாங்குவதற்கான துருப்புச் சீட்டாகவும் மு.கா. பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளதென்றும், ஹக்கீம் இதுவிடயத்தில் கடைசிவரை மதில்மேல் பூனையாகவே இருப்பார் என்றும் அவருடன் நெருங்கிய சிலரே தெரிவிக்கின்றனர். மு.கா.வின் வாக்கு கிடைத்தால் மட்டுமே வரவு – செலவுத் திட்டத்தில் அரசாங்கம் வெற்றியடையும் எனும் நிலையொன்று ஏற்பட்டால் அரசுக்கு எதிராக வாக்களித்து மு.கா. தனது பழியைத் தீர்த்துக் கொள்வதற்கும் சந்தர்ப்பமுள்ளதாக அந்த நெருக்கமானவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

மு.கா. எதிர்த்து வாக்களித்தாலும் அரசு தோல்வியடையாது எனும் நிலையொன்றின் போது மட்டுமே ஹக்கீம் அரசை ஆதரித்து வாக்களிப்பார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சிலவேளை, அரசுக்கு அவ்வாறானதொரு நெருக்கடி வரவு – செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது ஏற்படும் பட்சத்தில், ஹக்கீம் நம்பியிருக்கும் மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரசுக்கு ஆதரவு வழங்குமாறு பேரங்கள் பேசப்படுவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருப்பதாக சிரேஷ்ட அரசியல்வாதியொருவர் ஊகம் வெளியிடுகிறார்.

எது எவ்வாறிருந்த போதும், அரசாங்கம் கவிந்து போகும் நிலையொன்று உருவாகுவதை ஜே.வி.பி. ஒருபோதும் விரும்பாது. வரவு – செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது அவ்வாறானதொரு நிலை ஏற்படுமானால் அக்கட்சியானது ஆகக்குறைந்தது வாக்கெடுப்பில் கலந்து கொள்வதைத் தவிர்த்து, அதன் மூலம் அரசை வெற்றி பெறச்செய்யும் என்றே அனேகர் எதிர்பார்க்கின்றனர்.

காரணம், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியேறுவதைத் தடுப்பதற்கும், அவ்வாறான நிலையொன்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பமொன்றை உடைத்தெறிவதற்கும் பேயோடு வேண்டுமென்றாலும் ஜே.வி.பி. கூட்டுச் சேரும்!

(இந்தக் கட்டுரையை 11 நொவம்பர் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s