காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கூத்துக்கள் – கோமாளிகள் மற்றும் தலைவர்கள்! 12 நவம்பர் 2007

Filed under: அரசியல் — Mabrook @ 4:11 பிப

பாவப்பட்ட நமது அரசியலின் கதை
ammer-ali-33.jpg
color-dot.gifமப்றூக்

டியெடுத்தவரெல்லாம் வேட்டைக்காரர்களாகி விடுவதில்லை! ஆனால், முஸ்லிம் அரசியல் களத்தில் இன்று எல்லோருமே தம்மை வேட்டைக்காரர்களாகவே சிருஷ்டித்துக்கொள்ள முயலுகின்றனர். ஒவ்வொரு அரசியல்வாதியும் தம்மைத் தலைவர்களாகவே எண்ணிக் கொள்கின்றனர். வாக்காளர் தொகையினை விடவும் தலைவர்களே மிகைத்துப் போகும் அபாயம் இன்று முஸ்லிம் சமூகத்தினுள் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சிறிய சமூகம் இத்தனை தலைவர்களை பாவம், எப்படித் தாங்கப்போகிறதோ தெரியவில்லை!

முஸ்லிம் அரசியல்வாதிகளில் அதிகமானோர்களின் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் தோரணை, நடையுடை மற்றும் பாவனைகள் அனைத்தும் தம்மைத் தலைவர்களாகக் காட்டிக் கொள்வதற்கான முயற்சிப்புகளாவே தெரிகிறன!

ஆனால், “தலைமைத்துவம் பற்றிய ஆசைகள் ஒருபோதும் எனக்கிருந்ததேயில்லை, இப்போதும் இல்லை. உண்மையாகச் சொன்னால் அதற்கான அரசியல் முதிர்ச்சி என்பதே இப்போது என்னிடமில்லை” என்கிறார் அமைச்சர் அமீர் அலி!

முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்த பலரும் இன்று ஆளுக்கொரு திசையில் பிரிந்து நின்று அரசியல் செய்து கொண்டிருப்பது உண்மைதான். இவர்களை சமூகத்தின் நலனைக் கருத்திற்கொண்டு ஒன்று சேர்க்க வேண்டும் எனும் பேரவாவுடன் ஒவ்வொருவரையும் அணுகி இதுகுறித்துப் பேசினோம். ஆனால், அவ்வாறு ஒன்று சேர்ந்து இயங்குவதெனில் அவர்கள் ஒவ்வொருவரும் தமக்காக ஏதோவொன்றை எதிர்பார்க்கிறார்கள் என அமீர் அலி மேலும் கூறினார்.

ஞாயிறு தினக்குரலில் கடந்த வாரம் வெளியான நமது கட்டுரை குறித்து அமைச்சருடன் பேசிக்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு சொன்னார்.

ஹக்கீமுடன் முரண்பட்டுப் பிரிந்துபோனவர்களால் கூட, ஏன் இணைந்து இயங்க முடியவில்லை என்ற நமது கட்டுரையின் கேள்வி குறித்து அமீர் அலி குறிப்பிடுகையில்; “கசப்பானாலும் உண்மை நிலை என்னவென்றால், நமது அரசியல்வாதிகளை ஓரணியில் சேர்ப்பதென்பது மிகச் சிரமமான காரியம்” என்றார்.

அவர்களிடம் ஏதோவொரு எதிர்பார்ப்பு இருந்தது என்று கூறுகிறீர்களே, அப்படி அவர்கள் என்னதான் எதிர்பார்த்தார்கள் என்று கேட்டோம்.

இதைச் சொல்ல சற்று கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் கூறுகிறேன். அவர்கள் ஒவ்வொருவரிடமும் தமைமைப் பதவிக்கான எதிர்பார்ப்பு இருந்தது. அதாவது பிரிந்தவர்கள் அனைவரும் சேர்ந்து இயங்கும் அணிக்கு தான் மட்டுமே தலைவராக இருக்க வேண்டுமென ஒவ்வொருவரும் எதிர்பார்த்தனர். சிலரோடு பேசும்போது அவ்வாறான அணியில் தமக்கான பங்கு என்ன என்பது குறித்து அவர்கள் மிகவும் கவனமாக இருந்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது என்கிறார் அமைச்சர் அமீர் அலி.

அமைச்சர்களான றிசாத் பதியுத்தீன், நஜீப் ஏ. மஜீத் மற்றும் அமீர் அலி ஆகியோர் மூவரும் இணைந்து மு.கா.வுடன் முரண்பட்டு வெளியேறிய அனைவருடனும் cegu-issadeen.jpgபேசியபோது காணப்பட்ட நிலைதான் மேலுள்ளது. மு.கா. தலைவர் ஹக்கீம், தலைமைத்துவத்திலேயே குறியாக இருக்கிறார். நாம் எதிர்பார்த்தமை போல, சமூக நலன்குறித்த சிந்தனைகள் எதுவும் அவரிடம் இல்லை என்றெல்லாம் கூறி முரண்பட்டு முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்தவர்களே இன்று சமூகத்துக்காக ஒன்றுபட்டு உழைப்பது என்பதை விட, தலைமைப் பதவியிலேயே குறிவைத்து இயங்குகின்றனர் எனும் இந்தச் செய்தியானது இவர்களுக்கெல்லாம் வாக்களித்த நமது முஸ்லிம் மகா ஜனத்தாரின் காலடிகளுக்குச் சமர்ப்பணமாகுக!

சரி, யார் யாரையெல்லாம் சந்தித்து பேசினீர்கள் என்று அமீர் அலியிடம் கேட்க, “சேகு இஸ்ஸதீன், பேரியல் அஷ்ரப் மற்றும் அதாஉல்லா என்று அனைவரிடமும் பேசினோம்” என்றார்.

இதேவேளை, முஸ்லிம்களுக்கான தலைமைத்துவமானது எங்கிருந்தும் வரலாம். அதுபற்றி ஆட்சேபனைகள் இல்லை எனும் கோட்பாட்டையே, தான் முன்னொரு பொழுது கொண்டிருந்ததாகவும், ஆனால் – ஹக்கீமின் தலைமைத்துவத்தை முகம் கொண்ட பிறகு அவ்வாறான தனது கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகவும் கூறும் அமீர் அலி, வடக்கு – கிழக்கு பிரதேசங்களிலிருந்தே முஸ்லிம்களுக்கான தலைமை உருவாக வேண்டும் என்பதில், தான் உறுதியாகவுள்ளதாகவும் கூறுகின்றார்.

மு.கா. முன்னாள் தலைவர் அஷ்ரப் அவர்கள் மரணமான காலப்பகுதியில் ராவய பத்திரிகை ஆசிரியர் விக்டர் ஐவன் எழுதியிருந்த கட்டுரையொன்றை நினைவுபடுத்துதல் இந்த இடத்துக்கு மிகவும் பொருத்தமாகயிருக்கும்.

கரையோரப் பிரதேசத்தை வாழ்விடங்களாகக் கொண்ட மக்கள் எப்பொழுதும் போராட்ட குணம் நிறைந்தவர்களாகக் காணப்படுவார்கள். காரணம் அந்த மக்கள் மீனவத் தொழிலைப் பிரதானமாகக் கொண்டவர்களாதலால், அவர்கள் எப்பொழுதும் கடலை எதிர்த்தே தமது தொழிலில் ஈடுபடுவதுண்டு. உதாரணமாக, கடலின் அலைகளுக்கு எதிராக வள்ளங்களை வலித்தல், வலைகளை இழுத்தல் போன்ற போராட்ட மற்றும் எதிர் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுவதால், உள ரீதியாகவும் இந்தக் குணங்களுக்கு இவர்கள் ஆட்பட்டு விடுகின்றனர். ஆக – இந்த மக்களின் வாழ்வியல் செற்பாடுகள் முழுவதிலும் இவை பிரதிபலித்துக் கொண்டேயிருக்கும். ஆதலால், இவர்களிலிருந்தே போராட்டக்காரர்களும், தலைவர்களும் உருவாவதற்கு அதிகபட்ச வாய்ப்புகளுள்ளன என்பதே அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்ததன் சாரம்சமாகும். இதை நிரூபிக்கும் வகையில்   கரையோரத்தில் பிறந்த மூவரை விக்டர் ஐவன் உதாரணப்படுத்தியிருந்தார். அவர்கள் மு.கா.வின் ஸ்தாபகத்தலைவர் அஷ்ரப், புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் ரோஹன விஜேவீர ஆகியோர்களாவர்.

ஹக்கீமிடம் முரண்பட்டுப் பிரிந்தவர்களில் 99 சதவீதத்தினர் கரையோரப் பிரதேசம் சார்ந்தவர்வர்கள் என்பதும், ஹக்கீம் கரையோரப் பிரதேசங்களிலிருந்து பூகோள ரீதியில் மிகத்தூரத்தே அமைந்துள்ள மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்!

முஸ்லிம்களுக்கான தலைமைத்துவமானது அம்பாரை மாவட்டத்தில்தான் தெரிவாக வேண்டுமென்று அம்மாவட்ட அரசியல்வாதிகளில் மிகப் பெரும்பாலானோர் பிடிவாதம் செய்கின்றனர். இந்த அம்பாரை வாதமும், பிரிந்தவர்கள் ஓரணியில் இணைந்து செயற்பட முடியாமல் போயுள்ளமைக்கு ஒரு பிரதான காரணமாகும் என்கிறார் அமைச்சர் அலி!farial-ashraf-1-name.jpg

ஆனால், அம்பாரை மாவட்டம் என்பது முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் அதிகமாகவும் வாழுகின்றதொரு மாவட்டமாகும். இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கு வடமாகாணம் என்பது அதிலும் குறிப்பாக யாழ்பாணம் எவ்வாறு முக்கிய பிராந்தியத் தளமாக கருதப்படுகிறதோ அதுபோன்றதே முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணமும், அம்பாரை மாவட்டமுமாகும்! ஆக, இப்பகுதியிலிருந்தே முஸ்லிம்களுக்கான தலைமைத்துவமானது தெரிவாக வேண்டுமென்பதில் தத்துவார்த்தமானதோர் உண்மையுள்ளதை மறுக்க முடியாது என்பது புத்தி ஜீவிகளின் பரவலான கருத்தாகும்! இவ்வாறு தெரிவாகும் தலைமைத்துவமே செறிவான சமூக சிந்தனையுடன் செயற்படும் என்பதற்கு மறைந்த தலைவர் அஷ்ரப் சிறந்ததொரு உதாரணமாவார்! (அப்படியென்றால் மற்றவர்களுக்கு செறிவான சிந்தனைகளெல்லாம் இல்லையா எனும் இடக்கு முடக்குக் கேள்விகளெல்லாம் இங்கு வேண்டாம்!)

தலைவர்களாக வரக்கூடிய தகுதிகளைக் கொண்டவர்கள் மட்டுமல்ல அவ்வாறு ஆகுவதற்கு எவ்விதத்திலும் லாயக்கற்றவர்கள் கூட தலைவர்களாத் தாம் வரவேண்டுமென எண்ணுவதே முஸ்லிம் அரசியலின் தற்போதைய சாபக்கேடாகும். ஆனால், ”எனக்கோ, அமைச்சர்களான நஜீப்புக்கோ அல்லது றிசாத்துக்கோ இவ்வாறான தலைமைத்துவக் காய்ச்சல் ஒருபோதும் இல்லை என்பதை அழுத்தமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என அமீர் அலி தொடர்ந்தார்.

“தலைமைத்துவத்தை ஒப்படைப்பதற்கான தகுதிகளைக் கொண்டவர்களும், ஒற்றுமைப்பட்டுச் செயற்படுவது எனும் கருத்தில் மிகப் பொடுபோக்காகவே இருக்கின்றனர். மட்டுமன்றி இவர்கள் தமது ஆளுமையின் வீச்செல்லையை தேசிய ரீதியாகக் கொண்டு செல்லாமல், தமது ஊர், மாவட்டம் என்கின்ற குறுகிய வட்டங்களுக்குள்ளேயே மழுங்கடித்துக் கொண்டு செயற்படுவதும் தற்போதைய சங்கடமான நிலை உருவாவதற்கு முக்கியமானதோர் காரணமாகும். மட்டுமன்றி அதாஉல்லாவும் பேரியலும் ஒரேயணியில் இணைந்து செயற்படுவதற்கு ஒருபோதும் முன்வரமாட்டார்கள் என்பதும் இதிலுள்ள மற்றுமொரு சிக்கலாகும்” எனவும் அமீர் அலி தெரிவித்தார்.

இதுபற்றி மற்றவர்களின் மறுமொழி குறித்தும் தினக்குரலுக்காகத் தெரிந்து கொள்ள எண்ணியுள்ளோம்!

நமது அரசியல்வாதிகள் எல்லோரும் தம்மைப் புல்லாங்குழல்கள் என்றே அறிமுகம் செய்து கொள்கின்றனர்.

ஆனால், ஊதிப்பார்க்கும் போது…
வெறும் காத்து மட்டுமே வருகிறது!

(இந்தக் கட்டுரையை 04 நொவம்பர் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s