காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

முஸ்லிம் காங்கிரஸ்: முதலாளித்துவத்துக்கெதிரான எதிர்பின் குரலும், அதன் உடைவுகளும்! 6 நவம்பர் 2007

Filed under: அரசியல் — Mabrook @ 1:43 பிப

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் அவர்களின் 59 ஆவது பிறந்தநாள் கடந்த 23 ஒக்டோபர் 2007 செய்வாய்கிழமையாகும். இந்தவேளையில் அவர் ஆரம்பித்த கட்சியின் தோற்றுவாய், அதன் வளர்ச்சி மற்றும் உடைவுகளுக்கான காரணங்களை, இதுவரையில் பேசப்படாத சில கோணங்களிலிருந்து இக்கட்டுரை சற்றே மேலோட்டமாகப் பேச முயல்கிறது!
asraf-10.jpg

color-dot.gifமப்றூக்

ஷ்ரப் அவர்கள் அரசியலுக்குள் தீவிரமாக இயங்க ஆரம்பித்த நாட்கள் இன்னும் ஞாபகத்திலிருக்கின்றன. அவர் பிறந்த அம்பாரை மாவட்ட மக்கள் காலங்காலமாக சிங்களக் கட்சிகளுக்கே வாக்களித்து வந்த காலமது. அதிலும், மக்களுக்கு அங்கு பெரிதாக அரசியல் தெரிவுகள் அப்போது இருக்கவில்லை. ஒன்று ஐக்கி தேசியக் கட்சி அல்லது சுதந்திரக் கட்சி! இவைகளில் ஒன்றுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டியதொரு நிலையாக இருந்தது.

மு.கா. என்பது இன்று இலங்கையின் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வியாபித்திருந்தாலும். அதன் அடித்தளமும், இருதயமும் அம்பாரை மாவட்டமேயாகும். அஷ்ரப் அவர்களின் பிறந்தகம் இந்த மாவட்டமாக அமைந்திருந்தமை இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்!

முஸ்லிம் காங்கிஸின் துரித வளர்ச்சி மற்றும் அது மக்களிடையே மிக சொற்ப காலத்துக்குள் காட்டுத் தீ போல பரவக் காரணம் என்ன என்பது பற்றி நாம் இங்கு ஆராய முற்படுகையில், சில விடயங்களை இக்கட்டுரையில் நேர்மையுடன் பேச வேண்டிய நிலைக்குள்ளாவது தவிர்க்க முடியாததாகும்.

அஷ்ரப் அவர்களின் அரசியல் செயற்பாடுகள் காரணமாக ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்ச்சி காரணமாகவே மக்களிடம் மு.காங்கிஸ் அவ்வாறான அசுர வளர்சியினையும் அங்கீகாரத்தினையும் பெற்றது என்பதை விடவும் அதற்கு வேறொரு அடிப்படைக் காரணம் இருந்தது என்பதே உண்மையாகும்!

அம்பாரை மாவட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் சமூக அமைப்பில், தொழில்துறை மற்றும் பொருளாதார ரீதியாக அங்கு ‘போடியார்கள்’ எனும் முதலாளி வர்க்கத்தினர் மக்கள் மத்தியில் அதிகாரமும் அதன் வழியாக ஆதிக்கமும் செலுத்தி வந்தனர். இந்த ‘போடிமார்’ என்போர் நிலச்சுவாந்தர்களாக இருந்தனர். மிக அதிகளவான வேளாண்மை விளைநிலங்கள் மிக சொற்பளவான இந்த போடியார்களின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தன. hands-with-chain.jpg

இதேவேளை, பெரும்பான்மையான மக்கள் இப்பிரதேசத்தில் விவசாயத்தையே தமது பிரதான தொழிலாக நம்பி வாழ்ந்தனர். ஆனால், சொந்தமாக வயல் நிலங்களைக் கொண்டிராத அந்த மக்கள் போடிமார்களிடத்தில் கூலிக்கு வேளான்மை செய்து வாழ வேண்டிதோர் நிலையே மிக நீண்ட காலமாக இப்பகுதியில் தொடர்ந்து வந்தது. (இப்பொழுதும் இந்நிலை முற்றாக இல்லாமல் போகவில்லை) மிக பெரும்பான்மை மக்களின் முதலாளிகளாக விரல்விட்டு எண்ணுமளவு தொகையினைக் கொண்ட போடிமார்களே இருந்தனர். இதனால், போடியார்களின் விருப்பு விருப்புகளுக்கிணங்கவே பொது மக்களும் இயங்க வேண்டியதோர் நிலை அங்கு காணப்பட்டது. அரசியலிலும் இந்நிலைதான்!

இந்த போடியார்கள் தமக்கு கீழ் வேலை செய்யும் மக்களிடம் ஆண்டான் – அடிமை மனோநிலையுடனேயே பழகி வந்தனர். தமது கூலியாளர்களை கீழ்நிலை மக்கள் போன்றே இவர்கள் நடத்தினர். மட்டுமன்றி அவர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதைக் கூட, இந்த போடிமார்கள் விரும்பவில்லை! அவ்வாறு கல்வியினைத் தொடர்ந்த பிள்ளைகளினது படிப்பை இடைநிறுத்துமாறு போடியார்கள் கூலிப் பெற்றோர்களை பலவந்தப்படுத்திய கதைகள் பற்றி இன்றும் இப்பகுதியில் பேசப்படுவதுண்டு! இதனால் இவ்வாறான போடியார்களை மக்கள் அந்தரங்கமாய் வெறுக்க ஆரம்பித்தனர்.

அரசியலைப் பொறுத்தவரை அம்பாரை மாவட்டத்தில் 1980 களுக்குப் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கே பெரும்பான்மை ஆதரவு காணப்பட்டுவந்தது. முதலாளித்துவச் சிந்தனை கொண்ட ஐ.தே.கட்சியை அப்போதைய போடிமார்கள் ஆதரித்தமையே அதற்குரிய பிரதான காரணமாகும். மட்டுமன்றி இவர்களே கட்சியின் அவர்களது பகுதிகளின் அமைப்பாளர்களாகவும் இருந்து வந்தனர். ஆக, போடிமார்கள் ஐ.தே.க.வினை ஆதரித்ததால் அவர்களின் வயல் நிலங்களில் கூலி வேலை செய்வோரும் விருப்பமில்லா விட்டாலும் கூட, அக்கட்சியை ஆதரிக்க வேண்டியதோர் தேவையே அங்கு காணப்பட்டு வந்தது.

ஆக, இவ்வாறான சமூக அமைப்பையும், அதில் போடியார்கள் மீது மக்களுக்கிருந்த வெறுப்பினையும் மிகத்துல்லியமாக கணித்துக் கொண்ட அஷ்ரப் அவர்கள், அந்த வெறுப்பை அரசியலுக்காகப் பயன்படுத்தின் கொண்டார். மு.காங்கிரஸை மக்களிடத்தில் கொண்டுவந்தபோது, முஸ்லிம்களுக்கு தனிக்கட்சி தேவையென்றும் அதற்கு தடையாக இருப்பவர்கள் அம்பாரை மாவட்டத்திலுள்ள ஐ.தே.க. அமைப்பாளர்களே என்றும் (கவனிக்க: இவர்கள் அனைவரும் போடியார்களாகவும், முதலாளிமார்களாகவுமே இருந்தனர்) அஷ்ரப் கூறிவந்ததோடு, இந்த போடிமார்கள் சமூக துரோகிகள் எனவும் மக்களிடம் பிரசாரம் செய்துவந்தார். al-qran.jpg

இந்தவேளையில், போடியார்கள் மீது கொண்ட அதிப்தியினையும், வெறுப்பினையும் மக்கள் அரசியலினூடாக வெளிப்படுத்த முற்பட்டனர். தமது முதலாளிமார்கள் மீது கொண்ட கோபத்துக்கான வடிகாலாக மு.காங்கிரசை அவர்கள் ஆரவாரத்துடன் ஏற்றுக் கொண்டனர். இதுவே உண்மை நிலையாகும்!

ஆக, முதலாளித்துவத்துக்கும், அடக்குமுறைக்கும் எதிரான கோபத்தினைக் கூர்மைப்படுத்தியதோடு, அவைகளை மிகக் கவனமாக ஒன்று திரட்டியதனூடாகவே மு.காங்கிரஸ் எனும் கட்சியானது பெரும்பான்மை முஸ்லிம் மக்களிடையே வளர்த்தெடுக்கப்பட்டது என்பதுதான் உண்மையாகும்!

மு.காங்கிரசின் பிதாமகர்கள் என்றும், கட்சியை வளர்த்ததாகவும் கூறிக்கொள்வோரில் பலர் இன்று பொருளாதார நிலையில் மிகச் சிறப்பான நிலையில் இருக்கின்றனர். இந்தச் சிறப்பை அரசியலினூடாகவே இவர்கள் அடைந்தும் கொண்டனர். எனவே, இவர்களும் இப்போது முதலாளிகளாக ஆகிவிட்டதால், முதலாளி வர்க்கத்துக்கெதிரான கூப்பாடுகளையும், கோஷசங்களையும் போட வேண்டிய தேவை இவர்களுக்கில்லாமல் போய்விட்டது. (சிலர் இதில் விதிவிலக்கு. சமூகத்துக்காக என்று கட்சியில் உழைத்தோரும் இல்லாமலில்லை) உலக மயமாதலினூடாக முதலாளித்துவம் ஏதோவொரு வகையில் மக்களிடமும் தொற்றி விட்டதால், முதலாளித்துவத்துக்கு எதிரான அவர்களின் கோபமும் தற்போது மழுங்கிப் போய் விட்டது. இதன் பின்னணியிலேயே நாம் முஸ்லிம் காங்கிரசின் உடைவினையும் தற்போதைய வீழ்ச்சியினையும் நோக்க வேண்டியுள்ளது.

அஷ்ரப்பின் பிரதிநிதிகளாகச் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இன்று அவரின் கொள்கைகளை தமக்கேற்றால் போல் சொல்லிக் கொள்வதைக் காணும்போது, இத்தனை முரண்பாடுகள் நிறைந்த சித்தாந்தங்களுடன் அரசியல் செய்தவரா அஷ்ரப் என்று சாதாரண வாக்காளன் ஒருவன் நிச்சயமாக ஐயப்படக் கூடும்!

முஸ்லிம்களுக்கு தனிக்கட்சி தேவையென்கின்றனர் ஒரு தரப்பினர்! இன ரீதியாக கட்சி அமைத்து அரசியல் செய்வது தேவையற்றதொரு விடயம் என்கிறனர் அமைச்சர் அதாஉல்லா தரப்பினர். தேசிய ஐக்கிய முன்னணியை அஷ்ரப் ஆரம்பித்தபோதே முஸ்லிம்களுக்கான தனிக்கட்சியொன்றின் தேவை பற்றிய கோட்பாடு இல்லாமலாகி விட்டது என்பதே அதாஉல்லாவின் வாதமாகும். ஆனால், தே.ஐ.முன்னணியை ஆரம்பித்த பின்னரும் அஷ்ரப் அவர்கள் மு.கா.வையே முதன்மைப்படுத்திப் போஷித்து தனது அரசியலை மேற்கொண்டார் என்று கூறுகின்றனர் தனிக்கட்சித் தேவை குறித்து வாதிடும் தரப்பினர்.

ஆயினும், ஒரு சமூகம் அரசியல் ரீதியாக அதன் குரலை சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டுமெனில் அதற்கென்று தனியான, தனித்துவமான அரசியில் கட்சியொன்று அவசிமாகும் என்பதே கணிசமானோரின் கருத்தாகும்!

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரஊப் ஹக்கீம் கட்சியின் கொள்கைகளுக்கும் குர்ஆன் – ஹதீசை உள்ளடக்கிய அதன் யாப்புக்கும் மாற்றமாகச் செயற்படுகிறார். எனவே அவரின் தலைமையில் இனி இயங்க முடியாது என கூறியே அக்கட்சியிலிருந்து அமைச்சர்களான அதாஉல்லா, அமீர் அலி மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் உட்பட பலர் பிரிந்து சென்றனர்.

crescents-moon.gifஉண்மையாகவே ஹக்கீமின் தலைமைத்துவத்தில் பல்வேறு விதமான குறைபாடுகளும், பிழைகளும் காணப்படுகின்றமை உண்மையே. ஆனால், ஹக்கீமிடம் குறைபாடுகள் இருப்பதாக கூறி மு.கா.விலிருந்து பிரிந்து சென்றவர்களாவது ஒரேயணியில் இருக்க முடியாமல் போனதே இங்கு உறுத்தலான விடயமாகும்!

“அல்லாவின் கயிற்றை நீங்கள் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! நீங்கள் ஒருவருக்கொருவர் பகைத்துக் கொண்டு பிரிந்துவிட வேண்டாம்!!” என்கிறது அல்குர்ஆன்! ஹக்கீமிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் உண்மையாகவே குர்ஆன், ஹதீசை மதிப்பவர்கள் என்றால், மேலுள்ள இறை வசனத்துக்கு ஏற்ப இணைந்து செயற்படவேண்டுமல்லவா? ஆனால், இன்று இவர்களும் ஆளுக்கொரு கட்சியை உருவாக்கிக் கொண்டே பிரிந்து கிடக்கின்றார்கள்! இதனிடையே “தலைவர்கள் ஒன்று படக்கூடாது! ஆனால், மக்கள் உண்மையின் பக்கம் ஒன்றுபட வேண்டும்” என்று அதாஉல்லா தத்துவார்த்தம் பேசுகிறார்!

ஆக, மு.கா.விலிருந்து பிரிந்து போனவர்களின் நேர்மை பற்றியும் இங்கு சந்தேகம் எழுகிறது.

ஆகக்குறைந்தது, ஹக்கீமின் எதிரணியிலுள்ளவர்களாவது ஓரணியில் இணைந்து சமூகத்துக்காகச் செயற்படுதல் வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும்!

“நீங்கள் ஒவ்வொருவரும் மேய்ப்பாளர்கள். ஒவ்வொருவரும் அவரவர் மேய்ப்பைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்) என்பது ஹதீஸாகும்.

சத்தியம் செய்து கூறுங்கள் தலைவர்களே! இறைவனின் சன்னிதானத்தில் இடம்பெறவுள்ள அந்த விசாரணைக்கு நீங்கள் எல்லோரும் தயாராகத்தான் உள்ளீர்களா??

(இந்தக் கட்டுரையை 28 ஒக்டோபர் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s