காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

பாயிஸ்: ஹக்கீம் வீசிய பூமரங்! 5 நவம்பர் 2007

Filed under: அரசியல் — Mabrook @ 11:58 முப

color-dot.gifமப்றூக்


boomerang.jpgபூமரங் (Boomerang)) என்பது மரத்தினால் செய்யப்பட்டதோர் பண்டைக்கால ஆயுதமாகும். ஆதி மனிதர்கள் இதை வேட்டையாடுதலுக்காகப் பயன் படுத்தினர். வளைவான வடிவம் கொண்ட இதன் சிறப்பம்சம் என்னவெனில், வீசப்படும் பூமரங் தனது இலக்கை அடைந்தவுடன் மீண்டும் வீசியவரையே சென்றடையும் என்பதாகும்! போலந்து நாட்டில் கண்டெடுக்கப்பட்ட பூமரங்கே தற்போதைக்கு மிகப் பழையதாக நம்பப்படுகிறது. இது 20 ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாகும்!


மிக நுணுக்கமாக கணித்து கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதியன்றின் ஞாயிறு தினக்குரலில் நாம் எழுதிய நேர்காணலுடனான கட்டுரையொன்றை நமது வாசகர்களுக்கு இங்கு ஞாபகம் செய்ய விரும்புகின்றோம். ‘பாயிஸ்: மு.கா. தலைவரின் அடுத்த குறி’ எனும் தலைப்பில் அந்த கட்டுரை எழுதப்பட்டிருந்தது! அப்போது முஸ்லிம் காங்கிரசினுள் ஏற்பட்டிருந்த அக, புற முரண்பாடுகளை கூர்மையாகக் கவனித்து அக்கட்டுரையில் நாம் ஊகித்துக் கூறியிருந்த விடயங்களில் பல இன்று வியக்கும் வகையில் நிஜமாகி வருகின்றன!
baize ministerhakeem-32.jpgமு.கா.வை தற்போதைய அரசுடன் இணைய வைக்கும் கோதாவில் குதித்து, அதன் காரணமாக ஹக்கீமோடு கடுமையாக முரண்பட்டுக் கொண்டவர் பாராளுமன்ற உறுப்பினர் பாயிஸ். மட்டுமன்றி அச்சம்பவத்துக்கு முன்னரும், பின்னரும் கூட, மு.கா. தலைவரோடு சில விடயங்களில் அவர் முரண்டு பிடித்ததும், மூர்க்கம் கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.ஹக்கீமின் கோபத்தை பாயிஸ் தொடர்சியாக கிளறி வந்தபோதே, அவர் மு.கா. தலைமையால் மிக மோசமான குழிக்குள் வீழ்த்தப்படுவார் என்பது பலராலும் எதிர்பார்க்கப்பட்டதொரு விடயம்தான்!

பாயிஸை வீழ்த்துவதற்கான படுகுழியைத் தோண்டி வைத்துக் கொண்டு அதற்கான சகுனத்தை எதிர்பார்த்து, மு.கா. தலைவர் காத்திருந்த போதுதான், அமைச்சர் றிஸாத் பதியுத்தீனுடனான மோதலில் கால்நடை அபிவிருத்திப் பிரதியமைச்சர் பாயிஸ் ஈடுபட்டார். காகம் குந்தப் பழம் விழுந்த கதையாக இந்தச் சண்டை விவகாரம் ஹக்கீமுக்கு சாதகமாகப் போயிற்று!

அதிலும் அந்தச் சச்சரவின்போது பாயிஸ் செய்த மிகவும் புத்திசாதுர்யமற்ற செயல் எதுவெனில் புத்தளத்தில் வைத்து துப்பாக்கி ஏந்தியமைதான்! இது – பொறி வைத்துக் காத்திருந்த ஹக்கீமுக்கு பழம் நழுவிப் பாலில் விழ… அது நழுவி நாவில் விழுந்த கதை போலாயிற்று!

துப்பாக்கியைக் காட்டியதென்னவோ உண்மைதான். ஆனால், தான் யாரையும் அச்சுறுத்தவில்லை. அப்படி எவராவது கூறினால் தனது பதவியை துறப்பதற்கே தயாராக உள்ளதாக பாயிஸ் கூறுகிறார்! ஆனால், இதை ஒரு முதிர்சியான அறிக்கையாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. சிறு பிள்ளைத்தனமானதொரு பேச்சாக மட்டுமே கணிக்க முடிகிறது.

கடுமையானதொரு சச்சரவு இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, உயிர் கொல்லும் ஆயுதமொன்றை பகிரங்கமாக எடுத்துக் காண்பித்தமையானது எதிரியை அச்சுறுத்தும் நடவடிக்கை அல்ல என்றால், வேறென்ன.. கிளுகிளுப்பூட்டும் செயலா? இல்லையென்றால் அதற்குப் பெயர்தான் என்ன? பாயிஸ் வைத்திருந்தது பொம்மைத் துப்பாக்கியோ, அவர் முன் நின்றவர்கள் குழந்தைகளோ என்றிருந்தால் அவர் ஏதோ கிச்சு முச்சுக் காட்டியதாக நாமும் நம்பித் தொலைத்திருக்கலாம்!

ஆக, பாயிஸின் மேற்படி நடவடிக்கை கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாகக் கூறி, அவர் கட்சியின் அத்தனை பொறுப்புகளிலிருந்தும் மற்றும் பதவி நிலைகளிலிருந்தும் (உறுப்புரிமை உட்பட) தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கையொன்றின் பொருட்டு hand-1.jpg
விசாரணையொன்று இடம்பெறும் என்றும் அதற்கு அழைக்கப்படும் திகதியில் சமூகமளிக்க வேண்டுமெனவும் பாயிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சரி, இது ஒரு புறமிருக்கட்டும்! உண்மையாகவே பாயிஸ் தண்டிக்கப்படுவது மேலுள்ள காரணத்துக்காக மட்டும்தானா என்றால் அதை நம்புவது சற்று சிரமமாகவே உள்ளது? பாயிஸின் குறித்த செயலால் கட்சிக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது என்றால், நியாயப்படி, மு.கா. தலைவரும் சில காலங்களுக்கு முன் இதே போன்றதோர் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென்கிறார் என்கிறார் மு.காங்கிரசின் முக்கிய பிரமுகர் ஒருவர்!

தனி மனித ஒழுக்கவியல் ரீதியாவும், இஸ்லாமிய ஒழுக்கவியல் சட்ட ரீதியாகவும் ஹக்கீம் பிழையொன்றை புரிந்ததாக சில காலங்களுக்கு முன்னர் அவர்மீது கடுமையானதோர் குற்றச்சாட்டொன்று கூறப்பட்டிருந்தமையே அதற்கான காரணமாகும்!

பாயிஸை பழிவாங்குமளவுக்கு அவர் மீது ஹக்கீமுக்கு அப்படியென்னதான் கோபம் எனக் கேட்டால், அதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்!

•மேலே சொன்னது போல, மு. காங்கிரசை அரசுடன் இணைப்பதற்கான அழுத்தங்களை ஹக்கீமுக்கு சவாலான முறையில் பாயிஸ் பிரயோகித்தமை மற்றும் அது குறித்து பகிரங்க கடிதமொன்றை கட்சிக்கு எழுதியதோடு, அதை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தியமை.

•சுனாமி இடம்பெற்ற காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கட்சி சார்பாக பாயிஸ் குழுவினர் சென்று பல்வேறு உதவிகளையும் மக்களுக்குப் புரிந்தனர். ஆனால், இதன்போது ஏற்பட்ட போக்குவரத்து செலவினை வழங்குமாறு ஹக்கீமிடம் பல்வேறு தடவைகள் பாயிஸ் கேட்டிருந்தும் அது வழங்கப்பட்டிருக்கவில்லை. இதன் பொருட்டு பாயிஸ் பல்வேறு தடவைகள் ஹக்கீமின் இருப்பிடம் தேடி சென்றுமிருந்தார். ஆனால், பணம் மட்டும் வழங்கப்படவேயில்லை. இதனால், விரக்தியுற்ற பாயிஸ் கட்சியின் நிதியானது ஹக்கீமிடம் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறிப்பிட்டு அதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு கட்சிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அந்தக் கடிதமும் பத்திரிகைகளில் பிரிசுமானது.

இவ்வாறு பாயிஸ் மீது ஹக்கீம் கோபங்கொள்வதற்கான காரணங்கள் கட்சிக்குள் பல நடந்தேறியுள்ளன.

இவைகளின் காரணமாகவே, தலைவர் ஹக்கீமால் பொருத்தமானதொரு வேளையில் பாயிஸ் பழிவாங்கப்பட்டுள்ளதாக பாயிஸ் தரப்பும் கூறுகிறது.

ஹக்கீம் ஏன் இவ்வாறானதொரு முடிவை இத்தனை அவசரமாக எடுத்தார் என்பதே இன்று பலரையும் குடையும் ஒரு கேள்வியாகும். காரணம் பாயிஸைப் பகைத்துக் கொண்டு மு.காங்கிரசால் புத்தளத்தில் அரசியல் நடத்த முடியாது! இது ஹக்கீமுக்கும் தெரியாததல்ல. தெரிந்தும் ஏன் ஹக்கீம் இவ்வாறானதொரு முடிவை எடுத்துள்ளார் எனவும் நாம் ஆராய வேண்டியுள்ளது.

பாயிஸ் மீண்டும் கட்சிக்குள் உள்வாங்கப்படுவார் என்றே அரசியலில் அனேகமாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆக – இந்த தற்காலிக இடைநிறுத்தம் மூலமாக பாயிசுக்கு அதிர்ச்சி வைத்தியமொன்றை வழங்குவதே மு.கா. தலைவரின் நோக்கமாக இருக்கலாம். சிலவேளை, பாயிஸ் மு.கா.விலிருந்து நிரந்தரமாகவே தூக்கப்படவும் கூடும். (இதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளது) அப்படியாயின், பாயிஸை எதிர்த்துக் கொண்டு புத்தளத்தில் மு.கா. சார்பாக அரசியல் செய்வதற்கு ரஊப் ஹக்கீமின் சிந்தனையில் வேறொரு நபர் தெரிவாகியிருத்தல் வேண்டும். அவ்வாறெனில் அந்த மாற்று நபர் யார் என்பதும் மற்றொரு கேள்வியாகிறது!

இது இப்படியிருக்க, கிணறு தோண்டப் பூதம் கிளம்பிய கதையாக, பாயிஸை ஹக்கீம் பழி வாங்கப்போய் அது இப்போது ஹக்கீமின் அரசியல் எதிரியான றிசாத் பதியுத்தீனோடு, பாயிசை உறவாக்கி விடக்கூடியதொரு சூழ்நிலையை தோற்றுவித்துள்ளதாக மு.காங்கிரசுக்குள் இருக்கும் மூத்த பிரமுகர்கள் சிலரே கூறுகின்றனர். இம்மாதம் 03 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னரான நிகழ்வும் இன்ன பிற செய்திகளும் அவ்வாறான உறவொன்று ஏற்படக் கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிவிக்கின்றன.

ஒக்டோபர் மூன்றாம் திகதியன்று நடைபெற்ற குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் பாயிசும் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். காரணம் அன்று அவர் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தமையேயாகும். கூட்டம் முடிந்த பின் அங்கு வந்திருந்த அமைச்சர்கள் பத்தும் பலதுமாக பேசிக் கொண்டிந்தனர். இதன்போது, அங்கு நின்றிருந்த அமைச்சர்கள் ரஊப் ஹக்கீம், றிசாத் பதியுத்தீன் மற்றும் பாயிஸ் ஆகியோருக்கிடையில் நிகழ்ந்த உரையாடலானது இந்தக் கட்டுரைக்கு முக்கியமானதாகும்!

“என்னையும், கட்சியின் ஒழுக்கத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் உங்களை தற்காலிகமாக இடைநிறுத்தியிருக்கிறேன். ஆனால் அது குறித்து நீங்கள் கவலைப் படவேண்டாம் நான் உங்கள் விடயத்தைக் கவனித்துக் கொள்கிறேன்” என்று பாயிசிடம் குறித்த உரையாடலின் போது, ஹக்கீம் கூறியுள்ளார். அதற்கு பாயிஸ் “நீங்கள் செய்த வேலையால் புத்தளத்துக்கு போக முடியாததொரு நிலையை உங்களுக்கு நீங்களே ஏற்படுத்தி விட்டீர்கள்” என பதிலளித்திருக்கின்றார்.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிக்கும் போது, அவர்களை நோக்கி றிசாத் பதியுத்தீன் வந்திருக்கின்றார். அவ்வமையம், றிசாத்தை குற்றம் சாட்டும் வகையில் “சதி நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற நான் அனுமதிக்க மாட்டேன்” என்று ஹக்கீம் கூறியிருக்கின்றார். (புத்தளத்தில் பாயிசுக்கும், கட்சிக்கும் றிசாத் சதி செய்கிறார் எனும் அர்த்தம் தொனிக்க) அப்போது “நீங்கள் தொலைபேசியில் என்னுடன் ஒரு மாதிரியும் இப்போது வேறு விதமாகவும் பேசுகிறீர்கள். உண்மையாகவே நீங்கள் இரட்டை வேசம் போடுகிறீர்கள்” என்று ஹக்கீமுக்கு றிசாத் பதில் கொடுத்திருக்கிறார்.

ஆனால், புத்தளத்தில் என்ன நடந்தது என்பது பற்றி கேட்டறிவதற்காகவே தான் husseinbhai2.jpgறிசாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், வேறொன்றும் றிசாத்திடம் பேசவில்லையென்றும் ஹக்கீம் கூறினாலும், பாயிசுக்கு ஹக்கீம் மீது சின்னதாய் ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. உடனே, அங்கு நின்ற றிசாத் பதியுத்தீனின் கையைப் பிடித்துக் குலுக்கிய பாயிஸ் “றிசாத், எங்கள் தலைவர் ஹக்கீமை விட நீங்கள் எவ்வளவோ நல்லவர்” என்று கூறி விட்டு தனது வாகனத்தை நோக்கி சென்று விட்டார்.

உண்மையாகவே, றிசாத்துடன் பேசும்போது பாயிஸை மோசமாகவும், பாயிசுடன் பேசும்போது றிசாத்தை திட்டியும் ஹக்கீம் இரட்டை வேடம் போட்டதாக அந்த இடத்தில் பாயிஸ் சந்தேகித்ததாலேயே அவ்வாறு நடந்து கொண்டார். மேலும், பாராளுமன்றிலும் றிசாத் – பாயிஸ் இருவரும் கைக்குலுக்கிக் கொண்டதாகவும் அறிய முடிகிறது.

ஆக – அமைச்சர்கள் றிசாத் பதியுத்தீனும் பாயிசும் தமது சச்சரவை மறந்து தமது பொது எதிரியான ரஊப் ஹக்கீமை வீழ்த்துவதற்காக ஒன்று சேர்ந்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

மேற்சொன்ன அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அங்கு நின்ற பிரதியமைச்சர் பைலாவிடமும் ஹக்கீம் ஏதோ கிண்டல் விடப்போக பைலாவோ, “போடா” என்று மு.கா. தலைவர் ஹக்கீமை மூன்றாந்தர வார்த்தையால் திட்டி விட்டுச் சென்றார் என்பது நமது வாசகர்களுக்கு இங்கு உபரித் தகவலாகும்!

கட்சிக்குள் பாயிஸ் மீள உள்வாங்கப்பட்டாலும் அவர் அனைத்தையும் மறந்து விட்டு, தலைமைத்துவத்துக்கு விசுவாசமாக தொடர்ந்தும் உழைப்பார் என கூறிவிட முடியாது. தற்காலிக இடைநிறுத்தம் என்றாலும், இது பாயிசை மிகவும் பாதித்திருக்கும். நிச்சயமாக இந்த விடயம் சற்று அவமானகரமானதுதான்! ஆக – ஹக்கீமிடமிருந்து பெற்ற அவமானத்தை வட்டியோடு கொடுக்கும் ஒரு சந்தர்ப்பத்துக்காக பாயிசும் பொறி வைத்துக் காத்திருக்கத்தான் போகிறார்.

உண்மையாகச் சொன்னால், முன்னரை விடவும் இப்போதுதான் ஹக்கீமுக்கு பாயிஸ் மிகவும் ஆபத்தானவராக மாறியுள்ளதாக நம்மால் கணிப்பிட முடிகிறது! மட்டுமன்றி ஹக்கீமுக்கு மிகப் பெரும் சங்கடம் என்னவென்றால், இப்போது பாயிஸை வெளியில் விடுவதும் ஆபத்து… உள்ளே எடுப்பதும் ஆபத்து!

இந்த நிலையை வடிவேல் ஸ்ரைலில் ஹக்கீம் கூறினால் இப்படித்தான் இருக்கும்!

”கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ”!!

(இந்தக் கட்டுரையை 21 ஒக்டோபர் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s