காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

அன்வர் இஸ்மாயில் மறைவும், அம்பாரை மாவட்ட நிலையும்! 20 ஒக்ரோபர் 2007

Filed under: அரசியல் — Mabrook @ 3:06 பிப

எரியும் வீட்டில் குளிர்காயும் அரசியல்
anwer-ismail.jpg
color-dot.gifமப்றூக்

திரி அயர்ந்து போகும் வேளைகளில் தாக்குதலை மேற்கொள்வதென்பது ராணுவ ரீதியிலான தந்திரமாகும்! குறிப்பாக கெரில்லா முறையிலான தாக்குதல்கள் இவ்வாறுதான் இடம்பெறும். ஆனால், இந்த தாக்குதல் முறைத் தந்திரம் பல வேளைகளில் அரசியல் களங்களிலும் பின்பற்றப்படுவதுண்டு. அந்தவகையில், நமது அரசியல் தலைவர்களும் தமது எதிரிகளை வீழ்த்துவதற்காக இப்போது இந்த யுக்தியினையே கைக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

அம்பாரை மாவட்டத்தில் மு.காங்கிரசையும் ஹக்கீமையும் மிகக் கடுமையாக எதிர்த்து வந்தவர்களில் பிரதானமானவர் அதாஉல்லா! தேசிய காங்கிரஸ் எனும் கட்சியை ஆரம்பித்து, அன்வர் இஸ்மாயிலை தனது வலது கரமாகக் கொண்டு மு.கா. எதிர்ப்பு அரசியலை ஆரம்பித்த அதாஉல்லா, மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே அமைச்சுக் கதிரையில் உட்கார்ந்து கொண்டார்! மேலும், அவரின் சகாவான அன்வர் இஸ்மாயிலுக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொடுத்ததோடு, அவரையும் அமைச்சராக்கிப் பார்த்தார்.

மு.கா.வுடன் முரண்பட்ட பின்னரான அதாஉல்லாவின் அரசியல் வெற்றிக்கு பிரதானமானவர்களில் அன்வர் இஸ்மாயிலும் ஒருவர்.

அன்வர் இஸ்மாயில் சம்மாந்துறையைச் சேர்ந்தவர். சம்மாந்துறை என்பது ஒரு ஊர் மட்டுமன்றி மிகப் பெரும் தேர்தல் தொகுதியுமாகும். மட்டுமன்றி அதாஉல்லாவின் சொந்த ஊரான அக்கரைப்பற்றின் சில பகுதிகளும் சம்மாந்துறைத் தொகுதிக்குள் அடங்கி விடுகின்றன. அந்தவகையில், சம்மாந்துறை மக்களின் வாக்குகள் பல்வேறு வகையிலும் அதாஉல்லாவின் தேர்தல் வெற்றிக்கு மிகப் பெரும் பலமாக அமைந்து விடுகின்றன!

சம்மாந்துறை மக்களைப் பொறுத்தவரை அவர்கள் தமது பிரதேசத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேவை என்பதில் மிகவும் கவனமாக இருப்பவர்கள். கிட்டத்தட்ட கடந்த 40 ஆண்டு காலமாக அவ்வூரில் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தே வருகின்றனர். எந்தக் கட்சி சார்பாகவேனும் அவர்கள் தமக்கான பிரதிநிதியைப் பெற்றுக் கொள்வர்.

இதற்கமைய, கடந்த பொதுத் தேர்தலின்போது அன்வர் இஸ்மாயிலுக்கு தேசியப் பட்டியல் மூலமான பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுத் தருவதாக அதாஉல்லா உறுதி மொழியொன்றினை வழங்கியிருந்தார். அதனையடுத்து சம்மாந்துறைப் பிரதேச மக்களின் கணிசமான வாக்குகள் அதாஉல்லாக்குக் கிடைத்தன. ஆனால், சம்மாந்துறை மு.கா. ஆதரவாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாஉல்லாவுக்கான வாக்குகளை பெற்றுக் கொடுத்ததோடு மட்டுமன்றி, அவரின் வெற்றிக்காகக் களத்தில் இறங்கி மிகக் கடுமையாக உழைத்தவர்  அன்வர் இஸ்மாயில்.

மிக அண்மைக் காலமாக அதாஉல்லாவும், அன்வர் இஸ்மாயிலும் இணைந்து அம்பாரை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வேகமாகச் செயற்படுத்தி வந்தனர். மு.காங்கிரசின் கோட்டையாகக் கருதப்பட்ட பகுதிகளில் பாரிய கூட்டங்களையும் நடத்தினர். இதனால், கவரப்பட்ட மு.கா.வின் மிக முக்கிய பிரமுகர்களே கட்சியிலிருந்து பிரிந்து இவர்களோடு இணைந்து செயற்பட ஆரம்பித்தனர்.

இந்த நிலையானது, மு.காங்கிரஸ் தலைமைக்கு மிகப் பெரும் சவாலாவும், சமாளிக்க முடியாததோர் விடயமாகவும் மாறிப்போனது. அடுத்த பொதுத் தேர்தலில் அதாஉல்லாவின் வெற்றியானது இப்போதே உறுதியாகிப்போய் விட்டதாக அவரின் எதிராளிகள் கூட பேசிக்கொண்டனர்.

இவ்வாறானதோர் அரசியல் கள நிலைவரம் அம்பாரை மாவட்டத்தில் நிலவியபோதுதான் நிகழ்ந்தது அன்வர் இஸ்மாயிலின் அந்த மரணம்!

சிலர் வாழ்வார்கள். ஆனால், அதற்கான தடயங்கள் எவையும்; இருப்பதில்லை. மட்டுமன்றி, அவர்களின் இருத்தல் என்பது கால வெளியில் வெறும் பூச்சியமாகவே கணிக்கப்படும். வாழ்வே இப்படியென்றால், இவ்வாறானவர்களின் இறப்பு பற்றிப் பேச என்னதான் இருக்கிறது? ஒரு கம்பளிப் பூச்சியின் மரணத்துக்கு நிகராகக் கூட, அது பேசப்படாது. ஆனால், அன்வர் இஸ்மாயிலின் மரணம் அவரின் இருப்பின் பெறுமதியைப் போலவே, அம்பாரை மாவட்ட அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திப் போயிற்று! குறிப்பாக, அன்வரின் இழப்பால் இடிந்துபோனவர்களில் அமைச்சர் அதாஉல்லாதான் முதன்மையானவர்!

இந்த மரணமானது அதாஉல்லாவுக்கு பல்வேறு வகையான இழப்புகளையும், நெருக்கடிகளையும் கொடுத்துள்ளது. குறித்த இழப்பிலிருந்து மீள்வதற்கு அவருக்கு நெடுங்காலம் எடுக்கும். உண்மையாகச் சொன்னால், ஒரு கட்டத்தில் அன்வர் இஸ்மாயிலின் மரணம் எதிர்பார்க்கப்பட்டதுதான். வைத்தியர்கள் ஆண்டவனின் கையில் பாரம் கொடுக்கும் இறுதித் தறுவாய் அவர் இறப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு முன்பே நிகழ்ந்தாயிற்று. அவ்வாறு ஒரு இழப்பு நேரும் பட்சத்தில் அன்வர் இஸ்மாயிலின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவ வெற்றிடத்தை நிரப்புவதற்குரிய ஏகபோக அதிகாரம் அதாஉல்லாவிடம்தான் இருப்பதாக அவரின் அணியினர் கூறிக் கொண்டனர். அதாஉல்லாவும் அவ்வாறே நம்பியிருந்தார். ஆனால், பின்னர் நடந்த கதைதான் நாமெல்லாம் அறிவோமே!

அன்வர் இஸ்மாயிலின் பிரதிநிதித்துவத்தை அவரின் சொந்த ஊரான சம்மாந்துறைக்கே வழங்கப்போவதாக நல்லடக்க நிகழ்வின் போதான தனது உரையில் அதாஉல்லா உறுதிபடத் தெரிவித்திருந்தார். காரணம், அதை அவ்வாறு கொடுப்பதனூடாகத்தான் தனது எதிர்கால அரசியல் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது அதாவுக்கு மிக நன்றாகவே தெரியும். ஆனால், நினையாப் பிரகாரம் நடந்த நிகழ்வுகள் அதாஉல்லாவின் தலைவில் சத்தமில்லாமல் சில இடிகளை இறக்கி விட்டுச் சென்றன.

இந்நிலையில், அன்வர் இஸ்மாயிலின் பிரதிநிதித்துவம் தமது பிரதேசமான சம்மாந்துறைக்கு வழங்கப்படாததால் கொதிப்படைந்து போன அவரின் ஆதரவாளர்கள் அதாஉல்லாவுடன் பிணக்கு கொண்டனர். தலைமையை இழந்து போன அவர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து போயினர். இவர்களில் சிலர் மு.காங்கிரசுடன் இணைவதற்கு உத்தேசித்துள்ளதாக கூறப்படும் அதேவேளை, வேறு சிலர் அங்குள்ள சில அரசியல் பிரமுகர்களின் பின்னால் அணிதிரள ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் அவர்களில் சிலருடன் அதாஉல்லா தரப்பினர் சமரசம் செய்து கொண்டு, அவர்களை தொடர்ந்தும் தம்முடன் தக்க வைத்துக் கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

இது இவ்வாறிருக்க, அன்வர் இஸ்மாயிலின் நீர்ப்பாசன அமைச்சை அதாஉல்லா பொறுப்பெடுக்கப் போவதாகவும், அந்த அமைச்சின் முக்கிய பதவிகளை அன்வரின் நேசத்துக்குரிய சம்மாந்துறை பிரமுகர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அதாஉல்லா தரப்பிலிருந்து சில பேச்சுக்கள் அடிபட்டன! இதனூடாக, சம்மாந்துறை மக்களின் அதிருப்தியை குறைக்கலாம் என அதா தரப்பு நம்பியது. ஆனால், இப்போது இந்த எண்ணத்திலும் மண் விழுந்திருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது (10 ஆம் திகதி புதன் கிழமை நண்பகல்) கிடைத்த செய்தியின் படி, அன்வர் இஸ்மாயில் பதவி வகித்த நீர்ப்பாசன அமைச்சானது, புடவைக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ஜயதிஸ்ஸ ரணவீரவுக்கு வழங்கப்பட்டு விட்டது. ஆக – அதாஉல்லா தரப்பிடம் எஞ்சியிருந்த கடைசி நம்பிக்கையும் கை நழுவிப் போய் விட்ட நிலையில், மு.காங்கிரஸ் தனது கெரில்லா தாக்குதல் தந்திரத்தை அம்பாரை மாவட்டத்தில் அதாஉல்லாவுக்கு எதிராகப் பிரயோகிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது!

அன்வரின் மரணம், அவரின் பிரதிநிதித்துவம் தனது விருப்புக்கேற்றவாறு வழங்கப்படாமை மற்றும் சம்மாந்துறை மக்களின் அதிருப்தி போன்றவைகளால் அதாஉல்லா மனமுடைந்து போயிருக்கும் வேளையில், மு.கா. தலைவரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அம்பாரை மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களுக்கு திடீர் பயணங்களை மேற்கொண்டனர். அங்கு மக்களைச் சந்திப்பதிலும், அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிவதிலும் இந்த மு.கா. குழுவினர் ஆர்வம் காட்டினர். மேலும், சில பகுதிகளில் ஒரு சில குறைகளைத் தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, அபிவிருத்தி நடவடிக்கைகள் சிலவற்றை செய்யவும் ஹக்கீம் தரப்பினர் தயாராகி வருகின்றனர்.

இதன் மூலம், அதாஉல்லாவிடம் தாம் இழந்த பிரதேசங்களையும், வாக்காளர்களையும் மீளக் கைப்பற்றலாம் என முஸ்லிம் காங்கிரசினர் தீவிரமாய் நம்புகின்றனர். இந்நிலையானது, அதாவுக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தக் கூடிய சாத்தியங்களைத் தோற்றுவித்துள்ளது. மிகப் பெரும் பலமாகத் திகழ்ந்த தனது சகாவை இழந்த நிலையில், எதிரிகளுடன் தனியாளாக களத்தில் இறங்கிப் பொருதும் போது, மகிழ்சியடைய முடியாத முடிவுகளை அதாஉல்லா பெற்றுவிடவும் கூடும்!

ஆனால், இதுவரைகாலமும் அபிவிருத்தி ரீதியாக அம்பாரை மாவட்டத்தினைப் புறந்தள்ளி வந்த ஹக்கீம்,  தற்போது அதாஉல்லாவுக்கு எதிராகத் தோன்றியுள்ள சில அதிருப்திகளையும், மற்றும் தனக்கான சில அரசியல் சாதகத் தன்மைகளையும் வைத்துக் கொண்டு காய்களை நகர்த்த முயற்சிப்பதானது கனவான்தன அரசியல் பண்பல்ல என்கிறார் பல்கலைக் கழகப் புத்திஜீவி ஒருவர்!

அம்பாரை மாவட்ட மக்களின் பாராளுமன்ற உறுப்பினரான ரவூப் ஹக்கீம், அந்த மக்களுக்கு கடந்த பொதுத் தேர்தலின் பிறகு இதுவரை குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு எவ்விதமான அபிவிருத்திகளையும் செய்து கொடுக்கவில்லை என்று முஸ்லிம் காங்கிரசின் தீவிர தொண்டர்களே (இவர்கள் கட்சிக்குள் போராளிகள் என அழைக்கப்படுவர்) குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், தவித்த முயலை அடிக்கும் செயலாய் ஹக்கீம் குழுவினர் சினிமாத்தனமான (சின்னத்தனமான என்று வாசித்து விட வேண்டாம்) அரசியல் செய்யாமல், மக்களுக்கான அபிவிருத்திகளையும், தேவைகளையும் நிறைவு செய்து கொடுத்து, அதனூடாக அவர்களின் மனங்களை வெல்ல முயற்சிக்கலாம் என்று அந்த பல்கலைக்கழக புத்திஜீவி மேலும் கூறுகிறார்.

இந்தவேளையில், அதாஉல்லாவும் தனது கடந்த கால அரசியலை சற்றே நேர்மையுடன் சுய விமர்சனத்தன்மையோடு நினைத்துப் பார்த்தல் அவசியமாகும். இவர் அக்கரைப்பற்றை (அதாஉல்லாவின் சொந்த ஊர்) மையப்படுத்திய அபிவிருத்திகளையே தொடர்ந்து செய்து வருவதையும், ஏனைய பிரதேசத்தவர்கள் அது குறித்த அதிருப்தியினைத் தெரிவிக்கும்போது, பண்டிதத்தனமாக விவாதித்து தனது தவறுகளை நியாயப் படுத்துவதையும் ஒதுக்கி விட்டு, சரி – பிழைகளை நேர்மையுடன் இனங்காண முன்வர வேண்டும் என்று கல்முனையின் பிரபல அரசியல்வாதியும், முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் பிரமுகருமான நண்பர் ஒருவர் தற்போதைய அரசியல் நிலை குறித்து கேட்டபோது கருத்துத் தெரிவித்தார்.

மதம், அரசியல் மற்றும் பிரதேசம் என்று வரும் போது நமது மக்களில் அதிகமானோர் அறிவு ரீதியாகச் சிந்திப்பதில்லை. அவர்கள் உணர்வு ரீதியாகவே சிந்திக்கத் தொடங்குகின்றனர். மகா ஜனங்களின் இந்தப் பலவீனத்தை மிக நன்றாகப் புரிந்து வைத்துள்ள நமது அரசியல்வாதிகளோ மக்களுக்கு ஏற்றால் போலவே பேசுகிறார்கள், செயற்படுகின்றார்கள்!

அரசியல் பேச வரும் நமது தலைவர்கள் அல்லாஹ் என்றும், முகம்மது நபி என்றும், குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்றுமே அதிகமாகப் பேசிக் கொள்கிறார்கள். தவிர, அவர்கள் தமது சித்தாந்தங்கள் குறித்தோ, சமூக நலத் திட்டங்கள் குறித்தோ பேசுவதேயில்லை! மக்களை, எவ்வாறு விரைவில் உணர்ச்சிவசப்படுத்த முடியுமோ அம்முறைகளை முதன்மைப்படுத்தியே தமது அரசியல் காய்களை நமது தலைவர்கள் நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். ஆக – இனி, குறிப்பாக அரசியல் என்று வரும்போது கொஞ்சமாகவேனும் அறிவு ரீதியாகச் சிந்திப்பதற்கு நமது மகா ஜனத்தோர்  பழகிக் கொள்ள வேண்டும்!

அப்போது, போலிகளைக் கண்டு ஏமாறுவதிலிருந்தும் நாம் பிழைத்துக் கொள்ள முடியும்!

அன்வர் இஸ்மாயிலின் இழப்பினால் ஏற்பட்டுள்ள இடைவெளியை தமது தரப்பினைக் கொண்டு நிரப்பிக் கொள்ளும் பொருட்டும்… குழம்பிப் போயுள்ள மக்களின் காதுகளில் பூச்சுற்றும் பொருட்டும்… இனி, நமது அரசியல் தலைவர்கள் அனைவரும் தொடர்ந்தும் மக்களைத் தேடி வருவார்கள், பொதுக்கூட்டங்கள் போடுவார்கள், குர்ஆன் – ஹதீஸ்களால் உணர்ச்சிவசப்படுத்துவார்கள்…!

கூறுங்கள் மக்களே…
பதிலுக்கு நீங்கள் எது செய்யப் போகிறீர்கள்???

(இந்தக் கட்டுரையை 14 ஒக்டோபர் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

One Response to “அன்வர் இஸ்மாயில் மறைவும், அம்பாரை மாவட்ட நிலையும்!”

 1. mithuna Says:

  அன்புள்ள மப்ருக்,
  உங்கள் எழுத்துக்கள் நமது சமூகத்துக்கு மிகவும் பிரயோசனமானவை.
  அதிகம் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
  நான் ஒரு கிறுக்கன். என் பக்கத்துக்கு சென்று பாருங்களேன்!
  http://mithuna.wordpress.com


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s