காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

புத்தளம்: பேசப்படாத பிரச்சினையும் அது குறித்த பேச்சுக்களும்! 8 ஒக்ரோபர் 2007

Filed under: அரசியல் — Mabrook @ 4:58 பிப

color-dot.gifமப்றூக்
baize-2.jpgத்தளம் போனாலும் புத்தளம் போகாதே” என்பார்கள் எங்கள் பகுதியில்! இதைச் சொல்பவனுக்கோ, கேட்பவனுக்கோ ஏன் என்று காரணம் தெரியாது. யாரோ எங்கள் மூதாதையரில் ஒருவன் இதை முதன் முதலில் கூறியிருப்பான். அது வாய் வழியாக பரவிவுள்ளது. தவிர இதற்கான அர்த்தத்தையோ அல்லது காரணத்தையோ நாம் தேடித் திரியத் தேவையில்லை. ஏனெனில் இது ஒரு வெற்றுச் சொற் தொடராகும். வெறுமனே எதுகை, மோனை அணிகளை வைத்துக்கொண்டு இவைகள் இவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கும். (கண்டிக்கு போகதவன் பண்டி, கண்டிக்கு போனவன் நொண்டி! காசிருந்தால் கொழும்பு இல்லாவிட்டால் கௌம்பு… என்பவை போல!)

உண்மையாகவே, நான் பயணித்த ஊர்களில் புத்தளம் மக்களும் இனிமையானவர்கள்! அவர்களின் விருந்தோம்பல் பண்பு மிகச் சிறப்பானது. அவர்களை நாடிச் செல்வோரை அந்த மக்கள் ஆதரிக்கும் முறையோ அலாதியானது! இல்லாவிட்டால் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை கடந்த 18 வருடங்களாக அவர்கள் தமது பிரதேசத்தில் வைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்!

வடபுலத்தவர் இடம்பெயர்வும் புத்தள மக்களின் இழப்பும்!

புத்தளம் மாவட்ட மக்கள், குறிப்பாக முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து இடம்பெயந்து தமது பகுதியில் வசிக்கும் மக்களுடன் தமக்கான வளங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டே வாழ்கின்றனர். இன்னும் விபரித்தால், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக இம்மாவட்ட மக்கள் தமக்கான பல்வேறு உரிமைகளையும், சலுகைகளையும் ஏதோவொரு வீதத்தில் மிக நீண்ட காலமாக இழந்தே வருகின்றனர்.

குறிப்பாக, 1990 களுக்குப் பின்னர் (வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் புத்தளம் மாவட்டத்தில் குடியேறிய பிறகு) புத்தள முஸ்லிம் மக்களினது கல்வி, சுகாதார மற்றும் பொருளாதார விடயங்களில் வளர்ச்சி குன்றியதோர் நிலையே காணப்படுகிறது. உதாரணமாக, புத்தளம் மாவட்டத்துக்காக வழங்கப்பட்டு வந்த பலகலைக்;கழக அனுமதி எண்ணிக்கையானது 1990 க்கு பின்னர் அங்கு குறியேறிய வடபுல மாணவர்களாலும் பங்கிடப்படுவதால், புத்தளம் மாவட்ட மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த அனுமதித் தொகையில் அதிகமானவைகளை இடம்பெயர்ந்த மாணவர்களே பெற்றும் கொள்கின்றனர்! இதனால் புத்தள மாவட்டத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கையில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் புத்தள மாவட்ட முஸ்லிம் மக்கள் கல்விமான்களை இழந்து விடக்கூடியதோர் துரதிஷ்டவசமான நிலை தோன்றலாம் என்கின்றார் மு.காங்கிரஸ் சார்பான வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஹியா! மேலும், அனைத்துத் துறைகளிலும் இந்நிலையே காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறானதோர் பின்னணியிலேயே கடந்த மாதம் 23 ஆம் திகதியும் அதனை அடுத்த நாளும் புத்தளத்தில் அமைச்சர்கள் றிசாத் பதியுதீன் மற்றும் பாயிஸ் ஆகியோருக்கும் அவர்களின் கூட்டத்தாருக்குமிடையில் இடம்பெற்ற முரண்பாடுகளை நாம் ஆராய வேண்டியுள்ளது!

மேலே கண்டவாறு, புத்தளம் முஸ்லிம் மக்கள் தமது வளப்பங்கீட்டில் இடம்பெயர்ந்த வடபகுதி மக்கள் மூலமாக பாதிக்கப்பட்டிருந்தாலும் கடந்த 18 வருடங்களாக அவைபற்றி பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. தமது சமூகத்தைச் சேர்ந்த வடபுல மக்களுக்கு ஏற்பட்ட அந்தத் துயரத்தினை புத்தள மக்கள் இதுவரை காலமும் அவர்களோடு பகிர்ந்தே வருகின்றனர். ஆனால், இப்போது மட்டும் என்னாயிற்று??

பாரபட்சம் காட்டுகிறார் அமைச்சர் றிசாத் – பாயிஸ் குற்றச்சாட்டு!

இடம்பெயர்ந்த வடபகுதி மக்களுக்காக தாம் இத்தனை தியாகங்களை செய்திருந்த போதிலும், அம்மக்களின் பிரதிநிதியான அமைச்சர் றிசாத் பதியுத்தீன் புத்தளம் மக்களாகிய தம்மை பாரபட்சத்தோடு பார்ப்பதாகவும், அபிவிருத்திச் செயற்பாடுகள் இடம்பெறும் போது, இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்குப் பூரண சேவைகளைப் புரியும் அதேவேளை, புத்தளம் மக்களுக்கோ அதில் கால்வாசியைக் கூட செய்வதில்லை எனவும் கூறுகிறார் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதியமைச்சர் பாயிஸ்!

ஆனால், வடமாகாண மக்களையும், புத்தளம் மக்களையும் தான் எவ்வித பாகுபாடுகளுமின்றி ஒரு கண்கொண்டே பார்ப்பதாகக் கூறும் அமைச்சர் றிசாத் பதியுதீன், கால்நடைப் பிரதியமைச்சர் பாயிஸ் மற்றும் மாகாணசபை உறுப்பினர் எஹ்யா தவிர்ந்த புத்தளம் பிரதேசத்தின் அனைத்து அரசியல்வாதிகளும் தன்னுடன் அன்பாகப் rishad-00.jpg
பழகுவதாகவும் தெரிவிக்கின்றார்.

இவ்வாறானதொரு நிலையில்தான் கடந்த 23 ஆம் திகதியன்றின் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது!

அன்று நடந்ததுதான் என்ன?

குமுறலின் வெளிப்பாடு!

வடமாகாணத்திலிருந்து இடம்பெயந்த மக்களுக்கு சுமார் 7800 வீடுகளை அமைத்துக் கொடுக்க உலக வங்கி தீர்மானித்திருந்தது. எனவே, இந்த வீடுகளை இடம்பெயர்ந்து புத்தளம் முகாம்களில் வசிக்கும் வடபுல மக்களுக்கு அமைத்துக் கொடுப்பதற்கான செயற்பாடுகளில் அமைச்சர் றிசாத் ஈடுபட்டிருந்தார். அதேவேளை, குறித்த 7 ஆயிரத்து 800 வீடுகளில் 1800 வீடுகளை இடம்பெயர்ந்தோரின் முகாம்களுக்கு அருகாமையில் வசிக்கும் உள்ளுர் மக்களுக்கு வழங்குவதற்கும் உலக வங்கியின் இணக்கத்துடன் அமைச்சர் றிசாத் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்! எனவே, இந்த விடயம் தொடர்பில் புத்தளம் மாவட்ட உள்ளுர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிளுடன் சந்திப்பொன்றை நடத்தும் பொருட்டு றிசாத் பதியுத்தீன் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதற்கமைய, புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபரின் விடுமுறைக்கால விடுதில் அந்தக் கூட்டம் இடம்பெற்ற போதுதான் அங்கு அந்த விபரீதம் இடம்பெற்றது!

வீடொன்றை அமைத்துக் கொள்ளும் பொருட்டு, இடம்பெயர்ந்த மக்களுக்கு 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவினையும் அதேவேளை உள்ளுர் மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாவினையும் வழங்கவுள்ளதாக அமைச்சர் றிசாத் அக்கூட்டத்தில் அறிவித்தார். ஆனால், உள்ளுர் மக்களுக்கும் இரண்டரை லட்சம் ரூபாவே வழங்கப்பட வேண்டுமென்று மாகாணசபை உறுப்பினர் எஹ்யா கோரிக்கை விடுத்தார். இவர் பிரதியமைச்சர் பாயிஸ் சார்பானவர்! இவ்வாறு சம தொகையினை வழங்குவதற்கு தனக்கும் விருப்பமென்றும் ஆனால், உலக வங்கி இதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் றிசாத் கூறவே ஆரம்பித்தது வாய்த்தர்க்கம்!

அமைச்சர் றிசாத் மற்றும் பாயிஸ் ஆகிய இருவரும் மு. காங்கிரசில் இருந்தபோதே தமது அரசியலை எதிரும் புதிருமாகவே நடத்தி வந்தவர்கள்! மு.கா.வை விட்டும் றிசாத் பிரிந்த பின்னர்  இவர்களின் ஆடு, புலி ஆட்டம் கடுமையானது. இந்த நிலையில், புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த மு.காங்கிரஸ் சார்பான மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும், நகரசபை உறுப்பினர்களும் அமைச்சர் றிசாத்துக்கு ஆதரவாகச் செயற்படத் தொடங்கினர். இதனால், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய நிலைபோல், றிசாத் மீதான பாயிஸின் கோபம் மேலும் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது!

இந்தப் பின்னணியில், அன்று நடைபெற்ற கூட்டமும் றிசாத் அணியென்றும், பாயிஸ் அணியென்றும் பிரிந்தது. பிரதியமைச்சர் பாயிஸ் தன்னை அன்று மிக கீழ்நிலை வார்த்தைகளால் திட்டியதாகவும், அகதி என்று பேசியதாகவும் அமைச்சர் றிசாத் கூறுகிறார். அதேவேளை, அந்த தர்க்கத்தின்போது, பாயிஸ் தன்னை முகத்தில் தாக்கியதாக மு.கா. சார்பான மாகாண சபை உறுப்பினர் நியாசும் குற்றம் சாட்டுகிறார். இவர் அமைச்சர் றிசாத்தின் ஆதரவாளர்.

பிளவுகளும் – பிரிவுகளும்!

மேற்படி விடயம் குறித்து விசாரிக்கும் பொருட்டு நியாஸை தொடர்பு கொண்டு பேசினோம்! அதன்போது, ”முஸ்லிம் காங்கிரசில் இருந்து கொண்டு வேறு கட்சிக்காரரான அமைச்சர் றிசாத்துக்கு நீங்கள் ஆதரவு வழங்க காரணம்தான் என்ன” என்று நாம் அவரிடம் கேட்டதற்கு ”எமது பிரதேசத்துக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் நிறையவே அபிவிருத்திப் பணிகளைச் செய்கிறார். அந்தவகையில் – மக்களுக்கு சேவை செய்பவர் எவராக இருந்தாலும் நாம் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம். இதில் என்ன தவறு இருக்கிறது” என்கிறார். இதே கருத்தையே மு.கா. சார்பான நகரசபை உறுப்பினர் முஹ்சியும் முன்வைக்கிறார்.

ஆனால், பிரதியமைச்சர் பாயிஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கூறும் விடயம் வேறாகவுள்ளது. ”அமைச்சர் றிசாத் எமது பகுதியிலுள்ள ஒருசில அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட ரீதியில் சில வசதிகளைச் செய்து கொடுத்து, அவர்களை விலைக்கு வாங்கியிருக்கின்றார். இதன் மூலம் புத்தளம் மாவட்ட முஸ்லிம் மக்களை அரசியல் ரீதியில் அவர் பிரித்தாள நினைப்பதோடு, எமக்கெதிராகவும் அவர்களைத் தூண்டி விடுகின்றார்” என்கின்றனர்!

அமைச்சர் பாயிஸிடம் உலக வங்கியின் வீட்டுத்திட்டம் தொடர்பில் நாம் பேசினோம். அவ்வேளை, ”இடம்பெயர்ந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட வீடுகளில் ஒரு பெரும் பகுதியை உள்ளுர் மக்களுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்பதும், அதற்காக வழங்கப்படும் பணத்தொகை தொடர்பாக சர்ச்சையில் ஈடுபடுவதும் எவ்வகையில் நியாயம்” என நாம் கேட்டோம்! மேலும், ”இடம்பெயர்ந்த மக்களுக்காக நீங்கள் நிறையவே தியாகம் செய்திருக்கின்றீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மைதான். அதற்காக, அந்த மக்களுக்கான அபிவிருத்தியில் பங்கு கேட்கிறீர்களே, அவ்வாறெனில் நீங்கள் அந்த மக்களுக்கு கடந்த காலங்களில் செய்த நன்மைகள் எவ்வகையில் தியாகங்களாகும்” எனவும் வினவினோம். அதற்கு பாயிஸ் பதிலளிக்கையில்தான் ஒரு போதும் இவ்வீட்டுத் திட்டத்தில் பங்கு கேட்கவில்லை என்று கூறியதோடு, அமைச்சர் றிசாத் பதியுதீனுடனான தமது முரண்பாட்டுக்கான அடிப்படைப் பிரச்சினையே வேறானது என்றும் கூறினார்!

அவ்வாறெனில், என்னதான் அந்த அடிப்படைப் பிரச்சினை?

பிரச்சினையின் பின்னணி

மிக நீண்ட காலமாக புத்தளம் முஸ்லிம் மக்கள் தேர்தல் ஒன்றின் மூலம் தமக்கான பாராளுமன்றப் பிரதிநிதியொருவரைப் பெற்றுக் கொள்ள முடியாததொரு நிலை அங்கு காணப்பட்டு வருகின்றது. காரணம் பல்வேறு கட்சிகளிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவதால் முஸ்லிம் மக்களின் வாக்குகள் சிதறுவதும், அதனால், எந்தவொரு வேட்பாளரும் குறித்த தொகை வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போவதுமாகும்! கடந்த பொதுத் தேர்தலின் போது கூட, மு.கா. சார்பில் போட்டியிட்ட கே.ஏ. பாயிஸ் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்த போதும் கூட, அவரால் வெற்றிபெற முடியவில்லை!

ஆகவே, இந்நிலையை மாற்றி புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் சார்பாக பாராளுமன்றப் பிரதிநிதியொருவரைப் பெறுவதென்றால், அனைத்து அரசியல்வாதிகளும் கட்சி பேதங்களை மறந்து ஓரணியில் இணைவதோடு, ஏதாவது ஒரு கட்சி சார்பாக மட்டும் தேர்தலில் போட்டியிடவும் வேண்டும்; என்கின்றதொரு யோசனை மிக நீண்ட காலமாக அப்பகுதி புத்திஜீவிகளால் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்தவகையில், தற்போது புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்துத் தரப்பினரும் மேற்சொன்னது போன்றதொரு பொது உடன்பாட்டுக்கு வந்துள்ளனர். ஆனால், இதை குழப்பியடிக்கும் வகையில் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் புத்தளத்திலுள்ள சில அரசியல்வாதிகளின் மூலமாக அவரின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அப்பிரதேசத்தில் வளர்ப்பதற்கும், அக்கட்சி சார்பாக எதிர்காலத்தில் தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கும் ஆயத்தமாகிறார் என்று கூறும் பிரதியமைச்சர் பாயிஸ், றிசாத்தின் இந்த நடவடிக்கையானது புத்தளம் மக்களுக்குச் செய்யும் துரோகமில்லையா எனக் கேள்வியும் எழுப்புகின்றார்.

அரசியல் கட்சியொன்றை ஒருவர் குறித்த பிரதேசத்தில் வளர்ப்பதும், அக்கட்சி சார்பாக தேர்தலொன்றின் போது வேட்பாளர்களை நிறுத்துவதும் எந்த வகையில் துரோகமாக முடியும்? ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாறு செயற்படுவதற்கு எவருக்கும் உரிமை இருக்கிறதே என்று நாம் பாயிஸிடம் கேட்டால், ”ஜனநாயகம் என்பதை ஒரு பக்கம் வைத்து விட்டு, கொஞ்சம் மனத்தன்மையோடு யோசித்துப் பாருங்கள்! 18 வருடங்களாக வடக்கு மக்களுக்கு தஞ்சமளித்துக் கொண்டிருக்கும் புத்தளத்துக்கு அமைச்சர் றிசாத் செய்யும் கைமாறு, அவர்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து விடுவதுதானா?” என்று நம்மிடம் திரும்பக் கேட்கிறார் பாயிஸ்!

ஆனால், பிரதியமைச்சர் பாயிஸ் இவ்வாறு ஆர்ப்பரித்துத் திரிவதற்கு காரணம், றிசாத்தின் நடவடிக்கைகளால் தனது அரசியலில் ‘மண்’ விழுந்து விடுமோ என்கின்ற பயம்தான்! தவிர, புத்தள மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டு விடும் என்று அவர் பேசும் ‘பொது நலன்’ பற்றிய கதையெல்லாம் வெறும் ‘கப்சா’ என்கிறார் புத்தள மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர் ஒருவர்!

இவ்வாறு இரண்டு தரப்பினரும் தம்மைச் சரியென்று நிறுவி வடுவதிலேயே அக்கறை காட்டி நிற்கின்றனர்! ஆனால், இங்கு யார் சொல்வது சரி என்பது முக்கியமல்ல. எது சரி என்பதே முக்கியமாகும்!

எவ்வாறிருப்பினும், புத்தளத்தில் கடந்த 23 ஆம் திகதியன்று இடம்பெற்ற பிரச்சினையின் வேர் வேறாக இருக்கிறது என்பது மட்டும் தற்போது தெளிவாக தெரிகிறது! இந்த நிலையில், நமது சில ஊடகத்தினர் வேரை விட்டு விட்டு, வேறு எதையெதையோவெல்லாம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அமைச்சர்கள் றிசாத் மற்றும் பாயிஸ் ஆகியோர்களுக்கிடையில் எரியும் இந்த நெருப்பு அணைய வேண்டும். அதை அணைக்க வேண்டும் என்பதில் நல்ல மனம் படைத்த எவரிடமும் மாற்றுக் கருத்துகள் இல்லை. அதேவேளை, பிரச்சினையின் ஆதிமூலம் பற்றி அறிந்தோரே இவ்விவகாரத்தில் நடுநிலையாளர் பாத்திரத்தை வகித்தல் வேண்டும் என்பதும் அவசியமாகும்! அந்த நடுநிலையாளர்கள் நம்மவர்களாகவும் இருத்தல் வேண்டும்!

இல்லாவிட்டால், குரங்கு அப்பம் பிரித்த கதையாக பிரச்சினை வேறு திசை நோக்கி திரும்பி விடக் கூடும்!

இந்தக் கட்டுரையுடன் இணைத்து வாசிக்க வேண்டிய சில விடயங்கள்:

அகதி எனும் பதம் குறித்த விளக்கம்!

‘அகதி’ என்கின்ற சொற்பிரயோகத்தில் நமது சில ஊடகங்களுக்கும், மக்களுக்கும் மற்றும் சில அரசியல்வாதிகளுக்கும் கூட சரியான தெளிவும், புரிதல்களும் இல்லை என்பதை நாம் அவ்வப்போது அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது!

வன்செயல், பிணக்குகள், நெருக்கடி, சஞ்சலமுண்டாக்கும் சம்பவம் மற்றும் மனித உரிமை மீறல் காரணமாக ஒரு நாட்டின் ஆள்புல எல்லையைக் கடந்து வேறோரு நாட்டுக்குள்  தஞ்சமடையும் நபரொருவரையே நாம் அகதி என்று அழைக்க முடியும்!

உள்ளுரில் ஒருவர் தனது பகுதியிலிருந்து அவரது நாட்டின் மற்றொரு பிரதேசமொன்றுக்கு மேற்படி காரணங்களின் பொருட்டு இடம்பெயர்வாராக இருந்தால் அவரை அல்லது அவர்களை நாம் உள்ளக இடம்பெயர்ந்தோர் (internally displaced person) என்றே அழைக்க வேண்டும்.

முஹாஜிரீன்கள் – அன்ஸாரீன்கள்

இடம்பெயர்ந்தோரை முஹாஜிரீன்கள் என்றும் உள்ளுர்காரர்களை அன்ஸாரீன்கள் என்றும் முஸ்லிம்களில் சிலர் குறியீட்டு முறையில் அழைப்பதுண்டு. உண்மையில், இது ஒரு தொன்மக் குறியீடாகும்!

முஹாஜிரீன்கள் என்போர் மக்கா வாசிகள். அன்சாரீன்கள் என அழைக்கப்படுவோர் மதீனா வாசிகள்.

முஹம்மது நபியவர்கள் இஸ்லாத்தை மக்கா நகரில் இருந்து கொண்டு பரப்பி வந்தவேளையில், எதிரிகள் அவரைக் கொன்றுவிடத் திட்டமிட்டனர். இதனால், நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தனது தோழர்களுடன் மதீனா நகருக்கு இடம் பெயர்ந்தார்கள்!

இந்த வரலாற்று நிகழ்வின் அடிப்படையில்தான் முஹாஜிரீன்கள் – அன்ஸாரீன்கள் எனும் பதங்கள் நம்மவர்களால் குறியீடுகளாக பயன்படுத்தப்படுகின்றன! (புத்தளத்தில் அன்று நிகழ்ந்த சர்ச்சையின்போது, பிரதியமைச்சர் பாயிசும் அவரின் ஆதரவாளர்களும் இப்பதங்களை பிரயோகித்ததாக தெரியவருகிறது)

இடம்பெயர்ந்தோருக்கான பங்கீட்டில் இஸ்லாமியத் தீர்ப்பு!

முஹம்மது நபியவர்கள் மதீனாவுக்கு இடம்பெயர்ந்த பின்னர், முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்குமிடையில் யுத்தமொன்று இடம்பெற்றது. அந்த யுத்தத்தில் முஸ்லிம்களின் அணி வெற்றி பெற்றது. நபியவர்கள்தான் அந்த அணிக்குத் தலைமை தாங்கினார்கள்.

யுத்தத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் பொருட்களை, வெற்றி பெற்றவர்கள் தம்மிடையே பகிர்ந்து கொள்ளும் வழக்கமொன்று அக்காலத்தில் இருந்தது! அதற்கொப்ப யுத்தத்தில் கிடைத்த பொருட்களை முஹம்மது நபியவர்கள் பங்கீடு செய்தார்கள்! இதன்போது, அன்ஸாரீன்கள் என அழைக்கப்பட்ட மதீனா வாசிகளிடையே சலசலப்பொன்று ஏற்பட்டது. அதாவது நபியவர்கள் பொருட்களைப் பங்கிடும்போது, முஹாஜிரீன்கள் என அழைக்கப்பட்ட மக்கா வாசிகளுக்கு சற்று அதிகமாக வழங்கி விட்டதாக கூறியே மதீனா வாசிகள் அதிருப்தி கொண்ட நிலையில் அவ்வாறு சலசலத்துக் கொண்டார்கள்! உண்மையாகவே, இவ்விடயம் பொய்யில்லை. மக்கா வாசிகளுக்கு நபியவர்கள் கொஞ்சம் அதிகமாகத்தான் கொடுத்துமிருந்தார்கள்!

மதீனா வாசிகளின் மேற்படி அதிருப்தி பற்றி அறிந்து கொண்ட முஹம்மது நபியவர்கள், மதீனா நகரத்தவர்களை அழைத்துக் கூறியதன் சுருக்கம் இதுதான்; ”மக்கா வாசிகள் இஸ்லாத்துக்காகவும், என்மீது கொண்ட அன்பு காரணமாகவும் தமது சொத்துக்களையும், வாழ்விடங்களையும் இழந்து இடம்பெயர்ந்தவர்கள். நீங்கள் அவ்வாறு புலம்பெயரவில்லை. எனவே, இழந்தவர்கள் என்கின்ற வகையில்தான் மக்கா வாசிகளுக்கு நான் சற்று அதிகமாகக் கொடுத்தேன்”  என்று கூறிய நபியவர்கள், ”அன்ஸாரீன்களே, உங்களுக்கு நான் இருக்கின்றேன்” என்றார்களாம்!

ஆக, இந்த இஸ்லாமிய வரலாறானது, இடம்பெயர்ந்தோர்களுக்கான பங்கீடுடானது எவ்வாறு அமைய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக நமக்கு உணர்துகின்றது!

ஜோக் ஒன்று!

இந்தியர்: எங்கள் நாட்டில் ரௌடிகள் எல்லாம், அமைச்சர்களாகிப் போய்விட்டனர்..

இலங்கையர்: அட, இது என்ன பிரமாதம்… எங்கட நாட்டில அமைச்சர்களே ரௌடிகளாகி விடுகின்றனர்.

(இந்தக் கட்டுரையை 07 ஒக்டோபர் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s