காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

அதாஉல்லா: முரண்களின் தொகுப்பு! 1 ஒக்ரோபர் 2007

Filed under: சந்திப்பு — Mabrook @ 2:05 பிப

color-dot.gifமப்றூக்
athaullah-11.jpgரசியல்வாதிகளொன்றும் ஆகாயத்திலிருந்து குதித்தவர்களல்லர். அவர்கள் மக்களின் பிரதிநிதிகள்! தமது பிரதிநிதிகளின் தவறுகளை சுட்டிக் காட்டுவதற்கும், பிழைகளைத் தட்டிக் கேட்பதற்கும் மகா ஜனங்களுக்கு அனைத்து விதமான உரிமைகளும் உள்ளன!

அரசியல்வாதிகள் பிரபலம் விரும்பிகள். தாம் பேசப்பட வேண்டுமென்பதற்காகவே பலர் எதையாவது பேசிக் கொண்டேயிருப்பார்கள். ஆனால், வரலாறுகளில் இவர்கள் பேசப்பட மாட்டார்கள்! ஒரு சிலர் மட்டும்தான் அரசியலில் – வாழும் வரலாறாகவும், வாழ்ந்த பின் வரலாறாகவும் பேசப்படுவர்!

அரசியல்வாதிகளில் இரண்டு வகையானோரின் பெயர்கள் வரலாற்றினில் பதியப்பட்டிருக்கும்! அவை எப்படி வாழ வேண்டுமென்கின்ற உதாரண புருஷர்கள் சிலரின் பெயர்கள் அடுத்து எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணமாக வேறு சிலரின் பெயர்கள்! அந்தவகையில் கிழக்கு அரசியலில் விரும்பியோ, விரும்பாமலோ இன்று அதிகமான மக்களால் உச்சரிக்கப்படும் பெயர்களிலொன்று அதாஉல்லா என்பதாகும்!

இவரின் அரசியலோடு முரண்பட்டவர்கள், சமரசம் செய்ய முடியாதவர்கள், இவரின் அபிமானிகள் மற்றும் அரசியல் எதிரிகள் என்று தமிழ், முஸ்லிம் மக்களில் அதிகமானோர் இவரை இன்று அவதானித்துக் கொண்டிருக்கின்றனர்!

மேற் சொன்ன தரப்பினரின் ஆதங்கங்கள், மன உணர்வுகள் பற்றி ஓரளவேனும் அறிந்துகொண்ட ஓர் ஊடகவியலாளனாக, இரவுப் பொழுதொன்றில் அமைச்சர் அதாஉல்லாவுடன் நேர்காணல் ஒன்றுக்காக உரையாடக் கிடைத்தது!

எனது கேள்விகளில் அனேகமானவை உங்களைச் சந்தோசப்படுத்தும் விதமாக அமையாது” என்றேன். சிரித்துப் பின் சம்மதித்தார்!

சுமார் 9.15 மணியளவில் ஆரம்பித்த எங்கள் உரையாடல், பின்னிரவு 12.30 வரை நீண்டது…

கேள்வி: இணைந்த வடக்கு – கிழக்கை, தமிழ் தரப்பினர் தமது தாயகமென்கிறார்கள். (கவனிக்க: புலிகளின் பரம வைரியான டக்ளஸ் தேவானந்தா கூட, இனப்பிரச்சனைத் தீர்வாக தமது கட்சி சார்பில் முன்வைக்கும் தீர்வு யாதெனில் ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, என்றுமே பிரிக்க முடியாத வடக்கு – கிழக்கு இனைந்த மாகாணம்’ என்பதுதான்) ஆனால், அதைப் பிரிக்க வேண்டுமென தீவிரமாகச் செயற்பட்டவர்களில் நீங்களும் ஒருவர். இதன் மூலம் தமிழ் மக்களுக்கு நீங்கள் துரோகமிழக்கவில்லை என்பதை எவ்வாறு நியாயப்படுத்தப் போகின்றீர்கள்?

பதில்: உண்மையாகவே இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டபோது, முஸ்லிம் மக்களுக்கே துரோகமிழைக்கப்பட்டது. அது கள்ளத்தனமாகச் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தம். வரலாற்றில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்தது வெறும் 20 வருடங்கள்தான். ஆனால், அந்தக் காலப்பகுதியினில்தான் இந்த மாகாணங்கள் பெரும் யுத்த களங்களாக மாறியிருந்தன. மேலும், தற்காலிகமாக ஒரு வருடம் இணைக்கப்பட்டு, பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த மாகாணங்கள் இணைக்கப்பட்டன. ஆனால், அது நடைபெறவில்லை. வடக்கு வாதிகள் அவர்களின் அதிகாரத்தின் மேலாதிக்கத்தை வடக்கு – கிழக்கு இணைப்பு மூலமாக, கிழக்கு மக்கள் மீது நிறுவ முற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. வடக்கு வாதிகளின் ஆதிக்க செயற்பாடே பிரச்சனைகளுக்கெல்லாம் மூல காரணமாகும். ஒருமுறை பிரதம நீதியரசர் கூறும் போது, வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராக மிகச்சாதாரண பொது மகனொருவர் வழக்கு தாக்கல் செய்திருந்தாலும், இதே தீர்ப்புத்தான் வழங்கப்பட்டிருக்கும் என தெரிவித்திருந்தார். கிழக்கு மாகாணம் இப்போது அதற்கேயுரிய தனித்துவத்தோடு தனியாக இருக்கின்றது. சிலவேளை, பிரிந்திருப்பதிலும் பார்க்க இரண்டு மாகாணங்களும் சேர்ந்திருப்பதே நன்மையெனும் ஒரு நிலையேற்பட்டால், மீண்டும் நாம் இணைப்பது பற்றி யோசிக்கலாம். ஆனால், அந்த முடிவினையும் கிழக்கு மக்களே எடுக்க வேண்டும்.

கேள்வி: வடக்கு வாதிகள் எனும் பதத்தை அடிக்கடி பாவிக்கின்றீர்களே… கிழக்குப் பிரிப்பு பற்றியும், கிழக்குத் தமிழர் மற்றும் வடக்குத் தமிழர் என்றும் பிரித்துப் பேசும் நீங்கள், வட மாகாண மக்களின் பார்வையில் கிழக்கு வாதிதானே?

பதில்: நான் கிழக்கு வாதியல்லன்! வட மாகாணத்தை கிழக்குடன் இணையுங்கள் என நான் ஒரு போதும் கூறவில்லையே. கிழக்கில் எங்களை சுதந்திரமாக வாழ விடுங்கள் என்றுதான் கேட்கிறோம்! வடக்கு மாகாணத்தவர்கள் அங்கு வாழ்ந்த தமிழ் முக்குவர் சமூகத்தை விரட்டியடித்திருக்கிறார்கள் என வரலாறு கூறுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை விரட்டியதும் இந்த வடக்கு வாதிகள்தான். ஆனால், கிழக்கிலிருந்து நாம் எந்தவொரு யாழ்ப்பாணத்தவரையோ, வடபுலத்தவரையோ விரட்டவுமில்லை. எங்களின் கீழ் வாழுங்கள் என அச்சுறுத்தியதுமில்லை!

கேள்வி: மறைந்த தலைவர் அஷ்ரப்பின் வழியையே பின் தொடர்வதாக கூறுகின்றீர்கள். ஆனால், அவர் தனது சொந்த பகுதியை அபிவிருத்தி செய்ததை விடவும், ஏனைய பகுதிகளுக்கே முக்கியத்துவம் வழங்கினார். ஆனால், உங்கள் சொந்த ஊரான அக்கரைப்பற்றிலேயே நீங்கள் அபிவிருத்தியைக் குவிப்பதாகத் தெரிகிறதே!

பதில்: அஷ்ரப் அவர்கள் அவரின் ஊருக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்பதை விடவும், அபிவிருத்தியை எல்லாப் பிரதேசங்களுக்கும் சமமாகப் பங்கீடு செய்ய வேண்டுமென்பதற்காகவே அவ்வாறு செயற்பட்டார். மட்டுமன்றி, அன்று அவரிடமிருந்த அமைச்சு அபிவிருத்திக்கானது அல்ல. அது புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சென்பதால், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிவாரணங்களை வழங்கியே ஆக வேண்டியிருந்தது! ஆனாலும், அவருடன் இருந்த பலர் அவரைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. அதனால், பெருமளவு பணம் வெறும் மதில்களாகவும், கழிவறைகளாவுமே மாறின! எனவே, கடலில் கரைத்த புளியாக அபிவிருத்திக்கான பணத்தை ஒவ்வொரு ஊருக்கும் பிரித்துப் பிரித்துச் செலவிடாமல், ஒவ்வொரு ஊருக்கும் தேவையான அபிவிருத்திகளை மொத்தமாக செய்து பூரணப்படுத்தி வருகிறேன். அதுமட்டுமன்றி, அம்பாரை மாவட்டத்தில் பயங்கரவாதத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசம் அக்கரைப்பற்று என்பதாலேயே நான் அந்த பிரதேசத்துக்கு அதிக அபிவிருத்திகளை வழங்குகிறேன். மேலும் அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தினுடைய மத்திய பகுதி அக்கரைப்பற்று ஆகும். ஆகவேதான் சில முக்கிய அலுவலகங்களை இங்கு அமைத்துள்ளோமே தவிர, அது என் ஊர் என்பதற்கான முன்னுரிமையல்ல. மட்டுமன்றி என்னை நூறு வீதம் அரசியலில் ஆதரித்த பிரதேசம் என்பதாலும், அக்கரைப்பற்று மக்களுக்கு நான் நன்றியுடையவனாக இருக்க வேண்டியுள்ளது!

கேள்வி: முஸ்லிம்களுக்கான அரசியல் நிறுவனமாக எது இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?

பதில்: இலங்கையைப் பொறுத்தவரை இன ரீதியானதோர் அரசியல் இருக்கக் கூடாது! குறிப்;பாக வடக்கு, கிழக்கில் அவ்வாறு இருப்பது எவ்வகையிலும் சரியாகாது. தலைவர் அஷ்ரப் அவர்களும் கூட, முதலில் முஸ்லிம் சமூகத்தை ஒரு கொள்கையின் அடிப்படையில் ஒன்று சேர்ப்பதற்காகவே முஸ்லிம் காங்கிரரை ஆரம்பித்தார். பின்னர் அவர் எதிர்பார்த்த ஒரு நிலை வந்ததும் முஸ்லிம் காங்கிரசைக் கைவிட்டு, அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் நுஆ எனும் கட்சியை உருவாக்கினார். அவர் விட்ட இடம்தான் நான் இப்போது இருக்கும் இடம்!

கேள்வி: ஆனால், மு.காங்கிரசிலிருந்து விலகிய பின்னர், தேசிய முஸ்லிம் காங்கிரஸ் என்று இன ரீதியானதொரு பெயரில் கட்சியொன்றை நீங்கள் ஆரம்பித்தீர்கள்தானே?

பதில்: ஆம், எமது நிலைப்பாட்டை முதலில் முஸ்லிம் மக்களுக்கு புரிய வைப்பதற்காகத்தான் நாம் அந்த பெயரில் வந்தோம். மட்டுமன்றி, நானும் முஸ்லிம் காங்கிரஸ் காரன்தான், தலைவர் அஷ்ரப்பின் கொள்கையில்தான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவும் அந்த பெயர் தேவையாயிருந்தது. ஆனால், மிகக் குறுகிய காலமொன்றில்தான் நாம் அந்தப் பெயரில் இயங்கினோம்!

கேள்வி: மிகக்குறுகிய அந்தக் காலத்துக்குள் உங்கள் நிலைப்பாட்டை மக்களுக்கு புரிய வைத்துவிட்டீர்களா?

பதில்: ஆம், மக்கள் புரிந்து கொண்டார்கள்! (மக்கள் இவரின் நிலைப்பாட்டைப் முழுமையாகப் புரிந்திருந்தால், முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கிய அல்லது ஹக்கீமுக்கு வழங்கிய வாக்குகளை விடவும் அதிக வாக்கினை இவருக்கு வழங்கியிருக்க வேண்டும்! ஆனால், அதாஉல்லாவை விடவும் மு.கா. தலைவர் ஹக்கீம்தான் கடந்த பொதுத் தேர்தலில் அதிகப்படியான வாக்கினைப் பெற்றிருந்தார்)

கேள்வி: நீங்கள் எதிர்பார்க்கும் முஸ்லிம் காங்கிரஸ் எப்படியிருக்க வேண்டும்?

பதில்: முஸ்லிம் என்ற பெயரில் இன ரீதியாக அரசியல் கட்சி இருக்கக் கூடாது என்று ஏற்கனவே கூறி விட்டேன்! இது கேட்பதற்கு சற்று கசப்பாகத்தான் இருக்கும். தலைவர் அஷ்ரப் அன்று நுஆ வை ஆரம்பித்து முஸ்லிம் காங்கிரசுக்கு முற்றுப் புள்ளி வைத்தபோது, எங்களுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. பின்னர் யதார்த்தத்தை உணர்ந்து கொண்டோம்! தற்போது கிழக்கிலுள்ள மூன்று சமூகங்களும் அவரவர் இனத்தின் பெயரில் அரசியல் நடத்த ஆரம்பித்தால், மீண்டும் மீண்டும் பிளவுகளும், தனித்து இயங்கும் நிலையும்தான் ஏற்படும். ஓற்றுமைப்பட முடியாது! மேலும், அல் குர்ஆனையும், ஹதீசையும் தனது கட்சி யாப்பில் கொண்டுள்ள கட்சிதான் மு.காங்கிரஸ். எனவே, அக்கட்சி அவைகளுக்கு மாற்றமில்லாமல் இயங்க வேண்டும். ஆனால், அக்கட்சி அவைகளுக்கு முரணாகவே செயற்படுகின்றது. சாதாரண மக்களைப் போன்று இறைவனையும், தூதர் முஹம்மது நபியையும் நாம் ஏமாற்ற முடியாது. தலைவர் அஷ்ரப் மரணிப்பதற்கு முன்னரான சம்மாந்துறை இறுதிக் கூட்டத்தில், கட்சியின் யாப்பிலிருந்து குர்ஆன், ஹதீஸ் ஆகியவைகளை எடுத்து விடுமாறு நான் பகிரங்கமாகவே கோரினேன். அவர் உயிருடன் இருந்திருந்தால், நிச்சயமாக அதைச் செய்திருப்பார்.

கேள்வி: அப்படியென்றால் குர்ஆன், ஹதீஸ் ஆகியவைகள் கட்சி யாப்பிலிருந்து நீக்கப்பட்ட மு.காங்கிரசையா எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: இல்லையில்லை! (அவசரமாக மறுக்கின்றார்) அவைகளின் படிதான் நடக்க வேண்டுமென கட்சி யாப்பில் கூறப்பட்டிருந்தால், எவ்வித மாற்றங்களுமின்றி அதன் வழியே நடக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றேன்.

கேள்வி: ஒவ்வொரு மேடையிலும் புலிகளை மிக கடுமையாக விமர்சித்து வருகிறீர்களே, இதனூடாக நீங்கள் எதிர் பார்ப்பது என்ன?

பதில்: நாம் எல்லா விடயங்களிலும் உண்மையைப் பேச வேண்டும். அந்த வகையில், புலிகள் நிறையப் பிழைகளைப் புரிந்திருக்கின்றார்கள். அவைகளை நான் விமர்சிக்கின்றேன். ஆனால், எல்லா மக்களாலும் இதைப் பேச முடியாது! வயல்களுக்கும், தொழுகைக்காக பள்ளிவாயல்களுக்கும் சென்ற முஸ்லிம்கள் புலிகளை ஏசினார்களா? இல்லையே! ஆனால், அவர்கள் புலிகளால் கொல்லப்பட்டார்கள். நான் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மட்டும் பேசவில்லை. பெரும் பெரும் தமிழ்த் தலைவர்கள் புலிகளால் அழிக்கப்பட்டமை பற்றியும் பேசி வருகிறேன். புலிகளிடம் துப்பாக்கியுள்ளதால், உண்மையை உண்மையென்று கூறாமல் விட முடியாது! புலிகளை மட்டுமல்ல, பிழைகளை எவர் செய்தாலும், அதை பிழையென்றுதான் கூறவேண்டும்! இதில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயம் என்னவெனில், இந்த விடயங்களை நான் மட்டும் கூறி வருவதுதான் சிலருக்கு
பிரச்சனையாக உள்ளது. என்னோடு இனைந்து இதை எல்லோரும் கூறினால், ஒரு புரட்சியே வெடிக்கும்!

கேள்வி: ஆலங்குளம் – நுரைச்சோலை கிராமத்தில் அமைச்சர் பேரியல் அஷ்ரப் செயற்படுத்தவிருந்த வீடமைப்புத் திட்டமொன்றை, அரசியல் குரோதம் காரணமாக நீங்கள் தடுத்து விட்டதாக கதையொன்று உலாவுகிறது! உங்கள் சுய அரசியலுக்காக மக்களின் நலனில் இப்படி கைவைப்பது அநியாயமில்லையா?

பதில்: சத்தியமாக நான் அவ்வாறு செய்யவில்லை! இந்த திட்டத்துக்கான முயற்சியானது தலைவர் அஷ்ரப் அவர்களின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு, அது அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் ஏற்றுக் கொள்ளவும் பட்டிருந்தது. தற்போது நடந்தது என்னவென்றால், நுரைச்சோலை எனும் கிராமம் சிங்களக் கிராமங்களின் சுற்றுவட்டத்தில் அமைந்துள்ளது! இங்கு குறிப்பிட்ட வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் சவூதி தூதுவரையெல்லாம் அழைத்து வருவதாக அண்மையில விளம்பரப்படுத்தி, தடல்புடலான வேலைகளெல்லாம் இடம்பெற்றதால், இந்தப் பகுதியில் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு ஏதோ நடைபெறப் போவதாக கூறி, அம்பாரையிலுள்ள ஒரு சிங்கள அரசியல்வாதியின் பின்னணியில் இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உண்மையாகவே இந்த வீடமைப்புத் திட்டம் நிறைவேற வேண்டுமென நான் பிரார்த்தனை செய்திருக்கிறேன். அங்கு குடியேறவுள்ளவர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட எனது பகுதி மக்கள்! ஆனால், தமது திட்டம் தோற்றுப் போகும் போது, இங்குள்ள அரசியல்வாதிகள் சிலர் அவைகளுக்குக் காரணம் அதாஉல்லாதான் என்று கதைகளை உருவாக்குகின்றார்கள்!

கேள்வி: வடக்கு – கிழக்கு பிரிப்பை, கிழக்கிலுள்ள தமிழ் மக்களும் ஆதரிப்பதாக கூறி வருகிறீர்களே… அவ்வாறு ஆதரவு தெரிவிக்கும் தமிழர்கள் யார்? குறித்துச் சொல்ல முடியுமா?

பதில்: சொன்னால், நாளை அர்களைச் சுட்டு விட்டுப் போய்விடுவார்கள்! நீங்கள் யாரையெல்லாம் நினைப்பீர்களோ, அவர்களை விடவும் பெரியவர்கள் இந்த பிரிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். கிழக்கின் பழம்பெரும் அரசியல்வாதிகள், புத்தி ஜிவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்று பல தரப்பினரும் இதில் உள்ளனர். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரை இங்குள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் தாய், பிள்ளைகளாய் வாழ்ந்தவர்கள். இவர்களில் பலர் என்னோடு நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் இது குறித்துப் பேசி தமது ஆதரவுகளையும் தெரிவித்துள்ளார்கள்.

கேள்வி: அதாஉல்லாவும் அன்வர் இஸ்மாயிலும் மனம் வைக்காமல் இறக்காமம் பிரதேசத்துக்கு தனியானதொரு பிரதேச செயலகத்தை எவராலும் ஏற்படுத்த முடியாது என்று, அண்மையில் நீங்கள் கலந்து கொண்ட இறக்காமம் கூட்டமொன்றிலேயே, அமைச்சர் அன்வர் இஸ்மாயில் தெரிவித்தார்! அம்பாரை மாவட்டத்தில் உங்களுடாகத்தான் அனைத்தும் இடம்பெற வேண்டுமென நினைப்பது சர்வதிகாரத் தோரணையில்லையா? 

பதில்: இல்லை அவ்வாறில்லை! அவர் கூறவந்தது என்னவெனில், இறக்காமத்தின் எல்லைப் பிரச்சனையை வைத்தும், பிரதேச செயலகம் பெற்றுத் தருவதாக ஆசை காட்டியும் அரசியல் செய்து வந்தவர்கள், சிலவேளை, இப்போது வந்து அதை செய்து தருவதாக சொன்னாலும், நாங்கள் விரும்பாமல் அது நடக்காது என்பதுதான்! நாம் இந்தப் பிரதேச மக்களின் பிரதிநிதிகள், முக்கியமான அமைச்சர்கள். எனவே, அவ்வாறு ஏதாவது இந்த மாவட்டத்தில் நடப்பதென்றால் கூட, எங்களுக்கு தெரிந்துதானே நடக்க வேண்டும்.

கேள்வி: அப்படியென்றால் இறக்காமத்துக்கு ஒரு பிரதேச செயலகத்தை பெற்றுக் கொடுக்க ஹக்கீம் ஏதாவது முயற்சியெடுத்தால், ஆதரவு கொடுப்பீர்களா?

பதில்: ஆம் நிச்சயமாக! மேலும், அதைக் கொடுப்பது ஹக்கீமில்லையே, அந்த துறைக்குரிய அமைச்சர்தானே! இறக்காமம் பிரதேசத்துக்கு தனியானதோர் பிரதேச சபை வழங்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி நான் ஜனாதிபதிக்கும், அமைச்சருக்கும் விரிவான கடிதமொன்றையும் அனுப்பி வைத்திருக்கிறேன். அது தொடர்பான நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்று வருகிறன. ஆக, மக்களுக்கு நல்லது நடக்கும் போது, அதைக் குழப்புகின்ற சிறு பிள்ளைத்தனமான அரசியலெல்லாம் நம்மிடமில்லை!

கேள்வி: உங்களுடனான அனைத்து முரண்பாடுகளோடும் ஹக்கீம் சமரசம் செய்ய முன்வருகிறார் என வைத்துக் கொள்வோம்! முஸ்லிம் காங்கிரசில் மீண்டும் இணைவீர்களா

பதில்: அவரில்லாத (ஹக்கீம்) அமைப்பென்றால் சேரலாம்! ஹக்கீமிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டு விட்டோம். முஸ்லிம் மக்களினதோ அல்லது வடக்கு, கிழக்கு மக்களினதோ பிரச்சினைகள் பற்றியே தெரியாத மகனவர். இந்த நாட்டின் பிரச்சனையே வட, கிழக்கில்தான் தங்கியுள்ளது. ஆக, இந்த பகுதியின் நிலபுலன்கள், கலாசாரம், தமிழ் – முஸ்லிம் உறவுகள், விரிசல்கள், ஊர்கள் மற்றும் அடையாளங்கள் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாத ஒருவர் இந்தப் பிரச்சனைகளைத் தீப்பதற்கு தலைமை வகிக்க முடியுமா?

கேள்வி: பயங்கரவாதத்தால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசம் அக்கரைப்பற்று அதனால்தான் அதிகமான அபிவிருத்திகளை அந்த ஊருக்கு செய்து வருவதாக நீங்கள் கூறுகின்றீர்கள். (கவனிக்க: அமைச்சரின் சொந்த ஊரும் அக்கரைப்பற்றுத்தான்) ஆனால், பாதிக்கப் பட்ட பிரதேசத்துக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென்றால், அதற்கு மிகப் பொருத்தமான பிரதேசம் கல்முனையல்லவா?

பதில்: இல்லை. கல்முனையில் ஒன்றுமே அழியவில்லை! சந்தையோ, பஸ்நிலையமோ, ஆஸ்பத்திரியோ, நூல் நிலையமோ அழியவுமில்லை பாதிக்கப்படவுமில்லை. ஆனால், அக்கரைப்பற்றில் இதுவெல்லாம் அழிந்திருக்கின்றன, பாதிக்கப்பட்டிருக்கின்றன! அம்பாரை மாவட்டத்தில் இதற்கு பொருத்தமான ஊர் அக்கரைப்பற்றுத்தான். (அமைச்சரின் இந்தப் பதிலோடு முரண்பாடு உள்ளவர்கள் குறிப்பாக கல்முனைப் பிரதேச மக்கள் தகுந்த ஆதாரங்களோடு அதனை நிரூபிக்கலாம்)

கேள்வி: அண்மைக் காலமாக, உங்கள் பேச்சில் ஆத்மீகம் அதிக இடத்தைப் பெறுகிறது. சூபித்துவம் பற்றியெல்லாம் பேசுகிறீர்கள். சூழ்ச்சிகளும், வெட்டுக் குத்துக்களும் நிறைந்த அரசியலில் இருந்து கொண்டு, நீங்கள் பேசும் ஆத்மீகத்தை உண்மையாகவே யதார்த்தத்தில் கடைப்பிடிக்க முடிகிறதா?

பதில்: ஆத்மீகம் என்பது எல்லோருக்கும் தேவையானதொன்று! ஒருவர் ஆசிரியராக இருக்கின்றார், இன்னொருவர் தச்சன், வேறோருவர் கொல்லன், மற்றொருவர் வைத்தியர், இன்னொருவர் அரசியல்வாதியாக இருக்கின்றார் என்பதற்காக ஆத்மீகம் என்பது இவர்களிடம் இல்லாமல் போய்விடாது! ஆத்மீகம் என்பது எல்லாவற்றிலுமிருக்கிறது. அரசியலில் இருந்து கொண்டு சமூகத்துக்கு அநீதி செய்தால் ஆண்டவன் மன்னிக்கவே மாட்டான். ஆக, இந்த அரசியலுக்காக ஒரு பொய்யைக் கூடச் சொல்லக் கூடாது எனும் அடிப்படையில் நான் மிகவும் உறுதியாயிருக்கிறேன். சில பிழைகளை ஆண்டவன் மன்னிக்கக் கூடியவன் ஆனால், சமூகம் சார்ந்த பொதுவான விடயங்களில் பிழைகள் விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றேன். ஆண்டவனை நான் மிகவும் நம்புகிறேன். அவன்தான் எல்லாவற்றையும் நிகழ்த்துகின்றான் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். இந்துக்களும், ஏனைய சயத்தவர்களும் ‘எல்லாமே ஆண்டவனில்தான் தங்கியுள்ளதென’ நம்புகின்றார்கள்! ஆக, இந்த அடிப்படையில் சில உண்மைகளைப் நான் பேசும் போது, அதிகமாக ஆத்மீகம் பேசுவாதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்.

கேள்வி: அரசாங்கத்தில் இணைந்து மு.காங்கிரஸ் அமைச்சுப் பதவிகளைப் பெற்றமையானது, அரசியலில் உங்களுக்கு எவ்வகையான சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக நினைக்கிறீர்கள்?

பதில்: எந்தவகையிலும் சவால்களில்லை. ஏனென்றால், அவர்களுக்கு ஜனாதிபதிப் பதவியைக் கொடுத்தாலும் சமூகத்துக்காக எதுவும் செய்ய மாட்டார்கள். ஆகவே அவர்கள் பொருட்டேயல்ல! அவர்களிடம் கிழக்கு அபிவிருத்தி அமைச்சு இருந்தது, முஸ்லிம் சமய, கலாசார அமைச்சுக்கள் ஹக்கீமிடம் இருந்தன. ஆனால், அவைகளை வைத்துக் கொண்டு என்ன செய்தார்கள். முஸ்லிம்களின் பெருநாளை முஸ்லிம் சமய, கலாசார அமைச்சரே நேரடியாக மறுத்த சம்பவம் அந்தக் காலத்தில்தானே நடந்தது. ஒஸ்லோவுக்கு பேச்சுவார்த்தைக்காகச் சென்றவர், அங்கிருந்து பிரச்சனை காலத்தில் முஸ்லிம்களின் எத்தனை வீடுகள் அழிந்தன, எந்த ஊர்கள் பாதிக்கப்பட்டன என்று தெரியாமல் தொலைபேசி மூலமாக இங்குள்ளவர்களிடம் பதறியடித்துக் கொண்டு விசாரித்த நிகழ்வெல்லாம் அப்போதுதானே நடந்தது! ஆக, இவ்வாறானவர்கள் எப்படி நமக்கு சவாலாக இருக்க முடியும்?! உண்மையாகவே, இவர்களுக்கு இன்னுமின்னும் அமைச்சுப் பதவிகள் கிடைக்க வேண்டும். அப்போதுதான், இவர்களுக்கு எத்தனை பதவிகள் கிடைத்தாலும் சமூகத்துக்கு எதுவுமே செய்ய மாட்டார்கள் என்பதை மக்களும் புரிந்து கொள்வார்கள். மேலும், நாம் இப்படி வேறு வேறு தரப்பினராகப் பிரிந்திருப்பதுதான் மக்களுக்கும் ஆரோக்கியமானது. எல்லா அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்துவிட்டால், சிலவேளை சுயநல அரசியலுக்காக எல்லோரும் சேர்ந்து மக்களை முட்டாள்களாக்கி விடுவார்கள்! தெரிவுக்கான சந்தர்பங்களை மக்களுக்கு வழங்க வேண்டும்! பல தரப்புக்கள் இருக்கும் போதுதான் மக்களுக்கு சரி எது, பிழை எது என்று இனங்கண்டு, நல்லதை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

கேள்வி: மறைந்த உங்கள் தலைவர் அஷ்ரப் இவ்வாறு கூறவில்லையே! அவர் எதிர்க் கட்சியில்லாத ஜனநாயகம் பற்றித்தானே பேசினார்!

பதில்: அன்றைய நிலை அவ்வாறுதான் இருந்தது! முஸ்லிம் சமூகத்தை ஆரம்பத்தில் ஒரேயணியில் சேர்ப்பதற்காகவே அவர் அவ்வாறு பேசினார். (இந்தக் கேள்வியின் பின்னணி அல்லது கேள்வி சுட்டிய விடயம் குறித்து அமைச்சர் அதாஉல்லாவுக்கு தெளிவிருக்கவில்லை அல்லது அவர் தெரிந்திருக்கவில்லை என்பது நமக்குப் புரிந்தது! காரணம், அஷ்ரப் அவர்கள் நுஆ வை பிரகடனம் செய்த அவரது அந்திம காலத்தில்தான் மூவினங்களும் இணைந்த கட்சி பற்றியும், எதிர்க்கட்சியில்லாத ஜனநாயகப் பாராளுமன்ற முறை பற்றியும் பேசி வந்தார்! ஆரம்ப காலங்களில் எதிர்க்கட்சியில்லாத ஜனநாயகம் குறித்து, அஷ்ரப் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேசவேயில்லை! ஆனால், முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப காலத்தில் அஷ்ரப் அவ்வாறு பேசியதாகவும், இயங்கியதாகவும் அதாஉல்லா கூறுகின்றார்)

கேள்வி: அபிவிருத்திகளால் ஒரு சமூகத்துக்கான அனைத்தும் கிடைத்துவிடும் என்று நம்புகிறீர்களா? இல்லையென்றால், வேறு என்ன தேவைப்பாடுகள் உள்ளன?

பதில்: பொருளாதார மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். நமது நில, நீர் வளங்கள் மூலம் இன்னும் நாம் உச்சப் பயன்களைப் பெற்றுக் கொள்ளவில்லை. பொருளாதார வசதி எல்லோரிடமும் இருந்தால் அதிகமான பிரச்சனைகள் இல்லாமல் போய்விடும். வறுமையிருக்காது, சண்டைகள் இருக்காது, ஆயுத மோதல்கள் இடம்பெறாது. எனவே, நல்லதொரு பொருளாதார மாற்றம் எல்லோரிடமும் ஏற்படுத்தப்படல் வேண்டும். அதன் பிறகுதான் அபிவிருத்திகள்!

கேள்வி: கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால், உங்கள் கட்சி போட்டியிடுமா?

பதில்: கட்சியென்றிருந்தால் போட்டியிடத்தானே வேண்டும்.

கேள்வி: போட்டியிடுவதில்லை எனக் கூறும் கட்சிகளும் இருக்கின்றனவே!

பதில்: எமது கட்சி பதியப்பட்டு மிகக் குறுகிய காலத்திலேயே தேர்தலில் குதித்த கட்சி. நாம் கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவோம்! ஆனால், தனித்தா அல்லது கூட்டாகவா என்பது பற்றி அப்போதைய நிலைவரங்களைப் பொறுத்து முடிவெடுக்கப்படும்.

கேள்வி: இனப்பிரச்சனைக்கான தீர்வுத் திட்டத்தில் முஸ்லிம்களுக்கான பங்கு என்னவாக அமைய வேண்டுமெனக் கருதுகிறீர்கள்?

பதில்: வடக்கு – கிழக்கு இணைந்த மாநிலத்துக்குள் முஸ்லிம்களுக்கு ஒரு அதிகார அலகு கிடைக்குமென்றால் கூட, அதுவொரு பிழையான முறையாகும்! ஏனெனில் அது நிரந்தரமான சமாதானத்துக்கு வழிவகுக்காது! உதாரணத்துக்கு நிலத் தொடர்பற்ற ஓர் அதிகார அலகு முஸ்லிம்களுக்கு கிடைப்பதாக வைத்துக் கொண்டால், அதன் மூலம் தமிழர்களுக்கான அலகும் நிலத் தொடர்பற்றதாகவே அமைய முடியும். காரணம் – இன்று இரண்டு தழிழ் ஊர்களுக்கு அடுத்ததாக ஒரு முஸ்லிம் பிரதேசமும், இரண்டு முஸ்லிம் ஊர்களுக்கு நடுவில் ஒரு தமிழ் கிராமமும் என்று கிழக்கு மாகாணத்தில் இரண்டு இனத்தவர்களும் பின்னிப் பிணைந்தே வாழ்கின்றனர். எனவே, அந்த நிலத் தொடர்பற்ற அதிகார பகிர்வு முறையும் தோல்வியடையும் திட்டமாகவே அமையும்! இங்கு தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்தே இருக்க வேண்டும். பிரச்சனைகள் ஏற்பட்டாலும் நாளை கூடிப்பேசி சமரசம் செய்து கொள்ள இரண்டறக் கலந்து இருக்க வேண்டும். இதை விட்டு விட்டு, ஒருவரின் அதிகார அலகுக்குள் மற்ற இனத்தவர் ஒரு வேளான்மை செய்வதற்கு கூட, அனுமதிபெற்று வாழும் நடைமுறையானது சாத்தியமற்றதாகும்! இனரீதியாக இந்த நாட்டைப் பிரிக்க முடியாது. அப்படிப் பிரிப்பது ஆபத்தானது. உண்மையாகவே மாநிலங்களுக்கு அதிகாரம் கொடுப்பது பற்றித்தான் நாம் யோசிக்கலாம். உதாரணமாக வட மாநிலத்தில் அதிகமாக வாழும் தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம். ஆனால், அங்கு வாழும் முஸ்லிம் மக்களின் உரிமைகளை அவர்கள் பேண வேண்டும். கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிகமாக இருப்பதால் அவர்கள் சிங்கள மக்களின் உரிமைகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நிலையில் பிரச்சனைகள் எழாது! உளவியல் ரீதியாகவும் மக்கள் சுதந்திரத்தை உணர்வார்கள். தமிழ் மக்களின் பிரதேசங்களுக்கு முஸ்லிம்களும், முஸ்லிம்களின் பிரதேசங்களுக்கு தமிழர்களும் சென்று வருவார்கள். ஆனால், இப்போது நிலை என்னவென்றால், பக்கத்து ஊரிலிருக்கும் தமிழ் மக்களுக்கே நம்மை யாரெனத் தெரியாது. ஆகவே, சாத்தியமான விடயங்கள் பற்றியே நாம் பேச வேண்டும். நானும் அரசியலுக்காக வேண்டுமென்றால் ‘முஸ்லிம்களுக்கு நிலத் தொடர்பற்ற அதிகார அலகு’ தேவையென கோஷம் போடலாம்! ஆனால், அந்த அரசியல் எனக்குத் தேவையில்லை. இன அடிப்படையில் ஒவ்வொருவரும் தமக்கு அதிகார அலகு தேவையென்று இந்த சிறியதொரு நாட்டைப் பிரித்துக் கூறுபோட ஆரம்பித்தால் நிலை என்னவாகும்? ஆக – எல்லோரும் சேர்ந்து வாழும் முறையொன்றே நமக்கு தேவையாக இருக்கின்றது!

கேள்வி: மக்களுக்கு அல்லது உங்கள் சமூகத்துக்கு உங்கள் அரசியல் வாழ்க்கையில் செய்த சேவையென்று எதையாவது நினைத்து திருப்திப் படுகிறீர்களா?

பதில்: முஸ்லிம்களுக்கு ஆகக்குறைந்தது தம்மை பேச்சுவார்த்தை மேசையில் தனித்தரப்பாக அங்கீகரிக்க வேண்டுமெனும் ஆதங்கம் ஒன்றிருக்கிறது. மறைந்த தலைவர் கூட, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்போது, முஸ்லிம்களின் விருப்பு வெறுப்புகள் கவனத்தில் எடுக்கப்படாதது குறித்தும், முஸ்லிம் சமூகம் தரப்பில் பேசுவதற்கு அப்போது எவரும் பலம் பெற்றிருக்கவில்லை என்பது குறித்தும் கவலையிருந்தது! ஒருதடவை முஸ்லிம்களுக்கான அரசியல் தேவைகள் பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றிய மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் இறுதியாக கூறுகையில் ”இன்று என்னுடைய குரலை நீங்கள் ஒத்துக் கொள்ளவில்லையென்றால், எனது மக்கள் கிழக்கு மாகாணத்தைப் பிரிக்கக் கோருவர். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்” என்று கேட்டார். ஆக, எங்கள் பிரச்சனை குறித்து செவிமடுக்கப்படாத போது, நான் கிழக்கு மாகாணத்தைப் பிரிக்க வேண்டுமென கோரினேன். அது இப்போது நிகழ்ந்து விட்டது! சரி, வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டுமா? வாருங்கள் பேசுவோம்! ஆக – எமது அரசியல் தேவைகள், உரிமைகள் பற்றிப் பேசும்போது துரும்புச் சீட்டாக இனி கிழக்கை நாம் பயன்படுத்த முடியும்! எனவே, இந்த மாபெரும் சந்தர்ப்பத்தை எனது மக்களுக்கு பெற்றுக் கொடுத்ததை நான் ஒரு ஆத்ம திருப்தியாகவே கருதுகிறேன்!

0

(இந்தக் கட்டுரையை 30 செப்டம்பர் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

2 Responses to “அதாஉல்லா: முரண்களின் தொகுப்பு!”

  1. thani manithan,oor,katsi,pathavi..enum ellaa patruhalilum irunthu emmai viduviththu athaavullaavin paechchukku uyir koduththu paarkumpoathu veeram ,thaniththuvam,thairiyam,thooranoakkam,nalla arasiyalukkaana aarambam,thelivu….ena pala parimaanangal,,,nam naattu arasiyalukku biraanamaa iruppathai unara mudihirathu… best wishes..

    # best wishes to Mabrook…

    • Rinas.M Says:

      SMM.Muszhaaraff க்கு தொகுப்பின் அர்த்தம் புரிஞ்சிதா இல்ல புரியல்லையா என்டு எனக்கு விளங்கல. இல்லை என்டால் இது மப்ரூக்குக்கு உரிய பதிலாய் இருக்க வேணும். என்டாலும் மப்ரூக் இந்த அளவு அத்தாவுல்லாவ வதைச்சிருக்க கூடாது. அதிலும் அவருடைய பதிலுடன் சேர்த்து உங்கள் விளக்கங்கள் தரப்பட்டது பக்கச்சார்பையும் தாக்கி எழுதுவதையும் காட்டுகிறது. என்டாலும் “அதாவுல்லா, முரண்களின் தொகுப்பே!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s