காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

அஷ்ரப்: முஸ்லிம் அரசியலின் வர்த்தகக் குறியீடு! 24 செப்ரெம்பர் 2007

Filed under: அரசியல் — Mabrook @ 1:00 பிப

மப்றூக்

நான்கு அல்லது ஐந்து கூட்டத்தார்கள் இருக்கின்றனர். இவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வேறு, வேறு கொள்கைகள். ஒவ்வொரு கொள்கையும் மாறுபட்டவை! இந்த கூட்டத்தார்கள் கொள்கை ரீதியாக முரண்பட்டு எப்போதும் தமக்குள் முட்டி, மோதிக் கொள்வார்கள். இவர்களில் ஒருவர் மற்றவரை அனுசரிப்பதுமில்லை, அங்கீகரிப்பதுமில்லை. ஆனால், இந்த கூட்டத்தார் அனைவருமே, தாம் பின்பற்றும் கொள்கைகள் ஒரே இடத்திலிருந்து வந்தவை என்றும் தமது கொள்கை வகுப்பாளர் ஒருவர்தான் என்றும் கூறிக் கொள்கின்றார்கள்!

மேலே சொன்னதை உங்களால் நம்ப முடிகின்றதா? அல்லது இதை விசித்திரம் என்று வியந்து கொள்கிறீர்களா? எப்படியிருந்தாலும் இந்த விடயத்தை நீங்கள் நம்பியே ஆகவேண்டும். ஏனெனில், இது கலப்படமற்ற ஓர் உண்மைக் கதையாகும்!

ரவூப் ஹக்கீமின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ், பேரியலின் தலைமையில் தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) மற்றும் அமீரலியின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்று நான்கு கட்சிக்காரர்கள்! ஒவ்வொரு கட்சியினருக்கும் ஒவ்வொரு கொள்கை. அரசியல் வசை பாடல்களும், சண்டைகளும் அடிக்கடி இவர்களுக்குள் இடம்பெறுவதுண்டு. ஆனால், தமது அரசியல் தலைவனென்று இவர்கள் எல்லோரும் கூறிக் கொள்வது எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களைத்தான்! (ஆரம்ப பந்தியில் கூறிய கதையை உண்மையில்லை என்று, இப்போது உங்களால் ஒதுக்கி விட முடிகிறதா?)

முல்லிம் காங்கிரசின் முன்னாள் தலைவர் அஷ்ரப் அவர்கள் இந்த வருடமும் நமது முஸ்லிம் அரசியல்வாதிகளால் செப்டம்பர் 16 ஆம் திகதியன்று மறக்காமல் நினைவு கொள்ளப்பட்டார். (செப்டம்பர் 16 – அஷ்ரப் அவர்களின் மறைவு தினம்). மேலே பெயர்குறித்துச் சொல்லப்பட்ட அரசியல் தரப்பினரில் சிலரும் அன்னாரை நினைவு கூர்ந்தனர், நினைவு நாளில் நிகழ்வுகள் நடத்தினர். தங்கள் அரசியல் தலைவன் அஷ்ரப்தான் என்று மேலும் ஒருமுறை தண்டவாரமடித்தனர்! ஆனால், இவைகள் அனைத்தையும் அவர்கள் பிரிந்து நின்றே செய்து காட்டினர்! (கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் நினைவு நிகழ்வுகளும், அறிக்கை விடுதல்களும் பெரிதாக இவ்வருடம் ‘களை கட்டவில்லை’)

எம்.எச்.எம். அஷ்ரப் – முஸ்லிம் தேசத்தின், அதன் அரசியலின் மறுக்க முடியாத அடையாளம் என்பதை யாரும் மறுதலிக்க முடியாது! அவர் பிறவித் தலைவன். சாதாரண மனிதனுக்குரிய பலவீனங்களைக் கொண்டிருந்த ஓர் அசாதரண மனிதர் அவர்!

அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் ஊடகவியலாளர் விக்டர் ஐவன் எழுதிய கட்டுரையொன்றில், ‘அஷ்ரப் போன்ற தலைவருக்காக முஸ்லிம் சமூகம், ஆகக் குறைந்தது இன்றும் 50 வருடங்களாவது காத்திருக்க வேண்டி வரும்’ எனக் குறிப்பிட்டமை இன்னும் நமது ஞாபகத்திலுள்ளது!

நினைத்துப் பார்க்கையில் அஷ்ரப் அவர்களின் பிழைகள் கூட அழகாகக் தெரிகின்றன! ஆனால், இன்றின் நமது முஸ்லிம் தலைவர்கள் பலரின் சரிகள் கூட, விகாரமாயும், விபரீதமாயும் தோன்றி மறைகின்றன!

உண்மையாகச் சொன்னால், சிறிமாவோ பண்டார நாயக்கவுக்கு விழா எடுக்கும் ஒரு ஐக்கிய தேசிய கட்சிக்காரனையோ, பிரேமதாஸவுக்காக பிறந்த தின நிகழ்வுகள் நடத்தும் சுதந்திரக் கட்சிக்காரரையோ இன்றைய அரசியலில் காண்பது அரிது! ஆனால், அஷ்ரப் அவர்களை கட்சி பேதங்களற்று இன்று எல்லோருமே கொண்டாடுகின்றனர்! இன்னும் சற்றே விளக்கமாய் கூறினால், விருப்பமில்லா விட்டாலும் அவரைக் கொண்டாடியே ஆக வேண்டும் என்பதுதான் முஸ்லிம் அரசியலின் தற்கால நிலையாகும்!

உதாரணமாக, அஷ்ரப் அவர்களால் கேள்வி கணக்கின்றி, ஒற்றை இரவில் மு.காங்கிரஸ் கட்சியை விட்டும் நீக்கப்பட்டவர் அன்றைய மு.கா. தவிசாளர் சேகு இஸ்ஸதீன்! அதனாலேயே அஷ்ரப் வாழ்ந்த காலப் பகுதியில் அவரை இஸ்ஸதீன் மிக கடுமையாக விமர்சித்து வந்தார்! ஆனால், தற்போது போட்டியிட்டுக் கொண்டு அஷ்ரப் அவர்களின் புகழ் பாடுகின்றார் இஸ்ஸதீன். அன்னாரின் பெயரில் அன்னதானமும் வழங்குகின்றார்! இதுதான் இன்றைய தவிர்க்க முடியாத நிலையும் கூட!! அதனால்தான், அஷ்ரப் rauf-hakeem-name.jpg
அவர்களை மறுதலிக்க முடியாத தலைவன் என்று குறிப்பிட வேண்டியுள்ளது. அஷ்ரப்பை மறுதலித்து முஸ்லிம் அரசியலில், குறிப்பாக வடக்கு – கிழக்கு முஸ்லிம்களிடையே இன்று அரசியல் நடத்த முடியாது! அவ்வாறு மறுதலிப்போரை முஸ்லிம் சமூகம் மிக மோசமாகப் புறமொதுக்கித் தள்ளிவிடும்!

இந்த நிலையில்தான், முஸ்லிம் மக்களிடையே அவர்களின் மனங்களிலே ஒரு அழகிய சிற்பமாய் பதிந்து போயுள்ள அஷ்ரப் அவர்களின் பெயரானது, நமது அரசியல்வாதிகளுக்கு இன்று ஒரு கொழுத்த முதலீடாக மாறிப்போயுள்ளது! வடக்கு – கிழக்கில் அரசியல் நடத்தும் நமது குட்டித் தலைவர்களெல்லாம் மக்களைக் கவர்ந்திழுக்க அல்லது அவர்களின் கவனத்தை ஈர்க்க, தமது சுவரொட்டிகளில் கூட அஷ்ரபின் படத்தைப் பதிக்க வேண்டியிருக்கிறது! (குழந்தைகளை அருகில் அழைக்க, அவர்களுக்கு பிடித்தமான மிட்டாய்களைக் காட்டுவது போல!)

சரி, தற்போதைய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கூறுவது போல, அவர்கள் அனைவரும் அஷ்ரப்பின் வழியிலேயே செயற்படுவதாக ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்! அப்படியாயின், அஷ்ரப் அவர்கள் ஒன்றுடனொன்று ஒவ்வாத, முரண்பட்ட கொள்கைகளை வைத்துக் கொண்டு அரசியல் நடத்தியவர் என்றல்லவா அர்த்தமாகிறது!?

அரசியல்வாதிகளான தாம் பிரிந்திருப்பதே முஸ்லிம் சமூகத்துக்கு நல்லது என்கிறார் அதாஉல்லா, ஹக்கீமின் தலைமைத்துவத்தின் கீழ் ஒருபோதும் செயற்பட முடியாது எனக் கூறுகிறார் அமீரலி, தனது தமைமைத்துவத்துக்கு கட்டுப்பட வேண்டியது கடமை என்கிறார் ரவூப் ஹக்கீம், இன ரீதியிலான அரசியலுக்கு அப்பால் சென்று அனைவரையும் ஒன்று சேர்த்தே அரசியல் நடத்த வேண்டுமென்கின்ற நோக்கில் அமைக்கப்பட்ட நுஆ வைக் கையிலெடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் பேரியல் அன்னை!

ஆக, முட்டிமோதி, முரண்படுகின்ற இந்த கொள்கைகள் அனைத்தையும் அள்ளிக் கட்டிக் கொண்டு அஷ்ரப் அவர்கள் நிச்சயமாக அரசியல் நடத்தவில்லை என்பது மட்டும் உண்மையாகும்! அப்படியாயின் இவைகளில் அல்லது இவர்களில், எது அல்லது எவர், சரி அல்லது பிழை என்பது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது?

வியாபாரமாகிப் போயுள்ள அரசியல் உலகில் அஷ்ரப் எனும் பெயர் இன்று வர்த்தகக் குறியீடாயிற்று! தமது கட்சியை அல்லது கருத்துக்ளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த குறியீட்டினை மிக கவனமாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தி வருகின்றனர். தேர்தல் காலங்களில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் மக்களை தமது பொறிகளுக்குள் சிக்க வைக்க, அஷ்ரப் எனும் அந்த பிறவித் தலைவனின் பெயரையும், உருவத்தையும் இரையாகப் பயன்படுத்துகின்றனர்!

சுவையானதொரு சம்பவம் இதற்கு உதாரணமாகிறது! அதாவது, அஷ்ரப் அவர்கள் வெள்ளை நிறத் தலைப்பாகை அணிந்தவாறு எடுத்துக் கொண்ட படமொன்று, சுவரொட்டியொன்றுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தது! அந்த படம் மிக அழகாக இருந்தது. மட்டுமன்றி, சுவரொட்டியும் மக்களைக் கவர்ந்திருந்தது! இதை ஞாபகத்தில் வைத்திருந்த ரவூப் ஹக்கீம் அவர்கள், தானும் தலைப்பாகை அணிந்தவாறு (பச்சை, மஞ்சள் நிறங்களிலான தலைப்பாகை) ஒரு புகைப்படம் எடுத்து, அதை கடந்த பொதுத் தேர்தலின் போது தனது சுவரொட்டிக்காகப் பயன்படுத்திக் கொண்டார்! இப்படி அஷ்ரப் அவர்களின் பெயர், சொல், செயல் என்று அனைத்துமே நம்மவர்களால் அரசியல் வர்த்தக குறியீடாக மாற்றப்பட்டன… பட்டும் வருகின்றன!

அஷ்ரப்பின் வழி நடப்பவர்களாக இன்று தண்டோரா அடித்துக் கொள்ளும் நமது சமஸ்தானத் தலைவர்கள், ஆகக் குறைந்தது முஸ்லிம் சமூகத்துக்காக அவர் கட்டியெழுப்பிய கட்சியையே காக்க முடியாமல் கலைந்து போய் கிடக்கின்றனர்! இந்த லட்சணத்தில் சிலர் தம்மை அஷ்ரப்பின் பிரதியாக அல்லது பிரதிநிதியாக வெளிப்படுத்தும் வேலைகளிலும் ஈடுபடுவதுதான் ஹாஸ்யம் நிறைந்த கொடுமையாகும்!

ஆனால், இந்த பிரதிகளும் பிரதிநிதிகளும் எல்லா வேளைகளிலும் அஷ்ரப் அவர்களை நினைவு கூரும் நடவடிக்கைகளில் இறங்கி விடுவார்கள் என்றும் சொல்வதற்குமில்லை! அவர்களுக்கு லாபம் கிடைக்காத அல்லது, நஷ்டமேற்படுகின்ற இடங்களில் அந்தப் பெயரை இருநூறு வீதம் மறந்தே போவர்! (தேர்தல் காலங்களில் அஷ்ரப்பின் பெயரை நித்திரையில் கூட இவர்கள் நினைத்து பிதற்றுவது வேறு கதை!)

அஷ்ரப் அவர்களின் கடந்த வார நினைவு தினத்தில் அவருக்காக நமது அரசியல்வாதிகள் ஏது செய்தனர்? ஹக்கீமைத் தவிர ஒருவருமே உருப்படியாய் ஒன்றும் செய்யவில்லை!

அஷ்ரப் அவர்களின் பாராளுமன்ற உரைகளைத் தொகுத்து, அவரின் நினைவு தினங்களில் மு.கா. தலைவர் ஹக்கீம் Asraff in parliament எனும் தலைப்பில் நூல்களாக வெளியிட்டு வருகின்றார். அஷ்ரப் அவர்களின் உரைகள், நமது சில பா.உ. களின் உரைகள் மாதிரி உளறல்கள் அல்ல. அவை காலம் தாண்டி வாழும் ‘சொற் சிற்பங்கள்’!அவ்வாறான பெறுமதிமிக்க பேச்சுக்களை எதிர்காலத்துக்காக ஆவணப்படுத்தி வரும் ஹக்கீமின் முயற்சி பாராட்டுக்குரியது! அஷ்ரப் அவர்கள் இருந்திருந்தாலும் நிச்சயமாக மகிழ்ந்திருப்பார். (ஒவ்வொரு முறையும் அந்த நூலின் முதற் பிரதியைப் பெற்றுவரும் பேரியல் அன்னையாருக்கு இவ்வாறு ஏதாவது செய்யத் தோணலியோ??)

அஷ்ரப் அவர்கள் உயிருடன் இருக்கும் போது, முண்டியடித்துக் கொண்டு அவரின் புகழ்பாடும் அவைக் கவிஞர்களுக்கும், அறிக்கைகள் விடும் இடைநிலைத் தலைவர்களுக்கும் இம்முறை என்னாயிற்றோ தெரியவில்லை! அவர்களும் நமது
தேர்தல் கால தலைவர்கள் போல அஷ்ரப் அவர்களை மறந்து போயினர்!

ஆனால், அன்றைய தினம் அனைத்துப் பத்திரிகைகளையும் புரட்டிப் புரட்டிப் பார்த்து ”தலைவர் பற்றிய கட்டுரைகள் ஏதாவது வந்திருக்கிறதா” என உணர்வு பூர்வமாக தவித்த நண்பர் ஒருவரை கண்டபோது, ஆச்சரியப் படாமலிருக்க முடியவில்லை!

அஷ்ரப் அவர்களால் தொழில் பெற்று, அதனூடாக பெறும் வருமானம் வழியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த நண்பர்கள் போன்ற ஆயிரக் கணக்கான மக்கள் இன்னும் மறைந்த அந்த தலைவனை ஆத்மார்த்தமாக ஞாபகித்துக் கொண்டேயிருக்கிறார்கள்!

ஆம், முஸ்லிம் தலைவர்களுக்குத்தான் அஷ்ரப் எனும் நபர் வர்த்தகக் குறியீடு! ஆனால், நமது மக்களுக்கோ அவர், வரலாற்று அடையாளம்!!

(இந்தக் கட்டுரையை 23 செப்டம்பர் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

2 Responses to “அஷ்ரப்: முஸ்லிம் அரசியலின் வர்த்தகக் குறியீடு!”

  1. Ishak Raheem Says:

    இந்த pothu நலன் பார்க்காத arasiyal vathikal இருக்குமட்டும் எமது சமுகம் உருப்பட போவது இல்லை. இக்கட்டுரை நல்ல ஒரு விடயமாக எழுதி இருந்தாலும் இப்போது 4 பிரிவாக பிரிந்து உள்ள இவர்கள் என்றும் ஒன்றாக ஒரு குடையின் கீழ் வரமாட்டார்கள் காரணம் பெர்ம்பன்மையினர் இவர்களை ஒன்று சேரவிட மாட்டார்கள் இவர்கள் பணத்துக்கும் அதிகார நட்கலிக்கும் அடிமை என்பதை அவர்கள் நன்கு அறிந்து வய்துள்ளர்கள். எனவே இதுபோல் 1000 கட்டுரை எழுதினாலும் இவர்களை யாராலும் மாற்ற முடியாது இன்னும் வேண்டுமானால் இந்த 4 பிரிவு காலப்போக்கில் 8 பிரிவாக மாறுவது mattum உறுதி.
    இப்படிக்கு
    சமுதாய நலன் விரும்பி கண்ணீர் விடும் ஒரு அன்பன்
    இஷாக் ரஹீம்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s