காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஜிம்மி: பதினேழாயிரம் ஆண்டுகாலப் பழக்கம்! 17 செப்ரெம்பர் 2007

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 2:23 பிப

நாயொன்றைக் கொல்லாமல் விடுவதற்கான அனுபவக் குறிப்பு
dog-5.gif
color-dot.gifமப்றூக்

ஜிம்மி’ யை நாய் என்று அழைக்க எனக்குப் பிரியமில்லை! ஆனால், அதை அவ்வாறு சொல்லா விட்டால்,  எங்ஙனம் நீங்கள் புரிந்து கொள்ளப்போகிறீர்களோ எனும் ஐயத்தால், ஜிம்மியை ‘நாய்’ என்றே உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டியிருக்கிறது!!

ஜிம்மி – எங்கள் வீட்டில் வாழ்ந்த ‘செவலை’ நிறச் சித்திரம்! ஒரு நாள் அது செத்துப்போன போது, உம்மாவின் அழுகை பலரை உலுக்கியெடுத்தது! எங்கள் நாயின் இழப்பை அடுத்தவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அழுத என் தாயாரை அவர்கள் அதிசயமாகப் பார்த்தனர். ஜிம்மி எங்கள் குடும்பத்தின் பாதி உயிராக இருந்தது பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்!

அதற்குப் பிறகு நாங்கள் செல்லப் பிராணிகள் வளர்ப்பதேயில்லை. அவ்வாறானதோர் இழப்பின் வலியை இன்னுமொரு முறை அனுபவிக்க யாருக்குத்தான் இஷ்டமிருக்கும்!

நாய்களுக்கும் நமக்குமான உறவு 17 ஆயிரம் வருடங்கள் நீளமானவை! சில மரபணு ஆய்வுகள் இந்த தொடர்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்னராகக் கூட இருக்கலாம் என்கின்றன! நாய்களின் மூதாதை சாம்பல் நிற ஓநாய்கள் என்று கூறப்படுகிறது! காட்டில் சுதந்திரமாக அலைந்து திரிந்த அவைகளை, மனிதன் சுயநலத்துக்காக தன்னோடு வாழப் பழக்கியெடுத்ததிலிருந்து, அவைகள் வீட்டுப் பிராணிகளாக மாறிவிட்டன. மனிதனோடு மிக அதிக காலமாக வசித்து வரும் விலங்கு நாயாகத்தான் இருக்க வேண்டுமென்கிறார்கள் விலங்கியல் ஆய்வாளர்கள்! ஆனால், இதே நாய்களை நமது நாட்டில் கடந்த 60 வருடங்களாய், நாம் சட்ட ரீதியாகக் கொன்று வருகின்றோம் (100 வருடங்களுக்கு முன்னரான பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட விசர் நாய்க்கடி நோய் தொடர்பான சட்டம் – Rabies Odinance) இது எத்தனை நன்றி கெட்ட மிருகத்தனம் என்பதை சற்றும் நாம் எண்ணிப்பார்த்ததேயில்லை!

dog-jpeg.jpg

கட்டாக்காலிகளாகத் திரியும் நாய்களையும் அவற்றினால் பரப்பப்படும் நோய்களையும் கட்டுப்படுத்துவதற்காக, நாம் நாய்களைக் கொல்லுகின்றோம்! நினைத்துப் பார்த்தால், நம்மை விடவும் நாய்கள் கொடியவைகளாகத் தெரியவில்லை!

மனிதர்களால் இவ்வாறு தொடரப்படும் நாய்கள் மீதான வாழ்வியல் அச்சுறுத்தலுக்குத் தீர்வு காணும் வகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜூலை மாதத்தின் இரண்டாம் வாரமளவில் கண்டிப்பான உத்தரவொன்றினைப் பிறப்பித்திருக்கின்றார். அது, ”நாய்களை இனி கொல்லவே கூடாது!” (No Kill Policy on dogs) என்பதாகும்.
கடந்த வருடம் 2550 வது புத்த ஜயந்தியை முன்னிட்டு ஜனாதிபதியால் இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்த போதும், தொடர்ந்தும் அதைக் கடைப்பிடிக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கு அழுத்தமாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாய்களின் பெருக்கத்தையும், அதனால் பரப்பப்படும் நோய்களையும் கட்டுப்படுத்த, மனிதபிமான முறைகளைப் பின்பற்றுமாறும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்தப் பணிப்புரை, செய்தியாக ஊடகங்களில் சொல்லப்பட்டபோது, நக்கலாகச் சிரித்த நண்பர் ஒருவர்; ”இலங்கையில் நம்மை விட நாய்கள் கொடுத்து வைத்தவைகள்” – என்றார். ”சரி விடுங்கள், அவரால் முடிந்ததை அவர் செய்கிறார்” என்றேன்! இருவருக்கும் நாங்கள் என்ன பேசிக்கொண்டோம் என்பது புரிந்தது. புன்னகைத்துக் கொண்டோம்.

நாய்கள் பற்றிய எண்ணக்கருக்கள் ஒவ்வொரு மதத்தினரிடையேயும் வேறுபட்டவை! இஸ்லாமியர்கள் நாய்களை வீட்டினுள் வைத்தெல்லாம் வளர்ப்பதில்லை. அதன் எச்சில், எச்சம் மற்றும் மூச்சுக் காற்று போன்றவை அவர்களின் உடலிலோ, ஆடைகளிலோ பட்டால் அவைகளை மிகவும் கடுமையான அசுத்தமானதாகக் கருதி, மிகவும் சுத்தம் செய்வார்கள். ஆனால், ஏனைய மத நண்பர்கள் வீட்டினுள் வைத்து வளர்ப்பார்கள். சிலர் அருவருப்புக் காரணமாக ஒதுக்கி விடுவார்கள்.

மதங்கள் எனும் போதுதான் நினைவுக்கு வருகிறது. குர்ஆனில் கூட, ‘குகை வாசிகள்’ எனும் அத்தியாயத்தில் (சூறத்துல் கஃப்) ஒரு நாய் பற்றிப் பேசப்படுகிறது. அதேபோலவே, பைபிளிலும் 14 தடவைகள் நாய் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு – வளர்ப்பவைகள், வீதிகளில் அலைந்து திரிபவைகள் என்று, நமது நாட்டில் மொத்தமாக சுமார் 20 லட்சம் நாய்கள் வாழ்கின்றதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இவைகளில், ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான நாய்களை நாம் கொன்று விடுகிறோம். ஆம், ஒரு லட்சம் உயிர்கள்!! (அதிகமான நமது உள்ளுராட்சி மன்றங்கள் நாய்களை இவ்வாறு கொல்வதையே, தமது தலையாய சேவையாக மிக நீண்ட காலம் செய்து வந்துள்ளன!) ஆனால், மேலைத்தேச நாடுகளில் நாயொன்றை அவமானப்படுத்தினாலே போதும், நாயின் சொந்தக்காரர் நீதிமன்றம் சென்று விடுவார். உயிர்களுக்கு அங்கு அத்தனை மதிப்பு! (புஷ் போன்ற ரத்தக் காட்டேரிகளை இந்த இடத்தில் மறந்து விடுங்கள்)dog-11.gif

உண்மையாகவே நமது நாட்டிலுள்ள நாய்களின் தொகை குறைவானது என்றே கூற வேண்டும்! நம்பினால் நம்புங்கள், அமெரிக்காவிலுள்ள நாய்களின் தொகை சுமார் 6 கோடியே 80 லட்சம்! வருடமொன்றுக்கு அங்கு 50 லட்சம் குட்டிகள் பிறக்கின்றன. அதேபோல், அங்குள்ள மூன்று வீடுகளில் ஒரு வீட்டுக்கு நாய் வளர்க்கிறார்கள்! இலங்கையிலுள்ள சாதாரணமான ஒருவர், தன்னை கவனிப்பதை விடவும் கவனமாக, அமெரிக்க நாயை, அதன் எஜமானர்கள் கவனித்துக் கொள்கிறார்கள். சாதாரணமாக 11 ஆண்டுகள் உயிர் வாழும் ஒரு நாய்க்காக அங்கு 13,550 அமெரிக்க டொலர்களை அவர்கள் செலவு செய்கிறார்கள். (இலங்கை நாணயத்தில் சுமார் 15 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்)

அமெரிக்க நாய்களைப் போல் இல்லா விட்டாலும், எங்கள் ஜிம்மியும் சௌபாக்கியமாகவே வீட்டில் வளர்ந்தது. ஜிம்மிக்கென்றே எனது தந்தையார் காசு கொடுத்து இறைச்சி வாங்கி வருவார். ஒரு நாள் எலும்பு கடித்துக் கொண்டிருந்த ஜிம்மியின் பற்களில் வசமாக மாட்டிவிட்டது பெரிய எலும்புத் துண்டு! பிறகு மிருக வைத்தியர் வந்துதான் அதை கழற்றி எடுத்தார். அன்று வந்த வைத்தியரின் ஆலோசனைப்படி ஜிம்மிக்கு மருந்துகள் கொடுக்கவும், குறிப்பிட்ட காலங்களில் ஊசிகள் போடவும் ஏற்பாடு செய்தோம். நீங்கள் நினைக்கலாம்; ”நமது வாழ்க்கையே நாய் வாழ்க்கையான நிலையில் நாய்க்கு வேறு மருந்தா” என்று! ஆனால், அமெரிக்காவிலுள்ள 85 வீதமான நாய்கள் ஒவ்வொரு வருடமும் மிருக வைத்தியசாலைக்கு சென்று வருகின்றன! ஆக – இவ்வாறான எங்களின் கவனிப்பால் குறைவின்றியே வளர்ந்தது ஜிம்மி என்கிற எங்கள் ‘நாலுகால்’ செல்லம்!

சிறு குட்டியாக வீடு வந்த ஜிம்மி, நன்றாக சடைத்து வளர்ந்தது. அப்போது அதற்கு ஒன்று இரண்டு வயதாக இருக்கும். அதன் செயல்களில் அனேகமானவை வியப்பாகவும், விசித்திரமாகவும் அமைந்தன! எங்கள் வளவுக்குள் வரும் பக்கத்து வீட்டுக் கோழிகளை இனங்கண்டு துரத்திப் பிடிக்கும். கடிக்காது! நாங்கள் சாப்பிடும்போது நேராகப் பார்க்காது, அவ்வாறு பார்த்தாலும் நாங்கள் அவதானித்தால் வேறுபக்கமாக பார்வையைத் திருப்பும் அல்லது எழுந்து சென்று விடும். இப்படி நிறையவே ஆச்சரியமான நடவடிக்கைகள்! சிலவேளை என் தகப்பனார் என்னைத் திட்டும் போது; ”ஜிம்மியின் அறிவு கூட உனக்கில்லை” என்பார். அந்த வேளைகளில் தகப்பனாரிடம் கோபமும், ஜிம்மியிடம் எரிச்சலும் வரும். ஒரு வயது கொண்ட நாயொன்று, உடலியல் ரீதியாக 15 வயது மனிதனின் முதிர்ச்சிக்கு சமனாகும். சுமார் 08 மாதமாகும் போதே பாலியற் கலவிக்கு நாயொன்று தயாராகி விடும். அப்போது எனக்கு 15 அல்லது 16 வயதுதான் இருக்கும். ஜிம்மிக்கு இரண்டு! அப்படியாயின் அது 30 வயது மனித வயதுக்கு சமம். எனவே – ஜிம்மி என்னை விடவும் புத்திசாலியாக இருந்ததாக என் தந்தையார் கூறியதில் பெரிதாக தப்பொன்றுமில்லை என்று, பின்னர் பகடியாகச் சொல்லிக் கொள்வேன்!

நாய்களின் ஆயுட்காலம் 08 முதல் 15 ஆண்டுகள் என விலங்கியலாளர்கள் கணித்துக் கூறுகின்றனர். ஆனால், அவுஸ்ரேலியாவில் வசித்த ‘ப்ளுய்’ எனும் பெயர் கொண்ட நாயொன்று 29 ஆண்டுகளும் 5 மாதமும் வாழ்ந்து மறைந்திருக்கிறது. உலகிலேயே இதுவரை மிக அதிக காலம் வாழ்ந்த நாயார் இவர்தானாம் என்று சாதனைப் புத்தகங்களிலெல்லாம் பதியப்பட்டிருக்கிறார். ஆனால், அற்ப ஆயுளில் எங்கள் ஜிம்மி செத்துப்போயிற்று!dog-new.jpg

ஜிம்மிக்கு அந்தப் பெயரை வைத்தவர் யாரென்று சரியாக இப்போது ஞாபகமில்லை. ஆனால், என் தகப்பனார்தான் வைத்திருக்க வேண்டும்! எங்கள் பகுதியில் வசித்த அதிகமான நாய்களுக்கு அதன் உரிமையாளர்கள் ‘ஜிம்மி’ அல்லது ‘றேகன்’ என்றுதான் பெயரிட்டிருந்தார்கள். சிலவேளை முஸ்லிம் மக்கள் மத்தியில் பரவியிருந்த அமெரிக்க எதிர்ப்பு மனோ நிலை, அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். இரண்டு பெயர்களும், அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளின் பெயரல்லவா?! எங்கள் வீட்டிலிருந்து இரண்டு மூன்று வீடுகள் தள்ளியிருந்த எங்களுடைய சின்னம்மாவின் வீட்டில் கறுத்துயர்ந்த ‘றேகன்’ ஒன்றிருந்தது. அது, ஆட்களைக் கடித்ததாகவும் கதைகளுண்டு! ஆனால், எங்கள் ஜிம்மி அது இறக்கும் வரை யாரையுமே கடித்ததில்லை!!

‘குரைக்கின்ற நாய் கடிக்காது’ என்று பழமொழியுண்டு! அதிகமாக சத்தம் போட்டு சண்டித்தனம் பேசுபவர்கள், எதிரியை தாக்கும் திறனற்றவர்களாக இருப்பார்கள் என்கிற அர்த்தத்திலேயே, இந்த மொழியை பலர் பயன்படுத்துவர்! ஆனால், நாம் நினைப்பதுபோல், அந்தப் பழமொழிக்கு அர்த்தம் அதுவாக இருக்க முடியாது. ‘குரைக்கின்ற நாயால் கடிக்க முடியாது. அது கடிக்க வேண்டுமென்றால் குரைப்பதை நிறுத்தியே ஆக வேண்டும்’ என்பதே, அந்தப் பழமொழியின் நான் அறிந்த அர்த்தமாகும்! ஆயினும், பழமொழியின் அர்த்தம் எதுவாக இருந்தாலும், அவுஸ்ரேலியாவிலுள்ள ‘டிங்கோ’ வகை நாய்களுக்கு அது பொருந்தாது. காரணம், அவை குரைக்கவே முடியாத இனமாகும்! ஆனால், ஜிம்மி சத்தமாகவே குரைக்கும். அந்நியமானவர்கள் எங்கள் வளவுக்குள் நுழைந்தால் குரைப்புச் சத்தம் மிக அதிகமாகும்! சிலவேளை, ஜிம்மியின் குரைப்பைக் கேட்டு வெளியில் வந்து பார்த்தால், யாரும் இருக்க மாட்டார்கள், ஆனாலும் அது, விடாமல் குரைத்துக் கொண்டேயிருக்கும். பேய், பிசாசு, சாத்தான்களை கண்டே நாய்கள் இவ்வாறு குரைப்பதாக உம்மா கூறுவார். எனக்கும் அவைகளைக் காண ஆசைதான். ஆனாலும் இதுவரைக் கண்டதேயில்லை! (சிலருக்கு இந்த இடத்தில் அவர்களின் மனைவியரின் அல்லது கணவர்மாரின் முகம் நினைவுக்கு வந்தால்… மன்னிக்கவும், அதற்கு நான் பொறுப்பாளியல்ல!)

நாய் வாலை ஆட்டுவது, அதன் நன்றியை அல்லது விசுவாசத்தை நமக்கு வெளிப்படுத்துவதற்காக என்றே, இதுவரை பலர் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், ”வாலை நாய் ஆட்டுவது உனக்காக அல்ல, உன் கையிலிருக்கும் பாணுக்காகத்தான்” என்று எமது நம்பிக்கையின் பிடரியில் ஓங்கியடிக்கிறது போர்த்துக்கல் பழமொழியொன்று! ஆயினும், என்னால் இதனுடன் உடன்பட முடியவில்லை. தன் தேவை முடியும் வரை, மற்றவரை ஏமாற்றி பிழைக்க, நாயென்ன மனிதனின் பிரதியா?

நாய்களை வளர்ப்போரில் மிக மிக அதிகமானோர், பெண் நாய்களை விரும்புவதில்லை, ஆணே அவர்களின் தெரிவாக அமையும்! ஜிம்மி கூட ஆண்தான். கட்டி முடிக்கப்படாத ஓர் அரசாங்கக் கட்டிடத்தினுள், கண்விடுக்காமல் கிடந்த ஜிம்மியை கடதாசியால் பொதிபோல சுற்றி, பையொன்றினுள் வைத்துக் கொண்டு வந்தார் என் தந்தையார்! அதை ஏதோ உணவுப் பொட்டலமாக நினைத்து, உம்மா வாங்கியெடுக்கும் வேளையில் ஜிம்மி முனக, அலறியடித்து அந்தப் பொதியை உம்மா தூக்கியெறிந்ததும்… நாங்கள் எல்லோரும் சிரித்து மகிழ்ந்ததும்… இன்னும் ஈரம் காயாமல் நினைவிலிருக்கிறது!

பெண் நாய்களை மக்கள் வளர்க்க விரும்பாமைக்கு முக்கியமான காரணம் அதன் இனப்பெருக்கமாகும். எழுத்தாளர் சாருநிவேதா எழுதிய ‘நாய் ஜென்மம்’ எனும் கட்டுரையில், பெண் நாய்களை வளர்க்க விரும்பாமைக்குக் காரணம் அவைகளுக்கு ஏற்படும் ‘மாத விடாய்’ (menses) என்கிறார். இது மனித இனத்தைப்போல மாதா மாதம் அல்ல, ஆறு மாதங்களுக்கொரு முறையே நாய்களுக்கு ஏற்படும். ஆனால், ரத்த ஒழுக்கு சுமார் மூன்று வாரங்கள் நீடிக்கும்!

நாய்களில் வைரவர் பயணம் செய்வதாகவும், பாழுங் கிணறுகளில் அவர் வசிப்பதாகவும் சொல்லி, இவை அருகில் போகக் கூடாது என்று, சிறுவயதில் என்னை வீட்டிலுள்ளோர் பயமுறுத்துவர்! ஆனால், எனக்கு ‘வைரவர்’ என்றால் யார் என்று தெரிந்திருக்கவில்லை. அப்பொழுதுகளில், எஸ்கிமோவர் நாய்வண்டியில் பயணம் செய்வதை தொலைக்காட்சியில் பார்த்து, வைரவர் எனப்படுவோர் எஸ்கிமோவர்கள்தான் என எண்ணியதுண்டு! இந்துக்களின் காவல் தெய்வம் வைரவர் என்றும், அவரின் வாகனமே நாய் என்றும் அறிய நீண்ட காலமாயிற்று எனக்கு!!

நம் நாட்டின் ரத்தோட்டை பிரதேச சபை, அதன் ஆளுகைக்குட்பட்ட பொது மக்கள், நாய் வளர்க்க வேண்டுமென்றால், அதற்காக ஐம்பது ரூபாய் வரியாகச் செலுத்த வேண்டுமென்று அண்மையில், கட்டளை பிறப்பித்துள்ளது. இச் செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த நண்பர் ஒருவர், ”இதுக்கெல்லாம் கூடவா வரி விதிப்பார்கள், வினோதமாக இருக்கிறதே” என்று, தாங்க முடியாத வியப்புடன் கேட்டார்!

நாய் வரியைக் கேட்டே இத்தனை வியப்பா?  இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடக் கூடிய சட்டங்கள் உலகில் உலவுகின்றன. உதாரணத்துக்கு, கலிபோனியாவின் வென்சுரா மாவட்டத்தில் ஒரு சட்டம் இருக்கிறது… அதாவது, ‘நாய்களோ, பூனைகளோ அனுமதியின்றி பாலுறவு கொள்ளக் கூடாது’ என்பதாகும்! அதையும் மீறி உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டு, கலவியில் ஈடுபட்ட நாயார் அல்லது பூனையார்கள் தண்டிக்கப்படுவர்! திண்ணை இணையத்தளத்தில் ‘ இன்னுமிருக்கும் வினோத சட்டங்கள்’ என்று இந்த ஆச்சரியத்துக்குத் தலைப்பிட்டிருக்கிறார்கள்! (சில மிகப் பழைய சட்டங்கள் மாற்றங்களுக்குள்ளாகாமல் அல்லது நீக்கப்படாமல் இவ்வாறு இருப்பதுண்டு. ஆனால், அவை அமுல் படுத்தப்படுவதில்லை! உதாரணமாக, பொது இடங்களிலுள்ள நீர்க் குழாய்களில் குளிப்பது தண்டனைக்குரியதோர் குற்றமெனக் கூறும் ஒல்லாந்தர் காலச் சட்டமொன்று, இலங்கையில் இன்னுமுள்ளது. ஆனால், ஒவ்வொரு நாளும் எத்தனை ‘சிங்கள’க் குளியல்களை நாம் கண்டு கடக்கின்றோம்!)

சில வாரங்களுக்கு முன்னர் ஊர் சென்றிருந்தபோது இக்கட்டுரைக்கான தகவல் திரட்டலுக்காய் எங்கள் பிரதேச சபை (அட்டாளைச்சேனை) காரியாலயத்துக்கு dog-6.gifசென்றிருந்தேன். கடந்த வருடம் அவர்கள் 83 நாய்களை கொன்றொழித்ததாகக் கூறினர். மேலும் சயனைட் விஷம் தடவப்பட்ட இறைச்சி அல்லது தின்பண்டங்கள் மூலமாகவே தாம் அவைகளைச் சாகடித்ததாகவும் தகவல் தந்தனர். சில காலங்களுக்கு முன்னர், துப்பாக்கியால் நாய்களைச் சுட்டுக் கொல்லும் முறைமையொன்றும் பழக்கத்திலிருந்ததாகவும் அறிய முடிகிறது!

எனக்கென்றால், இவ்வாறு நாய்களை கொல்வதைப் பற்றி எண்ணிப் பார்க்கவே முடியவில்லை! மேலும், நாயொன்றை வளர்ப்பவர் ஒருபோதும் இதை அனுமதிக்கவே மாட்டார். உதாரணமாக சில நாட்களுக்கு முன்னர் பசறை – மில்லெ பெத்த எனுமிடத்தைச் சேர்ந்த ஒருவரின் வளர்ப்பு நாயை, நபரொருவர் கொன்று விட்டார்! விளைவு, நாயின் இறப்புக்கு காரணமானவரின் கைகளை, கோபங் கொண்ட எஜமானர் வெட்டி விட்டார்! வெளிநாடொன்றில் ஒருவர் தனது மிகப் பெறுமதியான சொத்துக்களையெல்லாம், அவரது அன்புக்குரிய வளர்ப்பு நாயின் பெயரில் எழுதி வைத்துவிட்டு, இறந்து விட்டார்! ஆக – இவைகளையெல்லாம் வெறுமனே சாதாரண செய்திகளாக மட்டும் நுகர்ந்துவிட்டு, ஒதுக்கி விட முடியவில்லை. இவைகளுக்கப்பால், இந்த சம்பவங்களினூடாக… அந்த நாய்களுக்கும் அவைகளின் எஜமானர்களுக்குமிடையிலான விபரிக்க முடியாத பாசத்தைப் பற்றியும் யோசிக்க முடிக்கிறது!

என் தந்தையாருக்கும் ஜிம்மிக்கும் இடையிலான அன்பும் இது போலவே மிகவும்
ஆழமானது! எங்கோ கிடந்த அதை எடுத்து வந்து, ஒரு குழந்தைக்குரிய கவனிப்போடு
வளர்த்து, அது சுகயீனப்பட்ட வேளைகளில் மருத்துவரை அழைத்து வந்து… அவர்
வழங்கும் மருந்துகளை அதற்கு ஊட்டி என்று… ஜிம்மிக்கும் என்
தகப்பனாருக்குமிடையிலான அன்பு மிக மிக ஆழமானது!

காலச் சுழற்சியில், மரணத்தின் இரக்கமற்ற ஒரு பொழுதில், விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்தார் என் தந்தை!

அந்த மரணம் அதிர்ச்சிகள் நிறைந்தது!

ஜிம்மியைக் கூட, என் தந்தையின் மரணம் பாதித்திருந்தது! அவரின் மறைவின் பின், அது பழைய சுறுசுறுப்பைத் தொலைத்தது… உணவைக் குறைத்தது… ஆட்கள் அதிகமற்ற தூரங்களில் சுருண்டு கொண்டது! ஆனால், உம்மாவும் நாங்களும் அதை, எங்கள் பார்வைக்குள்ளே வைத்துக் கொண்டோம்.

தின்றாலும் மறுத்தாலும் ஜிம்மிக்கான உணவை, உம்மா வைத்தே தீருவார். சற்றே நிமிடங்கள் அதன் ஊசாட்டம் மறைந்தாலும் உம்மா பதறிப் போவார்!

என் தந்தை இறந்து சில வாரங்கள் கழிந்திருக்கும்! வெயில் தகிக்கும் ஒரு கோடை நாளின் மாலை நேரம்… ஜிம்மியைக் காணவில்லை! உம்மா அதன் பெயர் சொல்லி சத்தமாக அழைத்தார். எங்களைத் தேடிப்பார்க்கச் சொன்னார். தேடினோம்.
”ஜிம்ம்ம்மி…” – சத்தமாகக் கூப்பிட்டோம். அதன் வழக்கமான இடமெல்லாம் பார்த்தோம்…!

பெரியம்மாவின் பின் வளவுப் பக்கமாய், கொய்யா மரத்தின் கீழ்
ஜிம்மி படுத்துறங்குவது போல் தெரிந்தது!
அருகில் போய்ப் பார்த்தேன்….
எங்கள் சித்திரம்…. செத்துக்கிடந்தது!!

o

(இந்தக் கட்டுரையை 09 மற்றும் 16 செப்டம்பர் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரல்களிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

rover.gif

Advertisements
 

2 Responses to “ஜிம்மி: பதினேழாயிரம் ஆண்டுகாலப் பழக்கம்!”

 1. nilamdeen Says:

  u’r well said mabrook regarding the history of jimmy.
  i still remember as a neighbour.

 2. இளையதம்பி தயானந்தா Says:

  மப்றூக் நீண்ட நாட்களுக்குப் பிறகு சுவையான ஒரு ஆக்கத்தைப் பார்த்த திருப்தியைத் தந்தது. நாய்கள் பற்றி எல்லோரரிடமும் ஆயிரம் கதைகள் இருக்கின்றன, ஆனால் சிலரால் மட்டுமே அதை இப்படி அழகாக சொல்ல முடிகிறது.

  புலப்பெயர்வில் விடுபட்ட தன் நாய் பற்றி நண்பன் திருக்குமரன் எழுதிய ஒரு கவிதை என்னைப் பாதித்தது. கண்ணதாசன் ‘சீசர்’ என்ற பெயருடைய தன் ஆசை நாய் பற்றி எழுதியதும் சுவையானது.

  முதலாளி வர்க்க மனோபாவம் பற்றி காசி ஆனந்தன் எழுதிய கவிதையும் நினைவில் வருகிறது.

  “நாயே ராஜாவைக் கவனி என்றார் துரை,
  அவர் நாய் என்றது, என்னை
  ராஜா அவர் வீட்டு நாய்”
  (வரிகள் சரியா என்பதில் சந்தேகம்)

  பெரும்பாலான நாய்களுக்கு நாம் ஆங்கிலப் பெயர்களை வைப்பது காலனித்துவ எதிர்ப்புணர்வாகக் கூட இருக்கலாம்.

  எனக்கு ஒரு சந்தேகம் மப்றூக், நாய்களுக்கும், ஒலிவாங்கிகளுக்கும் ஆங்கிலம் மட்டுமே புரியும் என்று நாம் நீண்டகாலமாக நம்புகிறோம். ஏன் என்று தெரியவில்லை.தெரிந்தால் எழுதவும். எல்லாம் சந்தோசமாய் இருக்கிறது, தொடரட்டும், வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  இளையதம்பி தயானந்தா
  //

  வந்து வாசித்ததுக்கு முதலில் நன்றி அண்ணா!

  சில மனிதர்களை விடவும் எனது ஜிம்மி அடிக்கடி எனக்கு நினைவில் வருவதை தவிர்க்க முடியாமல் போகிறது. ஏன் தவிர்க்க வேண்டும்? அது செய்நன்றி மறவாதது.

  அண்மையில் ஓர் ஆங்கிலப் படம் பார்த்தேன். மனைவி, பிள்ளையோடு வாழும் ஒருவன் திடீரென விபத்தொன்றில் இறந்து விடுகிறான். பின் அவன் நாயாக பிறவியெடுத்து தன் குடும்பத்தாரின் வீட்டில் தங்க நேர்வதும், தான் யார் என்பதை சொல்ல முடியாமல் தவிப்பதும்…. கற்பனையென்றாலும், உருக்கமானது!

  உலகில் இத்தனை விலங்குகள் இருக்க (மனிதன் உட்பட) இறந்தவனை நாயாகப் பிறப்பெடுக்க வைக்க இயக்குனர் விரும்பியது ஏன் என்று யோசித்த அன்றைய இரவு மிக நீளமானது.

  நாய்க்கும், ஒலிவாங்கிக்கும், ஆங்கிலத்துக்கும் அப்படி என்னதான் ஆதித் தொடர்பு?

  கிண்டலாக ஏதாவது எழுதலாமா என்று பார்ப்போம்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s