காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கயிறிழுக்கும் தலைவர்களும், தோற்றுப் போகும் மக்களும்! 6 செப்ரெம்பர் 2007

Filed under: அரசியல் — Mabrook @ 3:06 பிப

நமது முஸ்லிம் அரசியலின் மாறாத தலைவிதி

question.jpg

color-dot.gifமப்றூக்

னைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரேயணியில் சேர்ந்து இயக்கப் போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பத்திரிகைச் செய்தியாகக் கதையொன்று உருவானது! இது குறித்துச் சிலர் சந்தோசப்பட்டார்கள். சிலர் அதிர்ச்சியடைந்தார்கள். மற்றும் சிலர் உணர்சிவசப்பட்டுப் போயினர்! ஆனால், வீணாக இவையெதையும் பட்டுத் தொலைக்காமல், அந்தச் செய்தி எங்கிருந்து முளைத்தது என்பது பற்றி துளாவித் திரிய ஆரம்பித்தேன்! கிடைத்தது தகவல்!!

முன்பும் சில காலங்களுக்கு முன்னர் ‘முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்’ எனும் பெயரில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டது. பின்னர் அதற்கு மாற்றீடாக தற்போதைய அமைச்சர்களான சேகு இஸ்ஸதீன், பேரியல் அஷ்ரப் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா போன்றோர்களால் வடக்கு – கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பொன்று உருவாக்கப்பட்டு பிறகு அனைத்துமே சுவடு தெரியாமல் அழிந்து போன கதைகள் நமக்கொன்றும் மறந்துபோய் விடவில்லை!

முஸ்லிம்களின் பிரச்சனைகளை முன்வைத்துச் செயற்படக் கூடிய சிறப்பான அமைப்புக்கள் எதுவும் நாட்டில் இல்லாத காரணத்தினால், இவ்வாறான அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த அமைப்பொன்றை உருவாக்கும் முடிவொன்றுக்கு தாம் வந்துள்ளதாக, அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா கூறுகிறார்.

முஸ்லிம்களின் பிரச்சனைகள் என்று மட்டுப்படுத்தாமல் காணி, கல்வி, மற்றும் நாட்டின் பிரதான பிரச்சனைகள் தொடர்பில் தீர்வு காண்பது குறித்தும், இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு கவனம் செலுத்தவுள்ளதாகவும் அமைச்சர் மயோன் மேலும் தெரிவிக்கின்றார்.hand-1.jpg

உண்மையாகவே இவ்வாறான நோக்கத்துக்காக இணைந்து செயற்படுவதென்பது வரவேற்கப்படக் கூடிய விடயம்தான். ஆனால், நமது தலைவர்கள் தமது பெருமைகளையும், கர்வங்களையும், தான் எனும் முனைப்புகளையும் (ego) மற்றும் இவை போன்ற இதர விடயங்களையும் களைந்தெறிந்து விட்டு சமூகத்துக்காகவும், பொது நலன் கருதியும் ஒன்றிணைவார்களா எனும் ஐமிச்சங்கள்தான், குதிரைக் கொம்புகளால் செய்த கேள்விக்குறியாக எம் முன் எழுந்து நிற்கிறது!

இவ்வாறு யோசிப்பதையோ, கூறுவதையோ அபசகுணமாக அல்லது முரண்பார்வை கொண்ட எழுத்தாக ஒருசிலர் கருதலாம். ஆனால், அவ்வாறல்ல! நமது தலைவர்களின் எண்ணம், குணநலன், சிந்தனையோட்டங்கள் மற்றும் கடந்த காலச் செயற்பாடுகள் போன்றவைகளை வைத்து யோசிக்கும் போது, இவ்வாறே நமக்கு யோசிக்கத் தோன்றுகிறது! (தலைவர்களே… எம்மை மன்னிப்பீர்களாக!)

குறித்த, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பை உருவாக்கும் பொருட்டு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒன்று கூடலொன்றுக்காய், அழைப்பொன்று விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு வெறும் நான்கு பேர் மட்டும்தான் சமூகமளித்திருக்கின்றனர்! இரண்டாவது கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதன்போது வந்தவர்களின் எண்ணிக்கையோ வெறும் மூன்றே மூன்று!

நமது பிரதிநிதிகளின் இவ்வாறான தட்டிக்கழித்தலுக்கும், பொடுபோக்கிற்கும், பாராமுகத்தன்மைக்கும் காரணம் எவையென்று கண்டறிய பெரிதாக ஆய்வுகள் நடத்தத் தேவையில்லை. இவ்வாறு ஒன்று சேர வேண்டும், சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் எவையும் நமது தலைவர்கள் பலரிடம் இல்லவே இல்லை! அதனால், குறித்த அமைப்பின் கூட்டத்துக்கு அவ்வகையானவர்கள் சமூகமளிக்காமல் விட்டிருக்கலாம். வேறு சிலருக்கு இவ்வாறான அமைப்புகள் மீதே நம்பிக்கையில்லை. ஆதலினால், அவர்கள் வருவதிலிருந்து தவிர்ந்திருக்கலாம். மற்றும் சிலரின் பிரச்சனைகள் வேறு வகையானவை!

எனவே, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொடுபோக்குத் தன்மையைக் கருத்திற் கொண்டதாலும், அனைவரையும் ஒன்று திரட்டுதல் மிகக் கடினமானதொரு வேலை என்பதாலும், இந்த அமைப்பை வடக்கு – கிழக்கு மாகாண முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பாக உருவாக்குவதற்கு அதன் ஏற்பாட்டாளர்கள் தற்போது சிந்தித்து வருவதாகவும் அறிய முடிகிறது!

‘முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்’ முன்னர் தோற்றுவிக்கப்பட்டபோது, அதற்குத் தலைமை தாங்குவது யார் என்கின்ற, மிகப்பெரும் பிரச்சனையொன்று எழுந்திருந்தது! இறுதியில், அமைச்சர்களான எம்.எச். முஹம்மது, ஏ.எச்.எம். பௌசி மற்றும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இருந்தபோதிலும், அதுகூட சிலருக்குத் திருப்தியினை வழங்கியிருக்கவில்லை என்பதே உண்மையாகும்!

இப்போதும் கூட, தற்சமயம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள அமைப்பின் உருவாக்கத்திலும் சிலருக்கு விருப்பமில்லை என்றே அறிய முடிகிறது! குறிப்பாக மு.கா. தலைவர் ஹக்கீம் போன்றவர்களுக்கு இதில் விருப்பமில்லையாம். அதனால் – மேற்படி ஒன்று கூடல்கள் ஒன்றிரண்டுக்கு ஆரம்பத்தில் சென்றிருந்த ரஊப் ஹக்கீம், பின்னர் அழைக்கப்பட்ட கூட்டங்களுக்கு சமூகமளிக்காமல், கட்சியின் ஏனைய உறுப்பினர்களான பஷீர் சேகுதாவூத் மற்றும் நிஜாமுத்தீன் போன்றவர்களை அனுப்பி வைத்துவிட்டு தவிர்ந்து கொண்டதாக விடயமறிந்த சிலர் விபரம் தெரிவிக்கின்றனர்!

rauf-hakeem-name.jpg

உண்மையாகவே இந்த அமைப்பின் உருவாக்கத்தை ஹக்கீம் விரும்பவில்லையென்றால், அது ஏன்? அதற்கான பின்னணிகள் எவை? என்றெல்லாம் சிந்திக்க முற்படுகையில், சில காரணங்களை நம்மால் ஊகிக்க முடிகிறது. அவைகளில் சில,

•இந்த அமைப்பின் ஏற்பாட்டாளர்களில் அதிகமானோர் அல்லது அனைவரும்
ஹக்கீமின் அரசியல் சத்துருக்கள் அல்லது முரண்பாட்டாளர்கள்.
•எதிராக அல்லது சமாந்தரமாகச் செயற்படலாம் எனும் ஐயம்.
•ஹக்கீமின் அரசியல் எதிரியொருவர் இந்த அமைப்புக்கு தலைமை வகிக்கக் கூடிய
சாத்தியம் இருத்தல்.

போன்ற முக்கிய பல விடயங்களை யோசித்து, ஹக்கீம் இதிலிருந்து ஒதுங்கிப்போக எண்ணியிருக்கக் கூடும்!

அனால், ரஊப் ஹக்கீம் இந்த அமைப்புடன் செயற்பட மறுத்தாலும், காங்கிரசிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மேற்படி அமைப்பின் உருவாக்கத்துக்கும், அதனுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் விருப்பம் கொண்டுள்ளனர். இது தொடர்பாக, மு.கா.வின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான கே.ஏ. பாயிஸிடம் பேசியபோது அனைத்து உறுப்பினர்களும் இவ்வாறு சேர்ந்து இயங்குவதற்கான அமைப்பொன்றை உருவாக்கும் முயற்சியானது வரவேற்கத்தக்க விடயமென்றும், அதற்குத் தன்னுடைய ஆதரவு எப்போதும் உள்ளதென்றும் தெரிவித்தார்.

சரி, மு.கா. தலைவரின் கோணத்தில் நின்று நாம் யோசித்தால், அவரின் கணக்கும் பிழையெனக் கூறிவிட முடியாது! அரசியல் நோக்கமற்று, ஹக்கீமின் எதிர்ப்பாளர்கள் சமூக நலனை மட்டுமே தமது இலக்காகக் கொண்டு, இவ்வாறு கூட்டுச் சேரப்போகின்றார்கள் என்பதையும் நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது!

ஆக – ஹக்கீம் இந்த அமைப்போடு இணையாமல் மிக லாவகமாக நழுவ முயற்சிப்பது, ஏற்பாட்டாளர்களுக்கு மிக நன்றாகவே புரிந்து விட்டது! இதனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தாயகமாகக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே இந்த அமைப்பில் இணைப்பதெனும் முடிவொன்றை ஏற்பாட்டாளர்கள் எடுப்பதற்குச் சிந்தித்து வருவதாகவும் தெரியவருகிறது! சிலவேளை, அவ்வாறானதோர் தீர்மானம் எடுக்கப்படுமாயின், ஹக்கீம் மற்றும் பேரியல் அஷ்ரப் ஆகியோர் இந்த அமைப்பினுள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள் நுழைய முடியாத நிலையொன்று உருவாகி விடவும் கூடும்! மட்டுமன்றி, முஸ்லிம்களின் நலன் குறித்து உருவாக்கப்பட்ட அமைப்பொன்றுடன் இணைந்து செயற்பட ஹக்கீம் மறுத்து விட்டதாகவும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படலாம்!myown-musthafa.jpg

மேற்கொள்ளப் படலாம் என்ன; தற்போதே, அவ்வாறான பிரசாரங்கள் ஆரம்பமாகி விட்டன! அதாகப்பட்டது, இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களுக்கு, மீள்குடியேற்ற அமைச்சினூடாக வெளிநாட்டு நிறுவனமொன்று 7500 வீடுகளைக் கட்டிக் கொடுக்க முன்வந்தது. இருந்தபோதிலும் இத்திட்டத்தைச் செயற்படு;த்துவதில் சில இடையூறுகள் ஏற்பட்டிருந்தன. எனவே, அதை அமுல்படுத்த வேண்டுமெனில், அரசுடன் இணைந்துள்ள அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களையும் கொண்ட சம்மதக் கடிதமொன்றை பெற்றுவருமாறு, அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டியிருந்தார். அதற்கிணங்க அனைவரிடமும் சென்று றிசாத், கையொப்பத்தைப் பெற்றுள்ளார். ஆனால் – அரசியல் போட்டி காரணமாக, றிசாத் பதியுத்தீனின் அந்தத் திட்டத்துக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் எதிர்ப்புத் தெரிவித்து, கையொப்பமிடாமல் மறுத்திருக்கின்றார். ஆயினும், ஹக்கீமின் கையொப்பமின்றியே அத்திட்டத்துக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அங்கீகாரம் வழங்கியிருக்கின்றார். இந்த விடயத்தை அண்மையில், அமைச்சர் றிசாத்தே ஊடகங்களுக்கு கவலையோடு தெரிவித்திருந்தார்.

எனவே, தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக, மு.கா. தலைவர், சமூக நலன்களைக் கூட தட்டிக் கழிக்கக் கூடியவர் எனும், இவ்வாறான பிரசாரங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான தந்திரங்களை வகுக்க வேண்டிய இக்கட்டானதொரு நிலைக்கும், ஹக்கீம் ஆளாகியுள்ளதையும் இங்கு சுட்டிக் காட்டலாம்!

எது எவ்வாறிருப்பினும் – முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் அமைப்பு மூலமாக, தாம் அரசியல் நடத்தவோ அல்லது தேர்தலொன்றைக் குறிவைத்து இயங்குவதற்கான திட்டங்களோடு செயற்படவோ போவதில்லையென்று அமைச்சர் மயோன் முஸ்தபா மிக உறுதியாகக் கூறுகின்றார்!

சரி, இவர்கள் கூறுவது போல், உண்மையாகவே கட்சி அரசியல் சிந்தனைகளின்றி, சமூக நலன் கருதியே இந்த அமைப்பை இவர்கள் உருவாக்க முயற்சிக்கின்றார்கள் என வைத்துக் கொள்வோம்! அப்படியானால், ஹக்கீம் அல்லது முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் இது தொடர்பில் வைத்துள்ள கணிப்புகள் தவறாகி விடுமல்லவா?!

எனவே – மு.கா. தலைவர் தனது ‘தான் எனும் முனைப்பினை’ (ego) ஒரு பக்கம் தள்ளி வைத்து விட்டு, இது குறித்து சற்று ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்கின்றார், மறைந்த தலைவர் அஷரப்போடு சேர்ந்து மிகத் தீவிரமாக கட்சியில் இயங்கிய பிரபல சட்டத்தரணியொருவர்! முஸ்லிம் சமூகத்தின் நலன் குறித்துச் செயற்படவுள்ளதாக கூறப்படும், முஸ்லிம் பா.உ. கள் அனைவரும் ஒன்றிணையவுள்ள இவ்வாறான ஓர் அமைப்பில், வடக்கு – கிழக்கு முஸ்லிம் மக்களின் அதிக ஆதரவினைப் பெற்ற மு.காங்கிரசின் பங்குபற்றுதல்கள் இல்லாமல் போய்விடக் கூடிய நிலையொன்றை அக்கட்சியின் தலைவரே உருவாக்கி விடக் கூடாதென்றும், அது ஏற்றுக் கொள்ளக் கூடிதல்ல எனவும் குறித்த சட்டத்தரணி ஆதங்கம் தெரிவித்தார்!

எதிர்காலத்தில் ஒருவேளை, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகள் ஏதாவது தொடர்பில்; தீர்வுத் திட்டங்கள் எதனையாவது முன்வைக்குமாறு அரசாங்கம் நமது முஸ்லிம் அரசியல் தரப்பிடம் கோரும்போது@ இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஒரு திட்டத்தை முன்வைக்க, வேறொரு தீர்வை முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பிக்குமாயின்…. மீண்டும் ஒரு கேலிக் கூத்து, முஸ்லிம் அரசியல் வெளியில் அரங்கேறுவது மட்டும் நிச்சயமாகி விடும்!

ஹக்கீம் உள்ளிட்ட மூவரின் தலைமையில் முன்னர் செயற்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தோல்விக்கு அல்லது அவ்வமைப்பு இல்லாமல் போனமைக்கு, மு.கா. தலைவர் ஹக்கீமேதான் காரணம் என பிரதியமைச்சர் மயோன் கூறுகின்றார்.

முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்கள் தொடர்பில், குறித்த ஒன்றியத்தில் அனைவரும் சேர்ந்தே இயங்குவது என தீர்மானிக்கப்பட்டிருந்த வேளை@ முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்திடம் தெரிவிக்காமலும், ஆலோசனைகள் எதனையும் பெறாமலும், தான்தோன்றித்தனமாய் புலிகளின் தலைவர் பிரபாகரனோடு உடன்படிக்கையில் ஈடுபட ஹக்கீம் கிளிநொச்சி சென்றதையடுத்தே, அந்த ஒன்றியத்தின் தோல்வி அல்லது வீழ்ச்சி ஆரம்பமானது என்று மேலும் தெரிவிக்கின்றார்!

எது எப்படியிருந்தாலும், நமது பிரதிநிதிகளின் அரசியல் கயிறிழுப்புகள் தொடர்ந்த வண்ணம் இருப்பதையே, இவ்வாறான நிகழ்வுகள் காண்பிக்கின்றன.

தமது பெருமையினைப் பறைசாற்றிக் கொள்வதற்காகவும், அதிகாரங்களை நிறுவிக் கொள்வதற்காகவும் இவ்வாறான முரண்பாடுகளில் ஈடுபடும் இந்த தலைவர்கள், ஏதோ ஒருவகையில் அவர்களின் நோக்கங்களில் வெற்றியடைந்து விடுகின்றனர்!

ஆனால் – பாவம் மக்கள், தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கிறார்கள்!!

(இந்தக் கட்டுரையை 02 செப்டம்பர் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s