ஓர் அக விமர்சனக் கட்டுரை
மப்றூக்
உலகில் ஆபத்து நிறைந்த தொழில்களில் ஒன்றாக மாறிப்போயிருக்கிறது ஊடகத்துறை சார்ந்த தொழில்! ஒவ்வொரு வருடமும் கொல்லப்படும் ஊடகவியலாளர்களில் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2002 ஆம் ஆண்டு உலகளவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் 25 என்று அறிக்கையிடும் ‘எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள்’ அமைப்பு, ஏழு மாதம் முடிவதற்குள் இவ்வருடம் 59 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
செய்தியொன்று வெளியிடப்படும்போது அதனால் பாதிக்கப்படுபவர் அல்லது அச்செய்தியின் விடயம் குறித்து திருப்தியற்றவர் அல்லது அது பிடிக்காத ஒருவர் அல்லது சிலர், குறித்த செய்திக்குப் பொறுப்பானவர் மீது தனது கோபத்தை வன்முறையினால் வெளிப்படுத்தி இவ்வாறான படுகொலைகளைப் புரிந்து விடுகின்றனர். அனேகமாக ஆயுதம் தரித்த குழுக்கள் மற்றும் படையினராலேயே இவ்வாறான கொலைகளில் மிக அதிகமானவை நிகழ்த்தப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இந்த துறைகுறித்து ரிபேக்கா வெஸ்ட் எனும் அறிஞர் கூறுகையில்; ”இதழியல் (ஊடகவியல்) என்பது வெற்றிடங்களை நிரப்பும், சவால்களை எதிரிடும் ஆற்றல்” என்கிறார். (Jounalism is ability to meet the challenge of filling space – Rebecca west)
எனவே – சமூகத்தில் பொறுப்பற்ற விதமாக இடம்பெறும் விடயங்களை தட்டிக் கேட்பதென்பது ஓர் ஊடகத்தின் பாரிய கடமையாகிறது. அவ்வாறு நிகழ்வதை ஆபத்துக் கருதி வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதை விடவும், ஊடகத்துறையிலிருந்து ஒதுங்கி, வேறோர் தொழிலில் ஈடுபடலாம்! தப்பில்லை!!
ஊடகவியலாளர்கள் தமது தொழிலை நிறைவேற்ற முயலும் வேளைகளில் அச்சுறுத்தலுக்குள்ளாவதை எவ்வாறானதொரு காரணத்தை முன் வைத்தும் நியாயப்படுத்த முடியாது! ஆனால், செய்திகளை அறிக்கையிடும் போது சில நுட்பங்களையும், தொழில் ரீதியான தர்மங்களையும் (professional ethics) தெரிந்து கொண்டு அதனூடாக செயற்படும் வேளைகளில், மேற்குறித்த எதிரிகளை நாம் குறைத்து விடவோ அல்லது நம் மீது ஏற்படக் கூடிய ஆபத்துக்களைத் தணித்து விடவோ கூடிய சாத்தியங்களை உருவாக்கி விட முடியும்!
வெளிநாடுளைப் பொறுத்தவரை, குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை அங்கு ஊடகத்துறையில் விருப்புள்ள ஒருவர் ஆகக்குறைந்தது அத்துறை ரீதியான விடயங்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் கற்றறிந்த பின்னரே, ஊடக நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர். அதனால்தான் அந்த நாடுகளில் இயங்கும் ஊடக நிறுவனங்கள் இன்று சர்வதேச ரீதியில் மிகவும் புகழும் செல்வாக்கும் கொண்டவைகளாகக் காணப்படுகின்றன. ஆனால், நமது நாட்டைப் பொறுத்தவரை குறிப்பாக தமிழ் ஊடகத்துறையைப் பொறுத்தவரை, ஊடவியலாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படுபவர்களிடம் இவ்வாறான தகைமை வலியுறுத்திக் கோரப்படுவதில்லை என்பதே கசப்பானாலும் உண்மை நிலையாகும்! இதனால், இந்த தொழிலில் ஈடுபடும் இவ்வாறானவர்களில் பலர் அடிப்படை விடயங்களையும், நுட்பங்களையும் அறிந்து கொள்ளாமலேயே தமது செய்திகளை உருவாக்கி விடுகின்றனர். இது சிக்கலும், ஆபத்துக்களும் நிறைந்ததோர் நிலையாகும்!
இலங்கை போன்ற, முரண்பாடுகளும் ஆயுத மோதலும் நிறைந்ததொரு நாட்டில், அவைகளிடையே செய்தியொன்றை அறிக்கையிடும் பொழுது ஓர் ஊடகவியலாளனாக எவ்வாறு செயற்படுதல் வேண்டும் என்பது பற்றி நாம் அறிந்திருத்தல் மிகவும் அவசியமாகின்றது!
ஊடக்துறையில் நாம் மிக அதிகமாக பிரயோகிக்கும் ஒரு சொற்பதம் ‘நடுநிலை’ என்பதாகும்! ஆனால், உலகிலேயே மிக கோமாளித்தனம் மிகுந்ததோர் விடயம் என்னவென்றால் ”நாம் நடுநிலையாளர்கள்” எனக் கூறிக்கொள்வதாகும். ஏனெனில், அவ்வாறு ஒருவரால் ஒரு பொழுதும் செயற்பட முடியாது என்கின்றனர் ஊடகத்துறை சார்ந்த விற்பன்னர்கள்! ஆனால், நம்மால் இத்துறை சார்ந்து நேர்மையாகச் செயற்பட முடியும்!!
ஒவ்வொரு தனிநபரும் மாறுபட்ட விருப்பு வெறுப்புகளைக் கொண்டவர்களாவர். நமது அல்லது நாம் பணியாற்றுகின்ற ஊடக நிறுவன முதலாளியின் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே நம் ஊடகமும் செயற்படும்! உதாரணமாக தி.மு.க.வுக்கும் கருணாநிதிக்கும் ஆதரவாய் மிக நீண்டகாலமாகச் செயற்பட்டு வந்த ‘சன்’ குழும ஊடகங்கள், தயாநிதி மாறன் – கருணாநிதி பிளவுக்குப் பின்னர் செயற்படும் விதம் குறித்து அவதானித்தால், இந்த ‘நடு நிலை’ என்பதன் வெற்று அர்த்தம் பற்றிப் புரிந்து கொள்ள முடியும்! ஆக – நாம் ஒவ்வொருவரும் நமது விருப்பு வெறுப்புகளினூடாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம் – ஊடகத்துறையிலும் கூட! இன்னும் கூறினால், ஊடகத்துறையில் நடுநிலை என்பதற்கு சாத்தியமேயில்லை!
இந்த நிலையில், நாம் எவ்வாறான முறையில் செயற்பட வேண்டும் என்பது குறித்து கவனிக்க வேண்டும். உதாரணமாக இனப்படுகொலை குறித்தும் ராணுவத்தால் பலியான சாதாரண தமிழ் மக்களின் விபரங்கள் குறித்தும் ஒரு செய்தியினை அல்லது கட்டுரையொன்றினை அறிக்கையிடுவதாக வைத்துக் கொள்வோம். நிச்சயமாக இச்செய்தியானது அரசுக்கும், படைத்தரப்புக்கும் விருப்புடையதொன்றாக அமையாது. அந்தச் செய்தியாளன் குறித்து அவர்களுக்கு அதிருப்தியும் ஏற்படலாம். இது தவிர்க்த முடியாததும் கூட! ஆனால், நாம் இதன்போது நேர்மையானதோர் ஊடகவியலாளனாகச் செயற்படுதல் அவசியம். அதனூடாக குறித்த தரப்பினரின் அதிருப்தியினை நாம் தணிக்க முயலலாம். எவ்வாறெனில், அந்த செய்தியில் அல்லது கட்டுரையில் புலிகளினால் கொல்லப்பட்ட பொதுமக்கள் பற்றியும் நாம் பேச வேண்டும். அவ்வாறு பேசாது, நாம் ஊடக நேர்மையற்றுச் செயற்படும் போது… நமது ஆபத்துக்கு சில வேளைகளில் நாமே காரணமாகியும் போய் விடுகிறோம்!
அனேகமாக எமது செய்திகளின் நுகர்வோன் அச்செய்திகளினூடாக நாம் எத்தரப்பு சார்பானவர்கள் என்பதை கணித்து விடுகிறான். இது நாம் செய்திகளை எங்கிருந்து சொல்கிறோம் என்பதிலுள்ள குறைபாடாகும்! செய்தியொன்றை நாம் அறிக்கையிடும்போது அச்செய்தியின் கதைக்கு வெளியில் நின்று ஊடகவியலாளன் பேச வேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக நம்மில் பலர் செய்தியின் உள்ளே நின்று பேசுவதால் பலருக்கு எதிரியாக மாறிப்போகும் விபரீதம் நேர்ந்து விடுகிறது!
கதையின் உள்ளேயிருந்து பேசுவது என்பது எவ்வாறு? ‘மாணவனை நீதி நியாயமற்று, கொடூரமாகத் தாக்கிய ஆசிரியர் மீது பெற்றோர் புகார்’ எனும் செய்தியில், செய்தியாளன் கதைக்கு உள்ளேயிருந்து பேசுவதை நாம் அவதானிக்க முடியும்! முதலில், எவ்விதமான சட்டத் தீர்ப்புகளும் வழங்கப்படாத இந்த சம்பவத்தில் ‘நீதி நியாயம்’ குறித்து ஓர் ஊடகவியலாளனாக நம்மால் பேச முடியாது. அடுத்து, அவ்வாறான பதப் பிரயோகத்தை பயன்படுத்தியன் மூலம், தாக்குதலுக்குள்ளான மாணவனின் அனுதாபியாக தன்னை வெளிப்படுத்தி, செய்தியின் உள்ளேயிருந்து பேசும் குறித்த செய்தியாளனால், அம்மாணவனைத் தாக்கியதாக கூறப்படும் ஆசியரின் தரப்பு நியாயங்கள் குறித்து பேசுவதற்கு முடியாமலும் போய்விடும்!
மேலும், சில சொற் பிரயோகங்களினூடகவும் நாம் கதையின் உள்ளேயிருந்து பேச முற்படுவதோடு, ஒரு செய்தியாளனாய் நேர்மையற்றும் செயற்பட முனைகிறோம். குறிப்பாக, படை வீரரைக் குறிக்க சிப்பாய் என்ற சொல்லும், புலி உறுப்பினர் என்பதற்குப் பதிலாக புலிப்பயங்கரவாதி எனும் வார்த்தையும் வலிந்து சில ஊடகங்களால் பயன்படுத்தப்படுவதை நாம் கவனிக்கலாம்! ஆக – இவ்வாறான சொல்லாடல்களின் மூலமாக, நாம் ஏதோ ஒரு தரப்பினரின் எதிரியாக நம்மை வலிந்து அடியாளப்படுத்தி, அதனூடக அச்சுறுத்தல்களையும், ஆபத்துக்களையும் வீணே முகம் கொள்ள நேர்ந்து விடுகிறது!
ஆயுத மோதல்கள் அதிகம் நிகழும் நாடுகளில்தான், ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல்களும் மிக அதிகமாக இடம்பெறுவதை நாம் காணலாம்! உதாரணமாக கடந்த வருடம் (2006) மிக அதிகமான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாடாக ஈராக் குறிப்பிடப்படுகிறது. அங்கு 40 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது, கடந்த வருடம் உலகம் முழுவதும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் தொகையில் கிட்டத்தட்ட அரைவாசிக்குச் சமனானதாகும்! (2006 ஆம் ஆண்டு உலகளவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொகை – 84 ஆகும்) இதே வருடம் உலகளவில் 32 ஊடக உதவியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. இலங்கையில் கடந்த ஆண்டு ஊடகவியலாளர்கள் மூவரும், நான்கு ஊடக உதவியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யா, கொலம்பியா ஆகிய நாடுகளிலும் இலங்கையளவு தொகை ஊடகவியாளர்கள் பலியாகியுள்ளனர்.
சர்வதேச ரீதியாக கடந்த சில ஆண்டுகளில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து நாம் இவ்வாறு அட்டவணைப்படுத்தலாம்:
வருடம் ………………………………… கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் எண்ணிக்கை
2002 _______________________________________________________________________ 25
2003 _______________________________________________________________________ 40
2004 _______________________________________________________________________ 62
2005 _______________________________________________________________________ 63
2006 _______________________________________________________________________ 84
2007 (ஜூலை 31 ஆம் திகதி வரை ______________________________________ 59
தமது செய்திகள் பரபரப்புத் தன்மை கொண்டவைகளாய் அமைய வேண்டும் என்பதற்காக, சில ஊடகவியலாளர்கள் எப்போதும் முரண்பாடுகள் நிறைந்த அல்லது சர்ச்சைகளைத் தோற்றுவிக்கக் கூடிய கதைகளையே தமது செய்திக்கான விடயங்களாக தேர்ந்தெடுப்பதுண்டு! செய்தியாளனின் இவ்வாறான மனோ நிலையும், அதன் வழிப்பட்ட செயற்பாடுகளும் எதிர்பாராத திசைகளிலிருந்து, ஏதோ ஒரு வடிவில் ஆபத்துக்களை அவனிடம் கொண்டு வந்து சேர்த்து விடுகின்றன.
‘ஊடகங்கள் (ஊடகவியலாளர்கள்) சமூகத்தின் காவல் நாய்கள்’ என்று கூறப்படுவதுண்டு! நாய்கள் என்பதற்காக அவை குரைத்துக் கொண்டும், கடித்துக் கொண்டுமே இருக்க வேண்டும் என்றில்லை!
விழிப்புடன் இருக்க வேண்டுமென்பதே அதற்கான அர்த்தமாகும்!!
•
(இந்தக் கட்டுரையை 12 ஓகஸ்ட் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் ‘உலகில் ஆபத்து நிறைந்த தொழிலாகி விட்ட ஊடகத்துறை’ எனும் தலைப்பில் காணலாம்)
u’r article was very true mabrook.it very informative for us.