காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

அதாஉல்லா Vs ஹக்கீம்: பொறி வைத்துக் காத்திருக்கும் மேய்ப்பர்கள்! 30 ஜூலை 2007

Filed under: அரசியல் — Mabrook @ 6:16 பிப

color-dot.gifமப்றூக்mouse-trap-1.jpg
ல்யாணமென்றால் நான்தான் மாப்பிள்ளையாய் இருக்கணும், எளவு வீடென்றால் நானேதான் பொணமாயிருக்கணும்… மாலையும் மங்கலமும் எனக்குத்தான் கிடைக்கணும்” – எஜமான் திரைப்படத்தில் நெப்போலியன் கூறும் வசனம் இது! நெப்போலியனின் இடத்தில் கொஞ்சம் நம் அரசியல்வாதிகளை இருத்திப் பாருங்கள்! பொருத்தம் படு சோக்காக இருக்கும். ஆனாலும், அண்மைக் கால அரசியல் போக்கினை அவதானிக்கின்றபோது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமையே நெப்போலியனாக எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

‘கிழக்கின் உதயம்’ என்ற பெயரில் அண்மையில் கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் இடம்பெற்ற வெற்றி விழா நிகழ்வின் போது அங்கு தலைமை தாங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா பொன்னாடை போர்த்தி, ஞாபகச் சின்னமொன்றையும் வழங்கி வைத்தது நமக்கெல்லாம் நினைவிருக்கும். அதாஉல்லாவின் இந்ந செயலை பின்னர் மு.கா. தலைவர் ஹக்கீம் அரசியல் கேலிக் கூத்தென்றும், முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் செயலென்றும் சாடினார்! ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்’ செய்கை போல், கஷ்டங்களை அனுபவிக்கும் தமிழ் மக்களுக்கு இதன் மூலம் அதாஉல்லா மேலும் வலி கொடுத்துள்ளதாக விமர்சித்ததோடு, அந்த விழாவை அரசியல் நோக்கம் கொண்டதெனவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதில் நகைச்சுவை என்னவென்றால்; அரசியல் நோக்கம் கொண்டது என, தான் சாடிய அதே விழாவில் ஹக்கீம் கோட்டும் சூட்டுமாக கலந்து கொண்டதேயாகும்! பின்னர் அவர் தெரிவிக்கையில்; தான் இந்த விழாவில் மனச் சாட்சிக்கு விரோதமாகவே கலந்து கொண்டதாக கூறியிருந்தார்! குறித்த ஒரு நிகழ்வு மோசமானது என ஏற்கனவே அறிந்திருந்தும், தனது மனச்சாட்சிக்கு துரோகமிழைத்து விட்டே அவ்விழாவுக்கு செல்ல நேர்கிறது எனத் தெரிந்திருந்தும் ஏன் ஹக்கீம் அவ்விழாவில் கலந்து கொண்டார்? கலந்து கொண்ட ஒரு சில மணித்தியாலங்களின் பின் இவ்வாறு குத்துக் கரணமடிக்கக் காரணம்தான் என்ன? என்று நமக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காண்பதொன்றும் பெரிய ‘சீன வித்தை’ யல்ல!
hakeem-2.jpg

அமைச்சர் ஹக்கீம் குறித்த விழாவுக்கு செல்லும்போது அவரிடம் இவ்வாறான எவ்வித விமர்சன எண்ணங்களும் இருக்கவில்லை. அவ்வாறு அவர் எண்ணியிருந்தால் அதில் கலந்து கொள்ளாமல் மிகச் சூட்சுமமாகவே நழுவியுமிருப்பார். (சங்கடங்களிலிருந்து மிக லாவகமாக நழுவுவதென்பது மு.கா. தலைவருக்கு கைவந்த கலையாகும்) ஆனால், அங்கு சென்ற பிறகுதான் ஹக்கீமுக்குள் இந்த விமர்சனம் உருப்பெற்றது. காரணம் – அதாஉல்லா!

ஜனாதிபதிக்கு அமைச்சர் அதாஉல்லா பொன்னாடை போர்த்தும் விடயம் பற்றி அறியாத நிலையிலேயே ‘கிழக்கின் உதயம்’ நிகழ்வில் கலந்து கொள்ள ஹக்கீம் சென்றார். அங்கு சென்ற பிறகுதான் அந்த காட்சி அரங்கேறியது! போதாக் குறைக்கு ஜனாதிபதியை அதாஉல்லா மாறி மாறிக் கட்டிணைத்து மகிழ்ச்சியைத் தெரிவிக்க… எரிய ஆரம்பித்தது நெருப்பு – ஹக்கீமின் வயிற்றுக்குள்!

உண்மையாகவே, அதாஉல்லாவுக்கு வழங்கப்பட்ட அந்த சந்தர்ப்பம் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருந்தால் அதை அவர் பெருமையோடு ஏற்றிருப்பார். அது முஸ்லிம் சமூகத்தின் தலைவர் என்கின்ற முறையில் அவருக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட சிறப்பு என ஹக்கீமாலும் அவரின் சார்பாளர்களாலும் பேசப்பட்டு பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கும். இப்போது வேண்டுமானால் இதை ஹக்கீம் தரப்பு மறுக்கலாம். ஆனால், அவரின் குணம் இதுதான் என்பதை அவருக்கு அருகிலிருப்போர் பலர் கூறவே நாம் கேட்டதுமுண்டு. இதை நிறுவிக்காட்ட மு.கா. தலைவரின் அரசியல் வாழ்வில் ஆயிரம் சான்றுகள் சம்பவங்களாக பதிந்து கிடக்கின்றன! உதாரணமாக, ரணில் விக்ரமசிங்க பிரதம மந்திரியாக இருந்த சமயம், எல்.ரீ.ரீ.ஈ. யிருக்கும் – அரசாங்கத்துக்குமிடையி;ல் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது முஸ்லிம்களும் மூன்றாம் தரப்பாக கலந்து கொள்ள வேண்டுமென அந்த சமூகம் சார்பாக ஏகோபித்த வேண்டுகோளொன்று விடுக்கப்பட்டது. ஆனால், ரணிலோ அதை ஏற்காமல், (புலிகளும் ஏற்கவில்லை என்பது வேறு கதை) அப்போது அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீமை அரசாங்கத்தின் பிரதிநிதியாக பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு கூறியிருந்தார். ஆனால், அவ்வாறு அரச சார்பில் கலந்து கொள்ள வேண்டாமென்றும் தனித்தரப்பாகவே கலந்து கொள்ள வேண்டுமெனவும் முஸ்லிம் அமைப்புக்கள், புத்தி ஜீவிகள் சார்பில் அப்போது வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. மேலும் அவ்வாறு அரச பிரதிநிதியாக கலந்து கொள்வது முஸ்லிம் சமூகத்துக்கு புரிகின்ற துரோகச் செயல் எனவும் கூறப்பட்டது! ஆனாலும், அனைத்து விதமான வேண்டுகோள்களையும் துச்சமெனப் புறக்கணித்து விட்டு குறித்த பேச்சுவார்தைகளில் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார்! காரணம் – அந்த ‘திருமண வீட்டில்’ அவர் ‘மாப்பிள்ளை’ யாக இருந்தார்.

உண்மையாகவே அதாஉல்லாவுக்கு ‘கிழக்கின் உதயம்’ விழாவில் முன்னுரிமை வழங்கப்பட்டதன் மூலம் சில பிம்பங்களை ஏற்படுத்த மகிந்த தரப்பு முயன்றது. அவைகளில் சில,

•கிழக்கின் முஸ்லிம் தலைமையானது அதாஉல்லாவிடம் சென்று விட்டது.
•ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான கிழக்கின் முஸ்லிம் அரசியல்வாதி அதாஉல்லா ஆவார்.
•மஹிந்தவின் ராஜாங்கத்தில் அதாஉல்லாவுக்கு பிறகுதான்… ஹக்கீம் மற்றும் இன்ன பிறர் எல்லோரும்.

இவ்வாறு திட்டமிட்டு உருவாக்கம் செய்வதற்கு முயற்சிக்கப்பட்ட பிம்பங்களை, அரசியல் ரீதியாக உடைத்தெறிய வேண்டியதொரு இக்கட்டுக்கு ஹக்கீம் ஆளாகிப் போனார்! மேற்குறித்த பிம்பங்கள் கிழக்கு முஸ்லிம்களின் மனதில் படிந்துடைய ஆரம்பித்து விட்டால்… அது, ரவூப் ஹக்கீமின் ஆளுமை பற்றிய எண்ணக்கருவிலும், மு.கா.வின் வாக்கு வங்கியிலும் குறிப்பிடத்தக்க அளவு சரிவினை அல்லது வீழ்ச்சியினை ஏற்படுத்திவிடும் என்பதும் ஹக்கீமுக்கு மிக நன்றாகவே தெரியும். அதனாலேயே அந்தக் கூட்டத்தையும், பொன்னாடை போர்த்திய நிகழ்வையும் அவர் மிக மோசமாக விமர்சித்துப் பேச வேண்டியேற்பட்டது.

‘கிழக்கின் உதயம்’ நிகழ்வை நிஜமாகவே புறக்கணிக்க வேண்டி இருந்திருந்தால், ஹக்கீம் அங்கு போயிருக்கத் தேவையில்லை! தமிழ் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஐ.தே.க, ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் வேறு ஒரு சிலரும் அக்கூட்டத்துக்கு சமூகமளிக்காமை மூலமே தமது புறக்கணிப்பை வெளிப்படுத்தியிருந்தனர் என்பதையும் நாம் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும்.

மற்றொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. குறித்த விழாவில் ஜனாதிபதிக்கு அதாஉல்லா பொன்னாடை போர்த்தியமையானது தமிழ் மக்களை நோவினைப் படுத்தும் செயல் என்று ஹக்கீம் கூறுகிறார்; சரி, அது அவ்வாறே இருக்கட்டும்! ஆனால், ஹக்கீமுக்கு தமிழ் மக்கள் மீது ஏன் இந்த திடீர் கரிசனை என்பதை நாம் சற்றே கவனிக்கவும் வேண்டியுள்ளது. தமிழ் மக்கள் மீது ஹக்கீமுக்கு நேர்மையான கரிசனைகள் இருக்குமென்றால், புலிகள் மீது போர் தொடுக்கும் மஹிந்தவின் அரசாங்கத்தில் அவர் முட்டுக் கொடுத்துக் கொண்டு ஏன் இன்னும் இருக்க வேண்டும்? அவசரகால சட்ட நீடிப்பின்போது அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கவே கூடாதல்லவா! ஆனால், அனைத்தையும் தனது அரசியல் லாபங்களுக்காக செய்து விட்டு, இப்போது தமிழ் மக்களின் அனுதாபியாக ஹக்கீம் தன்னைக் காட்டிக் கொள்ள முனைவதென்பதில் சுயநலமன்றி வேறொன்றும் இல்லை என்கின்றனர் முஸ்லிம் காங்கிரஸ் அரசியலை மிக கவனமாக அவதானித்து வருவோர்! ஆக – தனது அரசியல் சத்துருவான அதாஉல்லாவை வீழ்த்துவதற்கு மு.கா. தலைவர் தமிழ் மக்களை வேறோர் ஆயுதமாக பயன்படுத்த நினைப்பதன் வெளிப்பாடே அவர் கூறுகின்ற ‘தமிழ் மக்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்…’ பழமொழிகளும், காய் மொழிகளுமாகும்!

athaulla
மு.கா. தலைவர் மட்டுமல்ல, போதாக்குறைக்கு அதன் செயலாளர் ஹசன் அலியும் அறிக்கை என்கின்ற பெயரில் அண்மையில் ஊடகங்களில் கொமடி பண்ணியிருக்கின்றார். உதாரணமாக அவர் கடந்த ஞாயிறு தினக்குரலுக்கு விடுத்திருந்த அறிக்கையொன்றில் ”அதாஉல்லா ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தியதன் மூலம் அவர் முஸ்லிம்களின் காவலனாக ஆகிவிட முடியாது. (இங்கே முஸ்லிம்களின் காவலன் தாங்கள்தான் என்பதை மறைமுகமாக ஹசன் அலி குறிப்பிடுவதைக் கவனிக்கவும்) முஸ்லிம்களின் ஆதரவு பெற்ற ஒரே கட்சி முஸ்லிம் காங்கிரசேயாகும்” என்று தெரிவித்திருக்கின்றார். அப்படியென்றால், முன்னர் தேர்தல் மூலம் மூன்று பாராளுமன்றப் பிரதிநிதிகளை அம்பாரை மாவட்டத்தில் பெற்றுக் கொண்ட மு.காங்கிரஸ் கடந்த தேர்தலில் இருவரை மட்டுமே பெற்றுக் கொண்டமை தோல்வியில்லையா? முஸ்லிம்களின் ஆதரவு பெற்ற ஒரே கட்சி மு.கா. என்றால், கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது அக்கட்சியை அம்பாரை மாவட்டத்தில் தோற்கடித்து, ஆயிரக்கணக்கான வாக்குளைப் பெற்ற அதாஉல்லா, பேரியல் அஷ்ரப் போன்றவர்களுக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம்கள் ஹசன் அலியின் கணக்கில் முஸ்லிம்களே இல்லையா? மட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்தின் ஒட்டு மொத்த பாதுகாவலன் என்கின்ற ஏகபோக ‘நாட்டாண்மை’ பதவியை முஸ்லிம் காங்கிரசுக்கு பட்டயமாக எழுதிக் கொடுத்தது இங்கு எவர்?

உண்மையாகச் சொன்னால், மு.காங்கிரஸ் கடந்த அரசாங்களில் பெற்றுவந்த மரியாதையை இந்த அரசில் எதிர்பார்க்க முடியாது. ஆனால், எதிர்பார்க்கிறது! மஹிந்தவின் ராஜசபையில் தாமே முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, தமது அரசியல் எதிராளிகள் அரச தலைமையால் ஓரங்கட்டப்படல் வேண்டும் எனவும் அக்கட்சியின் தலைமை அவாவி நிற்கிறது. ஆனால், தன்னை ஜனாதிபதியாக்குவதற்கு மிகக் கடுமையாக உழைத்த அதாஉல்லா, அமீர் அலி, ரிசாத் பதியுத்தீன், பேரியல் போன்றோரை ஒதுக்கி விட்டு, அந்த இடத்தை ஹக்கீமுக்கு ஒருபோதும் ராஜபக்ஷ வழங்கவே மாட்டார்! அதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. அது – ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்தவை மிக மோசமானதோர் முஸ்லிம் விரோதியாக பிரசாரம் செய்தவர்களில் முதன்மையானவர் ஹக்கீம் என்பதாகும்.

ஆக – தம்மை முதன்மைப் படுத்தாத, அதேவேளை தமது அரசியல் வைரிகளை உயர்த்திப் பிடிக்கும் மஹிந்த அரசுக்கு திடீர் அதிர்ச்சிகளையும், நெருக்கடிகளையும் கொடுக்க மு.கா. நினைக்கிறது. அதற்கான காரணங்களையும் தேடுகிறது! இதன் ஒரு அங்கமாகவே ‘கிழக்கு மாகாணக் கொடியில் முஸ்லிம்களுக்குரிய அடையாளங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து’ ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பப்போவதாக ஹஸன் அலி மிரட்டியுள்ளார். இது இன்னுமொரு கொமெடி! ”பொண்டாட்டியின் கண்ணில் பூ விழுந்ததை (பூ விழுதல் என்பது ஒரு நோய்) ஆறு மாதங்களுக்குப் பின்னர் கண்டானாம் புருஷன்” என்பது கிராமத்துச் சொல்லாடல்! ஒருவரின் அக்கறையற்ற, சோம்பேறித்தனமான செயற்பாட்டைச் சுட்டுவதற்காக இதை அப்பகுதி மக்கள் பயன்படுத்துவர். இந்த இடத்தில் இச்சொல்லாடலைத்தான் பயன்படுத்தத் தோன்றுகிறது எனக்கு! காரணம், கிட்டத்தட்ட கிழக்கு மாகாணத்துக்கான கொடி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டே இரண்டு மூன்று மாதங்கள் கடந்து விட்ட பிறகு, திடீரென இப்போது மு.கா.வுக்கு முறுக்கேறியது எதற்கு? அந்தக்கொடியில் இந்தப் புறக்கணிப்பு நிகழ்ந்துள்ளதாக அப்போது அத்தனை பொது அமைப்புக்களும், புத்தி ஜீவிகளும், ஊடகங்கள் பலவும் பேசிப்பேசிக் களைத்து, கிட்டத்தட்ட சலித்துப்போன பின்னர், அதுபற்றி காங்கிரசார் இப்போது மட்டும் கவலைப்படக் காரணம்தான் என்ன? இவ்வாறான என் கேள்விகளுக்கு… ”மிகக் கேவலமான சுயநல அரசியல் நோக்கம் தவிர வேறு காரணம் ஒன்றுமில்லை” என்கிறார் மரியாதைக்குரிய ஒரு மூத்த ஊடகவியலாளர்.

அரசாங்கத்தின் எந்தவொரு பிழையையும் இதுவரை தட்டிக் கேட்காமல் வாய்மூடி மௌனமாக இருந்த மு.காங்கிரசின் தலைமைத்துவம், இப்போது மட்டும் சலசலப்புக் காட்டுவதற்கு காரணமும் இல்லாமலில்லை! முன்னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோர் அரசாங்கத்தைக் கவிழ்க்கப்போவதாகக் கூறி, அனைத்துக் கட்சிகளையும் சந்தித்துக் கூட்டணியொன்றை அமைப்பது பற்றிப் பேசிவருகின்றனர்! magician-1.jpgஐ.தே.க.வுடன் மங்கள அணி இது தொடர்பில் ஒப்பந்தமொன்றையும் செய்தாயிற்று! இந்த அரசியல் காய் நகர்த்தல்களால் தற்போது மகிந்த அரசும் சற்றே ஆடிப்போய்த்தான் கிடக்கிறது. ஆக – இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்திடம் தமது பேரங்களை முன்வைத்து, காரியங்களைச் சாதிக்குமளவுக்கு அரசாங்கத்தைப் பணிய வைக்கலாம் என மு.கா. தலைமை நினைக்கிறது. ஆனால், இதிலும் ஒரு சிக்கலுண்டு!

அதாகப்பட்டது, சிலவேளை – மு.கா.வின் பேரம்பேசலுக்கு அரசு பணியாமல் அவைகளைத் தட்டிக் கழிக்கும் ஒரு நிலையேற்பட்டு அதனால், ஆட்சியிலிருந்து பிரிந்துவிடுவதற்கான முடிவொன்றினை அக்கட்சியின் தலைமை எடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம்… அவ்வேளையில், மு.காங்கிரசின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அமைச்சுப் பதவிகளை உதறிவிட்டு, தலைமையின் உத்தரவை சிரமேற்கொண்டு பதவி விலகுவார்களா என்பது பற்றியும் யோசிக்க வேண்டியுள்ளது! முன்னர், இந்த அரசுடன் மு.கா. இணைய வேண்டுமென்றும் அவ்வாறு இணையாவிட்டால், தான் தனித்து இணையப்போவதாகவும் மிரட்டி, பின்னர் கட்சியையும் அழைத்துக் கொண்டு இந்த அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட மு.காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் போன்றவர்கள், காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு அல்வா கொடுத்து விட்டு, தொடர்ந்தும் அரசுடன் இணைந்திருப்பார்களாயின் மு.கா.வின் கதி என்ன?

பாவம்!
பாழுங்கிணற்றில் விழுந்தவன் கதிதான்!!

பிற்குறிப்பாய்
மு.கா. செயலாளர் ஹசன் அலியிடம் ஒரு கேள்வி:

”நாங்கள் அரசாங்கத்துடன் வலிந்து இணையவில்லை. ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர்தான் சேர்ந்தோம்” என்று 22 ஜூலை 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலின் முதற் பக்க செய்தியில் நீங்கள் கூறியுள்ளீர்கள்! ஆனால், முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான கே.ஏ. பாயிஸ் எனக்கு வழங்கிய பேட்டியொன்றில் ”எங்களின் (மு.கா.வின்) கோரிக்கைகளை உத்தியோகபூர்வமானதோர் ஒப்பந்தமாக அங்கீகரித்து அரசு கைச்சாத்திடவேயில்லை!” என்று கூறியிருந்தார். (ஞாயிறு தினக்குரல்:18 பெப்ரவரி 2007)

இதேவேளை – உள்ளுராட்சி வாரத்தினை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச சபையினால் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும், மு.கா. தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் உரையாற்றும் போது; ”முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடு வாய் அளவிலான பேச்சோடு மட்டும்தான் இணைந்திருக்கிறது. எழுதப்பட்ட எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை” என தெரிவித்திருக்கின்றார். (வீரகேசரி: 25 ஜூலை 2007)

ஆக – நீங்கள் கூறுவது போல், முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்துதான் அரசுடன் இணைந்தது என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா?

கூறுங்கள் ஐயா… முஸ்லிம் சமூகத்தின் காதுகளில் பூச்சுற்றி விளையாடுவது யார்?


(இந்தக் கட்டுரையை 29 ஜூலை 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s