காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஒரு கடல் துயரம்! 29 ஜூன் 2007

Filed under: கவிதை — Mabrook @ 12:30 பிப

மப்றூக்

hand-face.jpg
யாருண்டு?
இன்றின் என் துயரங்களை
ஒரு பாடல் கொண்டு
அன்றி,
ஒரு பருக்கையளவேனும்
பிரார்த்தனைத் துளி கொண்டு
துடைத்து விட யாருண்டு இங்கு?

சிறு கணமும் நிதானியாது
கருணையின்றி ஓர் உயிர் கொய்த
துயரத்தின் உறுத்தலில் தீய்க்கிறது நெஞ்சு!

நெளிந்து சுருண்டு சாம்பலிட்ட மண்புழுவாய்
மனதுள் துடித்தழுது
இரவுகளை விழுங்கி ஏப்பமிட்ட
அத்துயரங்களின் செறிவில்
என் உயிரும் ஒரு கணம் சிதறியதும் மெய்தான்!

நெருப்பில் பொசுக்கி
நார் நாராய் கிழித்துண்ண
ருசிதான் புறாக்கறி….
அதன் சோடி வந்து
முக்கி முனகி
ஒற்றைக் காலில் தவமிருந்து
திட்டித் தீர்க்கும் வரை
மிக மிக ருசிதான் புறாக்கறி எனக்கும்!


இனி
எந்தத் தீக்கிடங்கில் விழுவேனோ நான்?
நார் நாராய் நான் கிழிய
எந்த விலங்கு ருசிக்குமோ என்னை?
ஓர் இணை பிரித்த கொடுமைக்காய்
எத்தனையாவது நரகத்தில்
தொங்குமோ எனது பெயர்?
அன்றி,
பெண் துனையின்றி, பெண் சுகமின்றி
ஒரு பித்தனாய், கிறுக்கனாய்
குடு குடுத்தலைந்து…
நினைக்க, நினைக்க
உயிரும் ஒரு கணம் சிதறியதும் மெய்தான்!


நெளிந்து சுருண்டு சாம்பலிட்ட மண்புழுவாய்
மனதுள் துடித்தழுது…
ஓ!
ருசிதானெனக்குமந்த ஒற்றைப் புறாக்கறி…
அதன் சோடி வந்து
முக்கி முனகி
ஒற்றைக் காலில் தவமிருந்து
திட்டித் தீர்க்கும் வரை!

எது செய்வேன் இனி?
குருதி படிந்து பிணம் செரித்த
என் புறத்தையும், அகத்தையும்
எந்தப் புனித நீர் கொண்டு
பரிசுத்தம் செய்வேன் நான்?


வா மயிலே வா!
துயர் மறந்து நானுறங்க
ஒரு தாலாட்டு பாடு வந்து…
கனவில்,
நான் பொசுக்கியுண்ட மணிப்புறாவின்
இணை வந்து குந்து
எந்தன் விழி கொத்தியுண்ணட்டும்!


பின்னும்,
இலையுதிர்த்த மரமொன்றில்
அவ்வினை வந்து குந்தி
முக்கி முனகி
ஒற்றைக் காலில் தவமிருந்து
திட்டித் தீர்க்கட்டும் மீண்டும்…
என் பெண்ணை நான் பிரியவும்
அதன் இணை பிரித்து
உயிர் ருசித்த என்னையும்தான்,
நிஜமாகவேனும்!

அப்போதெனினும்
தீர்ந்து போகுமா இத்துயர்?
எனக்கும்,
அதற்கும்தான்!
 

(எனது ‘தடைசெய்யப்பட்ட கவிதை’ தொகுப்பிலிருந்து…)

Advertisements
 

One Response to “ஒரு கடல் துயரம்!”

  1. nalayiny Says:

    உயிரின் ஆழத்தில் ஏதோ சொல்ல முடியாத வெறுமை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s