காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

மொழியின் மரணம்! 29 மே 2007

Filed under: கிறுக்கல் மூலை — Mabrook @ 5:48 பிப

color-dot.gifமப்றூக்
microphone-1.jpg

துபத்திகள் எரிந்து கொண்டிருந்தன!
வெளியில் சிலர் பந்தல்கால்களிட்டுக் கொண்டிருந்தார்கள்.
கூட்டமாக பலர் – வந்து வந்து போயினர்
மொழி இறந்து கிடந்தது!

வெள்ளைத் துணி கொண்டு யாரோ அதை சீராகப் போர்த்தி
வரவேற்பறையில் கட்டிலில் இட்டுக் கிடத்தியிருந்தார்கள்.
அதன் காலடியில் நின்று
மௌனமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தனர் சிலர்!
ஒரு பண்டிதர் மட்டும் தலையில் அடித்துச் சத்தமாக
மிக மிக சத்தமாக அழுதுகொண்டிருந்தார்.
மொழி இறந்து கிடந்தது!!

பலரும் பலவாறு பேசினர் – மொழியின் மரணம் பற்றி!
செம்மொழி, இறவா மொழி என்றெல்லாம் பேசப்பட்ட
மொழியின் அகால மரணம் குறித்து
எல்லோரும் அதிர்ந்திருந்ததை மட்டும் அவதானிக்க முடிந்தது.
கோடி நாவுகளில் வசித்த மொழியை
ஒற்றை நொடியில் உயிர் பறித்து
வெற்றுடலாய் வீசிப்போனது யார்? அல்லது எது?
எவ்வாறு இறந்தது என் மொழி?
திடீர் சுகயீனமேதும் கொன்றிருக்க நியாயமில்லை.
‘கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு
முன் தோன்றிய மூத்த மொழியாம்’ என் தமிழ்,
காலத்தின் எந்தவொரு புள்ளியிலும்
நலிந்து கிடந்ததாய் குறிப்புகள் இல்லை!

” இது கொலைதான்” என்று கோபத்தில் கத்தினார்
மொழியின் பூதவுடல் காணவந்த கவிஞர் ஒருவர்!
ஊதுபத்திகள் எரிந்து முடிந்திருந்தன.
ஆயினும் அறை முழுவதும் வாசம்… மாறா வாசம்…
தமிழ் வாசம்!
புதிதாய் ஊதுபத்திகளைக் கொழுத்திக் கொண்டிருந்தார் ஒருவர்!!

பனியின் நிறத்தில் சிறகுகளை முதுகில் கொண்டிருந்த
சில அழகிய தேவதைகள் ஆகாயத்திலிருந்து வந்திறங்கினர்!
சொர்க்கத்தில் வசிக்கும் நம் மிக மூத்த புலவர்களின்
அஞ்சலிக் கவிதைகளை
தேவதைகள் தம் கரங்களில் ஏந்தியிருந்தார்கள்!
திடீரென சலசலப்பு… பரபரப்பு…
கூட்டத்தை ஒதுக்கியபடி
தன் மெய்க்காவலர்களோடு வந்தார் ஓர் அரசியல்வாதி!
கைகளை முன்னால் பிணைத்துக் கொண்டு
தலையைக் குனிந்தபடி சில நிமிடம் மௌனித்தார்!
பின் ஆங்கிலத்தில் சற்றே நிமிடம்
தன் துக்கத்தைப் பகிர்ந்து விட்டு வெளியேறினார்!
மொழி இறந்தே கிடந்தது!!
ஆயினும் புதிதாய் அதன் உதடுகளில்
கேலி நிறைந்த புன்னகையொன்று
பூத்துக் கிடந்ததை நான் கண்டேன்.
யாருக்கும் சொல்லாமல் பறந்து போயிருந்தனர் தேவதைகள்!!

வளைந்து நெளிந்து கொஞ்சம் குனிந்து கொடுத்திருந்தால்…
தமிழ் இறந்திருக்க மாட்டாது என்றார் ஓர் ஆங்கிலப் பேராசிரியர்.
இலத்தீன், சமஸ்கிருதம் எல்லாம்
நெகிழ்வற்று முரண்டு பிடித்ததால்தான்
மறைந்து போனதாய் விளக்கம் சொன்னார்!
ஆங்கிலத்தின் நிலைப்புக்கு
அதன் நெகிழ்வுப் போக்கே காரணமென்றார்.
ஆயினும் என் மொழியை நினைக்க
மனசு சந்தோசித்துச் சிலிர்த்தது!
நாலாய்… எட்டாய்… ஈரெட்டுப் பதினாறாய்… வளைந்து நெளிந்து
முதுகெலும்பு வளைக்கத் தெரியாத
ரோசமுள்ள மொழி என் தமிழ்!
தேவையன்றி நெகிழத் தெரியா அழகு மொழி!!

மொழியை எரிப்பதா புதைப்பதா என்பதிலெல்லாம்
சர்ச்சைகள் எழவில்லை!
” எரித்தாலும் புதைத்தாலும்
முளைக்கத் தெரியும் என் மொழிக்கு” என்றார்
நாட்டார் பாடல்களை நுனி நாக்கில் புதைத்து வைத்திருக்கும்
எங்களுர்க் கிழவி ஒருத்தி!

ஆயினும் மொழியின் மரணம் குறித்து அறியாமல்
எரிப்பதுமில்லை புதைப்பதுமில்லை என்று
என் தாய் மொழியாம் தமிழ் மொழியின் தலையில் கை வைத்து
சத்தியம் செய்த வேளையில்…

கண் விழித்தேன் அது கனவு!
அதிகாலை
வானொலியில் ஓர் அறிவிப்பாளன் தூரத்தில் தன் ‘பாட்டுக்கு’
ஒருமை பன்மை அறியாமல் ஒலிக் குழப்பம் புரிவது
காதில் வந்து விழுந்தது!

காலைக் கனவு பலிக்கக் கூடாது!
ஆயினும் என் மொழியின் மரணம் குறித்து
இப்போது அறிந்து கொண்டேன்
மிக தெளிவாக!!

  (இதை 18 ஜுன் 2006 ஆம் திகதிய ஞாயிறு வீரகேசரியிலும் காணலாம்)

  Advertisements
   

  4 Responses to “மொழியின் மரணம்!”

  1. Thayanantha Says:

   அன்புடன் மப்றூக்கிற்கு, இன்றுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன், மிக நன்றாயிருக்கிறது.

   அன்புகலந்த வாழ்த்துக்கள்,
   இளையதம்பி தயானந்தா
   ///

   நன்றி அண்ணா!
   இவ்வாறான தட்டிக்கொடுத்தல்களே இன்னும் நிறைய எழுத வேண்டுமென்கிற உற்சாகத்தை தருகின்றன!!

   -மப்றூக்-

  2. அருமையான கவிதை… + ஆதங்கம்

   எனது தளத்தில் பதிவிட ஆர்வமாயிருக்கு அனுமதி கிடைக்குமா../
   உங்கள் பெயரோடுதான்


  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  w

  Connecting to %s