காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

சேர்ந்து பிரிதலும், பிரிந்து பின் சேர்தலும்! 28 மே 2007

Filed under: அரசியல் — Mabrook @ 3:31 பிப

color-dot.gifமப்றூக்handshakes.jpg

நமது கண்ணாமூச்சி அரசியல் பற்றிய ஒரு பார்வை…

ங்கள் அரசியல் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். உங்களில் அனைத்துத் தரப்பினருடனும் நான் பேசியிருக்கிறேன். பிரிந்து போயிருக்கும் நீங்கள் சமூகத்துக்காகவும், இஸ்லாத்துக்காகவும்; உங்கள் முரண்பாடுகளை களைந்து விட்டு, தயவு செய்து ஒன்று சேருங்கள்”!

இந்த அழைப்பை விடுத்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

கவிக்கோ அப்துல் ரகுமான், இன்னார்க்கு அல்லது இந்த தரப்பினருக்கு என்று பெயர் சொல்லி அந்த அழைப்பை விடுக்கவில்லையென்றாலும், அது முஸ்லிம் தரப்பை குறிப்பாக முஸ்லிம் காங்கிரசை மையப்படுத்தி விடுக்கப்பட்ட அழைப்பென்பது புத்தியுள்ளோர்க்குப் புரிந்திருக்கும்!

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளோடும் நேசமானதோர் உறவைப் பேணி வருபவர் கவிக்கோ! குறிப்பாகக் கூறினால், மு.காங்கிரசில் இருப்பவர்களோடும், இருந்தவர்களோடும் நல்லதொரு நட்பு அவருக்குண்டு. மறைந்த தலைவர் அஷ்ரப், அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், பஷீர் சேகுதாவூத், அமீர் அலி என்று பல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவிக்கோவின் பரம விசிறிகள்! அந்தவகையில் மு.கா.வில் ஏற்பட்ட உடைவுகள் குறித்தும், அவற்றின் பின்னணி குறித்தும் போதியளவு புரிதல்களை கொண்டுள்ள கவிக்கோ இந்த அழைப்பை விடுக்கும்போது, சம்பந்தப்பட்டோரில் சபையில் இருந்தோர் ரவூப் ஹக்கீமும், பஷீர் சேகுதாவூத்தும் மட்டுமே!
athaulla

முஸ்லிம் காங்கிரஸ் என்பது இலங்கையிலுள்ள, குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் பெரும்பான்மை முஸ்லிம்களின் அரசியல் சக்தியாகும்! இக்கட்சியின் தேவை குறித்து பெரும்பான்மை முஸ்லிம்களிடையே இரண்டுபட்ட கருத்துகளில்லை! முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியேறியவர்கள் கூட, அக்கட்சியின் தலைமைகளோடு சண்டையிட்டுச் சென்றனரே தவிர, கட்சியின் கொள்கைகளோடு ஒருபோதும் முரண்பட்டு செல்லவில்லை. அஷ்ரப் முதல் ஹக்கீம் வரையிலான தலைமைக் காலங்களில் நிகழ்ந்தவை இவைதான்!

தற்போது மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்களை விடவும் அக்கட்சியிலிருந்து வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர்களே அதிகம்! ஆக – பிரிந்தவர்கள் அனைவரும் மீண்டும் இணையும்போது கட்சியும், அது சார்ந்த சமூகமும் பலம் பெறும் என்பது நேர்மையாகச் சிந்திப்போரின் கருத்தாகும். இக்கருத்தையே கவிக்கோ அப்துல் ரகுமான் தனது ஆதங்கமாகவும், அழைப்பாகவும் முன்வைத்திருந்தார்!

சரி, பிரிந்தவர்கள் மீண்டும் சேர்வார்களா? அதற்கான சாத்தியங்கள் உள்ளனவா? என்பவை பற்றி சற்றே இக்கட்டுரையில் அலசுவோம்.

மு.காங்கிரசிலிருந்து பிரிந்து சென்றவர்களில் குறித்துச் சொல்லத்தக்க அனைவரும் இன்று ஆளாளுக்கு ஒரு கட்சியைக் கைவசம் வைத்தேயுள்ளனர்!

பேரியல் அஷ்ரப் மற்றும் சேகு இஸ்ஸதீன் ஆகியோருக்கு நுஆ. அதாஉல்லா, அன்வர் இஸ்மாயிலுக்கு தேசிய காங்கிரஸ். அமீர் அலி மற்றும் ரிசாத் பதியுத்தீன் போன்றோருக்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்! இப்படி, ஒவ்வொருவரும் தங்களுக்கென சில கிரீடங்களையும், குட்டி சமஸ்தானங்களையும் உருவாக்கிக் கொண்டு அரசியல் புரிந்து கொண்டிருக்கும் வேளையில் அவைகளையெல்லாம் வெறுமனே உதறிவிட்டு மீண்டும் மு.காங்கிரசில் பழையபடி இணைவதற்கு இவர்கள் சம்மதிப்பார்களா என்பது கேள்விக்குறியே!

மட்டுமன்றி, இவர்களில் பலர் ஹக்கீமை ஒரு வீதம் கூட நம்புவதற்கு தயார் நிலையில் இல்லை. மு.கா. தலைவரிடம் நேர்மையில்லை என்பதே இவர்களில் பலரது கருத்தாகும். பிரிந்தவர்களை கட்சிக்குள் மீண்டும் உள்வாங்கி, பொருத்தமானதொரு வேளையில் அவர்களின் காலை வாரி விடுவதே ஹக்கீமின் திட்டம் என்றும், அதற்கு தாம் ஒருபோதும் பலியாகப்போவதில்லை என்றும் கூறுகின்றனர் முரண்பட்டுப் பிரிந்த பா.உறுப்பினர்கள் பலர்!

மு.கா. தலைவர் மீது முரண்பாட்டாளர்கள் தெரிவிக்கும் இந்த சந்தேகங்களுக்கு ஹக்கீம் தரப்பிலிருந்து இதுவரை எவ்விதமான நம்பிக்கை தரும் வார்த்தைகளும் முன்வைக்கப்படவில்லை! ”பிரிந்து போனவர்களுக்கு கட்சியின் கதவு திறந்தே இருக்கிறது”, ”கட்சியை விட்டும் வெளியேறியவர்கள் மீண்டும் வந்து இணைந்து கொள்ளலாம்” என்று ரவூப் ஹக்கீமால்; மிகச் சாதாரணமான அழைப்புகளே இதுவரை விடுக்கப்பட்டுள்ளன. தவிர, முரண்பாட்டாளர்களோடு எவ்வகையில் சமரசம் செய்து கொண்டு, அவர்களை கட்சியில் மீண்டும் இணைப்பது என்பது பற்றி மு.கா. தலைவர் இதுவரை ஒரு மூச்சுக் கூட விடவில்லை! ஆக – பிரிந்துபோனவர்கள் ஆகக்குறைந்தது தமக்கான தீர்வுகள் எவையும் முன்வைக்கப்படாத ஓர் அழைப்பை நிச்சயமாக ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்!

இது இவ்வாறிருக்க, பிரிந்துபோனவர்களை நூறு வீதம் நம்பி மீண்டும் கட்சிக்குள் ஹக்கீம் இணைத்துக் கொள்வார் எனவும் நாம் எதிர்பார்க்க முடியாது. தனக்கு துரோகமிழைத்து விட்டு வெளியேறியவர்கள் மீண்டுமொருமுறை அந்த துரோகத்தை புரிய மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று ஹக்கீம் யோசிக்கலாம். அவரின் தரப்பில் அவ்வாறு யோசிப்பதில் தவறுகளுமில்லை!ferial

ஆக – அனைத்துத் தரப்பினர்களிடையேயும் நிலவும் இந்த சந்தேகங்கள் முதலில் களையப்படல் வேண்டுமென்று நம் எல்லோருக்கும் புரிகிறது! ஆனால், அதை யார் முன்னின்று செய்வது, எப்படிச் செய்வது என்பதே தற்போதுள்ள சிக்கல்கள் நிறைந்த கேள்விகளாகும்!

இவை ஒருபுறமிருக்க, கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் எவ்வித நிபந்தனைகளுமின்றி மீண்டும் இணைய வேண்டுமென சிலர் கூறிவருகின்றனர். அவ்வாறு இணைந்த உதாரண புரிஷர்களாக முன்னாள் பா.உ. க்களான ஹிஸ்புல்லா மற்றும் ஹரீஸ் ஆகியோரின் பெயர்களையும் இவர்கள் பெருமைப்படச் சொல்லி மகிழ்கிறார்கள்!

ஆனால், மேற்படி இருவர் இணைவினையும் நாம் வேறு கோணத்தில் வைத்தே நோக்க வேண்டியுள்ளது. இவர்கள் இருவரில் ஹரீஸ் மு.கா.விலிருந்து பிரிந்து போய் அதாஉல்லாவின் தேசிய காங்கிரசிலும் ( முன்பு தேசிய முஸ்லிம் காங்கிரஸ்), ஹிஸ்புல்லா நுஆவிலும் இணைந்திருந்தனர். ஹரீசைப் பொறுத்தவரை அவருக்கு அதாஉல்லா தரப்பிலிருந்து பல்வேறு கசப்பான அனுபவங்கள் கிடைத்தன! போதிய அங்கீகாரமோ, மதிப்போ அதாஉல்லாவால் ஹரீசுக்கு வழங்கப்படவில்லை. இவை தவிரவும், இறுதியாக 2004 ல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் பொ.ஐ.மு. சார்பாக அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்ட ஹரீஸ் அத்தேர்தலில் படுதோல்வியடைந்தார்! இதே நிலைதான் ஹிஸ்புல்லாவுக்கும். அதே ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பொ.ஐ.மு. சார்பில் போட்டியிட்ட அவர் மோசமானதோர் தோல்விக்கு முகம் கொடுத்தார்.

குறிப்பிட்ட இந்த இருவரும் கடந்த காலங்களில் மு.காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு பா.உறுப்பினர்களாக தெரிவானவர்கள். காங்கிரசில் இருந்தபோது கதாநாயகர்களாக அப்பகுதி மக்களால் மதிக்கப்பட்டவர்கள்! ஆக – தமது தோல்விகளிலிருந்து மீளவும், சிதைந்துபோன தமது கதாநாயகத்துவத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் இவர்களுக்கு மு.காங்கிரசில் இணைவதைத் தவிர வேறு வழிகளேயில்லை என்றான பிறகுதான் மு.கா.வில் மீண்டும் இணைந்து கொண்டனர்! ஆக – நிபந்தனைகள் விதித்து மீண்டும் மு.கா.வில் இணையும் நிலையில் இவர்கள் இருக்கவில்லை என்பதே வாஸ்தவமாகும்!

சரி, ஹரீஸ் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் கட்சியில் மீண்டும் இணைந்து விட்டார்கள் என்பதற்காக அவர்களை அப்படியே உச்சத்தில் தூக்கி ஹக்கீம் உட்கார வைத்துவிடுவார் என்றும் எதிர்பார்க்க முடியாது! ஏற்கனவே இவர்கள் தலைவருக்கு துரோகமிழைத்தவர்கள் என்பதன் அடிப்படையில் இவர்களின் நடத்தை மீது ஹக்கீம் தரப்பு எப்போதும் ஒரு கண் வைத்தேயிருக்கும்!

இதுமட்டுமன்றி, இவ்வாறு மீண்டும் மு.கா.வில் இணைபவர்களுக்கு அதி உயர் நிலைகளை ஹக்கீம் வழங்க மாட்டார் என்று அடித்துக் கூறுகிறார் – முன்னாள் மு.கா. முக்கியஸ்தர் ஒருவர்! உதாரணமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஹரீசை கல்முனை மாநாகர சபையின் மேயராக ஆக்க முயற்சித்திருக்கிறார் ஹக்கீம். (தற்போது அங்கு ‘பொம்மைகளின் ஆட்சி’ யே இடம்பெறுவதால் ஹரீஸ் தற்போது ‘டம்மி’ மேயராகவே செயற்பட்டு வருகிறார்) இனி – இதற்கு மேல் ஹரீசை உயர ஹக்கீம் விடமாட்டார் என்று கூறும் அந்த முன்னாள் மு.கா. முக்கியஸ்தரின் கருத்துக்கு காலம் பதிலுரைக்கும்!

ஆனால், ஹிஸ்புல்லாவின் நிலை சற்று வித்தியாசமாகவேயிருக்கும்! ஏனெனில், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை ஹக்கீமின் துருப்புச் சீட்டாக ஹிஸ்புல்லா இருக்கப்போகிறார்! காரணம், ரவூப் ஹக்கீமின் பரம அரசியல் எதிரியான அமீர் அலி, எதிர்காலத்தில் பாராளுமன்ற தேர்தலொன்று இடம்பெறும்போது மட்டக்களப்பு மாவட்டத்திலேயே போட்டியிடுவார். அதன்போது அவரைத் தோற்கடிப்பதற்காக நிச்சயம் ஹிஸ்புல்லாவை ஹக்கீம் தேர்தலில் களமிறக்குவார். ஆக – எவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஹிஸ்புல்லாவுக்கு அந்த சந்தர்ப்பம் நிச்சயம் வழங்கப்படுமென்கிறார்கள் அரசியல் ஆருடவியலாளர்கள்.hakeem-32.jpg

சிலவேளை, பிரிந்துபோனவர்கள் மீண்டும் இணைவதற்கு சம்மதித்தாலும் ஆகக்குறைந்தது அவர்கள் கட்சிக்குள் கூட்டுத் தலைமைத்துவமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென்றே கோருவார்கள். அல்லது, தலைவருக்கான குறிப்பிட்ட சில அதிகாரங்கள் குறைக்கப்பட அல்லது நீக்கப்பட வேண்டுமென்று நிபந்தனை விதிப்பார்கள்! இதற்கு ஒருபோதும் மு.கா. தலைவர் ஹக்கீம் சம்மதிக்க மாட்டார். இப்போதுள்ள அதிகாரங்களை வைத்துக் கொண்டே கட்சியை நடத்துவது பெரும்பாடாகிப்போன நிலையில், இருக்கின்ற அதிகாரங்களையும் பறிகொடுத்துவிட்டு நிராயுதபாணியாக நின்று கட்சி நடத்த ஹக்கீம் சம்மதிப்பார் என்று விளையாட்டுக்குக் கூட நினைக்கத் தோன்றவில்லை!

இது தவிர, அதாஉல்லா போன்றவர்கள் ஹக்கீமோடு இணைந்து செயற்பட முடியாது என்று வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர்!

ஆக – முஸ்லிம் காங்கிரசில் ஏற்பட்ட பிளவுகள் இனி ஒருபோதும் பூரணமாக சரிசெய்யப்படப் போவதில்லை என்பதே கசப்பானாலும் உண்மையாகும்!

தங்களை புனிதர்களாகக் காட்டிக் கொள்வதற்காக ”வாருங்கள், சேருங்கள்” என்று ஹக்கீமும், ”உரிய முறைப்படி அழைத்தால் சேர்வோம்” என்று மாற்றுத் தரப்பினரும் அறிக்கைகளை விட்டுக்கொண்டேயிருப்பார்கள்! தவிர, மனத் தூய்மையோடு, கவிக்கோ அப்துல் ரகுமான் அழைத்தது மாதிரி சமூகத்துக்காகவும், இஸ்லாத்துக்காகவும் தமது சர்ச்சைகளை விட்டுக்கொடுத்து மீண்டும் சேர்ந்து இயங்க ஒருபோதும் இவர்கள் முன்வரவே மாட்டார்கள்!

ஏனெனில் இவர்கள் அரசியல்வாதிகள்!!

(இந்தக் கட்டுரையை 27 மே 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

2 Responses to “சேர்ந்து பிரிதலும், பிரிந்து பின் சேர்தலும்!”

 1. Salman Rusti Says:

  muslim politics is very wastable think in Sri lanka…So dont waste ur think and time…..
  //
  மன்னிக்க வேண்டும், எனக்கென்ன தேவை என்று என்னால்
  இதை எழுதாமலிருக்க முடியாது!
  ஒன்று தெரியுமா? நாங்கள் மௌனமாக இருப்பதால்தான், நமது தலைவர்கள் தடமாறிப் போகிறார்கள்!

 2. meeran Says:

  Dear mabrook,
  try to concentrate on writing some valuables in poems. not in politics. its not necessary, not effective in this time. try better poems more. good luck!
  //
  மீரான், முதலில் நீங்கள் எனது வலைப் பக்கத்துக்கு வந்ததற்கும், நேரமொதுக்கி படைப்புகளைப் பார்வையிட்டதுக்கும் முதலில் நன்றி!

  ஒரு ஊடகவியலாளனாக சில விடயங்களைப் பேசாமல் இருக்க முடியாது! அப்படிப் பேசாமல் இருப்பவன் ஊடகவியலாளனுமல்ல!!

  எனக்குத் தெரிந்தது எழுத்து மட்டும்தான்! நமது வாக்குகளால் தலைவர்களாகி விட்டவர்களின் பிழைகளுக்கான எதிர்ப்பினை இப்படித்தான் என்னால் தெரிவிக்க முடிகிறது.

  எழுத்துக்களால் என்னத்தை பெரிதாக ‘கிழிக்க முடியும்’ என்கிறீர்களா?

  ‘அபாபீல்’ எனும் பறவைகள் தமது சொண்டுகளில் சுமந்து வந்த ‘சிஜ்ஜீல்’ எனும் சிறிய கற்களால்தானே ஆப்ரஹாவின் யானைப் படையை அழித்தன…. நினைவில்லையா?? (பார்க்க: அல்குர்ஆன் – சூரத்துல் பீல்)

  -மப்றூக்-


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s