காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஏட்டுச்சுரைக்காயும் சில சமையல் குறிப்புகளும்! 5 மே 2007

Filed under: அரசியல் — Mabrook @ 1:10 பிப

color-dot.gifமப்றூக்

magician11.jpg

முஸ்லிம் கட்சிகளின் அதிகார அலகு குறித்த கதையாடல்களை முன்வைத்து……

சில காலங்களுக்கு முன்னர் சகோதரியொருவரின் மிகப் பெறுமதியான தங்க தாலியொன்று வீட்டில் வைத்துத் தொலைந்து போயிற்று! எத்தனை முயன்றும் கண்டுபிடிக்க முடியாததால் பாட்டியொருவரின் ஆலோசனைக்கிணங்க குறிசொல்லும் மந்திரவாதியொருவனை நாடிப்போனார்கள். குறிசொல்லியோ தான் அந்த தாலியை தனது மாந்திரீகத்தால் பெற்றுத்தருவதாகக் கூறி, அதற்கு கூலியாக பெரும் தொகையொன்றையும் கேட்டுள்ளான். எப்படியாவது தாலி கிடைக்க வேண்டுமெனும் நப்பாசையில் குறிசொல்லி கேட்ட பணத்தொகையை உடனடியாக கொடுத்தும் விட்டனர். அவன் அவர்களை மறுநாள் வரச்சொன்னான். இவர்களும் போயினர். குறிசொல்லி ஒரு மூடப்பட்ட தகரப் பேணியை கையில் வைத்துக் கொண்டு அதை குலுக்கி காட்டினான். அதற்குள் ஏதோ திண்மம் இருந்ததால் குலுக்கும்போது ஒலியேற்பட்டது. உள்ளேயிருப்பது தாலி என்றான், அதை வெளியே எடுக்க சில பூசைகள் செய்ய வேண்டுமென்றான். இவ்வாறு நாட்களை கடத்தினானே தவிர தாலி கிடைக்கவில்லை. கடைசியாக அவனைப் பலாத்காரமாகப் பிடித்து அந்த பேணியை சோதித்தபோது அதற்குள் சில கல் துண்டுகளே காணப்பட்டன!

அதிகாரப்பகிர்வு தொடர்பில் முஸ்லிம் மக்களுக்கான அதிகார அலகு பற்றியும், அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தாம் வடக்கு கிழக்கு இணைப்புக்கு சம்மதம் தெரிவிக்கப்போவதாகவும் சில முஸ்லிம் அரசியல் கட்சிகள் அண்மைக்காலமாக அறிக்கையிட்டு வருகின்றன. அதிகார அலகு பற்றி மிகச் சத்தமாக இவர்கள் விடும் அறிக்கைகளைக் கேட்கையில் நான் மேற்சொன்ன குறிசொல்லி அடிக்கடி ஞாபகத்துக்கு வந்துபோவதோடு, அவனது தகரப்பேணியும் நினைவுக்கு வருகிறது!

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளிடையேயும், முஸ்லிம் கட்சிகளிடையேயும் தற்போது பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. சில தினங்களுக்கு முன்னர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனியான அதிகார அலகு முஸ்லிம்களுக்கு வழங்கப்படுமானால் வடக்கு கிழக்கு இணைப்புக்கு தாம் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதே போன்று முஸ்லிம் காங்கிரசும் நிபந்தனையுடனான இணைப்புக்கு தாம் ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. மு.காவின் நிபந்தனையும் முஸ்லிம் தரப்புக்கு வழங்கப்படும் அலகு குறித்ததாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை!

இவ்வாறு முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டு அறிக்கைகள் விடும் இந்த கட்சிகள், முஸ்லிம் மக்கள் சார்பாக தாம் கோரும் அந்த அதிகார அலகு பற்றிய தெளிவான திட்ட வரைபொன்றை இதுவரை முன்வைக்கவேயில்லை!

அரசுக்கும், எல்.ரீ.ரீ.ஈ. யினருக்குமிடையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது புலிகள்; தனிநாட்டுக் கோரிக்கைக்கு மாற்றாக இடைக்கால தன்னாட்சி அதிகார சபை எனும் அதிகார அலகொன்றுக்கான திட்டமொன்றினை எழுத்து வடிவில் முன்வைத்திருந்தனர். ஆனால், அக்கோரிக்கை பற்றி அரசியல் அமைப்புக்கு அது முரணானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த அதிகாரங்கள் தனிநாட்டுக்கு ஒப்பானது என்றும் பல்வேறு விமர்சனங்கள் பின்னர் தெரிவிக்கப்பட்டிருந்தன. இருந்தபோதிலும் புலிகள் தாம் எதை எதிர்பார்த்தனரோ அதை மிகத்தெளிவாக பேச்சுவார்த்தையின் போது முன்வைத்திருந்தனர். ஆனால், முஸ்லிம் கட்சிகள் எவையும் தாம் கோரும் அலகு பற்றிய தெளிவானதும், எழுத்துவடிவானதுமான திட்டத்தினை இதுவரை முன்வைக்கவேயில்லை. இந்த நிலையில், அவ்வாறானதொரு திட்டத்தினை முஸ்லிம்காங்கிரஸ் ஏன் முன்வைக்கவில்லையென அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது எத்தனை கேலிக்கூத்தான விடயம்! அப்படியாயின் அ.இ.மு.காங்கிரஸ் ஏன் இதுவரை தமது கோரிக்கையை முன்வைக்கவில்லை என்று கேட்டால், அவர்களிடமும் பதில் கிடைக்கப்போவதில்லைதான்!

முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் அதிகார அலகு சம அந்தஸ்துள்ள அதிகார அலகாக அமைய வேண்டுமென இந்த முஸ்லிம் கட்சிகள் கூறுகின்றன. முஸ்லிம்கள் சார்பில் இதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லைதான்! ஆனால், தமிழர்களுக்குக் கொடுப்பதுபோல் எமக்கும் தா என்று சிறுபிள்ளைத்தனமாக கோசமிடுவதைத் தவிர்த்து எமது தேவை இது, ஆகவே எமக்கு இதைத் தா என, தனது சமூகத்துக்குத் தேவையானதை இக்கட்சிகள் தெளிவாகவும், திட்டமிட்டும் கோர வேண்டும்!

சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில், முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், ஏனைய நாடுகளிலுள்ள அதிகார பகிர்வு முறைபற்றி ஆராய்வதற்காக என்று கூறிக்கொண்டு உலகம் சுற்றித் திரிந்தமையை இங்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு தமது உலகச் சுற்றுலாவை முடித்த பின்னர், முஸ்லிம்களுக்கான அதிகார அலகு பற்றிய தமது திட்டத்தை மிக விரைவில் வெளியிடவுள்ளதாக மு.காங்கிரஸ் பலமுறை கூறியபோதும் அவ்வாறானதொன்றை இதுவரை வெளியிடவேயில்லை!

இதற்குள் வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஆதரவு வழங்குவது பற்றி எந்த தைரியத்தில் இக்கட்சிகள் நிபந்தனை விதிக்கின்றனவோ தெரியவில்லை! சிலவேளை உங்கள் அலகு பற்றிய முழுமையான திட்டத்தை எழுத்து வடிவில் உடனடியாகத் தாருங்கள் என தமிழ் தரப்பு அல்லது அரசாங்கம் வேண்டினால், அதற்கு இந்த முஸ்லிம் கட்சிகள் தயார் நிலையில் உள்ளனவா என்பதை அக்கட்சிகள் ஒருகணம் நினைத்துப் பார்க்க வேண்டும்!

வடக்கு கிழக்கு இணைப்புப் பற்றி இவ்வாறு பரந்தளவில் பேசப்பட்டு வரும் வேளையில்@ அண்மையில் வெளியாகி மிக சர்ச்சைக்குக்குள்ளான நிபுணர்கள் குழுவின் பெரும்பான்மை அறிக்கை என்று அழைக்கப்படும் ~அ| அறிக்கைக்கையில் இந்த இணைப்புப் பற்றி குறிப்பிடப் பட்டுள்ள சில விடயங்கள் பற்றியும், அதுபற்றிய சில வாதப் பிரதிவாதங்கள் மற்றும் எதிர்வினைகள் பற்றியும் இங்கு குறிப்பிட்டுக் கூறலாம்!

அக்குழுவின் 37 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரே மாகாணமாக இணைப்பது தொடர்பாக நான்கு மாற்று வழிகள் முன்மொழியப்பட்டுள்ளன. அவைகளில் ஒன்று, பத்து வருடங்களின் முடிவில் கிழக்கு மாகாணத்தில் கருத்தறியும் வாக்கெடுப்;பொன்றை நடத்துவதெனும் அடிப்படையிலான தற்காலிக இணைப்பாகும்.

மேற்குறித்த இணைப்புப் பற்றி, மனித உரிமைகள் பற்றிய டிப்ளோமா கற்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் கற்கையாளர்கள் சிலரிடையே அண்மையில் ஆரோக்கியமானதொரு கருத்தறிதல் இடம்பெற்றது. இதன்போது அவர்கள் தெரிவித்த விடயங்கள் மிகவும் கவனிக்கத் தக்கனவாக அமைந்தன!

தற்காலிக இணைப்பின் பின்னர் கருத்தறிதல் என்பதை விடுத்து, பொது அபிப்பிராய வாக்கெடுப்பொன்றை நடத்தி விட்டு அதனடிப்படையில் மாகாணங்களை இணைக்கலாம் அல்லது நிரந்தரமாகவே பிரிக்கலாம் என்று கூறிய ஒருவர், கருத்தறியும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக இணைப்பின் பின்னர் கடந்த காலங்களில் தமிழ் – முஸ்லிம் உறவுகளில் ஏற்பட்ட மோசமான பின்னடைவுகளையும், பரஸ்பர சந்தேகங்களையும் சுட்டிக்காட்டினார். இவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்! ஆனால், இவரின் கருத்தை கடுமையாக மறுத்த தமிழ் நண்பர் ஒருவர், தமிழ் மக்கள் அதிகளவு வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள தற்போதைய நிலையில் ஒரு பொது அபிப்பிராய வாக்கெடுப்பொன்று நடத்தப்படுமானால் அதில் தமிழ் மக்களின் முழுமையான கருத்து பிரதிபலிக்க மாட்டாது என்றார்! அப்படியாயின், பத்து வருடங்களின் பின்னர் நடத்தப்படும் ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பின் போது, வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் வாக்களிப்பதற்காக தாய்நாடு திரும்பி வருவார்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை!

பத்து வருடங்கள் என்பதே தற்காலிக இணைப்புக்கு போதுமானதொரு காலமல்ல என்றும் அக்காலத்தை மேலும் அதிகரிக்க வேண்டுமென்றும் மற்றொரு தமிழ் நண்பர் கூறினார்.

சிலர் கருத்துத் தெரிவிக்கும்போது திட்டமிட்ட அரச குடியேற்றங்களின் மூலம் தற்போது சிங்கள மக்களின் தொகையானது குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ளமையினால் தற்போதைய வாக்காளர் பட்டியலின் படி வாக்கெடுப்பொன்றை நடத்தக் கூடாதென்றும், தமிழர் தரப்பால் பிரேரிக்கப்படும் காலத்துக்கு முந்தைய பட்டியலின் படியே அவ்வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் கூறினார்.

வடக்கு கிழக்கு பிரிப்பென்பதையே முற்றாக சிலர் நிராகரித்த அதேவேளை, அம்மாகாணங்கள் நிரந்தரமாக பிரிந்திருப்பதே தமது விருப்பாகும் என்றனர் வேறு சிலர்!

இக்கருத்துக்களினூடாக அவைகளைத் தெரிவித்த நபர்களின் சமூகம் சார்ந்த உணர்வுகளையும் நாம் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. தமிழ் மக்களோடு ஒருமித்து வாழ்ந்த வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள் மீது 1990 களுக்குப் பின்னர் தமிழ் போராட்ட இயக்கங்களால் பல்வேறு வன்போக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன! அதன் விளைவு, இன்று முஸ்லிம் மக்கள் மத்தியில் தாம் தனித்து, தமக்கானதோர் அதிகார அலகொன்றினைப் பெற்று வாழ வேண்டுமென்ற எண்ணம் ஆழமாக வேறூன்றியுள்ளது. இதுதான் உண்மையுமாகும்! ஆக – இது தொடர்பில் இரு சமூகங்களினது பிரதிநிதிகளும் மிக ஆழமாகச் சிந்தித்துச் செயற்படும்போதுதான் இரண்டு சமூகங்களினதும் எதிர்காலம் சுபீட்சம் பெறும் என்கின்றனர் இரு தரப்பினதும் புத்தி ஜீவிகள்!

சரி, இது ஒருபுறமிருக்க@ இப்போது இணைப்பது, பிரிப்பது குறித்த கதையாடல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் முல்லிம் கட்சிகளது பிரதிநிகள்@ முதலில் சேர்ந்து, கூடி, தமது சமூகத்துக்கான அதிகாரத் தேவைகள் மற்றும் அலகு பற்றிய தெளிவான திட்டமொன்றை எழுத்து வடிவில் தயாரிக்க வேண்டும் என்பதே தற்காலத் தேவையாகும். அல்லாது விடின் அதிகாரப் பரவலாக்கல் பற்றிப் பேசப்படும் ஒரு கட்டத்தில் அரசாங்கம் தனது தீர்வினை ஒருபக்கம் முன்வைக்க, தமிழ்த் தரப்பு மறுபக்கம் தமது தேவைகளை முன்வைக்க… முஸ்லிம் கட்சிகளோ பேந்தப் பேந்த விழிக்கத்தான் வேண்டிவரும்! வேறு வழிகளில்லை!!


(இந்தக் கட்டுரையை 22 ஏப்ரல் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s