காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

பாயிஸ்: மு.கா. தலைவரின் அடுத்த குறி? 27 ஏப்ரல் 2007

Filed under: அரசியல் — Mabrook @ 11:36 முப

நிறைவேற்று அதிகாரத்தை முன்வைத்து… நடந்தவைகள், நடப்பவைகள் பற்றிய ஒரு பார்வை!

color-dot.gifமப்றூக்

baize minister
நிறைவேற்று அதிகாரம் எனும் ஜனநாயகம் வழங்கும் சர்வதிகாரம்!

அதிகாரம் மிக அதிகமாக ஓரிடத்தில் குவிக்கப்படுவதென்பது ஆபத்தானதொரு விடயமாகும்! அதிலும் அதிகாரத்தைப் பெறுபவர் ஆபத்தானவராக இருப்பின் நிலைமை படுமோசமாகிப் போய்விடும்.

ஜனநாயக இலங்கையில் ஒரு தனி நபருக்கான அதிகபட்ச அதிகாரங்களை அரசியல் ரீதியாக முதன் முதலில் வழங்கியது 1978 ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பு முறையாகும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி மூலம் இந்த அதிகாரம் வழங்கப்பட்டது. ஆணைப் பெண்ணாக மாற்றுவதைத் தவிர இந்நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினால் அனைத்தையும் செய்து முடிக்கலாம் என்கின்ற கூற்று இவ்வதிகாரத்தின் பெறுமானத்தை விளக்கி நிற்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ஜனாதிபதி ராஜபக்ஷ மூன்று அமைச்சர்களை அதிரடியான முறையில் பதவியிலிருந்து விலக்கியதும் அரசியலமைப்பின் 47 வது உறுப்புரையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தின் அடிப்படையில்தான்! முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் என்போரின் பதவிக்காலம் பற்றிக் குறிப்பிடும் 47 வது உறுப்புரையின் பகுதி (அ) வின் மூலம் ஜனதிபதியின் கைப்பட்ட ஒரு கடிதத்தின் மூலம் இவர்கள் பதவி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

நிறைவேற்று அதிகாரத் தன்மையுடைய தலைமைத்துவங்கள் 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புக்குப் பின்னர் இங்கு அதிகமாக தோன்ற ஆரம்பித்து விட்டன. அதிகபட்ச ஜனநாயகத்தின் பலவீனங்களை களைவதற்காக அல்லது சரிசெய்வதற்காக, தலைமைத்துவங்களுக்கு இவ்வாறான அதிகாரங்களை வழங்குவதில் தப்பில்லை என்றும் இங்கு ஒரு வாதமுண்டு!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவரினால் கிட்டத்தட்ட அனைத்தையும் செய்து முடிக்க இயலுமென்றால், 20 வருடங்களுக்கும் மேலான இலங்கையின் இன முரண்பாடுகளுக்கு இதுவரை ஏன் தீர்வுகள் எதையும் காண முடியாமல் போயிற்று?? வலி தரும் கேள்வி இது. விடைகளோ கசப்பானவை! நிற்க!!

இவ்வாறான நிறைவேற்று அதிகாரங்களை உள்ளடக்கிய தலைமைத்துவங்கள் இன்று அரசியல் கட்சிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கங்களைச் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தக் கட்டுரை அவ்வாறானதொரு அதிகாரம் பொருந்திய தலைமைத்துவத்தைக் கொண்ட சி.ல.மு.காங்கிரஸ் பற்றியும் அது சார்ந்த சில விடயங்கள் பற்றியும் காலத் தேவை கருதி பேச முயல்கிறது!

மு.கா.வும் மிகை அதிகாரத் தலைமைத்துவமும்!

சி.ல.மு.காங்கிரசின் யாப்பை உருவாக்கியவர் அக்கட்சியின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய அமைச்சருமான சேய்கு இஸ்ஸதீன்! அவரை மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஒரு பொழுது ~கட்சி யாப்பினை வடித்த சிற்பி| எனும் பொருள் பட புகழ்ந்திருந்தார்.

ஆனால், அதே இஸ்ஸதீன், அவர் எழுதிய யாப்பின் அடிப்படையில் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் மூலம் அஷ்ரப்பினால் 1992 ம் ஆண்டு கட்சியிலிருந்து திடீரென அகற்றப்பட்டார்.

உண்மையாகவே கட்சியின் அப்போதைய தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு முரணான வகையில், கட்சி சார்பாக அப்போது அஷ்ரப் தெரிவித்திருந்த கருத்தொன்றை, தவிசாளர் எனும் வகையில் இஸ்ஸதீன் மறுத்துரைத்திருந்தார்! ஆக – பிழை செய்தவர் அஷ்ரப், அதை சரி செய்ய முயன்றவர் இஸ்ஸதீன். ஆயினும், மிக அதிகாரம் கொண்ட தனது தலைமைப் பதவியினால் அஷ்ரப் தன்னை எதிர்த்துப் பேசிய சேகு இஸ்ஸதீனை அப்போது பழி தீர்த்திருந்தார்!

ஆக, பழி தீர்க்கப் பயன்படும் ஒரு கொடிய ஆயுதமாக நிறைவேற்றுத் தன்மை கொண்ட இவ்வதிகாரப் இப்பதவிகள் அடிக்கடி பயன்படுத்தப் படுவதாகவும் அரசியல் அவதானிகளால் விமர்சிக்கப்படுவதுண்டு.

இப்படி இந்த சம்பவங்கள் கற்றுத் தந்த அனுபவங்களிலிருந்தும், தொடர்ச்சியிலிருந்தும் முஸ்லிம் காங்கிரசுக்குள் இவ்வாறான பழி வாங்கும் படலமொன்று தற்போது நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக அரசியல் புரிந்த பலர் பேசிக்கொள்கின்றனர்.

அவ்வாறு கட்சிக்குள் ஓரங்கட்டப்படலாம் அல்லது பழி தீர்க்கப்படலாம் என நோக்கப்படுபவர் மு.கா. தேசிய அமைப்பாளர் கே.ஏ. பாயிஸ்! காரணம் அரசோடு மு.கா. இணைய வேண்டுமென, அண்மையில் கட்சியின் தலைவர் ஹக்கீமுக்கு மிக மோசமான அழுத்தங்களைக் கொடுத்தவர் இவர். அரசாங்கத்துக்கு ஹக்கீம் ஆதரவு வழங்கத் தீரமானித்தமைக்கு முக்கிய காரணமே பாயிஸினது தவிர்க்க முடியாத தலையிடிகள்தான்!

ஆக, கட்சித் தலைமையோடு பகிரங்கமாக முரண்பட்டுக் கொண்டமை, தலைவருக்கெதிராக அறிக்கைகள் விட்டமை மற்றும் கட்சியின் பேரம் பேசும் சக்தியைச் சிதைத்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் ரஊப் ஹக்கீம் தரப்பிலிருந்து பாயிஸ் மீது சுமத்தப்பட்டு வருகின்றன! இதனால்தான் மு.கா. தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்றுத் தன்மை கொண்ட அதிகாரத்தின் மூலம் பாயிஸ் குறி வைக்கப்பட்டு கட்சிக்குள் பழி வாங்கப்படலாம் என்று அரசியல் குறி சொல்லிகள் ஆரூடம் கூறுகின்றனர்.

இந்த அச்சங்கள் குறித்தும், ஆரூடங்கள் குறித்தும் பிரதியமைச்சர் பாயிசுடன் ஒரு மாலை நேரச் சந்திப்பில் பேசக் கிடைத்தபோது வேறு சில அரசியல் விவகாரங்கள் தொடர்பிலும் கதை நீண்டது….

கேள்வி: இன்றைய அமைச்சர்களின் தொகையை மனதிற்கொண்டு அமைச்சர் மைத்திரிபால தன்னை அமைச்சர் என்று கூறுவதற்கே வெட்கப்படுகிறார், மற்றொரு அமைச்சர் தனது அமைச்சுப் பதவியை ஒரு தோசமாகக் கருதுகிறார். நீங்கள்?

பதில்: சிலருக்கு இது கௌரவப் பிரச்சனையாக இருக்கலாம் ஆனால் நாட்டுக்குச் சேவை செய்யும் நோக்குடன் இதை ஆராய்ந்தால், இது நல்லதொரு விடயம். கடந்த முறை அமைச்சுக்களின் தொகை 57 ஆகும். தற்போது 53. உண்மையாகவே அமைச்சுக்களைக் குறைத்து அமைச்சர்களின் தொகையே அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரிதாக அரசுக்கு நஷ்டமில்லை. முன்னர் ஒருவருக்கு பல அமைச்சுக்கள் வழங்கப்பட்டிருந்தன, தற்போது அவை பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று முன்னர் 2 அல்லது 3 அமைச்சுக்களுக்கு ஒரு அமைச்சர் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தாலும் அவருக்கான ஆளணி வளங்கள் மற்றும் ஏனைய வசதிகள் அனைத்துமே மூன்று அமைச்சர்களுக்குரியன போலவே கொடுக்கப்பட்டன. தற்போது அமைச்சர்கள் அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்கை மட்டுமே பெறுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆக -இதிலும் அரசுக்கு நட்டமில்லை, லாபம்தான்!

இவைகள் அனைத்துக்கும் மேலாக ஒருவருக்கு பல அமைச்சுக்களை வழங்கும் போது, அவரால் ஒவ்வொரு அமைச்சு மீதும் ஆழமாக கவனம் செலுத்த முடியாததொரு நிலை முன்பு இருந்தது. ஆனால், தற்போது அதிகமானோருக்கு ஒரு அமைச்சு என்கின்ற வகையில் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதால் தத்தமது அமைச்சு மீது முழுமையாக கவனம் செலுத்த முடியுமாகவுள்ளது!

கேள்வி: நிபந்தனைகள் எதுவுமின்றி நீங்கள் அரசுடன் இணைவதற்கு எடுத்த எத்தனங்கள்தான் மு.கா.வின் பேரம் பேசும் சக்தியைச் சிதைத்துவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக் குறித்து?

பதில்: மு.கா.வுக்கு அப்படியென்ன னுநஅயனெ இருந்தது? அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக முன்னர் கூறி வந்த தலைவர் ஹக்கீம், பின்னர் அரசாங்கம் எம்மை அழைக்கவில்லை எனத் தெரிவித்தார். இதிலிருந்தே எமக்கு அரச தரப்பில் னுநஅயனெ எதுவும் இருந்திருக்கவில்லை என்று புரிகிறதல்லவா! நான் இவ்வாறானதொரு முறையில் அரசுடன் சேர்வதற்கான அழுத்தத்தைக் கொடுத்து இணைந்திருக்கா விட்டால், கடைசியில் மு.காங்கிரஸ் செல்லாக் காசாகிப்போய், எஞ்சியிருந்த கௌவத்தையும் இழந்திருக்கும்.

உண்மையாகவே ஐ.தே.க. குழுவினர் இணைவதற்கு முன்பே அரசுடன் இணைய வேண்டுமென நான் கூறியிருந்தேன். ஆப்போது இணைந்திருந்தால் நல்ல வரவேற்பு இருந்திருக்கும். அரசோடு இணைந்ததைப்பற்றி சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால், இணையாமல் இருந்து எதைச்சாதிப்பது? மக்களுக்கான அபிவிருத்திகளை அரசுடன் இணையாமல் செய்வதற்கான மாற்று வழிகள் எதுவுமற்ற நிலையில் அரசுடன் இணைவதே பொருத்தமான முடிவாகும். அடுத்ததாக, முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றதொரு கட்சி என்கின்ற வகையில், நாம் அரசை எதிர்க்கும்போது அது முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பாகவே கருதப்படும். இந்நிலை ஒரு சமூகத்துக்கு நல்லதல்ல! ஆகவே, முஸ்லிம் சமூகம் சார்பான ஆதரவினை எமது இணைவின் மூலமாக அரசுக்கு நாம் தெரியப்படுத்தியிருக்கின்றோம்!

கேள்வி: கட்சியின் பொதுத் தீர்மானத்துக்கு முன்பதாகவே நீங்கள் தனிப்பட்ட முறையில் அரசுடன் இணையத் தீர்மானித்தமையானது, கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியதோர் விடயமாகக் கருதப்பட்டு, உங்கள் மீது ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது?

பதில்: அவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு கட்சிக்கு அதிகாரமுள்ளது. ஆனால், இவ்வாறான முடிவை எனது தனிப்பட்ட நலனுக்காக நான் எடுக்கவில்லை. மக்களின் நூறு வீதமான ஆதரவோடும், வற்புறுத்தலோடும், ஆசிர்வாதத்தோடும்தான் இம்முடிவை மேற்கொண்டேன். எனினும், அவ்வாறானதொரு ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி என் மீது எடுக்குமாக இருந்தால் அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை!

வடக்கு – கிழக்குக்கு உள்ளேயும், வெளியேயும் அதிகமான ஆதரவாளர்கள் அரசோடு இணைவதையே விரும்பினர். கட்சியின் அரசியல் உயர் பீடத்திலுள்ள 95 வீதமானோரும் அவ்வாறே விரும்பினர். ஆக, அதிகளவிலான மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஜனநாயக வழியில் நான் போராடினேன்! எனவே – இதை, இந்த வகையில் பார்க்கக் கூடிய முதிர்ச்சி இந்தக் கட்சியின் தலைமைக்கு இருப்பதாக நான் உணர்கிறேன்!

கேள்வி: அரசுடன் இணைவது தொடர்பில் உங்களுக்கு கட்சித் தலைமையுடன் கருத்து முரண்பாடுகளும், தர்க்கங்கங்களும் இருந்தன அல்லவா? இதற்காக நீங்கள் பழிவாங்கப்படலாம் என அஞ்சவில்லையா?

பதில்: இல்லை. நான் அவ்வாறு கருதவில்லை! அவ்வாறான நிலைக்கு தலைவர் சென்று, அப்படியெல்லாம் செய்வாரென நான் நினைக்கவில்லை. ஏனெனில், இது நான் எனது தனிப்பட்ட நலனுக்காக செய்த விடயமல்ல என்பதும் தலைவருக்குத் தெரியும்!

கேள்வி: அவ்வாறு நடந்தால்?

பதில்: நடக்கக் கூடாதென்பது எதிர்பார்ப்பு. நடந்தால் அல்லாஹ் விட்ட வழி!

கேள்வி: தீர்வுகளை முன்வைக்கும் போது அல்லது அரசுடன் பேரம்பேசும் போது எந்தப் பிரதேசத்தை முதன்மைப்படுத்தி மு.கா. செயற்பட வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்?

பதில்: எமது கட்சியின் தளம் வடக்கு மற்றும் கிழக்கு. அந்தத் தளத்தைப் பாதுகாப்பதனூடாகவே ஏனைய விடயங்களைச் செய்யலாம். தளத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது கட்சியின் பொறுப்புமாகும். அதேவேளை தளத்துக்கு அப்பாலுள்ள பிரதேசங்களைக் கவனிக்க வேண்டியதும் கட்சியின் பொறுப்பே!

கேள்வி: நிந்தவூர் எனும் ஊருக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளை ஹக்கீம் வழங்கியுள்ளாரே, இதுபற்றி உங்கள் தனிப்பட்ட கருத்து என்ன?

பதில்: இதைப்பற்றி விமர்சனங்கள் எதையும் என்னால் கூற முடியாது. ஏனென்றால் இதுபற்றி இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைவருக்கு நாம் வழங்கியிருந்தோம். இது தவிர கட்சியில் நபர்கள் வகிக்கும் உயர் நிலைகளின் அடிப்படையிலும் இந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பைசல் காசிம் மக்களால் தெரிவானவர் என்பது அவருக்கான உயர் தகுதியாகும்!

கேள்வி: அரசுடன் இணைவதற்கு உங்கள் கட்சி முன்வைத்திருந்த 9 அம்சக் கோரிக்கைக்கு என்னாயிற்று?

பதில்: கோரிக்கைகளை முன்வைத்தமை உண்மைதான்! ஆனால் மு.கா.வின் தேவை அரசுக்கில்லாத ஒரு நேரத்தில், இந்தக் கட்சியால் பேரம்பேச முடியாததொரு நிலையில் கோரிக்கைகளை முன்வைப்பதில் அர்த்தமில்லை! எங்களின் கோரிக்கைகளை உத்தியோகபூர்வமானதோர் ஒப்பந்தமாக அங்கீகரித்து அரசு கைச்சாத்திடவில்லை. ஆனால், எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாய்மொழி மூலமாக அரசு உறுதி கூறியுள்ளது. அவைகளை செயற்படுத்த நாங்களும் உழைப்போம்!

கேள்வி: மு.கா.வுக்குள் இருக்கும் பா. உறுப்பினர்களை விடவும் அக்கட்சியோடு முரண்பட்டு வெளியேறியவர்களே அதிகம். ஆக, உண்மையான பிரச்சனைகள் இல்லாமல்தான் இவர்கள் பிரிந்து போனார்களா? அல்லது கட்சிக்குள் ஏதாவது சீர்திருத்தம் தேவைதான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: சரி, பிழைகளுக்கப்பால் பிரச்சனைகள் இருந்ததால்தான் அவர்கள் வெளியேறினார்கள். முரண்பாடுகள் ஏற்படுவது இயற்கையே. ஆக, எல்லோரும் விட்டுக்கொடுத்து நடக்கும்போது இந்த முரண்பாடுகளைச் சுமூகமாகத் தீர்க்கலாம்! இந்த விட்டுக்கொடுத்தல் என்பது தலைவர் தொடக்கம் தொண்டர் வரை எல்லோருக்குமே பொருந்தும்!

கேள்வி: மு.கா.வின் யாப்பின் மூலம் கட்சியின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மிகையானவைகள் என்கிறார்களே… ஏதாவது மாற்றம் வேண்டுமா?

பதில்: இவ்வாறான அதிகாரங்களை அனேகமான கட்சித் தலைமைகள் கொண்டுள்ளன. ஈரான் தூதுவரை சில தினங்களுக்கு முன்னர் நான் சந்தித்து பேசிய வேளையில், இலங்கை ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மிகையானவை என்று அவர் கூறினார். ஆனால், மு.கா.வைப் பொறுத்தவரை அதன் தலைவருக்குள்ள இவ்வாறான மிகை அதிகாரங்களை பறித்தெடுத்தால், கட்சியை சீராக நடத்துவதென்பது கஷ்டமானதொரு விடயமாகிப் போய்விடும். ஆனால், நான் ஒரு விடயத்தை சிபாரிசு செய்கிறேன். அதாவது, கட்சியின் தற்போதுள்ள அதியுயர் பீடத்துக்கும் மேலாக ஐந்து பேரைக் கொண்ட வேறொரு சபையொன்றை அமைக்கலாம்.

கட்சித் தலைவர் முடிவொன்றினை மேற்கொள்ளும் முன்னர் இந்த சபையுடன் கலந்தாலோசித்து, ஆலோசனை பெற்ற பின்பே முடிவுகளை எடுக்க வேண்டும் என்கின்ற சிறிய திருத்தமொன்றை கட்சி யாப்பில் ஏற்படுத்தலாம்!

கேள்வி: மக்களால் நிராகரிக்கப்படுபவர்கள்தானே தோற்றுப்போகிறார்கள்! தோற்றுப்போன பலருக்கு மு.கா. தலைமை தேசியப்பட்டியல் மூலம் பா. உறுப்பினர் பதவிகளை வழங்கியுள்ளது. இதை மக்கள் தீர்ப்புக்கு விரோதமானதொரு செயற்பாடென்று நான் கூறுகிறேன்?

பதில்: என்னைப் பொறுத்தவரை இது பொருந்தாது. நான் தோற்றுப் போகவில்லை. கட்சிக்காக 31 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்தவன் நான்! ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிட்டவேளை, அக்கட்சி தோற்றதால் நான் தெரிவாகாமல் போய் விட்டேனே தவிர, நான் மிக அதிகமான வாக்குகளைப் பெற்ற ஒருவர். மட்டுமன்றி இந்தக் கட்சிக்குள் நான் ஏதோ நேற்று முளைத்தவனல்லன். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக நான் கட்சிக்காக உழைத்து வருகிறேன். கட்சிக்காக எனது பல நலன்களை இழந்துமிருக்கிறேன். ஆக – நான் வகிக்கும் பதவிகளை மு.காங்கிரஸ் எனக்கு வழங்கிய பிச்சையாக யாரும் எண்ணி விடவும் கூடாது!

ஆனால், இந்த விடயத்தில் மு.கா.வைப் பொறுத்தவரை தேசிய பட்டியல் நியமனங்களை வழங்கும்போது பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. முதலாவது, பிரதேச ரீதியில் இதை வழங்கவேண்டும். ஆனால், அதை மீறிய வேறு தேவைகள் மீதும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக கட்சியைப் பாதுகாக்க வேண்டியவர்களுக்கு இந்த நியமனங்களை வழங்க வேண்டிய தேவையுள்ளது. அடுத்து, நம்பகத் தன்மை மற்றும் விசுவாசத் தன்மையையும் கவனித்தே இந்நியமனம் வழங்கப்படுதல் வேண்டும். இவைகளுக்கப்பால் கட்சியில் உயர் நிலை வகிப்போரையும் கவனத்திற் கொள்ளவேண்டியுள்ளது. இத்தோடு புத்தி ஜீவிகளை இந்நியமனங்களின் மூலம் உள்வாங்கவும் வேண்டியுள்ளது.

குறிப்பாக மு.கா.வைப் பொறுத்தவரை கட்சியின் தலைவருக்கு நிகராக பேசி, ஒரு விடயத்தை ஆராய்ந்து, முடிவெடுக்கக் கூடிய திறமை பஷீர் சேகு தாவூத்துக்கு இருக்கிறது. அவரை நிச்சயமாக கட்சி இந்நியமனம் மூலம் உள்வாங்கியே ஆக வேண்டும்! ஆக – வாக்குகளின் அடிப்படையில் மட்டும்தான் ஒருவரை பா. உறுப்பினராக தெரவு செய்ய வேண்டுமென்பது பிழைதான்!

கேள்வி: நம்பகத் தன்மை, விசுவாசம் என்பவை ஒருவருக்கு தேசிய பட்டியல் நியமனம் வழங்குவதற்கான தகைமையென கூறினீர்கள். நிஜமுத்தீன் மு.கா. சார்பாக தேசிய பட்டியல் பா. உறுப்பினராக நியமிக்கப்பட்டவர். ஆனால், இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பதற்காக தலைவரை மிக மோசமாய் விமர்சித்து வருகிறாரே… எங்கே போயிற்று இவரின் விசுவாசம்?

பதில்: (பாயிஸ் எதுவும் பேசவில்லை! சிரித்தார்…)

சிரித்தேன்!

சிரித்தோம்!!

(இந்தக் கட்டுரையை 18 பெப்ரவரி 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s