காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

வெயில்: ஞாபகங்களைக் கிளறிவிடும் ஒளியோவியம்! 25 ஏப்ரல் 2007

Filed under: சினமா — Mabrook @ 4:44 பிப

color-dot.gifமப்றூக்

துப்பாக்கிகளுக்குள்ளும் அரிவாள்களுக்குள்ளும் சிலகாலமாக சிக்கித்தவிக்கும் தமிழ் சினமாவை அவ்வப்போது சிலர், இயக்குனர் அவதாரமெடுத்து தமது திரைப்படங்களினூடாக ரட்சிப்பதுண்டு!

இதற்கு உதாரணமாக சில படங்களைப் பட்டியலிட்டுக் காட்டலாம். அவ்வாறான பட்டியலில் சேர்க்கக் கூடிய அண்மைய வரவு – வெயில்!

சின்ன வயதில் நாம் டயர் உருட்டி, வீட்டுக்குத் தெரியாமல் ஆற்றில் குளித்து, முடக்கொத்தான் கொடியில் ‘கோழி’ என்று சொல்லி சிவப்பு நிறப் பூச்சிகள் பிடித்து விளையாடிய ஞாபகங்களைக் கிளறி விட்டுப் போகிறது படத்தின் பல காட்சிகள்!

மிக அழுத்தமான கதை, திரைக்கதை, வசனங்களைப் படமாக்கியிருக்கும் விதமும் அற்புதம். தத்துவங்கள் சொல்லாமல், பிரசாரத் தன்மை கொண்ட நீண்ட வசனங்களை கதா பாத்திரங்களினூடாகப் பேசாமல், தான் எடுத்துக் கொண்ட கருவை மிக நறுக்கென சொல்லியிருக்கும் இயக்குனர் வசந்தபாலனுக்கு எதிர்காலமிருக்கிறது!

குழந்தை வயதுகளில் வண்ணத்துப்பூச்சியாகி காடு மேடெல்லாம் பறந்து திரியும் ஒருவனின் வாழ்க்கை – ஒரு தந்தையின் முட்டாள்தனமான தன்டனையொன்றினூடாக எவ்வாறு திசைமாறிச் செல்கிறது என்பதை படு இயல்பாகப் பேசுகிறது வெயில்!

பிரதான பாத்திரம் பசுபதி! பல திரைப்படங்களில் நாக்கை வெளியே தள்ளி, இரண்டாக மடித்துக் கடித்துக்கொண்டே அரிவாளோடு விரட்டும் வில்லனாகப் பார்த்துப் பழகிய பசுபதியை இரண்டு திரைப்படங்களில் மிக நல்ல நகைச்சுவை நடிகனாக இனங்கான முடிந்தது! அவை – மஜா மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய திரைப்படங்கள்.

ஆனால், வெயிலில் தன்னை வேறோர் கோணத்தில் பூரணமாக வெளிப்படுத்தியிருக்கின்றார் பசுபதி! வர்த்தக நோக்கில் பரத்தின் படம் என பிரசாரப்படுத்தப்பட்டிருந்தாலும், பசுபதிதான் படத்துக்கான உயிர்! ஆனால், பரத்தும் குறை வைக்காமல் நடித்திருக்கின்றார்.

ஒரு கட்டத்தில் “ நீ என்னை அம்மணக்கட்டையாக்கி, எல்லார் முன்னாலயும் கட்டிப்போட்டு அடிச்சிருக்காட்டி, நான் விட்டுல திருடிக்கொண்டு ஓடிப்போயிருக்க மாட்டேன்பா” என்று பசுபதி தனது சின்ன வயதுத் துயரத்தைக் கூறி, அப்பனைப் பார்த்து அழும்போது – சற்றே நாமும் உணர்ச்சிவசப்பட நேர்கிறது!

வெயில் படத்திலும் கத்தியிருக்கிறது, ரத்தமிருக்கிறது. ஆனால், வன்முறைக் காட்சிகள் நிகழும் கணங்களை ‘இருண்மை’ப் படுத்தியிருப்பது அழகு! ஒரு கொலையை நேராகக் காட்சிப் மயப்படுத்துவதை விடவும், அக்கணங்களை இருளாக்கி அதுபற்றிய புரிதலை பார்வையாளனிடம் விட்டு விடும் போது, அது பார்ப்பதை விடவும் பல மடங்கு அவஷ்த்தையை பார்வையாளனுக்கு தந்து விட்டுப் போகிறது!

திரையில் உலவும் கதை மாந்தர்கள் யதார்த்தமானவர்கள். பசுபதியின் அப்பா வெகு இயல்பான கதாபாத்திரம். விளம்பரத்துக்காக குரல் கொடுக்க வரும் அந்தப் பெண்ணை வன்மத்துடன் ஏசித்திட்டி, அதே வன்மத்துடன் பரத் காதல் கொள்ளும்போது – நமக்குள்ளும் கசிகிறது காதல்!

சில பாடல் வரிகளில் கவிதை கொப்பளிக்கிறது! “காதல் என்பது நெருப்பின் நடனம்” எனும் பாடலை வரிகளுக்காகவும் ரசிக்கலாம்! ஆனால், அதே பாடலில் வரும் “சிங்கத்தை சிக்க வைக்கும் சிலந்தி வலை – காதல்” எனும் பொருள் கூறும் வரிகள் வேறு ஒரு கவிஞருக்குச் சொந்தமானவை!

பல விருதுகளைத் தன்வசப்படுத்தக் கூடிய ஏராளமான தகுதிகள் வெயில் படத்துக்கிருக்கிறது! நமது கணிப்பின்படி பன்மை எண்ணிக்கைகளில்தான் அந்த விருதுகளின் தொகை அமையும்.

சிலவேளை – எவர்கண்டார்! நமது சாகித்திய விழாக்களில் புறக்கணிக்கப்படும் பல ஆளுமைகளைப்போல, கண்டு கொள்ளாமலும் விடப்படலாம் – வெயில்!!

Advertisements
 

3 Responses to “வெயில்: ஞாபகங்களைக் கிளறிவிடும் ஒளியோவியம்!”

 1. latha Says:

  veyilil nanainthu makizha unkal ezhuththaal enakku mudinthathu. vaazhththukkal.

 2. nilam zainulabdeen Says:

  wel done keep it up.
  //
  Thanks Brother!

 3. தமிழ்த் திரையுலகில் அடிக்கடி சில சில காத்திரமான படைப்புகள் வருவது வழக்கம். அவை சில நேரங்களில் ரசிகர்களின் “மாற்றமேயுருவான” இரசனைகளுக்கு இதமாக அமையாவிட்டாலும், சொல்லும் கருத்தில் வழங்கும் விதத்தில் மிகப்பெரியளவில் மாற்றங்களை ஏன் புதுமைகளைக் கூடக் கொண்டிருக்கும். இந்தக்கூற்றுக்கு “அன்பே சிவம்” எனும் திரைப்படம் சிறந்த எடுத்துக்காட்டு.

  “வெயில்” – சூட்டின் அகோரத்தைக் காட்ட மட்டுந்தான் பயன்படுத்த முடியுமா? இல்லை. மனத்தின் வலியைக் கூட சொல்ல துணை கொள்ள முடியுமென்கிறது இந்தத் திரையோவியம்.

  சிறு பராயம் என்பது எல்லோருக்கும் சுந்தரமானது. அந்தச் சுந்தரத்தன்மையை கேட்டாலே இனிக்கும். கிராமத்தில் சிறு பராயம் என்றால் அது இன்னும் நன்றாகவே இனிக்கும். இந்த இனிய அனுபவங்களை சொல்ல “வெயில்” நிறையவே முயன்றிருக்கிறது. அதில் நிறைவான வெற்றியும் கண்டிருக்கிறது.

  இருண்மையை இயக்குநர் கையாண்ட விதத்தை நீங்கள் இந்த இடுகையில் கூறியிருக்கும் விதம் அற்புதம்…வாழ்த்துக்கள்

  தொடர்ந்தும் பதியுங்கள்.. புதியவைகள் இன்னும் பூக்கட்டும்.

  -உதய தாரகை
  //
  நன்றி!
  ஒவ்வொரு நொடியும் எழுதத்தான் ஆசை, எங்கேயிருக்கிறது நேரம்!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s