காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

பொம்மைகளின் ஆட்சி! 23 ஏப்ரல் 2007

Filed under: அரசியல் — Mabrook @ 12:28 பிப

color-dot.gifமப்றூக்
pepete113.jpgபொம்மைகள் எதுவும் செய்வதில்லை! வயல்காட்டு பொம்மைகளும் அப்படித்தான். ஆயினும், அவை எதையாவது செய்து தொலைத்து விடுமோ என்கின்ற பயத்தில் பறவைகள் அவை பக்கம் வருவதில்லை! இருந்தும் சில பறவைகள் புத்திசாலிகள், அவை வயற்காட்டு பொம்மைகளின் பலவீனம் தெரிந்து கொண்டு அவற்றின் தலையில் எச்சம் கழித்து மகிழும்! நவீன தொழில்நுட்ப பொம்மைகளென்றால் ஏற்கெனவே அவைகளுக்கென நிகழ்சிப்படுத்தப்பட்டிருக்கும் குறித்த செயல்களை மட்டுமே செய்து காட்டும். உதாரணமாக நமது குழந்தைகளின் நவீன நாய் பொம்மைகள் வாலாட்டுவது, குரைப்பது மற்றும் கொஞ்சூண்டு தூரம் நடப்பது போல! இன்னுமொரு பொம்மை இனமும் இருக்கிறது. அவைகளை இயக்க ஒரு ஆட்டக்காரன் தேவையாயிருக்கின்றான். பொம்மையின் கை, கால்கள் நூல்களால் கட்டப்பட்டு அவை ஆட்டக்காரனின் விரல்களில் இணைக்கப்பட்டிருக்கும். ஆட்டக்காரனின் விரல் அசைவுகளுக்கேற்ப பொம்மை துள்ளும், அசையும், நடனமாடும். இதை பொம்மலாட்டம் என்பார்கள்! இந்தவகையில் நமது மக்களும் புத்திசாலிகள்தான். ஒருசில அரசியல்வாதிகளையும் அவர்கள் பொம்மைகள் என்றே அழைக்கின்றனர்!

பொம்மைகளின் ஆட்சி எவ்வாறு இருக்கும்?

அம்பாரை மாவட்டத்திலுள்ள சில உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை பொம்மைகளின் ஆட்சியென்றே மக்கள் அழைப்பதால், பொம்மைகளின் ஆட்சி அவ்வாறுதான் இருக்குமோவென்று நமக்கும் கூட எண்ணத்தோன்றுகிறது. இந்த உள்ளுராட்சி மன்றங்களில் பலவற்றை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியிருந்தும் கூட, அவைகளின் உறுப்பினர்கள் எவரும் காங்கிரஸின் உத்தியோகபூர்வமானவர்களாக இல்லை என்பதே அக்கட்சியின் தற்போதைய பிரதான துயரங்களில் ஒன்றாகும்!

கடந்த உள்ளுராட்சித் தேர்தல்களின்போது சி.ல.மு.காங்கிசுக்கு அதன் கட்சிப் பெயரில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியாததொரு நிலையேற்பட்டது. ஜமால்தீன் இஷாக் எனும் நபரொருவரால் முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கும், செயலாளருக்கும் எதிராக பெறப்பட்ட நீதிமன்ற தடையுத்தரவு காரணமாக அத்தேர்தலில் மு.காங்கிரஸ் தனது உத்தியோகபூர்வ வேட்பாளர்களின் மனுவை வேறு கட்சியினூடாகவே தாக்கல் செய்திருந்தது. இருந்தபோதும் – எதற்கும் பார்ப்போம் என்று நினைத்தோ என்னவோ, குத்து மதிப்பின் பேரில்| ஒரு சிலரின் பெயரைத் தொகுத்து அந்தப் பெயர்ப் பட்டியல் மூலமாகவும் ஒரு வேட்புமனுவை தனது கட்சியின் பெயரில் மு.காங்கிரஸ் தாக்கல் செய்து வைத்திருந்தது.

இந்த நிலையில், தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே காங்கிரஸ் குறித்த தடையுத்தரவுக்கெதிராக மேன்முறையீடு செய்து அதில் வெற்றியும் கண்டது. இதனால் முஸ்லிம் காங்கிரஸ் தனது கட்சியின் பெயரிலேயே குறித்த தேல்தலில் போட்டியிட்டு, பல உள்ளுராட்சி மன்றங்களில் வெற்றியும் பெற்றது. ஆனாலும் வெற்றிபெற்ற மன்றங்களுக்கு உறுப்பினர்களாகத் தெரிவானவர்கள் ஏற்கனவே கூறப்பட்ட குத்து மதிப்பு| பேர்வழிகளே! ஆக – இவ் உறுப்பினர்கள் தமது உள்ளுராட்சி சபைகள் தொடர்பில் இன்று எதையும் சுயமாகச் செய்வதில்லை. முஸ்லிம் காங்கிரஸின் உத்தியோகபூர்வ வேட்புமனுக்களில் பெயர் குறிக்கப்பட்ட நபர்களாலேயே இந்த உறுப்பினர்கள் தற்போது வழிநடத்தப்படுகின்றனர். அதனால்தான் மக்கள் இந்த குத்துமதிப்புப் பேர்வழிகளை பொம்மைகள் என்கின்றனர்!

பொம்மைகளை அகற்றிவிட்டு, தனது உத்தியோகபூர்வ நபர்களை உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியாளர்களாக்குவதற்கு மு.கா. தற்போது கடும் பிரயத்தனம் எடுத்துவருகிறது. ஆனாலும்; நினைத்ததுபோல் அவ்வாறு உறுப்பினர்களை மாற்றிவிடுமளவுக்கு உள்ளுராட்சி மன்ற சட்டதிட்டங்கள் இலகுவாக இடங்கொடுப்பதாயில்லை!

உதாரணமாக பாராளுமன்ற தேர்தல் சட்டதிட்டங்களைப் பொறுத்தவரை, குறித்த ஒரு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரின் பதவி வெற்றிடமாகும்போது அவரின் இடத்துக்கு அவர் கட்சிசார்பில் அவரோடு போட்டியிட்டு அடுத்த நிலையில் அதிகளவு வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் நியமிக்கப்படுவார். இவ்வாறு வாக்குகளைப் பெற்றவர்கள் எவரும் இல்லாதவிடத்து குறித்த கட்சியின் செயலாளரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் நபர் அப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினைப் பெறுவார். ஆனால், உள்ளுராட்சி மன்ற சட்டங்கள் அவ்வாறில்லை. உறுப்பினரின் பதவியொன்று வெற்றிடமாகும்போது, பெற்றுக்கொண்ட அதிக வாக்குகளின் அடிப்படையில் வேட்புமனுவில் உள்ளோர் படிமுறையில் அப்பதவிக்கு நியமிக்கப்படுவர். இவ்வாறு அனைவரும் நியமிக்கப்பட்டு அதன் பின்னரும் வெற்றிடமொன்று ஏற்படுமாயின் அப்போது இடைத் தேர்தலொன்றை நடத்தவேண்டுமென்று கூறுகிறது உள்ளுராட்சி சபைகள் சட்டம்! ஆக- இச்சட்டங்களுக்குட்பட்டு முஸ்லிம் காங்கிரசால் அவர்களின் உத்தியோகபூர்வ நபர்களை ஆட்சியாளர்களாக உருவாக்க முடியாததொரு நிலையேற்பட்டுள்ளது. எனவே, அந்த சட்டத்தையே மாற்றுகின்றதொரு கோதாவில் குதித்துள்ளது மு.காங்கிரஸ்!

உள்ளுராட்சி சபைகளில் ஏற்படும் இவ்வாறான இறுதி வெற்றிடங்களை, பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை நிரப்புவதைப் போன்று கட்சியின் செயலாளரால் அறிவிக்கப்படும் நபர்களைக் கொண்டே நிரப்ப வேண்டுமென கூறும் திருத்தச் சட்டமொன்றை உருவாக்கும் பொருட்டு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக குறித்த சட்ட மூலத்துக்கான அமைச்சரவைத் தீர்மானம் பெறப்பட்டுள்ளது. ஆயினும் இது சட்டமாக உருவாவதற்கு இன்றும் பல படிநிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது. மீயுயர் நீதிமன்றத்தின் கருத்தறிதலுக்காக இச்சட்ட மூலத்தை அனுப்பி வைத்து பின்னர் பாராளுன்றத்தின் பெரும்பான்மை அங்கீகாரத்துக்காகவும் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசோடு இணையும்போதே இந்த திருத்த சட்டத்தை உருவாக்கித்தர வேண்டுமென்கின்ற கோரிக்கையொன்றை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்திருந்தது. ஆனால், அரசாங்கம், அதற்கு ஆம் என்றதே தவிர பெரிதாக அவ்விடயத்தில் வேகமோ, ஈடுபாடோ காட்டவில்லை. இதனால் உள்ளுராட்சி சபையில் மு.கா.வுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனையை அரசாங்கம் தீர்த்துத் தரும்வரை தனது அமைச்சுக் கடமைகளை பாரமேற்பதில்லை என்று அடம்பிடித்து நிற்கிறார் அக்கட்சியின் செயலாளர் ஹசன் அலி! பாவம் மு.கா. காரர்களின் நிலை. முன்ரெல்லாம் பேரம் பேசிக்கொண்டு, அரசாங்கத்தை ஆட்டம் காணச் செய்து கொண்டிருந்தவர்கள் தற்போது மிட்டாய் கேட்டழும் குழந்தைகள் மாதிரி அடம்பிடிக்கிறார்கள். இது அவர்களே அவர்களுக்கு விதித்துக் கொண்ட நிலையே தவிர வேறில்லை! ஆனாலும், பதவிகளை விடவும் எனக்கு என் சமூகமும், கட்சியுமே முக்கியமானவை எனக்கூறி தனது கடமையினை இதுவரைப் பொறுப்பெடுக்காத ஹசன் அலியை பாராட்டலாமென்கிறார்கள் சிலர்! ஆனால், இவைகள் பற்றி ஆட்சியில் இணைவதற்கு முன்பு அல்லது அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்வதற்கு முன்பே ஹசன் அலி நினைத்துப் பார்த்திருந்தால் அது இன்னும் பாராட்டுக்குரியதாக இருந்திருக்கும் என்கின்றனர் வேறு சிலர்!! சரி, அவ்வாறே சமூகம் மற்றும் கட்சியின் நலனைப் பிரதானப் படுத்தியே ஹசன் அலி அமைச்சுப் பொறுப்புக்களைப் பாரமெடுக்கவில்லையென்றால், பதவிகளைப் பெற்றெடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மு.கா. தலைவரும், ஏனைய பா. உறுப்பினர்களும், கட்சி மற்றும் சமூக நலன் தொடர்பில் அக்கறையற்றவர்கள் என்றுதானே அர்த்தமாகிறது!

மேய்பர்களே! என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் இதற்கு?

இது இவ்வாறிருக்க@ அம்பாரை மாவட்டத்தைப் பொறுத்தவரை பொத்துவில், அட்டாளைச்சேனை, நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளையும் கல்முனை மாநகர சபையினையும் முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ள அதேவேளை அக்கரைப்பற்றில் படுதோல்வியடைந்தது! கடந்த முறை அக்கரைப்பற்று பிரதேச சபையை வென்றிருந்த மு.காங்கிரஸ், இம்முறை 947 வாக்குகளை (அதாவது 6.30 வீதமான வாக்குகள்) மட்டுமே பெற்றது. இதன் மூலம் கடந்தமுறை 10 உறுப்பினர்களைப் பெற்றிருந்த மு.கா. இம்முறை ஒரேயொரு அங்கத்தவரை மட்டுமே பெற்றது. அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 296 ஆகும். இம்முறை அங்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 418 (இதில் 378 வாக்குகள் நிராகரிக்கப்பட்டவை) என்கிறது தேர்தல் செயலக அறிக்கை. 11 உறுப்பினர்களைக் கொண்ட அக்கரைப்பற்று பிரதேசசபையில் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் 08 ஆசனங்களையும், சேகு இஸ்ஸதீன் சார்பான நுஆ 02 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

இதேபோன்றே தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாவிதன்வெளி பிரதேச சபையில் மு.கா. 02 ஆசனங்களைப் பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சி 05 ஆசனங்களைப் பெற்று அங்கு வெற்றியீட்டியது.

கடந்த 30.03.2006 ஆம் ஆண்டு சம்மாந்துறையில் நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் மு.காங்கிரஸ் தனது வேட்பாளர்களை ஐ.தே.கட்சியினூடாக களமிறக்கி 08 ஆசனங்களைப் பெற்றதன் மூலம் அச்சபையை வென்றது.

ஆக, அம்பாரை மாவட்டத்தின் பொத்துவில், அட்டாளைச்சேனை, நிந்தவூர் மற்றும் கல்முனை ஆகிய பிரதேச மற்றும் மாநகர சபைகளில்தான் முஸ்லிம் காங்கிரஸ் மேற்குறித்த பொம்மை ஆட்சி பிரச்சனையை மிக மோசமாக முகம் கொடுத்து வருகிறது. ஏனைய பிரதேச சபைகளிலும் இப்பிரச்சனை உண்டெனினும் அவை தோற்றுப்போன சபைகள் என்பதால் பெரிதாக தலையிடியில்லை! இப்பிரச்சனையைத் தீர்க்காமல் மு.கா. தலைவரால் இப்பகுதிக்கு சங்கடங்களில்லாமல் சென்றுவர முடியாததொரு நிலை தோன்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான காரணம் பிரதேச சபைகளின் தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் ஆசனங்களில் அமரும் கனவுகளோடு காத்திருக்கும் உத்தியோகபூர்வ பட்டியல் நபர்களால் ஹக்கீமுக்கு கொடுக்கப்பட்டுவரும் அழுத்தங்கள்கள்தான் எனவும் தெரிவிக்கப்படுகிறது!

தற்போதைய உறுப்பினர்களை அகற்றிவிட்டு, மு.கா. தனது உத்தியோகபூர்வ பேர்வழிகளை குறிப்பிட்ட சபைகளின் ஆட்சியாளர்களாக மாற்றுவதன் மூலம், மக்கள் நலன் தொடர்பில் எதைச் சாதிக்கலாம் எனக் கருதுகிறதோ தெரியவில்லை! காங்கிரஸ் கைப்பற்றியுள்ள அனேகமான சபைகளில் இப்போதுள்ள உறுப்பினர்களே (அதாவது பொம்மைகள்) பரவாயில்லை என்று புத்தி ஜீவிகள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இவர்களை அகற்றிவிட்டு அந்த இடத்துக்கு அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளவர்களில் அதிகமானோர் எதிர்பார்க்குமளவுக்கு எதையும் சாதித்து விடக் கூடிய ஆற்றலோ, தகைமைகளோ அற்றவர்கள் என்பதே உண்மை நிலையாகும்!

அப்படியாயின் தகுதியற்றவர்களையா மு.கா. தனது வேட்பாளர்களாக தெரிவு செய்தது? ஆம் அப்படித்தான்! இந்த உண்மையை அதாவுல்லா சார்பான அக்கரைப்பற்று பிரதேச சபையுடன், மு.காங்கிரஸ் கைப்பற்றியுள்ள சபைகளையும் அதன் உறுப்பினர்களையும் ஒப்பிட்டு பேசுவதன் மூலம் நிறுவலாம்!

உதாரணமாக, அக்கரைப்பற்றுப் பிரதேச சபையில் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ்  சார்பாக பெற்றுள்ள உறுப்பினர்கள் 08  பேர். இவர்களில் தலைவர் உட்பட மூவர் பட்டதாரிகள், இருவர் அரசாங்க உத்தியோகத்தர்கள். அனேகமானோர் பன்மொழிப் புலமை பெற்றோர். வயது அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும்  இளைஞர்களே பெரும்பான்மையானவர்கள். சபையின் தலைவரே 33 வயதுக்குட்பட்ட ஒருவர்தான்! ஆக, குறித்த இந்த சபையினால் சிறப்பாக இயங்க முடிகிறது. தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் தமது தேவைகள், பிரச்சனைகள் பற்றி பேசக் கூடிய தகைமைகள் இவர்களிடம் இருக்கிறது. ஆனால், மு.கா. வெற்றியீட்டியுள்ள சபைகளின் உறுப்பினர்களில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டுமே இவ்வாறான தகைமைகளைக் கொண்டவர்களாவர். ஏனையோர் எதைச் செய்யப் போகிறார்கள், எதைப் பேசப்போகிறார்கள் என்பதை நினைக்கும் போது அனுதாபமாகவிருக்கிறது. ஒரு பிரதேச சபையின் உறுப்பினர்கள் என்போர் அப்பிரதேச மக்களின் பிரதிநிதிகளாவர்! குறித்த பிரதேச மக்கள் அவர்களின் பிரதிநிதிகளை வைத்தே மற்றவர்களால் பெறுமானமிடப்படுவார்கள். ஆக – தமது பிரதிநிதிகள் படித்தோராகவும், பட்டம் பெற்றோராகவும், பன் மொழிப் புலமை கொண்டோராகவும் இருக்க வேண்டுமென ஒரு பொதுமகன் ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது?

ஆனால், முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையும் திட்டமிட்டு அல்லது கவனமின்றியே இவ்வாறானவர்களை தெரிவு செய்திருக்கின்றார்களோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. அம்பாரை மாவட்ட மக்கள் பற்றிய உயர்வான கணிப்பீடுகள் மு.கா. தலைமைக்கு இருக்குமாயின் அவர் இவ்வாறான பேர்வழிகளை வேட்பாளர்களாக தேர்தலில் நிறுத்தியிருக்க மாட்டார் என்று இவ்விடயம் தொடர்பாக தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் சிலர் கூறுகின்றனர்!

ரவூப் ஹக்கீம் இவ்வாறான தவறுகளை விடுவதற்கு முக்கியமான காரணங்களிலொன்று சில நபர்களின் பிழையான வழிநடத்தல்களே! ஹக்கீம் அம்பாரை மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஆலோசனை பெறுவதற்காக சிலரை நம்பியிருக்கின்றார். இந்தச் சிலர் பிழையான தகவல்களை வழங்கிவிடுவதன் மூலம் ஹக்கீம் திசை திருப்பப்படுகிறார். உதாரணமாக தேர்தலில் யார், யாரை நிறுத்துவது என்பது பற்றி விசாரிக்கும் வேளைகளில், பிழையான நபர்களை ஹக்கீமுக்கு இவர்கள் அறிமுகம் செய்து வைத்து விடுகின்றனர். காரணம் அவர்களிலும் தகைமையும், ஆற்றலுமுள்ள ஒருவர் தேர்தலில் வெற்றிபெற்று வருவதை, குறித்த ஆலோசகர்கள் தமக்கான கெடுதியாக அல்லது அபசகுனமாகவே கருதி நடக்கின்றனர்.

எது எவ்வாறிருப்பினும் – இத்தவறுகளுக்கு ஒருவகையில் நமது மக்களும் பொறுப்பானவர்கள் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது!

எனவே – இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில், நமது மக்களும் புத்திசாலிகள்தான். ஒருசில அரசியல்வாதிகளையும் அவர்கள் பொம்மைகள் என்றே அழைக்கின்றனர் என்பதை படித்து சந்தோசம் கொண்ட அதே மனோ நிலையோடு இந்ந வரிகளையும் படியுங்கள்!

நமது மக்களில் சிலர் புத்திசாதுர்யமற்றவர்கள். சிலவேளைகளில் பொம்மைகளையும் அவர்கள் ஆட்சியாளர்களாக்கி விடுகின்றனர்!


(இந்தக் கட்டுரையை 01 ஏப்ரல் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

One Response to “பொம்மைகளின் ஆட்சி!”


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s