காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஹக்கீம்: நிறமிழக்கும் சித்திரம்! 23 ஏப்ரல் 2007

Filed under: அரசியல் — Mabrook @ 3:41 பிப

color-dot.gifமப்றூக்
rauf-hakeem-1.jpg

தவி என்பது வெறுமனே அதிகாரங்களையும் ஆடம்பரங்களையும் தருகின்றதொன்றல்ல! அது பெறுபவரைச் சுற்றி விரியும் வலை. இந்த வலையில் சிக்கித் தவித்து பதவிகளே வேண்டாமென உதறிச் சென்றவர்களின் அடையாளங்கள் வரலாறுகளில் நீண்டு கிடக்கின்றன. கிடைக்கின்ற பதவியும் அதிகாரமும் அரசியல் வழியானதென்றால் அதன் மூலம் ஒருவர் பெற்றுக்கொள்ளும் வசதி வாய்ப்புக்களை விடவும், நிறைவேற்ற வேண்டிய கடமைகளும் முகம்கொள்ள வேண்டிய சிக்கல்களும் அதிகமாகிப் போவதுண்டு! இந்தவகையில் அண்மையில் அரசுடன் இணைந்து கொண்ட மு.காங்கிரசும், அதன் தலைமையும் இவ்வாறான பல்வேறு சிக்கல்களையும் நெருக்கடிகளையும் அவைகளோடு தொடர்புபட்ட பல குற்றச்சாட்டுக்களையும் சந்திக்கத் தொடங்கியுள்ளன.

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் மீது அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்கள் மிகக் கடுமையான குற்றச்சாட்டுக்களை தற்போது கூறத்தொடங்கியுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் இவ்வாறு கூறுவோரில் கணிசமானோர் மு.கா.வின் மிகத் தீவிர முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களுமாவர்!

ஹக்கீம் குறித்து இவ்வாறு கட்சிக்குள்ளும் வெளியிலும் பேசப்படுகின்ற குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் பேசுவதும், அவைபற்றிய தன்மை நிலைகுறித்து ஆராய்வதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்!

ஹக்கீம் மீதான குற்றச்சாட்டுக்கள்!

•அம்பாரை மாவட்ட மக்களை திட்டமிட்டு புறக்கணித்து வருகிறார்.
•தொலை நோக்குப் பார்வையின்றி அவசரத் தீர்மானங்களை மேற்கொள்கிறார்.
•உண்மைக்குப் புறம்பான அல்லது நிறைவேற்ற முடியாது எனத்தெரிந்தும் உறுதிமொழிகளை மிக அதிகமாக வழங்கி வருகிறார்.
•வெற்றுச் சவால்களை விட்டு சமூகத்தை அவமானப்படுத்துகின்றார்.
•கட்சி சார்பான முக்கியஸ்தர்களில் அதிகமானோரோடு முரண்பட்டுக்கொண்டும், பிரிந்து நின்றும் செயற்படுகிறார்.
இவ்வாறு இந்தக் குற்றச்சாட்டுக்களின் பட்டியல் மிக நீண்டு செல்கிறது.


புறக்கணிக்கப்படும் அம்பாரை மாவட்ட மக்கள்!

முஸ்லிம் காங்கிரசின் அடித்தளம் என்பது அம்பாரை மாவட்டம். அதன் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பும் அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதனால், அஷ்ரப் அவர்களால் அவர் பிரதேசத்து மக்களின் மனத்துடிப்பறிந்து அரசியல் புரிய முடிந்தது! இன்னும் கூறினால், ஒரு தந்தைகுரிய அன்புடன் தனது மாவட்ட ஆதரவாளர்களை அஷ்ரப் அரவணைத்து வந்தார்!

அம்பாரை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் அதன் கரையோரப் பிரதேச முஸ்லிம் மக்களே மு.கா.வின் பிரதான வாக்காளர்களாவர். கரையோரம் என்பது இங்கு கடலையும் கடல் சார்ந்த பகுதிகளையும் குறித்து நிற்கிறது! கரையோரப் பிரதேச மக்களைப் பொறுத்தவரையில் இவர்கள் உடல், உள ரீதியாக ஏனைய பகுதி மக்களை விடவும் வித்தியாசமானவர்கள். குறிப்பாக கரையோரப் பகுதி மக்கள் போராட்ட குணம் நிறைந்தவவர்களென்று ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் சில காலங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தமை இங்கு ஞாபகிக்கத்தக்கது!

ஆக- இவ்வாறான குணவியல்பினைக் கொண்ட மக்கள் சமூகமொன்றுடன் அரசியல் நடத்துவதென்பது இலகு பட்ட காரியமல்ல!

உண்மையாகவே ஹக்கீம் மு.கா. தவைவரானபோது வடக்கு- கிழக்குக்கு வெளியிலுள்ள ஒருவருக்கு அப்பதவி வழங்கப்படக் கூடாது என்று பல்வேறு மட்டங்களிலிருந்தும் குரல்கள் ஒலித்தன! முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் வடக்கு கிழக்கிலிருந்தே (குறிப்பாக அம்பாரையில் இருந்தே) தெரிவாக வேண்டும் என்று பலர் வற்புறுத்தினர்.

ஆயினும், இவ்வாறான பிரதேச வாதங்கள் அனைத்தையும் மறந்து ஹக்கீமை தம் கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்ட அம்பாரை மாவட்ட மக்கள், 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது 65 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் ஹக்கீமுக்கு வழங்கி தமது பிரதிநிதியாகவும் தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்பிவைத்தனர். ஆனால், அதே மக்களே இன்று ரஊப் ஹக்கீம் தம்மைப் புறக்கணித்துச் செயற்படுவதாகக் கூறுவதை வெறுமனே நாம் தட்டிக்கழித்துவிட முடியாது!

தேர்தலின் பின்னர் ஹக்கீம் அம்பாரை மாவட்டத்துக்கு வருவதை மிகவும் குறைத்துக் கொண்டார்! இதேவேளை அம்பாரை மாவட்டத்திலிருந்து தலைவரைக் காண கொழும்பு சென்ற பலர், பல முறை முயன்றும் ஹக்கீமை சந்திப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படாமலேயே தாம் திருப்பியனுப்பட்டதாக கூறுகின்றனர். இவையனைத்துக்கும் மேலாக ஹக்கீம் அமைச்சுப் பதவிகளைப் பெறும்போது அவரின் அமைச்சு தொடர்பாக வழங்கும் முக்கிய பதவிகளுக்கான நியமனங்களில் அம்பாரை மாவட்டத்தவர்களுக்கு சந்தப்பங்கள் வழங்கப்படுவதில்லை அல்லது மிக சொற்பமாகவே வழங்கப்படுவதாகவும் இம்மக்கள் கூறுகின்றனர்.

ஆக- சிறியதோ பெரியதோ மக்களிடம் தோன்றும் இவ்வாறான அதிருப்திகளும் மனக்கீறல்களும் காலப்போக்கில் ஹக்கீமின் அரசியலில் மோசமான பாதிப்பினை ஏற்படுத்தி விடக்கூடியவை! எனவே இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் மு.கா. தலைவர் மிக ஆழமான கரிசனையெடுத்துச் செயற்பட வேண்டும்!

கைவிடப்பட்ட வாக்குறுதிகளும் ஏமாற்றமும்!

ரஊப் ஹக்கீம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் சற்று கவனிக்க வேண்டும். உறுதிமொழிகளை சந்தர்ப்பத்துக்கேற்ப வழங்கி விட்டு பின்னர் அவை தொடர்பில் எதுவித கரிசனையுமற்று செயற்படும் ஒருவித மனப்பாங்கு கொண்டவர் என மக்கள் இவர்மீது பழி சுமத்துகின்றனர்.

உதாரணமாக கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் மு.கா. சார்பான தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்குவதாக அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேச மக்களுக்கும் உறுதிமொழி வழங்கிவிட்டு பின்னர் அதை நிறைவேற்றத் தவறியதை இங்கு குறித்துச் சொல்லாம்.

அதேபோன்று கடந்த 2004 ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் ஐ.தே.கட்சியும், மு.கா. வும் இணைந்து அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்டவேளை மயோன் முஸ்தபாவுக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் தருவதாக வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நிமிடம் வரை ஹக்கீம் உறுதி மொழி வழங்கிவிட்டு பின்னர் அவரை ஏமாற்றி விட்டதையும் இங்கு குறிப்பிடலாம். இதேபோல கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின்போதும் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு மு.கா. சார்பாக போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் தருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜலால்தீனின் சகோதரர் சுபைதீனுக்கு இறுதி நிமிடம்வரை வாக்குறுதி வழங்கிவிட்டு ஹக்கீம் கடைசியில் கைகழுவி விட்டதும் அந்த பகுதி மக்கள் அறிந்த கதையாகும்!

இப்படி, வீணாக வாக்குறுதிகளை வழங்குவதும் பின் அதை நிறைவேற்றாமல் போவதும் நல்ல தலைமைத்துவமொன்றுக்கான தகுதியினை நிச்சயமாக சிதைத்தேவிடும். எனவே, இவை தொடர்பில் கவனம் கொள்வதோடு, இவ்வாறான பிழைகள் வருங்காலத்தில் நிகழாவண்ணம் இருப்பதற்கும் மு.கா. தலைவர் உறுதிகொள்ள வேண்டும்!

வீண் கர்ஜனைகளும், வெற்றுச் சவால்களும்!

1994 ஆம் ஆண்டு அஷ்ரப் அவர்கள் மு.காங்கிரசின் தலைவராகவிருந்த காலகட்டத்தில் அம்பாரை மாவட்ட பிரதேச சபைகளுக்கான தேர்தலொன்று இடம்பெற்றது. குறித்த அந்த தேர்தல் காலத்தில் பிரசார மேடைகளில் தோன்றிய அஷ்ரப் அவர்கள் அம்பாரை மாவட்டத்திலுள்ள 6 முஸ்லிம் பிரதேச சபைகளில் போட்டியிடும் மு.காங்கிரஸ் ஒரு சபையில் தோற்றாலும் கூட தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிடுவதாக பகிரங்க சவால் விடுத்தார்.

அதேபோன்று ஆறு சபைகளிலும் மு.கா.வினால் வெற்றிபெற முடியாமல் போனதால் அஷ்ரப் அவர்கள் தனது பதவியை ராஜினாமாச் செய்தார். இது தொடர்பில் மு.கா. ஆதரவாளர்கள் பெருமைப் பட்டார்கள். தமது தலைவனின் கனவான்தனம் குறித்து மார்தட்டியும் கொண்டார்கள். இச்சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மு.கா.வுக்கும் அஷ்ரப் அவர்களுக்கும் அமோக வாக்குகளை பெற்றுக்கொடுத்தது.

ஆனால், அஷ்ரப் அவர்கள் மிகத்தந்திரமாகவே அச்சவாலை விடுத்திருந்தார். குறித்த 6 சபைகளிலும் வெற்றிபெற முடியாதென்பது அஷ்ரப்புக்கு மிக நன்றாகவே தெரியும். அதேவேளை பாராளுமன்றத்தின் ஆட்சிக்காலம் முடிவடைவதற்கும் 6 மாதங்கள் மட்டுமே அப்போது இருந்தன. ஆக- இதை அரசியலாகப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் தன்னை மேலும் உயர்த்திக் கொள்வதற்கே அஷ்ரப் அவர்கள் இவ்வாறு சவால் விடுத்திருந்தார். என்றாலும் அவர் தனது சவாலை நிறைவேற்றியது பற்றியே மக்கள் இன்றும் சிலாகித்துப் பேசுகின்றனர்.

ஆனால் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகவிருந்த காலத்தில், அம்பாரை மாவட்டத்தில் கரையோர மாவட்ட செயலகமொன்றை 100 நாட்களுக்குள் அமைத்துத் தர வேண்டுமென்று ஹக்கீம் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். அவ்வாறில்லாது போனால் தமது அமைச்சுப் பதவிகளை வீசிவிட்டு, தாம் அரசுக்கு கொடுக்கும் ஆதரவையும் விலக்கிக்கொண்டு எதிரணியாகச் செயற்படப்போவதாக ஹக்கீம் சவாலொன்றையும் விடுத்திருந்தார்.

இச்சவால் குறித்து, ‘அரசுக்கு ஹகீம் 100 நாள் காலக்கெடு’ என கொட்டை எழுத்துக்களில் பத்திரிகைகள் தலைப்புச் செய்திகளை வெளியிட்டதோடு, countdown முறையில் காலம் குறிக்கவும் ஆரம்பித்தன. எனினும், கரையோர மாவட்ட செயலகம் கிடைக்கவேயில்லை. ஹக்கீம் எதையும் துறக்கவுமில்லை! எஞ்சியவையென்னவோ முஸ்லிம் சமூகத்துக்கு அவமானங்கள் மட்டும்தான்!

இதுபோலவே 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு பின்னர் அப்போது மூதூரில் ஏற்பட்ட தமிழ்- முஸ்லிம் இன வன்முறையின் போது மூதூர் சென்றிருந்த ரஊப் ஹக்கீம், குறித்த பிரச்சனை தொடர்பாக அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூதூருக்கு விஜயமொன்றை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கையொன்றை விடுத்தார். கூடவே அவ்வாறு ரணில் வராதுபோனால் தான் மூதூரை விட்டும் வெளியேறப்போவதில்லை என்று சவாலொன்றையும் சேர்த்துச் சொன்னார். ஆனால் பாவம், கடைசிவரை ரணில் மூதூர் செல்லவேயில்லை. இருந்தாலும் ஹக்கீம் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமலேயே ஊர்வந்து சேர்ந்துவிட்டார்! இங்கும் எஞ்சியவையென்னவோ முஸ்லிம் சமூகத்துக்கு அவமானங்கள் மட்டும்தான்!

ஆக- ஹக்கீம் விடுகின்ற சவால்கள் தனிமனித சார்பானவையாக பார்க்கப்படுவதில்லை. அவை அவர் தலைமை வகிக்கும் கட்சி சார்பாகவும், அக்கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம் சார்பாகவுமே நோக்கப்படும் என்பதால் உணர்ச்சிவசப்பட்டு சவால்கள் விடுவதிலிருந்தும் பின்னர் குறிப்பிட்ட சவால்களை நிறைவேற்ற முடியாமல் அவமானப்பட நேர்வதிலிருந்தும் ஹக்கீம் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்கின்றார்கள் கட்சி நலன் விரும்பும் புத்திஜீவிகள்!

கரைந்து கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ்!

ஒரு சர்க்கரைக் கட்டி அல்லது சவர்க்காரம் மாதிரி முஸ்லிம் காங்கிரஸ் கரைந்துகொண்டேயிருக்கிறது. 10 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும், மூத்த முக்கியஸ்தர்களையும் கொண்டு செயற்பட்ட மு.கா.வின் உயர் சபையானது இன்று பலரை இழந்து நிற்கிறது. கட்சியின் உள்ளேயிருக்கும் பா.உ. களின் எண்ணிக்கையை விடவும் ஹக்கீமோடு சண்டையிட்டுப் பிரிந்துபோனவர்கள் மிக அதிகம். இன்னும் கட்சிக்குள்ளேயே தலைவரோடு முரண்பட்டுக்கொண்டு மிக அதிருப்தியோடு செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர். இவர்களும் பிரிந்துசென்றால். இறுதியில் ஹக்கீமின் நிலை ‘நானே ராஜா நானே மந்திரி’ தான்!

எனவே- நடந்தவைகள் குறித்து, சரி- பிழைகள் காண்பதையும் பழைய கசப்பான நிகழ்வுகள் பற்றி மீள மீள பேசுவதையும் விட்டுவிட்டு சமூகத்தின் நன்மை கருதி சில விட்டுக்கொடுப்புகளுடன், எல்லோருடனும் இணைந்து செயற்பட ஹக்கீம் மனப்பூர்வமாக சம்மதித்தால் தாமும் சேர்ந்து செயற்பட தயாராகவுள்ளாய் பிரிந்து சென்ற பலர் கூறுகின்றனர். ஆக- இதுகுறித்தும் ஹக்கீம் மிகத்தீவிரமாக ஆராய வேண்டுமென கட்சியின் ஆதரவாளர்கள் கோருகின்றனர்.

மு.கா.வும் ஹக்கீமுக்கான மாற்றுத் தலைமையும்!

ரஊப் ஹக்கீம் மீதான மேற்குறிப்பிட்டதும், குறிப்பிடப்படாததுமான குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய சிலர், இதற்கான பரிகாரமாக கட்சித் தலைமையிலிருந்து ஹக்கீமை அகற்றுவதையே தீர்வாகக் கூறுகின்றனர். இதன் பொருட்டு ஹக்கீமின் தலைமைக்கெதிராக முன்னர் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சிகளையெல்லாம் சரியென்றும் ஒருசாரார் நியாயப்படுத்தவும் முனைகின்றனர்!

ஆனால், ஒரு உதாரணத்துக்கு ஹக்கீமை தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றிவிட்டதாகக் கொண்டால், அவருக்கு பதிலாக அந்தப் பொறுப்பை வகிக்க எவரை நியமிப்பது என்கின்ற அசுரத்தனமான கேள்வியொன்று இங்கு எழுகிறது.

எனவே- ஹக்கீமுக்கான மாற்றுத் தலைமை குறித்தும், மாற்றுத் தலைமையின் தேவை குறித்தும், அது தற்போதைய காலகட்டத்தில் நிரப்பப்படக்கூடியதா என்பது குறித்தும் மிகப்பரந்தளவில் பேசவேண்டும். மட்டுமன்றி அவை மிக நீண்டதொரு விவாதத்துக்குட்பட்ட விடயங்களும் கூட!

இருந்தாலும், ஹக்கீமைப் பொறுத்தவரை இன்றுள்ள குறித்துச் சொல்லத்தக்க மிக நாகரீக அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர்! இதுவரை எந்வொரு மேடையிலும் தனது அரசியல் எதிரிகளைக்கூட அவர் கீழ்நிலை மொழிப்பிரயோகங்களைப் பயன்படுத்திப் பேசியதில்லை. தவிரவும் சிறந்த மும்மொழிப் புலமை கொண்டவர். தனது சமூகத்தின் பிரச்சனைகளை சர்வதேச மட்டங்களுக்குக் கொண்டு சென்று விவாதிக்கக் கூடிய ஆளுமை கொண்டவர்! ஆக- இவ்வாறான ஒருவர் விடுவதாகக் கூறப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதால், சில சரிப்படுத்தல்களை நிகழ்த்தலாம் என்கின்ற நம்பிக்கையில்தான் நாம் இதை ஊடகமொன்றினூடாக பேச முயலுகிறோம்!

சிலர் இவ்வாறான ஊடக விமர்சனங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக காய்த்த மரத்துக்கு கல்லடி பொல்லடிகள் சகஜம் எனக்கூறி நழுவி விடுவதுமுண்டு! ஆனால், காய்க்காத மரங்களுக்கும் நீண்ட தடிகளால் சூரிய கிரகண நாட்களில் அடிக்கின்றதொரு வழக்கம் இன்றும் கிராமப்புறங்களில் இருக்கிறது. அப்படிச் செய்தாலாவது அந்த மரங்கள் சில வேளை காய்க்கும், பூக்கும், கலகலக்கும் என்கின்ற நம்பிக்கைதான்!!

(இந்தக் கட்டுரையை 11 மார்ச் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

One Response to “ஹக்கீம்: நிறமிழக்கும் சித்திரம்!”

  1. nilam zainulabdeen Says:

    ooppss.wel criticism mabrook.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s