காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

அம்பாரை மாவட்ட அரசியல் களம்: முரண்களின் தொகுப்பும், கூடி நின்று கும்மியடிக்க வேண்டிய கால நிர்ப்பந்தமும்!! 22 ஏப்ரல் 2007

Filed under: அரசியல் — Mabrook @ 3:51 பிப

color-dot.gifமப்றூக்
dance-4.jpg
ரசியல் கிரக மாற்றங்கள் பல்வேறுவிதமான சோதிடங்களுக்கு மத்தியில் கடந்த வாரத்துக்கு முதல் வாரம் நடந்து முடிந்துள்ளது. முரண்டு பிடித்துக் கொண்டு நின்றவர்களையெல்லாம் பிடித்துக் கொண்டுவந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று அவரின் அரசுக்கு முண்டு கொடுக்க வைத்துள்ளார்.

ஆக பாம்புகளும், கீரிகளும் ஒரே பாசறைக்குள் கூடி நின்று கும்மியடிக்க வேண்டிய கால நிர்ப்பந்தம்!

தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவாக கிளிநொச்சி வரை சென்று தமிழ்ச்செல்வனைக் கண்டு பேசி வந்த பெ. சந்திரசேகரன், அவரின் பரம வைரி ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதியை மிக மோசமான பேரினவாதியாக சித்தரித்த ரஊப் ஹக்கீம், தேர்தலில் போட்டியிட முடியாமல் கடந்த காலங்களில் ஹக்கீமால் ஏமாற்றப்பட்ட மயோன் முஸ்தபா, வடக்கு – கிழக்கு பிரிப்பை பட்டாசு கொழுத்தி கொண்டாடிய அதாஉல்லா, என்றும் பிரிக்க முடியாத வட- கிழக்கை கோரும் டக்ளஸ் தேவானந்தா என்று ஏராளமான முரண்களின் தொகுப்பால் நிரம்பிக் கிடக்கிறது இன்றைய அரசாங்கம்!

ஆதரவு கொடுப்போருக்கு அன்பளிப்பு வழங்கப்போனதில் கிட்டத்தட்ட இன்று ஆட்சியிலுள்ள அனைவருமே அமைச்சர்களாகிப் போயுள்ளனர். இந்நிலை இலங்கை போன்றதொரு சிறிய நாட்டுக்கு அனைத்து வகையிலும் ஆபத்து என்கின்றன அரசியல் நிபுணர்களின் கூற்றுக்கள்!

ஆபத்து மட்டுமல்ல, தன்னை அமைச்சர் என்று கூறவே அவமானமாக உள்ளதாய் கூறுகிறார் அமைச்சர் மைத்திரிபால. அமைச்சுப் பதவியென்பது தன்னைப் பிடித்துள்ள தோசம் என்கிறார் மற்றுமொரு அமைச்சரான டிலான் பெரேரா. (ஆனால் தன் தோசம் கழிக்க இவர் இதுவரை பரிகாரம் எதையும் செய்யவேயில்லை). இப்படி ஆபத்தானதும், அவமானகரமானதுமான அமைச்சரவை ஒதுக்கீட்டில் அம்பாரை மாவட்டமானது 9 அமைச்சர்களைப் பெற்றுள்ளதை அரசியல் வேடிக்கையாகப் பார்ப்பதைத் தவிர வேறு வழிகளில்லை!

 

அம்பாரை மாவட்டத்தில் ஐ.தே.க. நிலை.

அம்பாரை அல்லது திகாமடுல்ல – ஆண்டாண்டு காலமாக ஐ.தே.கட்சியின் ஆதிக்கத்தின் கீழிருந்த மாவட்டம். 2000 ஆம் ஆண்டின் பின்னர் சிறிது சிறிதாய் இங்கு தனது பிடியை தவற விட்டு வந்த ஐ.தே.க, தற்போது நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றத்துடன் அழிந்தே போய் விடும் என்கின்றனர் ஒரு சாரார்! ஆனால், எத்தனை பேர் பிரிந்தாலும் தமது கட்சியின் வாக்கு வங்கிக்கு ஆபத்தேதும் வந்துவிடப்போவதில்லை என்கிறார் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்ஹ! இந்த தன்னம்பிக்கையை நிச்சயம் பாராட்டவே வேண்டும். ஆயினும், ”என் தலையிலிருந்து முடியெல்லாம் கொட்டினாலும், ஒருபோதும் நான் மொட்டையாகிப் போக மாட்டேன்” என்று கூறும் ஒருவரைப் பார்த்து எவ்வாறு சிரிக்காமலிருக்க முடியாதோ, அதே அனுபவம்தான் ரணிலின் குறித்த அறிக்கையை படிக்கையிலும் நமக்குள் நிகழ்கிறது.

அம்பாரை (திகாமடுல்ல) மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்து 80 ஆயிரம் பதியப்பட்ட வாக்காளர்கள் இருப்பதாக இறுதியாக இடம்பெற்ற தேர்தல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது இம்மாவட்டத்தில் ஐ.தே.க. பெற்ற வாக்குகள் 38.98 வீதமாகும். பின்னர் 2001 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின்போது அக்கட்சி 20.87 வீதமான வாக்குகளையும், இறுதியாக 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது 14.51 வீதமான வாக்குகளையுமே பெற்றுக்கொண்டது. இவ்வாறு இந்த கட்சியின் தொடர்ச்சியான இந்த வீழ்ச்சி நிலைக்கு பல்வேறு காரணங்களை நாம் முன்வைக்கலாம்! அவைகளில் சில…
கடந்த காலங்களில் பொதுஜன முன்னணி அரசாங்கம், ஜனாதிபதி தொடர்ந்து ஆட்சியில் இருந்தமை.
2000 ஆம் ஆண்டு பொதுஜன முன்னணியுடன் இணைந்து மு.காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டமை.
ஜ.தே.க – மு.கா. தேர்தல் ஒப்பநந்தங்களின் போது அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் வேட்பாளர்களை தேர்தலில் ஐ.தே.க. நிறுத்தக் கூடாது எனக் காணப்பட்ட உடன்பாடு.
ஜ.தே.க வின் மிக முக்கியமான முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் (எஸ்.எஸ்.பி. மஜீத் போன்றவர்கள்) பலர் கட்சியை விட்டுப் பிரிந்து, மு.கா.வுடன் இணைந்து செயற்பட்டமை.
பொதுஜன முன்னணியுடன் இணைந்து பல முஸ்லிம் பா.உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட்டு (அதாஉல்லா, பேரியல்) அதிக வாக்குகளை பெற்றமை என்று, இவைபோன்ற பல்வேறு நிகழ்வுகளும், விடயங்களும் அம்பாரை மாவட்டத்தில் ஜ.தே.க.வின் வளர்ச்சியில் பாதிப்பினையும், அதன் வீழ்ச்சிக்கு வழிகோலவும் செய்தன.

தற்போது ஜ.தே.க.விலிருந்து அரசின் பக்கமாக பிரிந்து சென்றவர்களில் அம்பாரை மாவட்டம் சார்பானவர்கள் இருவர்! அவர்களில் ஒருவர் பி. தயாரட்ண, அடுத்தவர் மயோன் முஸ்தபா.myown-musthafa.jpg

மிக நீண்ட காலமாக ஜ.தே.க. சார்பாக பா.உறுப்பினராய் தேர்வாகி வருபவர் பி.தயாரட்ண. இவர் அம்பாரை மாவட்ட ஜ.தே.க. சம்மேளனத் தவிசாளரும் தேசிய ரீதியான அதி உயர் குழு உறுப்பினருமாவார். மயோன் முஸ்தபா கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர், தேசிய செயற் குழு உறுப்பினர் மற்றும் பா. உறுப்பினர்! ஆக இவர்கள் இருவரின் பிரிவும் கட்சிக்கு மாவட்ட ரீதியில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது என்று கூறினால், எவர் நம்புவார்?! ஒருவர் நம்மோடு முரண்பட்டுப் பிரிந்து சென்றால் பிரச்சனை ஒன்றுதான். ஆனால், பிரிந்து சென்றவர் எதிர்த் தரப்போடு இணைந்து கொண்டால் பல்வேறு பிரச்சனைகள்!

கட்சிக்கு அப்பால் ஒருவரின் தனிப்பட்ட, அரசியல் ஆளுமைகளுக்காக மக்கள் அவரை நேசித்து தேர்தல்களின்போது வாக்களிப்பதுண்டு. ஜ.தே.க.வை விட்டு பிரிந்து சென்ற எஸ்.டபள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கி தேர்தல்களில் மாபெரும் வெற்றிபெற்றமைக்கு அவரின் தனிமனித ஆளுமையும் ஒரு காரணம் எனலாம்!

ஆக – அரசுடனான ஜ.தே.க. பா. உறுப்பினர்களின் இணைவு பொதுவாக அதன் வாக்கு வங்கியில் பாதிப்பினையும் குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் மேலும் வீழ்ச்சியினையும் ஏற்படுத்தும் என்றே கணிக்க முடிகிறது!

சேர்ந்தோர்களுக்கிடையிலான பிரிவுகளும், பிணக்குகளும்!

அம்பாரை மாவட்டத்தைப் பொறுத்தவரை அங்கு எதிர் அரசியல் புரிந்து வந்த பலரும் இப்போது அரச தரப்புக்கு தாவியுள்ளனர். ஏற்கனவே அரசோடு இருந்து வந்த அதாஉல்லா, சேகு இஸ்ஸதீன், பேரியல் மற்றும் அன்வர் இஸ்மாயில் போன்றோருடன் பொருதுவதற்கான அதிகாரங்களையும், பலத்தினையும் அரசுடன் மு.கா. இணைந்ததன் மூலம் தற்போது பெற்றுக் கொண்டுள்ளது. இனி அங்கு அரசியல் போர் உக்கிரமாகும். அதிகாரமற்ற நிலையில் முன்பு களங்களில் பின்வாங்கிக் கொண்டிருந்த மு.கா.வினர் இனி நேரடியாக மோத முற்படுவர். இந்நிலை அதாஉல்லாவின் தேசிய காங்கிரசுக்கும் மு.கா.வும் இடையிலேயே அதிகம் நிகழக் கூடும் என்பதால் அக்கரைப்பற்று சம்மாந்துறை மற்றும் அட்டாளைச்சேனைப் பிரதேசங்களில் மிக வன்முறையான அரசியல் களங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளன!

இவை தவிர, ஐ.தே.க.விலிருந்து அரசுக்கு மாறியுள்ள மயோன் முஸ்தபா எதிர் காலத்தில் எந்த அணியினருடன் தேர்தல் கூட்டினை வைக்கப் போகிறார் என்பதும் சுவாரசியமான தேர்தல் திருப்பங்களை ஏற்படுத்த வழிவகுக்கும்! தற்போதைய அவதானங்களின் படி, மு.கா.வுடன் மயோன் அரசியல் ரீதியான உறவுகள் எதனையும் ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன.

அம்பாரை மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஐ.தே.க. சார்பாக ரணில் செய்த மிகப் பெரும் தவறு, தேர்தல்களின் போது தனது கட்சி சார்பாக முஸ்லிம் உறுப்பினர்களை போட்டியிட வைக்காமல், மு.கா.வின் அபேட்சகர்கள் மட்டுமே போட்டியிடுவதற்கு இணங்கிக் கொண்டமையாகும். இதன் மூலம் மு.கா. வளர்ச்சி பெற்ற அதேளை, ஐ.தே.க. முஸ்லிம் பகுதிகளில் மிக மோசமான வீழ்ச்சியினையும் சந்திக்க நேர்ந்தது! இவ்வாறான நிலையொன்று ஏற்பட மஹிந்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். குறிப்பாக அதாஉல்லா இது போன்றதொரு தேர்தல் கூட்டினை ஏற்படுத்த விரும்பவே மாட்டார். இன்னும் கூறினால், மு.கா.வின் பலம் மிகத் திட்டமிடப்பட்டு அடுத்த தேர்தல்களின்போது முடக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் அரச ஆசீர்வாதத்துடன் நிகழ்த்தப்படும் என்கின்றனர் அவதானிகள்!

ஆக, பிரிந்து நின்றவர்கள் எல்லோரும் ஒரே தரப்புக்கு வந்து விட்டதாக எவரும் சந்தோசம் கொள்ள முடியாது. முதுகுகளுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டுள்ள அரூப வாட்களோடு இனி நமது அரசியல் அரங்கில் எம்.ஜி.ஆர்.களும், நம்பியார்களும் பரபரப்பாக மோதிக் கொள்வார்கள்!

ஆக – ஆரவாரங்களுக்கு இனி குறைவிருக்காது!


(இந்தக் கட்டுரையை 11 பெப்ரவரி 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s