காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஆறால் பிரிக்க முடியாத ஐந்தும்; புதிதாய் கிளம்பியுள்ள பூதமும்! 7 பிப்ரவரி 2007

Filed under: அரசியல் — Mabrook @ 10:27 பிப

color-dotமப்றூக்

Nijamudeen MP

நிஜாமுத்தீன்

விக்ரமாதித்தன்,வேதாளம் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! தன்னைப் பிடித்துக் கொண்டு போகும் விக்ரமாதித்தனிடம் கதை கூற ஆரம்பிக்கும் வேதாளம்! இறுதியாக கதையில் ஒரு புதிர் வைத்து அதற்கான விடையை விக்ரமாதித்தனிடம் வேதாளம் கேட்கும். ஆனால் நிபந்தனை; விக்ரமாதித்தன் பதில் சொல்லாவிட்டால் அவன் தலை வெடித்து விடும்.மௌனம் கலைந்தால் வேதாளம் தப்பித்து விடும்! இந்த நிலைதான் இப்போது மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு!

எதைச் செய்தாலும் விளைவுகள் பாதகமாகவே அமைந்து விடுகின்றன அவருக்கு!

அரசுடன் மு.கா.இணைய வேண்டுமென பல மட்டங்களிலிருந்தும் எழுந்த அழுத்தங்களையும், பிரச்சினைகளையும் சமாளிக்கும் பொருட்டு, கடந்த வாரம் அமைச்சுப் பதவிகளைப் பெற்று அதிகாரத் தரப்புக்கு மாறியது மு.காங்கிரஸ்! ஆனால், பிரச்சினைகளிலிருந்து விடுபட்டதாக எண்ணி, ஆசுவாசத்துடன் ஹக்கீம் ஒரு பெருமூச்சு கூட விட்டிருப்பாரோ தெரியவில்லை. அதற்குள் ஆரம்பித்து விட்டது அடுத்த பிரச்சினை!கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஜாமுதீன் வடிவில்!

என்ன பிரச்சினையென்று நிஜாமுதீனிடம் கேட்டால்; “அமைச்சுப் பதவியொன்றை பெற்றுத் தருவதாக ஹக்கீம் எனக்கு உறுதி வழங்கியிருந்தார்.அதற்கேற்ப கடந்த ஞாயிறன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சுப் பொறுப்பேற்கும் வைபவத்துக்கு ஆயத்தங்களுடன் வருமாறு என்னை அவர் அழைத்துமிருந்தார்! நான் அங்கு சென்றேன். ஆனால், பதவியெதுவும் எனக்கு வழங்கப்படவில்லை.ஹக்கீமால் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன்” என்கிறார் நிஜாமுதீன்! மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கு பதவிகள் வழங்கப்பட்டன. விடுபட்டவர் நிஜாமுதீன்.

கட்சிக்குக் கிடைக்கின்ற அமைச்சுப் பொறுப்புகளை யார்,யாருக்கு வழங்குவதென்ற தீர்மானத்தை அக்கட்சியின் தலைவர் மேற்கொள்வதில் தவறுகளில்லை. மு.காங்கிரஸில்  அவ்வாறுதான் கடந்த காலங்களிலே தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன. விரும்பாவிட்டாலும் கூட, தலைவரின் தீர்மானங்களை எவரும் எதிர்த்திருக்கவுமில்லை. ஆனால், நிலைமை இன்று அவ்வாறில்லை. எல்லாம் தலை கீழாய் மாறிப் போயிற்று! ஏன்?

hakeem-32

ஹக்கீம்

இந்த இடத்தில் மு.கா.தலைவருக்கெதிராக இடம்பெற்று வந்த கிளர்ச்சிகள் கவனிப்புக்குள்ளாகின்றன! தலைவரோடு முரண்படுதல் கூடாது அல்லது முரண்படுபவர்களின் அரசியல் எதிர்காலம் அஸ்தமித்துப் போய் விடும் என்கின்ற பயமும், நிகழ்வுகளும் கட்சிக்குள் முன்னர் இருந்து வந்தன! ஆனால் அண்மைக் காலமாக ஹக்கீமோடு முரண்பட்டு வெளியேறியவர்கள் எவருக்கும் பாதகங்கள் எவையும் நிகழவில்லை. மு.கா.தலைவரால் அவர்களைத் தோற்கடிக்கவும் இயலவில்லை. யோகத்தின் உச்சத்தில் ஹக்கீமின் எதிராளர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்! இந் நிலையானது –  தலைமைத்துவம் மீதான பயம் கலந்த மரியாதையை கட்சிக்குள் போக்கி விட்டது!

இதன் விளைவாக – எவரும் எதிர்க்கலாம்,  தலைவரை எப்படியும் எதிர்க்கலாம் என்கின்ற, ஜனநாயகத்தின் மிக ஆபத்தான நிலையொன்று முஸ்லிம் காங்கிரஸுக்குள் இன்று உருவாகியுள்ளது! இந்தக் கோணத்தில் வைத்தே மு.கா.தலைவருக்கெதிரான நிஜாமுதீனின் அறிக்கைகள் நோக்கப்பட வேண்டும்.

சரி, நிஜாமுதீனுக்கு அமைச்சுப் பதவியை ஹக்கீம் வழங்கியிருக்க வேண்டுமா இல்லையா என்பதற்கு முன்னர், வேறு சில விடயங்களையும் இந்த கட்டுரையில் கவனித்தாக வேண்டியுள்ளது.

தற்போது ஹக்கீமுடன் இணைந்து செயற்படும் மு.கா.நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை (ஹக்கீம் உட்பட) 06 ஆகும். இவர்களில் ஹக்கீம், பைசல் காசிம் ஆகியோர் மட்டுமே தேர்தல் மூலம் தெரிவானவர்கள். ஏனையோர் நால்வரும் தேசியப் பட்டியல் நியமனம் வழியாக வந்தவர்கள்.

தேசியப் பட்டியல் நியமனங்களின் போதும் மு.கா.தலைமை நியாயமாகச் செயற்படவில்லை (அல்லது அநியாயமாகச் செயற்பட்டது) என்று அப்போது பரவலாகப் பேசப்பட்டது. அந்த அநியாயங்களில் ஒன்று – கட்சியின் செயலாளர் ஹசன் அலிக்கு வழங்கப்பட்ட தேசிய பட்டியல் நியமனமாகும்!

ஹசன் அலி நிந்தவூரைச் சேர்ந்தவர். ஏற்கனவே பைசல் காசிம் என்கின்ற உறுப்பினர் மு.கா.சார்பாக நிந்தவூர் பிரதேசத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தேர்தல் மூலம் தெரிவாகியிருந்தார்! ஆக- ஒரே ஊருக்கு இரண்டு உறுப்பினர்கள் தேவையில்லை. ஹசன் அலிக்கு வழங்கிய நியமனத்தை மு.கா.சார்பாக பிரதிநிதித்துவத்தை இழந்த வேறோர் பிரதேசத்துக்கு ஹக்கீம் வழங்கியிருக்கலாமென்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.

சரி, நடந்தது நடந்ததே. தவறு நிகழ்ந்தாயிற்று. ஆனால், அதே பழைய தவறை – தனது புதிய கணக்கில் மு.கா. தலைவர் மீண்டும் நிகழ்த்தியிருக்கின்றார். நிந்தவூரைச் சேர்ந்த ஹசன் அலிக்கும், பைசல் காசிமுக்கும் அமைச்சுப் பதவிகள்! மீண்டும் ஒரே ஊருக்கு மு.கா. சார்பாக இரண்டு அமைச்சர்கள்!!

இந்த இரண்டில் ஒன்றை ஏன் நிஜாமுதீனுக்கு வழங்கியிருக்கக் கூடாது என்கின்றனர் நிஜாமுதீன் சார்பானவர்கள்! கேள்வி நியாயமானதே!!

Hasan Ali

ஹசனலி

இதே சமயம் வேறொரு கதையும் கசிகிறது! மு.கா. தயாரித்த அமைச்சுப் பதவிகளைப் பெறுவோரின் பட்டியலில் நிஜாமுதீனின் பெயர் இருந்ததாகவும் ஆனால், ஹசன் அலி – கடைசி நேரத்தில் செயலாளர் என்கின்ற வகையில் நிஜாமுதீனின் பெயரை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக தனது பெயரை சேர்த்து அந்தப் பட்டியலை அரச தரப்புக்குச் சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது! ஆனால், இந்தக் கதையை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதால், இது கிசு கிசுவாகவே இருக்கட்டும்!

நிஜாமுதீனின் பிரச்சினையை நாம் வேறொரு புள்ளியில் நின்று நோக்கலாம்!

நிஜாமுதீன் என்பவர் மு.கா.வின் ஆரம்பகால செயற்பாட்டாளர்களில் ஒருவர். மாகாண சபை உறுப்பினராகவும் தெரிவானார். ஆனால், கட்சியின் மிக முக்கியமான வளர்ச்சிக் காலகட்டத்தில் நாட்டை விட்டுச் சென்று மிக நீண்ட காலமாக வெளிநாடொன்றில் வசித்தார்! பின்னர் ஆளுந்தரப்பில் மு.காங்கிரஸ் இருந்த போது, நாட்டுக்கு வந்த நிஜாமுதீன் – கட்சியோடு சேர்ந்து செயல்படலானார்.

இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில்  போட்டியிட்ட நிஜாமுத்தீன் தோல்வியடைந்தார்! ஆனாலும், மு.கா. சார்பாக இவருக்கு தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த நியமனத்தின் போது கட்சிக்குள் அதிருப்தியும், எதிர்ப்பும், சலசலப்பும் ஏற்பட்டன! நிஜாமுதீனை விடவும் அதிக வாக்குகளைப் பெற்று தேர்தலில் தேர்வாகாமல் போனவர்களில் ஒருவருக்கு அந்நியமனத்தை வழங்க வேண்டும் என அப்போது அதிகமானோரால் பேசப்பட்டது. ஆனாலும், அந்த எதிர்ப்புகளையெல்லாம் சமாளித்துக் கொண்டுதான்  நிஜாமுதீனை ஹக்கீம் நாடாளுமன்ற உறுப்பினராக்கினார்.

ஆக, தனக்கு அமைச்சுப் பதவி தரவில்லையென கூறி கலகம் செய்ய முற்படும் நிஜாமுதீன் – தனக்கு தேசியப் பட்டியல் நியமனத்தை வழங்கிய ஹக்கீமுக்கு செய்த நன்றிக் கடன் என்ன என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். ‘கொடுத்துக் கொண்டேயிருக்கும் வரைதான் கூட்டாளி’ என்பது – கீழ் நிலைக் குணம் என்று கூறப்படும் வாதங்களையும் தட்டிக் கழிக்க முடியாது!

சரி, தனக்கான நிவாரணம் கிடைக்காவிட்டால் நிஜாமுதீனின் அடுத்த நகர்வு எதுவாக இருக்கும்? பதில் மிக இலகுவானது!

முதலில் கவனிக்க வேண்டியது, ஓர் அதாவுல்லா போலவோ, அமீரலி கூட்டணி போலவோ கட்சிக்குள் நிஜாமுதீனால் பாரியதொரு கலகத்தை உண்டு பண்ண இயலாது.

சரி, கட்சியை விட்டு விலகி அமைச்சுப் பதவியொன்றைப் பெறுவாரா என்றால், அதற்குரிய சாதக நிலையில் அரசியல் களம் தற்போது இல்லை.

இவைகள் அனைத்துக்கும் மேலாக, கட்சியிலிருந்து விலகி,

பைசால் காசிம்

பைசால் காசிம்

தனித்து களமிறங்கி செயற்படக் கூடிய அரசியல் ஜனரஞ்சகத் தன்மை நிஜாமுதீனிடம் இல்லை. இது அவரின் மிகப் பெரும் பலஹீனம்!

ஆக தொடர்ந்தும் மு.கா. வோடு தான் நிஜாமுதீன் இணைந்திருக்க வேண்டும். இணைந்திருப்பார் என்றுதான் கணிப்பீடுகளும் கூறுகின்றன!

இந்த வேளையில் ஒரு கேள்வி!

நிஜாமுதீனுக்கு அமைச்சர் பதவி பெற்றுத் தருவதாக கூறி ஹக்கீம் ஏன் ஜனாதிபதி செயலகம் வரை அழைத்துச் சென்றார்?

பிரச்சினைகளிலிருந்து தன்னை தற்காலிகமாகவேனும் விடுவித்துக் கொள்வதற்கு ஹக்கீம் பயன்படுத்தும் அவசர நிவாரணிகள்தான் இந்த வாக்குறுதிகள்!

இது பற்றி சுவையான பல கதைகள் இருக்கின்றன.

வேறொரு கட்டுரையில் அவை பற்றி பேசுவோமே!

o

(இந்தக் கட்டுரையை 04 பெப்ரவரி 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s