மப்றூக்
சிறுவர்களின் பெருநாட்களைப் போல மனசு கிடந்து குதூகலிக்கின்றது,
இன்று உன் பிறந்த நாள் என்பதால்!
ஆணின் விலா எலும்பிலிருந்தே அவனுக்கான பெண் படைக்கப்படுவதாக சொல்லப்படுகிறதே. அப்படியென்றால், நீ எனது அங்கமா? நீ என் உடற் கூறா?
நீ என்பது நானா? நினைத்துப் பார்க்கப் பார்க்க நெஞ்சப் பரப்பெல்லாம் இனிப்புக்கசிகிறது.
முன்பெல்லாம் காதல் வயப்பட்டவர்களின் நடத்தைகளை சிறுபிள்ளைத் தனமானதென நான் நண்பர்களிடம் சொல்லி நகைத்ததுண்டு. காதலியின் அல்லது காதலனின் கைபட்ட காய்ந்து போன ரோசாவைக்கூட, ஒளித்து வைத்துப் பாதுகாக்கும் நடத்தைகளை கேலி செய்ததுண்டு.
ஆனால், இப்போதெல்லாம், நீ அனுப்பி வைக்கும் கடித உறைகளைக் கூட, கவனமாக வைத்திருக்கும் என்னை நினைக்க… ஆச்சரியக் குறிகளால் நான் நிறைந்தே போகிறேன்!
உன் பிறந்த தினத்துக்கு எதைப் பரிசளிப்பது என்பதிலேயே பல இரவுகள் தூங்காமல் கழிந்து போயிற்று! என் காதலை ஒரு ரோஜாவால், ஒரு கண்ணாடி பொம்மையால், அல்லது ஒரு கைக்குட்டையால் வெளிப்படுத்த முடியும் என்றால் அது காதலாகவே இருக்க முடியாது!
உன் பிறந்த நாளுக்காக நான் நேற்று இரவு எழுதத் தொடங்கிய கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தைக்காகவும் தமிழைத் தவமிருந்த கதை உனக்குத் தெரியுமா??
பாதி இரவையும், முழு அதிகாலையையும் நான் கடன்வாங்கியே
உனக்கான நேற்றைய கடிதத்தின் ஒற்றைப் பக்கத்தை எழுதி முடித்தேன்!
நான் இடைவெளி
பொருத்தமான வார்த்தை நீ!
உன்னைப் பொறுக்கி
என்னை நிரப்பிப் போயிற்று
காதல்!
0
(சூரியனில் ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)
