மப்றூக்
நான் காதலால் கொல்லப்பட்டுக் கிடப்பதாக – நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்!
அது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட கொலையா என்பது பற்றி இப்போது ஞாபகமில்லை. ஆனால், ஒரு கொலையை நிகழ்த்திய பரபரப்பேயின்றி காதல் என் உடலருகே நின்றது.
என் உடலுக்கருகில் நீயும் நின்றாய், ஆனால் என் உடலைக் காட்டி அது நானில்லை என்றாய். கனவைக் கண்டு கொண்டிருந்த நான் பதறிப்போனேன். உன்னை உருகி உருகி காதலித்த என்னை, நான் இல்லை என்று நீ சொன்னதால் – நான் அதிர்ந்து போனேன்.
நீ நேசித்தது எனது ஆத்மாவை என்றாய். ஆத்மா என்பது வெற்று உடலல்ல என்றாய். என்னை கொலை செய்த காதல் அனைத்தையும் கேட்டு நின்றது.
அப்படியென்றால் உடல் என்பது நானில்லையா? ஆத்மா என்பது என்னிலிருக்கும் வேறொன்றா? அல்லது ஆத்மாதான் நானா? சிலவேளை, உடலென்பதுதான் நான் என்று எண்ணிக்கொண்டிருப்பது எனது மூட நம்பிக்கையா?
நீ எனது பெயரைச் சொல்லி அழைத்தாய் – வேறேதோ திசையைப் பார்த்து! அந்தக் கணத்தில் எனது உடல் உன்னை ஏக்கத்துடன் பார்த்ததை நீ கவனிக்கவேயில்லை!
கூடியிருந்தவர்கள் நிகழ்ந்தது ஒரு விபத்தென்று கூறி, காதலை மன்னித்தார்கள்!
காதல் இன்னுமொரு கொலையை நிகழ்த்தும் தீர்மானத்தோடு அங்கிருந்து மிதந்து சென்றது!
நீ என் ஆத்மாவை அழைத்துக் கொண்டேயிருந்தாய்.
எனது உடல் தனித்துக் கிடந்தது.
அதில் குந்த வந்த ஈக்களை விரட்டிக் கொண்டிருந்தது விதியின் கரம்!
0
(சூரியனில் ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)
