மப்றூக்
உலகிலுள்ள நிறங்களில் உன்னதமானது பச்சை நிறம்தான்!
பச்சை – குளிர்மையைக் கொண்டது. பச்சை ஈரம் நிறைந்தது!!
மனதை வருடி ஆழ்ந்த உறக்கம் தரும் பண்புகள் கொண்டது இந்த பச்சை நிறம்.
வைரமுத்துவின் பாசையில் சொன்னால்…
இச்சை மூட்டுவது பச்சை நிறம்தான்!
அதனால்தான், படுக்கையறைக்கு ஏற்ற நிறம் பச்சைதான் என்கிறார்கள்.
பச்சை என்பது களங்கமில்லா நிறம். அதனால்தான், வெளிப்படையான பேச்சுக்களை பச்சையானதென்கிறார்கள்!
‘பச்சைப் பொய்’ என்பதில் வருகின்ற, பச்சைக்கான அர்த்தம் – முழுமை அல்லது முழுசு என்று பொருளாய் வரும்! ஆக, பச்சை என்பது முழுமை!
பச்சை நிறம் என்பது, அங்கீகாரத்தின் அடையாளம்! அதனால்தான் போக்குவரத்தின் போது கூட, போ எனும் சமிக்ஞைக்காய் பச்சையைப் பாவிக்கின்றனர்.
பச்சை என்பது கறைகளற்றது. அதனால்தான், குழந்தைகளை நாம், ‘பச்சைக்’குழந்தை என்று அடைமொழியால் அழைக்கின்றோம்!
பச்சையுடன் மஞ்சள் சேர்த்தால் நீல நிறம் கிடைக்கும்! மஞ்சள் என்பது மங்கலமானது, அது உற்சாகம் தரும் பண்பினைக் கொண்டது. நீல நிறம் என்பதோ மனதுக்கு எப்போதும் அமைதியைக் கொடுக்குமாம். ஆக, பச்சையுடன் தொடர்புபட்டாலே சிறப்புகள் வந்து சேருகிறது!
பச்சைத் தண்ணீர், பச்சைக் குழந்தை என்பது மாதிரி… பச்சையழகானவள் – நீ, பச்சையழகானது – நம் காதல்!!
உனக்குப் பிடித்த நிறம் பச்சையென்று நேற்று நீ சொன்ன பின்னர், இப்படித்தான் பச்சை நிறம் பற்றி பெருமை பேசிக் கொள்கிறது மனசு!
0
(சூரியனில் ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)
