மப்றூக்
சில வேளை உன் நாணத்தை என்னால் ரசிக்க முடியவில்லை!
இன்று முன்னிரவில் உன்னைச் சந்தித்தபோது, வெறுமனே நிலம் பார்த்து நீ வெட்கப்பட்டது, வெறும் அபத்தம் என்றே சொல்வேன் காதலி!
ஒரு தீவிரவாதி ராணுவக் காவலரண்களைக் கடப்பது போல, தடைகள் கடந்து உன்னைச் சந்திக்க வந்தால்… நீ மௌனங்களைத்தான் அதிகம் தருகிறாய்!
ஆயிரம் பேச வேண்டும் என வரும் எனக்கு, ஒரு யாசகனுக்கு கொடுப்பது போலாயினும் சில வார்த்தைகளை நீ அன்பளித்திருக்கலாம்!
‘வேறென்ன’ என்று – இருவரும் மாறி மாறிக் கேட்டது தவிர வேறென்ன இருந்தது நம் சந்திப்பில்?
சிலவேளைகளில், உன் நாணத்தைக் கட்டுடைக்கும் கலை அறியாமல்,
நானும் – வார்த்தைகளின்றி உன்னுடன் தவித்து விட்டே திரும்புகிறேன்.
காதலில் சில சமயம் பேசிக்கொண்டேயிருப்பது சுகமானது.
சில சமயம் பேசாமல் இருப்பதே சுகம்!!
ஆனால், நீயோ ஒரு வவ்வால் மாதிரி தலை கீழாய் நிற்கிறாய்.
ஆம், பேச வேண்டிய சமயங்களில் பேசாமல் இருக்கின்றாய்!!
என்னதான் நாணம் பெண்ணுக்கு அழகென்றாலும்,
இன்றைய உன் நாணத்தை என்னால் ரசிக்கவே முடியவில்லை!
0
(சூரியனில் ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)
