மப்றூக்
இன்று உன் திருமணம்!
ஒரே நேரத்தில் சொர்க்கத்தை உனக்கும், நரகை எனக்கும் தந்து போக, ஒரே நிகழ்வால் எப்படியடி முடிந்தது?
இது தோல்வியா? அப்படியென்றால் யாருக்கு?
இது அவமானமா? அப்படியென்றால் எனக்கா, உனக்கா?
இது துயரமா? அப்படியென்றால் எவர் தந்தது?
துக்கத்தை மறைத்து சாதாரணமாக இருப்பதாய் காண்பிப்பதற்கான எனது ஒவ்வொரு அசைவிலும் செத்துச் செத்துப் பிழைத்தேன் இன்று!
இரவு – ஊரே உறங்கிப்போயிற்று. ஆனால், இன்னும் நான் எரிந்து கொண்டேயிருக்கிறேன்.
பூமி – எதிர்த் திசையில் சுற்றுவது போல உணர்கிறது மனம்!
எல்லாம் பொய் போலவே தெரிகின்றன!!
நானும், நீயும் நமக்காக கண்ட கனவுகள் அருவருப்புகள் நிறைந்த வாசத்தோடு காற்றில் கரைந்து போயின. நமக்குள் நிகழாமல் போன திருமணம் மட்டும் சாத்தான்களின் கல்லறைகளில்
நிச்சயிக்கப்பட்டிருக்க வேண்டும்!
எவருக்கும் தெரியாமல் சாமங்கள் கடந்த பிறகு பாரம் தீர அழுதேன்! அழுதேன்!! அழுது கொண்டேயிருந்தேன்!!! நீ தந்த காதலை விடவும், இப்போது அழுகை எனக்கு ஆறுதலாகிறது.
உன் பிரிவை விடவும், நீ தந்த ஏமாற்றங்கள்தான் கொடுமை நிறைந்தவை!
‘காற்றுப்பட்டால் கல்லும் கரையும், காதல் கரையாது’ என்கின்ற சினிமாப் பாடல் வரிகளை, உன் கடிதமொன்றின் இறுதியில் எழுதி, சத்தியங்களால் முடித்து அனுப்பி வைத்திருந்தாயே ஞாபகமிருக்கிறதா?
சொல்லடி, பொய்த்துப் போனது பாடலா? அல்லது உன் சத்தியங்களா??
உன்னை மறக்க முடியாமல் நான் துடித்துக் கொண்டிருப்பது போல், இந்த இரவில் நீயும் என்னை சிலவேளை நினைத்துக் கொண்டிருக்கலாம் என்று இன்னும் எண்ணித் தொலைக்கும் இந்த மனசின் அப்பாவித்தனத்தைத்தான் காதல் என்பதா?
0
(சூரியனில் ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)
